SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரப்பண்டிகைகளை கொண்டாடுவோம்

2021-09-13@ 17:00:44

அபராஜிதா சப்தமி
(13.9.2021 - திங்கட்கிழமை)

சப்தமி என்பது ஏழாவது திதி.அபராஜிதா சப்தமி என்பது பாத்ரபாத (புரட்டாசி) மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி.13.9.2021, திங்கட்கிழமை வருகிறது. சாந்திரமான கணக்கில் ஆவணி கடைசி யிலும் வரும். துர்கையின் ஒரு வடிவம்தான் அபராஜிதாதேவி. அபராஜிதா என்றால் வெல்லப்படாதவர் என்று பொருள். அபராஜிதா அதர்மத்தின் வழி நடப்பவர்களை தண்டிப்பாள். தர்மத்தை பின்பற்றுவோரை காப்பாற்றுவாள். நவராத்திரியின் போது மகா நவமி நாளில் அவள் வணங்கப்படுகிறாள். குடும்பத்தில் ஒற்றுமை வளரவும், மன அழுக்குகள், கெட்ட எண்ணங்கள் நீங்கவும், திங்கட்கிழமை அன்று மாலை பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அம்மனை நினைத்து கீழ்வரும் பாடலை பாடுங்கள்.
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டுசெறிந்தேன் உனது திருவடிக்கே,
திருவே! வெருவிப்பிறிந்தேன் நின்அன்பர் பெருமை
எண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய
மனிதரையே.    
(அம்பிகையே, அபிராமியே. யாரிடமும் சென்று தெரிந்து கொள்ள முடியாத அற்புதமான விஷயங்களை உன்னுடைய கடைக்கண் பார்வையாலும், உன்னுடைய திருவடி பலத்தினாலும், நான் இன்று தெரிந்து கொண்டேன். உன்னுடைய அன்பர்கள் பலர்  உன் கருணையால் பலனடைந்திருக்கிறார்கள். உன் கோயிலுக்கு வந்து  வணங்கியதால்  அள்ளிக் கொடுத்தாய் அல்லவா... அவர்களை விட்டுவிட்டு, நரகக்குழியில் குப்புற விழும் மனிதர்களிடம் சகவாசம் வைப்பது தகுமா? அம்மா, உன்னை நம்பினேன். நீயே  காப்பாற்று.)
தூப தீப நிவேதனம் செய்யுங்கள். உங்கள் செயல்கள் தேவி அருளால் வெற்றிகரமாக முடியும்.

தூர்வாஷ்டமி

(14.9.2021 - செவ்வாய்க்கிழமை)

ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். தூர்வை என்பது அறுகம்புல். திருமகள் வாசம் செய்வது. ‘‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க'' என வாழ்த்துவார்கள். அறுகம் புல்லை பூஜை செய்ய, தடைகள் விலகி, வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.விநாயகருக்கு அருகு மிகவும் விருப்பமானது.
“அருகு சார்த்தி வழிபட பெருகும் நன்மை வாழ்விலே” என்பது போல்,
அறுகம் புல் பறித்து வந்து பூஜை
செய்கிறோம்.
துளசி பூஜை போல இதுவும்
சிறப்பானது.
அறுகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர, அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால் கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இப்பூஜை செய்தல், வறண்ட நிலத்தில் ஈரம்  சேர்ந்து புல் தழைத்தது போல வாழ்வும் தழைக்கும்.அந்த  நம்பிக்கை வேண்டும் என்றுதான்  நம் முன்னோர்கள் அறுகம் புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்தினார்கள். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அறுகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள்.ஜ்வாலாசுரன் என்று ஒரு அசுரன். அவன் தேவர்களை இம்சித்து வந்தான். அவனிடம் வித்தியாசமான ஆற்றல் இருந்தது. அவனது உடல் நெருப்பு போல கொதிக்கும். அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. சென்றால் சாம்பலாகி விடுவார்கள். தேவர்கள் பிள்ளையாரை வேண்டினர். கணபதி ஜ்வாலாசுரனைப் பிடித்து விழுங்கி விட்டார். அனல் வடிவம் என்பதால் கணபதியின் வயிறு எரிந்து கொண்டிருந்தது. தேவர்கள் பல முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும்  இருபத்தொரு அறுகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து. அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கான பூஜைப்பொருள் அறுகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட அறுகம் புல்லை, நீராடி பறித்து வந்து ஒரு தாம்பாலத்தில் வைத்து, அதன்மேல் விநாயகர் படமோ சிலையோ வைத்து, மஞ்சள், குங்குமம் சாற்றி, தூப தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் அற்புத விரதமாகும்.  இவ்விரதத்தைக் கடைபிடிப்பதால் சகல நன்மைகளும் ஏற்படும். விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம்.

கெஜலட்சுமி விரதம்
(15.9.2021 - புதன்கிழமை)

ஒரு வருடத்தில் 20க்கும் மேற்பட்ட நாட்களில் மகாலட்சுமி பூஜை வருகின்றது. அஷ்டலட்சுமிகளில் சிறப்பான உருவம் கஜலட்சுமி. பாற்கடலை தேவர்களும்
அசுரர்களும் கடைந்தபோது பல்வேறு ஐஸ்வர்யங்கள் வந்தன. அவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களுள் ஐஸ்வர்யமான (திருவுக்கும் திரு )  திருமகள், கோடி சூரிய பிரகாசத்தோடு தோன்றினாள். அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, மங்கலங்களைத் தரும் பிளிறலை எழுப்பி வழிபட்டன. அப்படிப்பட்ட மஹாலஷ்மியை விரதம் இருந்து வணங்க வேண்டிய நாள்.
இதுதவிர ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமிக்கு உரிய நாள் தான். அந்த நாட்களில் வீட்டில் கலசம் வைத்து மகாலட்சுமியை பூஜை செய்யலாம். அல்லது வீட்டில் பெருமாள் மகாலட்சுமி படத்திற்கு பூக்களையும்  துளசியையும்  சாற்றி நெய் விளக்கு போட்டு வணங்கலாம். இம்முறை கெஜலட்சுமி விரதம் பெருமாளுக்குரிய புதன்கிழமையன்று வருவதால், அவசியம் வீட்டில் பெருமாள் தாயார் படத்திற்கு, ஏதேனும் ஒரு இனிப்புடன் கூடிய அன்னத்தை நைவேத்தியம் செய்யவும். (சர்க்கரைப் பொங்கல், அக்கார அடிசில் போன்றவற்றைச் செய்யலாம்) இந்த விரதத்தால் அரசாங்க ஆதரவுடன் பற்பல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வறுமை நீங்கும். செலவுகள் கட்டுப்படும்.

குரு ஜெயந்தி மற்றும்
புரட்டாசி ஏகாதசி

(17.9.2021 - வெள்ளிக்கிழமை)

நவகிரகங்களில் சுபமான இரு கோள் களைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒன்று குரு. இன்னொன்று சுக்கிரன். குரு லக்னத்தோடு சம்பந்தப்படுவது மற்றும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவது ஹம்ச யோகம் ஆகும். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். தீமைகளை தடுக்கும் ஆற்றல் குரு பகவானுக்கு உண்டு.தேவ குரு என்று போற்றப்படும் பூரண சுபர். இவர் ஜெயந்தி 17.9.2021 வருகிறது. தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி. இவர் திசை - வடக்கு; அதிதேவதை - பிரம்மா. குரு ஜெயந்தி அன்று குல தேவதையையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜை செய்யுங்கள். இயன்றால் கடலைப் பொடி சாதம், சுண்டல் செய்து விநியோகம் செய்யுங்கள்.மாலை அருகாமையிலுள்ள கோயிலுக்குச் சென்று இயன்ற அளவு உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வாருங்கள். இதன் மூலம் குருபகவான் அருள் கிடைக்கும். நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வச் செழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு களைப்  பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். அறிவு வாய்ந்த குழந்தைகளை பெறலாம். சுப காரியத் தடைகள் நீங்கி விரைவில் சுப காரியங்கள் நடைபெறும்.புரட்டாசி மாதப் பிறப்பிலும், திருவோண நட்சத்திரத்திலும் குரு ஜெயந்தி வருவதால் கூடுதல் சிறப்பு. அதே தினம் புரட்டாசி வளர்பிறை ஏகாதசி என்பதால், இயன்றால், அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை தந்து, ஒரு அர்ச்சனை செய்ய சகல புண்ணியங்கள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்