SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோச்செங்கட்சோழரின் தாய்

2021-09-30@ 14:50:33

சிவபெருமானின் ஆட்சி நடைபெறும் திருக்கயிலையிலே சிறந்த சிவகணங்களாக மாலியவான், புட்பதந்தன் என இருவர் இருந்தனர். சிவபெருமானுக்கு சேவை புரிவதில் இருவருக்கும் பெரும் போட்டி. இருமனதுள்ளும் தாமே சிறந்த தொண்டு புரிகிறோம் என சிந்தை தோன்றியது.

சேவை பகையாகி, புகையாகி ஒருநாள் பற்றி எரிந்தது. கோபக்கனல் தணியாது தன்நிலை மறந்து மாலியவான், புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தான். பெயரிலேயே தந்தம் இருப்பதால் யானையாகுமாறு சபித்தார் போலும். பதிலுக்கு புட்பதந்தன், மாலியவானைச் சிலந்தியாகுமாறு சபித்தாராம். சிவகணங்களின் வாய்வாக்கு பலிக்குமே!சாபம் உடனே உருக்கொள்ள, இறைவனின் திருவருளால் இருவருமே சோழ தேசத்தில் சந்திர தீர்த்தத்தின் அருகில் பெருமரங்கள் நிறைந்த சோலையில் அவதரித்தனர்.

இப்பிறப்பிலும் பழம்பிறப்பின் பகை காரணமாக செயல்பட்டு மீண்டும் பேறு பெற்றனர் என்பது திருஆனைக்கா தல வரலாறு. இருவரும் செவ்வனே கடமை புரிந்தும் யானை எந்தச் சிந்தையுமின்றி சிவவழிபாடே கடமையென இருந்தது. ஆனால் சிலந்தியோ பழிவாங்கும் எண்ணத்தோடு கொலையும் செய்து முடித்து தானும் இறந்தது.

நீதி தவறா பெருவள்ளல் சிவபெருமான் தனது தீர்ப்பில் இறந்து கிடக்கும் இருவரையும் உயிர்ப்பித்தவர் குற்றமிலா யானைக்கு மீண்டும் சிவபதமும், கோபமுற்ற சிலந்திக்கு ஒரு பிறப்பும் நல்கினார். அதுவும் உயர் பிறப்பு. வாய் நூலால் பந்தலிட்டு பெருமான் மேல் தூசி விழா வண்ணம் திருப்பணி செய்ததால் கற்கோயில் கட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாய்ச்சங்கு நூலிழைத்தே வாய்ச்சிலம்பி தன்னையுயர்கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே.
- ராமலிங்க சுவாமிகள்

என்று வள்ளல் பெருந்தகை உறுதி செய்கிறார்கள். கோச்செங்கட்சோழ நாயனாரும், கடமை மாறாத மன்னனாகிலும் திரவியம் முழுதும் தீர்ந்திடும்படியாக சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்களும், திருமாலுக்கு மூன்று கோயில்களும், தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேருக்கு இல்லங்களும் கட்டித் தந்து வாழ்நாள் முழுதும் வாள் ஓசையின்றி உளியோசையோடு வாழ்ந்தவர் என்பதே அவரின் தனிச்சிறப்பு.

கோச்செங்கட் சோழர் தந்தை பெயர் சுபதேவன், தாயார் பெயர் கமலவதி. உறையூரை ஆண்ட சோழ மன்னன் சுபதேவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது பெருங்குறையாய் இருந்திடவே, தில்லைச் சிற்றம்பலம் சென்று கூத்தப் பெருமானை மனமுருக வேண்ட, சிலந்தியின் ஆத்மாவை பட்டத்தரசி கமலவதியின் கருவறைக்குள் தஞ்சம்புக இறைவன் அருளினாராம். கருத்தரித்த களிப்பிலே மன்னரும், அரசியும் சொந்த தேசம் திரும்பினர். பிள்ளை பெறும் காலம் நெருங்கிய போதும், அரசசைச் சோதிடர்கள் ‘‘பிறக்கப்போகும் குழந்தை ஒரு நாழிகை (நாழிகை-24 நிமிடம்) கழித்துப்  பிறந்தால் மூவுலகு ஆளும் சிறப்போடு வாழும்’’ என்று கணித்தனராம்.

இதுகேட்ட தாய் உடனே பிரசவத்தைத் தள்ளிப்போட என்ன வழி? என தன் தோழியரிடம் வினவ, அவர்களும் கால் இரண்டையும் ஒன்றாகக் கட்டி தலைகீழாக தொங்கினால் தள்ளிப் போடலாம். ஆனால் அது தங்கள் உயிருக்கு ஆபத்தைத் தரும் எனக் கூறினார்கள். தன் குழந்தையின் சிறப்பே முக்கியமென முடிவெடுத்தவர். தலைகீழாகத் தொங்கி நாழிகை கழித்தாராம். பிள்ளையும் பிறந்தது. அதுவும் ஆண் குழந்தை. தலைச்சன் ஆண் என்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் ‘‘தாய்க்குத் தலைமகன், தந்தைக்கு இளைய மகன்’’ என்ற பழமொழி கண்கள் மிகச் சிவப்பாக இருக்கக் கண்டவள் என் கோ செங்கண்ணனோ? என்று கேட்ட பொழுதே அவரின் உயிரும் பிரிந்ததாம்.

சுமை முழுதும் சுபதேவன் மேல் விழ, தாயுமானவனாக மாறியவர் எந்தக் குறையுமின்றி வளர்த்து ஆளாக்கி மன்னனாக கிரீடம் சூட்டிவிட்டு சுகமாக சிவலோகம் சேர்ந்தார். மன்னராக பொறுப்பேற்ற சோழன் முதன் முதலாக வெண்நாவல் மரத்தடியால் அமர்ந்த அருள்மிகு ஜம்புகேஸ்வரருக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரிக்கும் திருக்கோயில் ஒன்றினை அமைத்தார். அடுத்
தடுத்து ஆலயங்கள் தோற்றுவித்து கடைசியாக திருஅம்பர் திருக்கோயில் கட்டினார் என்பது அவரது வரலாறு.இந்தப் புராணங்களை உறுதி செய்யும் விதமாக, ‘‘சிலந்தி செங்கட்சோழனாகச் செய்தான்’’ என திருஞானசம்பந்தப் பெருமானும்,

‘‘சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச் செங் ணானு மாகக்
கலந்த நீர் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித் திட்டார் குறுகை வீரட்டனாரே !’’

என அப்பர் சுவாமிகளும்,நெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்திசித்திரப் பந்தர் சிக்கென வியற்றச்சுருண்ட செஞ்சடையாய் அது தன்னைச்
சோழனாக்கிய தொடர்ச்சிகண் டடைந்தேன்.’’

என சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தங்களுடைய தேவாரத்தில் பதிவு செய்து உறுதி செய்கின்றனர்.இவருக்கு சைவ, வைணவ பேதம் இல்லையென்பது இவர் திருமாலுக்குக் கட்டிய மூன்று கோயில்களே சாட்சியாகும்.

இருக்கிலங்கும் திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபது செய்த உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
- பெரிய திருமொழி.

என்று திருமங்கையாழ்வார் தன் அருள்மொழியால் உறுதி செய்கின்றார்.இவ்வாறு ஆலயப்பணி செய்துவரும் நாளில் ஒருசமயம் தீராத வயிற்று வலியால் அவதியுற்றபோது அருள்மிகு நீணெறிநாதர் அருள்மிகு ஞானாம்பிகை அம்பாள் அருளாட்சி நடத்திக் கொண்டிருக்கும் தண்டலைச் சேரி எனும் திருத் தலம் சென்று அங்குள்ள நந்திக்கு அறுகம்புல் படைத்து வழிபடு என்று அவர் கனவில் வழிகாட்ட, அவ்வாறே அங்கு சென்று கனவை நனவுபடுத்தி நலிவிலிருந்து மீண்டார் என்பது தண்டலைச்சேரி தலவரலாறு கூறும் தகவல்.

அடுத்த துன்பம் குனம் நோயாக வந்ததாம். மிக்க அவதியுற்றபோது ‘‘மூன்று விருட்சங்கள் ஒன்றிணைந்து இருக்கும் இடத்தில் ஒரு சிவாலயம் எழுப்புக’’ என்று அசரீரி கேட்டது. அதன்படி தன் அமைச்சர் குழாத்துடன் கூடி ஆலோசனை செய்த போது, பாக்கு, கொன்றை, வில்வம் ஆகிய மூன்றும் இருக்கும் இடமாக திருஆக்கூர் திருத்தலம் தெரியவர உடனே திருப்பணி தொடங்கி யது. சோதனை துரத்திட தினம் தினம் கட்டும் கட்டுமானம் மாலையில் இடிந்து விழுந்துவிடும்.

எத்தனையோ முயன்றும் நிறுவ முடியாததால் மன்னன் நொந்துபோன தருணத்தில் மீண்டும் கனவில் தோன்றிய ஈசன் ‘‘ஆயிரம் அந்தணர்கட்கு ஒரு மண்டலம் (48 நாள்) அன்ன தானம்
செய்த பின்பு ஆலயப் பணியைத் தொடங்கிடு’’ என அருள்புரிந்தார். அதனையும் செவ்வனே நிறைவேற்றி வரும் வேளையிலே கடைசி நாளன்று சாப்பிடுவதற்கு ஒரு அந்தணர்
குறைந்திட, மன்னன் வருத்தமுற சிவபெருமானே வயதான அந்தண வேடத்தில் வந்து குறைபோக்கி நிறைவாக்கினார்.

மகிழ்ந்த மன்னனும் அவரிடம் சென்று ‘எங்கிருந்து வருகிறீர்’ எனக் கேட்டபோது, ‘யார் இங்கு உள்ளவர்?’ என பதிலுரைத்துவிட்டு அருகிலிருந்த புற்றுக்குள் சென்று மறைந்தார். வியப்புற்ற சிலர் புற்றை இடிக்க உள்ளே சுயம்பு மூர்த்தியாய் லிங்கத் திருமேனி தரிசனம் தந்திட, சர்வமும் ஒடுங்கிய கூட்டம் வழிபட்டு பணிந்தது. அங்கே அருள்பாலிக்கும் மூலவர் திருநாமம் தான்தோன்றீஸ்வரர் தாயார் அருள்மிகு வாள் நெடுங்கண்ணி என்பதாகும்.

இன்றும் ஆக்கூர் திருத்தலத்திலே லிங்கத் திருமேனியிலே ஆயுதம் பட்ட வடுவைக் காணலாம். இத்தல ஈசனே சோழனை குன்மத்திலிருந்து மீட்டவர் என்பது தல வரலாறு. சோழர் குலத்தோன்றல் தம் தேசம் தவிர்த்து பாண்டியவர்கள் ஆண்ட தென்னாட்டையும் வென்று ஆண்ட வீரத்திருமகன் என்பது, ‘‘தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்’’ என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை மூலம் உறுதி செய்யப்படுகிறது.மேலும், இதை வழிமொழிவதாக நம்பியாண்டார் நம்பி சுவாமிகள் தன்னுடைய திருத்தொண்டத் திருவந்தாதியிலே கோச்செங்கட்சோழ நாயனாரைப் போற்றும்போது,‘‘நிம்ப நறுங்தொங்கல் கோச் செங்கணான் எனும் நித்தனையே’’ எனப் போற்றுகிறார்கள். நிம்பம் என்றால் வேப்பமரம்.

 நறுந்தொங்கல் என்றால் வாசனையான மாலை எனப் பொருள் படும். வேப்ப மலர்களை மாலையாக்கிச் சூடுவது பாண்டியர்களுடைய உரிமை. சோழர்களுடைய உரிமை ஆத்திமலர். ஆக, சோழர் வம்சத்தவர் நிம்பமாலை சூடினார் எனப் பாடியதால் இவர் பாண்டியர்களுடைய தென்னாடு வென்று ‘‘தென்னவனாய்’’ திழ்ந்தவர் என்பது திண்ணம். இவ்வாறாக எத்தனையோ பெருமை கொண்ட கோச்செங்கட் சோழ நாயனார் தன் இறுதிக் காலத்தை தில்லையில் கழித்தார் என முடிக்கின்றது பெரியபுராணம்.

மின்னும் பெண்மைசோழரின் தாய் துன்பம் சுமந்து தன்பாரம் இறக்கினாள். தான் இறக்க வாய்ப்பு அதிகம் என்ற போதிலும், தன் குழந்தை மூவுலகு  ஆளவேண்டும் என்ற தவிப்பில் நிறைமாத கர்ப்பிணி தன்னை தலைகீழாகத் தொங்கவிட்டு நாழிகை கடத்துங்கள் என்று கூறுகிறார் என்றால் அவளின் பாசத்தை எதைக் கொண்டு அளப்பது? அவளின் மரணமே தியாகமாக இப்பொழுதும் எழுபது மாடக் கோயில்களாக திருமால் மாடங்களாக நிற்கின்றன என்றால் அது மிகையாகுமோ? இங்கே மின்னுவது தாய்மை எனும் பெண்மையன்றோ.

அயப்பாக்கம் ப.ஜெயக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்