SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இசைக்கு இசையும் இனிய(வேங்கட)வன்

2021-09-30@ 14:52:19

கொடுமையான இந்த கலியிலே, அந்த இறைவனை, போற்றிப் பாடுவதால் தான் நன்மை அடைய முடியும் என்று சாஸ்திரங்கள் உறுதியாக கூறுகின்றது. அதனால்தான் இறைவனுக்கு ‘‘புண்ணிய ஷ்ரவன கீர்த்தனன்” என்ற பெயர் பிரசித்தமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பெயருக்கு, நினைக்கும்தோறும், போற்றிப்பாடும்தோறும், நமது புண்ணியத்தை, பன்மடங்காக அதிகரிப்பவன் என்று பொருள். இப்படிப் பாடிப் பரவி, இறைவனை அடைந்தவர்கள் பலர். அவர்களுள், வேங்கடவன் மனதை இசையால் மயக்கி, அவன் பதம் அடைந்த அடியவர்கள் பலருள், சிலரைப் பற்றி இப்போது பார்ப்போம் வாருங்கள். தியாகராஜ சுவாமிகள்.இசை வளர்த்த சங்கீத மும் மூர்த்திகளில் முதல் மூர்த்தியாக விளங்கியவர் தியாகராஜர் என்று அழைக்கப்படும் தியாகப் பிரம்மம்.‘‘ ராம ரகசிய” உபநிஷத் சொன்ன படி, ‘ராம’ நாமத்தை முறையாக ஜெபித்து, ராமனின் தரிசனம் பெற்ற புண்ணிய சீலர்.

இவர், ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவரின் அவதாரமாக கருதப்படுகிறார். இப்படி மகிமைகள் அநேகம் உடைய இந்த மகான், ஒருமுறை வேங்கடவனை தரிசிக்க திருமலைக்கு விஜயம் செய்தார். சரியாக சொல்ல வேண்டும் என்றால், 1834 ஆம் ஆண்டு திருமலைக்கு தியாகப் பிரம்மம் விஜயம் செய்தார். வேங்கடவனை கண்ணாரக் கண்டு, தொழ வேண்டும் என்ற பேரவாவோடு வந்த அவருக்கு, ஏமாற்றம் தான் காத்திருந்தது.

அவர் வந்திருந்த நேரம் பூஜைகள் எல்லாம் முடிந்து, நடை சாற்றப் பட்டு இருந்தது. எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் அங்கிருந்த அர்ச்சகர்கள் திரையை விலக்க சம்மதிக்க வில்லை. மனம் நொந்துபோன தியாகராஜர், தனது தம்புராவை மீட்டிய படி, வேங்கடவனை மனமுருகி பாட ஆரம்பித்தார். இறைவனைக் காண வேண்டும் என்று அவர் படும் ஏக்கம், அவரது குரலில் நன்கு எதிரொலித்தது. அவரது அற்புத இசையை கேட்டு வேங்கட மலையே மலைத்து போய் நின்றது. ‘‘தெரதிய்யக ராதா” என்ற கீர்த்தனையை அவர் பாடக் கேட்ட அனைவரும் தன்னை மறந்தார்கள். கோபம், ஆணவம், பொறாமை, முதலியவையாக எனக்குள் இருக்கும் திரை, உள்ளத்தில் கோவில் கொண்ட வேங்கடவனை மறைத்து நிற்கிறது. அந்த மாயத் திரை விலக, அருள் செய்ய வேண்டும் என்று வேங்கடவனை அந்தப் பாடலில் வேண்டினார்.

அந்தப் பாடலை அவர் பாடி முடித்த தும், மந்திரத்துக்கு கட்டுப் பட்டதுபோல, வேங்கடவன் சந்நதித்திரை அறுந்து விழுந்தது. நொடியில் நடந்து விட்ட இந்த அதிசயத்தை கண்டு அனைவரும் வாயடைத்துப் போனார்கள். தியாகப் பிரம்மம், இறை வனின் கருணையை வியந்தபடியே, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிய வேறொரு கீர்த்தனையை பாடிவேங்கடவனை கண்ணார சேவித்தார். தியாகராஜரைப்போல, உள்ளம் உருகி வேண்டினால் நிச்சயம் நமக்கும் அருளுவான்.  

அன்னமாச்சாரியார்

உயிர் வாழ எப்படி அன்னம் இன்றி அமையாத ஒன்றோ, அப்படித்தான் இசை வாழ அன்னமாச்சாரியார். சிறுவயது முதலே வேங்கடவன் மீது பக்தியில் லயித்து அற்புதமான கீர்த்தனைகளை பாடும் திறமை கொண்டு விளங்கினார். இவர் மாபெரும் நரசிம்ம உபாசகர் ஆவார். நரசிம்மரின் மூல மந்திரத்தில் 32 எழுத்துக்கள் உள்ளது. அந்த மூல மந்திரத்தின் சாரமாக, முப்பத்து இரண்டாயிரம் கீர்த்தனைகளை (பாடல்களை) இயற்றிய மகான் அன்னமாச்சாரியார். இவருக்கு முன் பாடல்கள் இரண்டு வரிகளை கொண்டவையாகவோ அல்லது விருத்தமாகவோ தான் இருந்தது. இவர் தான் பாடலை அழகாக பல்லவி, சரணம் என்று வகை படுத்தி பாடும் முறையையே ஏற்படுத்தினார். இவருக்கு பின் வந்த தியாக ராஜர் போன்ற மகான்கள் இவர் முறையை பின் பற்றி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடல்களை அமைத்து பாட ஆரம்பித்தார்கள்.

ஆந்திர மாநிலத்தில், கடப்பா ஜில்லாவில், ராஜம்பேட்டை தாலுக்காவில், தள்ளப்பாக்கம் என்ற ஊரில், கிபி, 1408ஆம் ஆண்டு, பரத்வாஜ கோத்திரத்தில், வைகாசி விசாக நன்னாளில், நாராயண சூரி, இலக்குமாம்பா, தம்பதியருக்கு மகனாக ‘‘அன்னமய்யா” அவதரித்தார். தமது ஏழாவது வயதில் சொப்பனத்தில் வேங்கட மலையையும், வேங்கடவனையும்
கண்டார். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியவராக  ‘‘இப்புட்டிடு கலகண்டி” என்ற தமது முதல் பாடலை பாடினார்.

தமது பதினாறாவது வயதில் திருமலை செல்லும் பக்தர்கள் கூட்டத்துடன் கலந்து திருப்பதி சென்று விட்டார். பாதி வழியில், வழி தவறிய இவருக்கு, கங்கம்மா என்னும் கிராம தேவதை வழிகாட்டி அருளியது. திருமலை ஏறும்போது, முழங்கால் முடிச்சு, என்னும் இடத்தில் பசி மயக்கத்தில் இவர் விழுந்த போது, அன்னை அலர்மேல் மங்கை, முதியவள் வேடத்தில் வந்து
இவரது பசியை போக்கினாள். அதன் பிறகு திரு மலையை அடைந்து வேங்கடவனை கண் குளிர சேவித்து, ‘‘பொடகண்டிமையா மிம்மு புருஷோத்தமா” என்ற பிரசித்தி பெற்ற கீரத்தனையை பாடினார்.

பிறப்பால், சைவராகிய போதும், ‘‘ஆதிவன்சடகோப யதீந்திர மகாதேசிகரது” சீடனாகி வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்க ஆரம்பித்தார். இவர் தனது குருவான ஆதிவன் சடகோப யதீந்திர மகாதேசிகரையும், மத் ராமானுஜரையும் போற்றி கீர்த்தனை பாடியுள்ளார். அன்னமய்யாவின் புகழ் நாடெங்கும் பரவியது. சாளுவ நரசிங்கராயன் என்ற அந்நாட்டு மன்னன், அன்னமய்யாவை தன்னை, போற்றிப் பாடும்படி கட்டளை இட்டான். நாராயணனை பாடும் வாயால் ஒரு நரனை (மனிதனை) பாட மாட்டேன் என்று அன்னமய்யா, திடமாகச் சொல்லி விட்டார். பொங்கிய கோபத்தோடு அன்னமய்யாவை, சங்கிலியால் கட்டி துன்புறுத்தினான் மன்னன். அப்போது, அன்னமய்யா வேங்கட நரசிம்மனை தியானித்து ‘‘அகடி வேளள” என்ற பாடலை பாட ஆரம்பித்தார். அவர் பாடியவுடன் சங்கிலிகள் வெடித்து சிதறியது. பதறிப் போன அரசன் ஓடோடி வந்து அன்னமய்யா காலில் விழுந்தான்.

 இப்படி அன்னமய்யாவின் வாழ்வில் நடந்த அதிசயங்கள் பலப்பல. அன்னமய்யாவின் கவித்திறனை மெச்சி அரசர்களாலும், தனவந்தர்களாளும், அளிக்கப்பட்ட செல்வங்கள் அனைத்தையும் வேங்கடவனின் சேவைக்கே செலவழித்தார். திருமலை கோவில் உள் மற்றும் வெளிப் பிராகாரங்களை கட்டி, ‘‘கோனேரு” என்ற புஷ்கரணியை, எம்பெருமான் அபிஷேகத்திற்காக செப்பனிட்டு, கோவில் வளர்ச்சிக்காக பல திருப்பணிகள்செய்தார். சூரியன் சந்திரன் உள்ளவரை, தனது சந்ததியினர், சுப்ரபாத சேவை, கல்யாண உத்ஸவ சேவை, மற்றும் ஏகாந்த சேவைகள் செய்ய வேண்டும் என்று கல்வெட்டில் பதித்தார். இன்றும் அவரது சந்ததியினர் அந்த சேவைகளை முறையாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது கீர்த்தனைகளை செப்புத் தகட்டில் பதித்து, ‘‘சங்கீர்த்தன பண்டாரகம்” என்று அழைக்கப்படும் சிறு அறையில், திருமலை, அகோபிலம்,  ரங்கம் கோயில்களில் பாதுகாத்து வைத்தார். அதை, தனது கீர்த்தனை ஒன்றில் பின் வருமாறு சொல்கிறார். “ தாசுகோ நீ பாதாலகு...... ஒக்க சங்கீர்த்தனமே சாலு.... தக்கினவி பண்டாரமுன தாகி உண்டனி.....”. இசையால் வேங்கடவனை அடைந்த அன்னமய்யா, துந்துபி வருடம், பங்குனி துவாதசி அன்று வேங்கடவனோடு இரண்டறக் கலந்தார்.

புரந்தரதாசர்புரந்தர தாசர் முதலில் பரம கஞ்சனாக இருந்தார். நாரதரின் அவதாரமான இவரை, நாராயணன் ஒரு எழை பிரம்மச்சாரியின் தந்தையாக வந்து தடுத்து ஆட்கொண்டார். (விரிவுக்கு அஞ்சி சுவை மிகுந்த அந்த சரிதத்தை இங்கு வழங்கவில்லை). பிறகு இறைவனே ஒரு மானிட வேடத்தில் வந்து இவரது மகளின் திருமண வைபவத்தை முன்னின்று நடத்தி வைத்ததும் குறிப்பிடத் தக்கதாகும். புரந்தரதாசரது இயற்பெயர் ரகுநாதர். ரகுநாதர் புரந்தரதாசர் ஆனது ஒரு சுவையான சம்பவம். அதை இப்போது சுவைப்போம் வாருங்கள்.

 பக்த சிரோமணியான ரகுநாதர், ஒருமுறை திருமலைக்கு விஜயம் செய்து வேங்கடவனை, தரிசித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரகுநாதரின் இசை ஞானத்தை கண்டு வியந்த ‘‘புரந்தரி” என்ற நாட்டிய நங்கை, அவரை வந்து நமஸ்கரித்தாள். ரகுநாதரின் ஆசிகளை பெற்ற அவள், திருப்பதியில் அவர் இருக்கும் வரையில், ரகுநாதர் தன் இல்லத்திலேயே தங்க வேண்டும் என்றும், அவருக்கு சேவைகள் செய்யும் பாக்கியத்தை தனக்கு அளிக்க வேண்டும், என்றும் வேண்டினாள். புரந்தரியின், பக்தியாலும் நன்னடத்தையாலும் மகிழ்ந்த ரகுநாதர், அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
ஒருநாள் இரவு காலில் சதங்கையோடும், கையில் வீணையோடும் நள்ளிரவில் எங்கோ செல்லும் புரந்தரியை வழிமறித்தார் ரகுநாதர்.

‘‘தாயே மன்னிக்க வேண்டும். தங்களை வழி மறிக்கவோ அல்லது, சந்தேகப்படவோ எனக்கு உரிமை இல்லை. ஆனாலும், சந்தேகம் என்னை கொல்கிறது. தினந்தோறும், நட்ட நடு ராத்திரியில் நாட்டிய உடையோடும், கையில் வீணையோடும் தாங்கள் யாரை பார்க்கச் செல்கிறீர்கள்?. தாங்கள் தூய வாழ்வு வாழ்பவர் என்று, அனைவரும் சொல்வதற்கு மாறாக இருக்கிறது தாங்கள் செயல். எனக்கு விளக்கம் தந்தருள வேண்டும்” என்று அடக்கத்தொடு புரந்தரியை ரகுநாதர் வினவினார்.

சற்று யோசித்த புரந்தரி, ரகுநாதரை தன்னை பின் தொடரும் படி கூறினாள். வேங்கடவனின் கோயிலுக்குள் நுழைந்த புரந்தரி, ரகுநாதரை ஒரு தூணின் பின் மறைவாக நின்று கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்க்கும் படி கட்டளையிட்டாள். ரகுநாதர் தூணின் பின் மறைந்திருக்க, புரந்தரி கோயில் மண்டபத்தின் நடுவில் அமர்ந்து, வீணை மீட்ட ஆரம்பித்தாள். அவளது வீணை இசைக்க ஆரம்பித்ததுதான் தாமதம், வேங்கடவன் சந்நதிக் கதவுமணிகள் சப்திக்க திறந்தது. சர்வ அலங்கார பூஷிதனாக எம்பெருமான் அங்கு தோன்றி, புரந்தரியின் இசைக்கு நாட்டியம் ஆட ஆரம்பித்தான். அதை கண்ணார ரகுநாதர் தரிசித்தார்.

மறைவில் இருக்கும் ரகுநாதரை இறைவன் அறிய மாட்டானா என்ன? ரகுநாதருக்கு அருள எண்ணிய இறைவன், புரந்தரியின் கையில் இருந்து வீணையை வாங்கி அபஸ்வரமாக வாசிக்க ஆரம்பித்தான். அந்த அபஸ்வரத்தை கேட்ட இசை வித்வானான ரகுநாதருக்கு கோவம் வந்தது. ‘‘போதும் அபஸ்வரத்தை நிறுத்து” என்று கத்திக் கொண்டே மறைவில் இருந்து வெளிப்பட்டார். இதற்காகவே காத்திருந்த வேங்கடவன், புரந்தரிக்கும் ரகுநாதருக்கும் பலவாறு அருளி மறைந்தான். பலப்பல யோகியரும் காண முடியாத வேங்கடவன் தரிசனத்தை, இசையால் வெகு சுலபமாக கண்ட ரகுநாதர் மற்றும் புரந்தரியின் பாக்கியமே பாக்கியம்.

புரந்தரியிடம், ஞான சர்ச்சைகள், வேதாந்த விளக்கங்கள் செய்து, அவள் மூலமாக வேங்கடவன் தரிசனம் பெற்றதால் ரகுநாதர், அன்று முதல் புரந்தரதாசர் என்று அழைக்கப் படலானார்.
இப்படி இசையால் இறைவனை அடைந்த மகான்கள் எண்ணில் அடங்காதவர்கள். கொடிய நோய்க்கு, சுவையான பாலும் தேனும் மருந்தாக அமைந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்? நோயும் தீர்த்தது போல ஆகும், நாவிற்கு இனிமையாகவும் இருக்கும்.

அதுபோல பிறவிப் பெரும் பிணியை போக்க, இறைவன் நாமம் என்னும் மருந்து கிடைத்தது, நாம் செய்த பெரும் பாக்கியம். இசையில் லயிப்பதால், மனம் அமைதி அடைகிறது. அதே இசையில் இறைவனின் நாமமும், புகழும் கலந்து விட்டால், நடக்காத அற்புதங்கள் எளிதில் நடக்கிறது. இதற்கு சாட்சியாக வாழ்ந்து, இறைவனை இசையால் வழிபட்டு பெரும் பேறு பெற்றவர்கள் இந்த மகான்கள். அவர்கள் வழியில் நின்று நாமும் நாதோபசனை (இசை வழிபாடு) செய்து வேங்கடவன் திருவடியை அடைவோம்.

ஜி.மகேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்