SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடக ராசி ஆண்

2021-09-01@ 11:42:10

என்னோட  ராசி    நல்ல    ராசி

கடகம் என்பது ஒரு  தண்ணீர் ராசி. இதன் சின்னம் நண்டு. ராசியாதிபதி சந்திரன். ஜூன் 21 முதல் ஜூலை 20க்குள் பிறந்தவர்கள். மேலை நாட்டு முறைப்படி இந்த ராசிக்காரர் ஆவர். இதனை சூரிய ராசி என்றும் சொல்வர். அதாவது சூரியன் ஆடி மாதத்தில் கடக ராசியில் இருக்கும். ஆடி மாதம் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் ஆட்சி உச்சம் என்று இருந்தால் இங்கு சொல்லப்படும் பண்புகள் இருக்கும். கடக லக்கினமாக  இருந்து அல்லது கடக ராசியாக இருந்து சந்திரன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் கீழ்க்காணும் பண்புகள் காணப்படும்.

கடக ராசி ஆண் நேர்மையானவராக இருப்பார். அவருக்கு பொய், பிராடுத்தனம் செய்யக் கூடிய புத்திசாலித்தனம் இருக்காது. கிரிமினல் புத்தி உள்ளவர்களுக்கு நினைவாற்றல் புத்திக் கூர்மை அதிகம் தேவை. அந்த மாதிரி புத்தி சந்திரனுக்கு கிடையாது. இவர்கள் கொஞ்சம் அப்பாவிகள். சந்திரன் மாதுர்காரகன் என்பதால் அம்மாவை அதிகமாக நம்பும் பச்சைப் பிள்ளைகள். வார்த்தைக்கு வார்த்தை எங்கம்மா... எங்கம்மா... என்றே பேசுவதைக் கேட்கலாம். எங்கம்மா சமையல் சூப்பராக இருக்கும். எங்கம்மா வீட்டை சுத்தமாக வைத்திருப்பார், எங்கம்மா அழகாகக் கோலம் போடுவார் என்று எப்போதும் அம்மா புராணம் பாடும் ஆண்கள் இவர்களாக தான் இருக்கக் கூடும்.

கடக ராசி ஆண்கள் உணவு பிரியர்கள். சாப்பாடு சாப்பிடுவதில் மட்டுமல்ல சாப்பாடு பரிமாறுவதிலும் பிறரைச் சாப்பிட வைப்பதிலும் மிகுந்த விருப்பம் உள்ளவர்கள் உடனிருப்பவர்கள் அல்லது பயணத்தின்போது உடன் வருபவர்களை நல்ல உணவகத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுப்பார்கள். அக்கறையோடு பார்த்துக் கொள்வார்கள். இவர்களிடம் ஒரு இடத்துக்கு போக வழிகேட்டால் அருமையாக மேப் வரைந்து படிப்படியாக சொல்லிக் கொடுத்து நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள்.

ஒரு இன்டர்வியூ போவதாக இருந்தால் இவர்களிடம் போய்க் கேட்டால் போதும். தெளிவாக ஆரம்பம் முதல் வெளியே வரும்வரை படிப்படியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவார்கள். நல்ல விளக்கம் தருவதில் சிறந்தவர்கள். கடக ராசி ஆண்கள் லட்சியவாதிகள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கைப்படி வாழ்வார்கள். எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்காது. இப்படிப்பட்டவர்களோடு சேரவும் மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் உறவுகளும் நட்பும் நல்லவர்களாக நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

முறைகேடுகளை ஊக்குவிக்க மாட்டார்கள். தவறு செய்பவர்களை பிடித்துக் கொடுத்து விடுவார்கள். நடவடிக்கை எடுப்பதில் கறாராக இருப்பார்கள். அதற்கு அஞ்சவே மாட்டார்கள். கடக ராசி ஆண்கள் சந்தேகப் பேர்வழிகள். யாரையும் முழுதாக நம்ப மாட்டார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால் இவர்களுக்கு எப்போதும் மனச்சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது. வீண் கற்பனைகள் தோன்றும். நன்றாக இருக்கும்போதே ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று கற்பனை செய்து கலங்கித் தவிப்பார்கள். தங்கள் பயத்தைக்கூட இருப்பவர் மீதும் சுமத்துவார்கள்.

உடனிருப்பவர் மகரம், கும்பம் ராசிக்காரராக இருந்தால் வருவது வரட்டும் ஒரு கை பார்க்கலாம் என்று தைரியம் சொல்வார். கடக ராசி ஆண்கள் கடும் உழைப்பாளிகள். நேரம் பார்க்காமல் உழைப்பார்கள். வேலையை முடித்துவிட்டுத்தான் சாப்பிடப் போவார்கள். உறங்கப் போவார்கள். உடல் உழைப்பை விட மனம் சார்ந்த கலை, கற்பனை, கணினி மற்றும் மனதால் உணர்ந்து அனுபவிக்கக் கூடிய தொழில்கள் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள். திரையுலகில் பின்னணி குரல் கொடுப்போர், காஸ்ட்யூமர், ஹேர் டிரஸர், மேக்கப் போடுவோர் போன்றோர் இந்த ராசிக்காரர்களாக இருப்பார்கள்.

ஓவியர், செட் டிசைன் செய்வோர், லேஅவுட் டிசைனர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தெரிந்தவர்கள் கடக ராசிக்காரர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. காரணம் இவர்கள் தம் மனம் போனபடி அழகழகாக டிசைன் செய்து தருவார்கள். இவர்களுக்கு இது போதும் என்ற மனமே இருக்காது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றே தோன்றும். மேலும் இவர்கள் ஸ்பாட் லைட் வெளிச்சத்தை விரும்பாதவர்கள். ஆனால், பின்னணியில் இருந்து மெருகூட்டுவர். அழகூட்டுபவர். சந்திரனுக்குரிய பொழுது இரவு அல்லவா. இவர்களும் இருட்டில் இருப்பதையே விரும்புவர். ஆனால், அங்கு அவர்கள் இருப்பதை உணர்த்தும் அழகும் இனிய பண்பும் கொண்டவர்கள்.

கடக ராசி ஆண்கள் கடுமையான சொற்களை, வசை மொழிகளைப் பேச மாட்டார்கள். மென்மையான சொற்களையே பேசுவார்கள். சிலர் கவிதை, கதை, நாடகம் கூட எழுதுவார்கள். கற்பனை சிறகைக் காற்றில் விரித்து வான வீதியில் பறக்கும் இயல்பினர். சத்தம் போட்டுப் பேச மாட்டார்கள். குத்தலாகப் பேச மாட்டார்கள். ஆனால், அழுத்தமாக பேசுவார்கள். நீ தான் வேண்டும் நீ இதைச் செய்யாதே... நீதான் குற்றவாளி, நீதான் திருடன்... என்று யாராக இருந்தாலும் ஒரே சொல்லில் முடித்துவிடுவர். துணிவாகவும் பணிவாகவும் பேசுவார்கள். தன் மனதில் பட்டதை உடனே சொல்லி விடுவர். யாருக்கும் பயப்பட மாட்டார்கள். மென்மையானவர்தானே தவிர கொலை அல்ல.

ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால், அழுத்தம் இருக்கும். கடலின் ஆழத்தை போன்ற மனம் உடையவர்கள். இவர்கள் மனதில் இருப்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. கடக ராசி ஆண் ஒரு பழமைவாதி. பழம்பெருமை பேசுவதில் மகிழ்ச்சி அடைவார். தமது குலப் பெருமை, மொழிப் பெருமை, இனப் பெருமை, தொழில் பெருமை, ஊர்ப் பெருமை, சாதிப் பெருமை போன்றவை மிகுதியாக இவர்களிடம் காணப்படும். கடக ராசி ஆண் புதியவற்றைக் கண்டு அஞ்சும் குணம் இருப்பதால் புதிய சூழலை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவார். புதிய படம் புதிய பாட்டும் படுத்திய பழக்க வழக்கம் நம்பிக்கை போன்றவை கடக ராசி ஆணுக்குப் பிடிக்காது.

கடக ராசி ஆண் ஒரு ரகசியக் காப்பகம். இவரிடம் நிறைய ரகசியங்கள் இருக்கும். எப்போதும் யாரிடமும் சொல்ல மாட்டார். நிறைய சுக துக்கங்களை மனதுக்குள் பூட்டி வைத்திருப்பார். யாரிடமும் தன் மனதை திறந்து காட்ட மாட்டார். சிறு வயதில் நடந்ததைக் கூட மறந்திருக்க மாட்டார். எல்லா காயங்களும் சந்தோஷங்களும் இவர் மனதில் பசுமையாக இருக்கும். சம்பவம் நடந்த நாள், மாதம், ஆண்டு கூட நினைவில் வைத்திருப்பார், சம்பந்தப்பட்டவர்கள் மறந்தாலும் இவர் மறக்க மாட்டார்.

ஊர் விஷயங்கள் பொது விஷயங்கள் இவரிடம் ஏராளமாக இருக்கும். கொஞ்சம் அன்பாகப் பேசி நயமாகப் பழகினால் கொஞ்சம் மனம் இளகி இரண்டொரு விஷயங்களைச் சொல்வார். பிறகு பயந்து தேவையில்லாமல் பேசிவிட்டோமோ என்று நினைத்து வாயை இறுக மூடிக் கொள்வார். இவர் ஒரு தகவல் சுரங்கம்.

பாசக்கார தந்தை

தன் பெற்றோர் உறவினர் பிள்ளைகளிடம் மிகவும் பாசமாக இருப்பார். பாசப் பறவைகள் பாச மலர் என்ற பெயர்கள் இவருக்கும் இவர் சகோதரிகளுக்குமே பொருந்தும். தாய் தந்தையிடம் மிகவும் மரியாதை வைத்திருப்பார். பிள்ளைகளிடம் பாசமாக நடந்து கொள்வார். கண்டித்துவிட்டு இவர் கலங்குவார். அடிக்க மாட்டார். அடித்து வளர்ப்பதை விட ஒரு சொல்லில் கண்டித்து வளர்ப்பார்.

இவரிடம் வன்முறை அராஜகம் அடாவடித்தனம் இருக்காது. தெருவில் இருப்போருக்கும் கேட்ட உதவிகளை செய்வார். கடக ராசி நண்பர் கிடைப்பது பெரும் பாக்கியம். பிறருக்காக சிந்திப்பார். இவருக்குத்தான் இரவில் தூக்கம் வராதே, எனவே, மற்றவர்களைப் பற்றி அவர் நன்மை தீமைகள் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பார். விடிந்ததும் நண்பர்களுக்கு நல்ல யோசனைகளை சொல்வார்.

காதலித்துக் கொண்டே...

கடக ராசி ஆணுக்கு எப்போதும் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும். திருமணம் செய்யவும் அஞ்சுவார். ஏமாற்றும் எண்ணமே கிடையாது. மன உறுதி இருக்காது. ஒரு முடிவுக்கு வர ஆண்டுக் கணக்கில் கூட யோசிப்பார். மனைவி அல்லது காதலியிடம் இப்படி கொஞ்சலாம் அப்படி கொஞ்சலாம் என்று கற்பனை செய்வார். நேரில் அப்படியெல்லாம் செய்ய மாட்டார். ஆனால், இவரது சந்தேகத்தை தீர்க்கும் வகையில் பெண்கள் இவரிடம் அடிக்கடி இவரை மட்டுமே விரும்புவதாக காதலிப்பதாக சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பேசித் தெரிவிக்க வேண்டும் அல்லது உடல் மொழியின் மூலம் தெரிவிக்க வேண்டும்.

இவர் மனதுக்குள் காதலிப்பார். ஆனால், காதலி வெளிப்படையாக ஒரு நாளைக்கு பத்து முறை உன்னை காதலிக்கிறேன்... உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இவர் காதலி அல்லது மனைவியை  நினைத்து கவிதை எழுதுவார். அழகாக படங்கள் வரைந்து கடிதம் எழுதுவார். ஆனால், அவற்றை கொடுக்காமல் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருப்பார். இவர் மனைவி இவரை தனது முதல் குழந்தையைப்போல பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவருக்கு தாய்க்கு பின் தாரம்தான் எல்லாம். இவர் துக்கப்படும்போது தன் துக்கத்துக்கான காரணத்தை மனைவியிடம் கூடச் சொல்ல மாட்டார். அதை ஊகித்து உணரும் அறிவும் திறமையும் மனைவிக்கு இருக்க வேண்டும். கடக ராசி ஆண் அம்மா செல்லம். இரக்கம் உள்ளவர். நேர்மையானவர்.  பாரம்பரியப் பெருமை உள்ளவர். நல்லவர்... வல்லவர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்