SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமலை ரகசியங்கள்

2021-09-27@ 16:13:53

1. திருமலையப்பன் தனது பக்தரான தொண்டைமான் சக்கரவர்த்திக்குத் தனது சங்கு சக்கரங்களை அளித்தார். கொடிய பகைவனான சிம்மாதனை மலையப்பன் தந்த அந்த திவ்ய ஆயுதங்களைக் கொண்டு தொண்டைமான் சக்கரவர்த்தி வென்றான். பக்தனுக்கு ஆயுதம் தந்ததன் அடையாளமாகத் தன் திருமேனியில் சங்கு சக்கரங்கள் ஏந்தாமலேயே சில காலம் நின்றிருந்தார் பெருமாள். இது பிராம்ம புராணத்தின் ஏழாம் அத்தியாயத்திலும், பிரம்மாண்ட புராணத்தின் பதினொன்றாம் அத்தியாயத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பின்னர் ராமாநுஜர் சங்கு சக்கரங்களைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்த போது, பெருமாள் அவற்றை ஆசையுடன் கையில் எடுத்துக் கொண்டார். இன்றளவும் சங்கு சக்கரங்களோடு மலையப்ப சுவாமி
நமக்குத் தரிசனம் தருகிறார்.

2. மார்கழி மாத விடியற்காலை பூஜைகளில் திருமலையப்பனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஹாரீத ஸ்ம்ருதி என்ற உயர்ந்த நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் மார்கழி மாதத்தில் திருமாலுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது விசேஷம் என்று சொல்லப்பட்டுள்ளது. வராக புராணத்திலும், திருமலையில் தவம் புரிந்த மாமுனிவர்கள் வில்வ இலைகளால் திருமாலுக்கு அர்ச்சனை செய்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வில்வ இலை திருமகளுக்கும் உகந்ததாக இருப்பதால், அவளைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானுக்கு வில்வார்ச்சனை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

3. திருமகளோடு சேர்ந்த திருமாலுக்கு வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்தால், அது எல்லாச் செல்வங்களையும் அதிகமாகத் தரும் என்று வைகானச ஆகமத்தின் ஆனந்த சம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிறந்த செல்வ அபிவிருத்தி உண்டாவதற்காக, திருமலையப்பனுக்கு வெள்ளிக் கிழமைகளில் திருமஞ்சனம் நடக்கும்படி ஏற்பாடு செய்தார் ராமாநுஜர். பவிஷ்யோத்தர புராணத்தின் 14-ம் அத்தியாயத்தில், பண்டைக் காலத்திலும் மலையப்பனுக்கு வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் நடைபெற்று வந்ததாகக் குறிப்பு உள்ளது.

4. பாத்ம புராணம் பத்தாம் அத்தியாயத்தில், ஜம்பூ த்வீபத்தில், பாரத நாட்டில், கங்கைக்கு இருநூறு யோசனை தெற்கேயும், கிழக்குக் கடலுக்கு ஐந்து யோசனை மேற்கேயும் உள்ள நாராயண கிரி என்னும் திருமலையில், சுவாமி புஷ்கரிணியின் மேற்குக் கரையில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம் துவாதசி திதி திங்கட் கிழமை சித்த யோகத்தில் நிவாசன் அவதாரம் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

5. வெள்ளிக் கிழமை திருமஞ்சனத்தின்போது, பெருமாளின் திருமார்பில் உள்ள தேவித் தாயாரைத் திருமார்பில் இருந்து இறக்கி எழுந்தருளச் செய்து, அவளுக்குத் திருமஞ்சனம் செய்வார்கள். அகலகில்லேன் இறையும் என்று ஒரு நொடி கூடப் பெருமாளைப் பிரியாத அந்தத் திருமகள், திருமஞ்சனக் காலத்தில் பிரிவுத் துயரால் வாடுவாள் அல்லவா அவளது பிரிவுத் துயரை ஆற்றுவதற்காக, பூமி தேவி நாச்சியாரின் அவதாரமான ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியைத் திருமஞ்சனக் காலத்தில் ஓத வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தி வைத்தார், ராமாநுஜர். இன்றளவும் இது பின்பற்றப்பட்டு வருகிறது.

6. சுக முனிவர், பிருகு முனிவர், பிரகலாதன், அம்பரீஷன் போன்ற பல அடியார்கள் திருமலையைத் திருமாலின் வடிவமாகவே கருதி, அதைக் காலால் மிதிக்க அஞ்சி, மலை அடிவாரத்திலேயே வசித்துத் தவம் செய்கிறார்கள் என்றும் மலைமேல் அவர்கள் ஏறுவதில்லை என்றும் வாமன புராணத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆழ்வார்களும் திருமலையையே மலையப்பனாகக் கருதிப் பாசுரங்கள் பாடியுள்ளார்கள்.

திருமலையே அடைய வேண்டிய இலக்கு என்றும், அந்த மலையே அதை அடைவிக்கும் சாதனம் என்றும் பாடியுள்ளார்கள். எனவே தங்கள் பாதத்தால் திருமலையைத் தீண்டுவது கூடாது என எண்ணி, மலையடிவாரத்தில் இருந்தே மங்களாசாசனம் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே, ஆழ்வார்களை திருமலைக்கு மேல் பிரதிஷ்டை செய்தால் அது அவர்களின் திருவுள்ளத்துக்கு ஒவ்வாது எனக் கருதி, அவர்களை மலை அடிவாரத்தில் திருமலையைப் பார்த்தபடி மங்களாசாசனம் பண்ணும் திருக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தருளினார் ராமாநுஜர்.

7. சோழ மன்னனால் தில்லைநகர் திருச்சித்ரகூடம் என்னும் திவ்ய தேசத்துக்கு ஆபத்து நேர்ந்த போது, அங்குள்ள உற்சவ மூர்த்தியைக் காத்து, கீழத் திருப்பதியில் தென்புறத்தில் உள்ள பெரிய ஏரியின் அருகே அவரைப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர். அவர்தான் கீழத் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள். யாதவ மன்னன் மூலம் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மூல மூர்த்தியை ஆவாகனம் செய்து பிரதிஷ்டை செய்தார்.

8. திருமலையப்பனின் எல்லையற்று இடையறாத செல்வத்தின் வளர்ச்சிக்காக அவரது திருமார்பில் உள்ள பொற்கண்டியில் வியூக லட்சுமியைப் பிரதிஷ்டை செய்தார் என்று வேங்கடாசல இதிகாச மாலை சொல்கிறது.

9. கோவிந்தராஜப் பெருமாளின் செல்வமும் இடையறாது மேன்மேலும் வளர்வதற்காக, வியூக லட்சுமியின் யந்திர மந்திரங்களை முறைப்படி எழுதி அலங்கரிக்கப்பட்ட திவ்ய சிம்மாசனத்தில் ஆண்டாளைப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர் என்றும் வேங்கடாசல இதிகாச மாலை சொல்கிறது.

10. சுவாமி புஷ்கரிணிக் கரையில் புளிய மரத்தின் வடிவில் திருமாலும் செண்பக மரத்தின் வடிவில் திருமகளும் எழுந்தருளி இருப்பதாக பாத்ம புராணம், பவிஷ்யோத்தர புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ளது.

11. வீர நரசிம்ம கஜபதி என்ற விஜயநகர மன்னர் மலையப்பன் திருக்கோவிலுக்குக் கோபுரம் கட்டிக் கொடுத்தார். அப்போது அவரது கனவில் ஆதிசேஷன் தோன்றி, என் உருவமாய் இருக்கும் மலைக்கு மேல் நீங்கள் கட்டும் கோபுரத்தின் பாரத்தால் எனக்குப் பெருந்துன்பம் உண்டாகிறது. பெருமாளின் கையில் என்னைச் சேர்த்தால் தான் எனது துன்பம் தீரும் என்று கூறினார். அதன் அடிப்படையில், வீர நரசிம்ம கஜபதி நாகாபரணம் செய்து சமர்ப்பிக்க, அது திருவேங்கடமுடையானின் வலக்கரத்தில் அணிவிக்கப்பட்டது.

12. சுவாமி புஷ்கரிணியின் மேல் கரையில் நரசிம்மப் பெருமாள் எழுந்தருளி இருந்தார் என்றும் அவரைப் பரமசிவன் வழிபட்டார் என்றும் ஸ்காந்த புராணத்தின் சுவர்ணமுகீ மாகாத்மியம் கூறுகிறது. திருமங்கை ஆழ்வார் வேங்கடத்து அரியை பரிகீறியை என்று இப்பெருமாளைப் பாடியுள்ளார். ஆனால் சுவாமி புஷ்கரிணி மேல் கரையில் இருந்த அவர் சந்நிதிக்குச் சில இடையூறுகள் ஏற்பட்டதாலே, திருவேங்கடமுடையானின் கோவிலுக்கு உள்ளேயே வடகிழக்குப் பகுதியில் ஆனந்த நிலைய விமானத்தைப் பார்த்தபடி அந்த நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர்.

13. மார்க்கண்டேய புராணத்தின் படி, திருமலைக்கு மார்க்கண்டேய முனிவர் வந்த போது, நடுவழியில் ஒரு மலைக் குகையில் நரசிம்மரைத் தரிசித்தார். புராணத்தில் சொல்லப்பட்ட இந்த இடத்தில் நரசிம்மருக்கு ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர். அவர்தான் நடுவழி நரசிங்கப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

14. ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் மலையப்பனுக்காக நந்தவனம் அமைத்துப் புஷ்ப கைங்கரியம் செய்தார். இன்றும் அனந்தாழ்வான் தோட்டத்தில் இருந்துதான் மலையப்பனுக்குப் பூக்கள் செல்கின்றன. அனந்தாழ்வான் தோட்டம் அமைக்கும் வேளையில், மலையப்பன் சிறுவன் வடிவில் வந்து அவருடன் விளையாட, அனந்தாழ்வான் கடப்பாறையால் அச்சிறுவனின் தாடையில் அடித்து விட்டார்.

பின் பெருமாளின் தாடையில் இருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்டு வருந்திய அனந்தாழ்வானிடம் பெருமாள், நீ வருந்தாதே, திருமார்பில் உள்ள வத்சம் என்ற மறுவைப் போலே தாடையில் உள்ள தழும்பையும் அலங்காரமாக நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இச்சம்பவத்தை நினைவூட்டத் தன் தாடையில் பச்சைக் கற்பூரம் அணிவிக்க வேண்டும் என்று மலையப்பன் கட்டளை இட்டார். அனந்தாழ்வான் தன்னை அடித்த கடப்பாறையையும் உயர்ந்த இடத்தில் பொருத்தி நிறுத்த வேண்டும் என்று கட்டளை இட்டார். கோபுர வாசலின் வடதிசைச் சுவரின் மேற்புரத்தில் அந்தக் கடப்பாறையை இன்றும் காணலாம்.

15. கீழத் திருப்பதியில் திருமலைப் படிகள் ஏறும் வழியின் தொடக்கத்தில் உள்ள ஒரு புளியமரத்தடியில் ராமாநுஜர் தனது மாமாவான திருமலை நம்பிகளிடம் ராமாயணத்தின் உட்பொருள்களைப் பயின்றார். ஒருநாள் அங்கிருந்த குண்டுக் கல்லில் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவை மணம் கமழ, சந்தனம், புஷ்பம், துளசியால் அலங்கரிக்கப்பட்ட மலையப்பனின் திருவடிகள் தோற்றம் அளித்தன. ராமாயணத்தைக் கேட்க மலையப்பனே வந்திருக்கிறான் என்று அவர்கள் உணர்ந்தார்கள். ராமாநுஜர் அங்கே பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். திருமலைக்கு மேலே சிலர் ஏறக்கூடாது என்ற நிலை இருந்த அக்காலத்தில், புரட்சியாளரான ராமாநுஜர், மலையடிவாரத்தில் உள்ள இந்த திருவடிகளைத் தரிசித்தாலே மலை ஏறி மலையப்பனைத் தரிசித்த பலன் கிடைக்கும்படியாக அங்கே பிரதிஷ்டை செய்து வைத்தார்.

16. வராக புராணம் முதல் பகுதி முப்பதாம் அத்தியாயத்தில், திருமலையில் உள்ள முனிவர்கள் கூட்டமாக இணைந்து, கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் இட்டு வருவதாகச் சொல்கிறது. எனவே தான் இன்றளவும் மலை மீது ஏறும் அடியார்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற நாம உச்சாரணத்துடன் மலை ஏறுவதைப் பார்க்கிறோம்.

17. வைகைக் கரையில் உள்ள குருவித் துறையில் விபீஷணனுக்கு அருள்புரியும் திருக்கோலத்தில் உள்ள ராமரை விச்வம்பரர் என்ற முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வூரில் கலகம் ஏற்படவே, அந்த ராமரையும் அவரது பரிவாரத்தையும் அங்கிருந்து திருமலை அடிவாரத்தில் திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்டு வந்த ராமாநுஜரிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். அச்சமயம் திருமலை நம்பிகளும் ராமாயணத்தில் விபீஷண சரணாகதி பற்றித் தான் ராமாநுஜருக்கு விவரித்துக் கொண்டிருந்தார். தனக்கு அருள்புரிவதற்காகத் தேடி வந்த ராமரையும் அவரது பரிவாரத்தையும் மலையப்பனின் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர்.

திருமலையில் ராமாநுஜர் ஏற்படுத்திய ஒழுக்க விதிகள்

*திருமலையில் பெரிய பெரிய முனிவர்களும் யோகிகளும் எப்போதும் எழுந்தருளி இருந்து மலையப்பனை வணங்கி வருகிறார்கள். எனவே, பெருமாளுக்கு அருகில் இருந்து அவரது முக மலர்த்திக்காக முக்கியக் கைங்கரியம் செய்பவர்கள் மட்டுமே மலைக்கு மேல் தங்க வேண்டும். தூரத்தில் இருந்தபடி குணாநுபவமும் தொண்டும் செய்ய வல்லவர்கள் மலைக்குக் கீழேயே தங்கிக் கொள்ளலாம். திருவிழாக் காலங்களில் மட்டும் அவர்கள் மலைக்கு மேலே போகலாம்.

*திருமலையில் விளையும் காய், கனி எதையுமே மலையப்பனுக்குப் படைக்காமல் உண்ணக் கூடாது.

*திருமலையில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெருமாளுக்கு நேரடியாகச் சந்தனம், புஷ்பம் சமர்ப்பிக்காமல் மலையப்பனுக்குச் சாத்திய பிரசாதத்தையே கொண்டு வந்து சாத்தவேண்டும்.

*திருமலையில் யாரேனும் மரணத் தருவாயில் இருந்தால், மரணத்துக்கு முன் கீழத் திருப்பதிக்குக் கொண்டு வந்து விட வேண்டும். ஒருவேளை திருமலையில் இறந்து விட்டால், மலைக்குக் கீழே கொண்டு வந்து தான் ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும்.

*திருமலையில் மான், பறவை, எறும்பு உள்ளிட்ட பல வடிவங்களில் தேவர்களும் நித்திய சூரிகளும் இருந்து மலையப்பனை வணங்கி வருகிறார்கள். அதனால் மலையில் வாழும் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.

*திருமலையில் நடந்து ஏறிச் செல்லும் போதும், பெருமாளின் வீதிகளிலும் காலணிகள் அணியக் கூடாது.

*திருமலையில் பெருமாளைத் தவிர வேறு யாரும் பூமாலைகள் அணிந்து கொள்ளக் கூடாது. பெருமாள் அணியும் மாலைகளைப் பரிவார தேவதைகளுக்குச் சாத்துவார்கள். அல்லது பூலபாவியில் இட்டு விடுவார்கள். பக்தர்களுக்கு மாலைப் பிரசாதம் வழங்கப்படுவதில்லை.

குடந்தை வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்