SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரப் பண்டிகைகள் இப்படித்தான் கொண்டாடவேண்டும்

2021-08-28@ 17:38:23

நமது வாழ்க்கை சமய பண்டிகைகள், விரதங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும் என்பதற்காகவே இத்தனை பண்டிகைகள், விரத நாட்களைத் தேடித்தேடி வைத்துள்ளார்கள். ‘‘தினம்தோறும் திருநாள்’’ என்பது மனிதன் வாழ வேண்டிய மகிழ்ச்சியான வாழ்வின் உயர்வாசகம். இத்தனைப்  பண்டிகைகளும் ஏன், எதற்குக் கொண்டாடுகிறோம்? கதை என்ன? என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் கொண்டாடுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும்; யார் கொண்டாடினாலும் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லதல்லவா! அது பண்டிகைகளையும் விரதங்களையும் புரிந்துகொள்ள உதவும்.

பானு சப்தமி (29:8:2021)
ஞாயிற்றுக்கிழமை

பானு என்றால் சூரியன். சப்தமி என்றால் ஏழாம் நாள் திதி. சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமையில் சப்தமி திதி கூடினால் அன்று ஒரு சிறப்பு. அதுவும் ஆவணி மாதம், சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் ஆட்சி பெறும் மாதம் அல்லவா! ஏழு என்பது பல அற்புதமான சிறப்புக்களை உள்ளடக்கியது. ஏழு நதிகள், ஏழு கடல்கள், ஏழு பிறவிகள், ஏழு பிரகாரங்கள், ஏழு கன்னிகைகள், ஏழு உலகங்கள், என்று ஏழின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

‘‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்” என்பது ஆண்டாள் வாக்கு. ஏழாவது திதி சப்தமி.  சூரியனுக்குரிய பானு சப்தமி நாளன்று அதிகாலை எழுந்து குளித்து, வீட்டின் முற்றம் அல்லது மேல்மாடியில் சிறு பலகையில் கோலம் போட்டு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் படைப்பது விசேஷமானது. ஆவணி மாதத்தில் இப்போதும் ஒருசில குடும்பத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரியனுக்கு படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் பானு சப்தமி அன்றாவது படைக்க வேண்டும். அதனால் ஆத்மபலம் வளரும். தைரியம் பிறக்கும்.சூரியன் ஒளி பொருந்தியவர் என்பதால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தாய் தந்தையர்  குறிப்பாக தகப்பனார் உறவுச் சிக்கல்கள் விலகும். பூர்வீக சொத்து திரும்ப கிடைக்கும். சூரியன் பிதுர் கிரகம் என்பதால்  முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். காரணம் சூரியக் கதிர்கள் மூலம் தான் நம்முடைய வழிபாடு முன்னோர்களைச்  சென்றடைகிறது என்பது சாத்திரம். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசாங்க கிரகமான சூரியனை வணங்கி, ஆவணி ஞாயிறு பானு சப்தமி அன்று தவற விடாது சூரிய வழிபாடு செய்ய தங்கள் விருப்பத்தை அடையும் வழியைத்  தெரிந்துகொள்ள முடியும். அரசியலில் ஏற்றம் பெற உயர்ந்த நாள். மிக எளிய வழிபாடு. ஆனால், பலனோ சொல்லில் அடங்காது.

கிருஷ்ண ஜெயந்தி
(30.8.2021 மற்றும் 31.8.2021
திங்கள் மற்றும் செவ்வாய் )

முதல்நாள் திங்கட்கிழமை சிலர் கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவார்கள். அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை பாஞ்சராத்ர ஜெயந்தி என்று வைணவர்கள் கொண்டாடுவார்கள். முதல்நாள் அஷ்டமி மட்டும் இருக்கும். அடுத்த நாள் அஷ்டமியும் ரோகிணியும் இருக்கும்.“ஆவணி ரோஹிணி, அஷ்டமியில், அர்த்தஜாம நேரத்தில் அவதரித்தவன்” என்பதால் கோகுலாஷ்டமி மாலை  அல்லது முன்னிரவு கொண்டாடுவது சிறப்பு.உலகம் முழுக்க குழந்தைகளைக் கொண்டாடும் மரபு இருக்கிறது. காரணம் குழந்தையின் குணங்களும் கடவுளின் குணங்களும் ஒன்று.குழந்தைகளைப் போல மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயம் உலகத்தில் இல்லை.எத்தனைச்  சிரமங்கள் இருப்பினும், ஏதோ ஒரு விதத்தில் மனிதன் வாழ ஆசைப்படுவதற்கான காரணங்களில் ஒன்று குழந்தைகள். அந்த குழந்தைகளுக்கு எத்தனையோ விதமாக பேர் இட்டு இருந்தாலும், ஆசையும் பாசமும் அளவற்று இருக்கும்பொழுது, ஒரே பெயரால் தான் எல்லோரும் அழைப்பார்கள்.

 அந்தப் பெயர்தான் கண்ணன்.

‘‘கண்ணா” என்று அழைக்கும் பொழுது இதயம் திறந்த மகிழ்ச்சி இன்னிசையாய் கானம் பாடி நிற்கும்.அந்த ஒரு சொல் சொல்லிப்பாருங்கள். துன்பங்கள் துடைத்து எறியப்படும்.
அந்தக் கண்ணனுக்கு பெரு விழா கொண்டாட ஒருநாள் இருக்கிறது என்றால் அதுதான் கிருஷ்ண ஜெயந்தி. கோகுலாஷ்டமி.ஒரு குழந்தையின் உன்னதம் இந்த இரண்டு வரி ஸ்லோகத்தில் அடங்கியிருக்கிறது.
வசுதேவ சுதம் கம்ச சாணூர மர்த்தனம்தேவகி பரமானந்தம் வந்தே கிருஷ்ணம் ஜகத்குரும்வசுதேவ சுதம்முதலில் அவன் தந்தைக்கு பிள்ளை. உயர்வான பிள்ளை என்று பெயர் எடுத்தான். இவன் பிறந்தவுடன் தந்தை வாசுதேவனின் கால் விலங்குகள் அவிழ்ந்தது.கம்ச சாணூர மர்த்தனம்தாய் தந்தையருக்கும் மற்றவர்களுக்கும் எதிரிகளான கம்சனையும் அவன் அனுப்பிய சாணூர முஷ்டிகன்   போன்ற எதிரிகளையும் வென்றான். தேவகி பரமானந்தம் தன் பிள்ளையால் கணவருக்குக் கிடைத்த நன்மை களையும், உலகத்தவர்களுக்குக் கிடைத்த உயர்வையும் எண்ணினாள் தாய் தேவகி.
தன் வயிற்றைப்  பிடித்துக்கொண்டு பரமானந்தத்தை அடைந்தாள்.

கிருஷ்ணம் ஜகத்குரும்அப்படிப்பட்ட கிருஷ்ணன் தேரேறி அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசித்து ஜகத்குருவாக விளங்கினான். முதல் ஜகத்குரு அவன்தான்.ஜகத்குரும் கிருஷ்ணம் வந்தே!இத்தனையும் செய்த அந்த குழந்தையைக் கொண்டாடவே ஒரு பண்டிகை. அந்த தெய்வக் குழந்தையை வரவேற்க வீடு முழுக்க சுத்தம் செய்து, கோலம் போட்டு, தோரணங்கள் கட்டி, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கிருஷ்ணர் பாதத்தை அரிசி மாவினால் வாசல் முதல் பூஜை அறை வரை வரைய வேண்டும். ஒரு குழந்தை நம் வீடு தேடி வந்து பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு நாம் படைக்கும் பட்சணங்களை உண்பதாக பாவனை செய்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகள் விரும்பி உண்கின்ற முறுக்கு, சீடை, அதிரசம், வெண்ணெய், அவல் அப்பம் போன்ற பட்சணங்களைத் தயார் செய்து வைக்க வேண்டும்.
இதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் சொல்லி இருக்கின்றார்.

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீசெப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்
பிரான்இங்கே வாராய்.
- என்று பெரியாழ்வார்  தான் செய்த இனிப்புகளைக் குறித்துக் கூறுகிறார்.
“உண்ணக் கனிகள் தருவன்” என்பதனால், நிறைய பழவகைகளை வைக்க வேண்டும். குறிப்பாக நாவல் பழம்
முக்கியம்.
அன்று நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணனாக, ராதையாக  வேடமிட்டு, குதூகலமாக ஆடிப்பாடச்  செய்து, குழந்தைகளோடு குதூலமாகக்
கொண்டாடவேண்டும்.
அந்த சந்தோஷம் பெறுவதற்குத்தான் கிருஷ்ண ஜெயந்தி.
கண்ணனை பூஜை செய்யுங்கள்.
கண்ணனை நினையுங்கள். கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்.

ஸ்தாணு அஷ்டமி (30-8-2021
திங்கட்கிழமை)

30.8.2021 திங்கட்கிழமை அன்று பிற்பகல் கிருத்திகை நட்சத்திரம் முடிந்து ரோகிணி நட்சத்திரம் வருகிறது. சந்திரனுக்குரிய திங்கட்கிழமை. அஷ்டமி திதியில் தேய்பிறை அஷ்டமி மிக முக்கியமானது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் ஸ்தாணு அஷ்டமி என்று பெயர். அன்றைய தினம் மாலை சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பல சிவன் கோயில்களில் இப்போது பைரவ மூர்த்தங்கள் உண்டு. அஷ்டமி தினம் பைரவ வழிபாட்டிற்கு உரிய தினம். பைரவர் என்றாலே அச்சத்தை போக்குபவர்.பைரவர் வழிபாடு செய்தால் எதிரி, நோய், பகை இருக்கவே மாட்டார்கள். ஒவ்வொரு சிவாலயங்களிலும் நிறைவு வழிபாடு பைரவருக்குத்தான். 64 சிவாம்சங்களில் சக்தி வாய்ந்த அம்சம் பைரவர். சகலவித வெற்றிக்கும் ஆதாரம் என்பார்கள். கோயில்களில் பைரவர் சந்நதியில் மாலை நேரம் அபிஷேகங்கள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு சிவ தரிசனம், பைரவர் தரிசனம் செய்ய தீமைகள் விலகும். அன்று விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று
வருவது இன்னும் சிறப்பு.

சனி ஜெயந்தி (31.8.2021 -
செவ்வாய்க்கிழமை)

நவகிரகங்களில் சூரியன் புதல்வனான சனிபகவான் ஆவணி மாதம் பிறந்தார். அவருடைய ஜெயந்தி தினம் அன்று ஏழை எளியவர்களுக்கு, குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களுக்கு, இயன்ற அளவு தானம் வழங்க வேண்டும். உதவிகள் செய்ய வேண்டும். இதன்மூலம் சனியின் தீய பலன்கள் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஜென்மச்சனி, கண்டச்சனி என்ற தொல்லைகள் விலகும். தவறுகள் செய்துவிட்டால் சனியிடம் இருந்து தப்பவே முடியாது. யார் தடுத்தாலும் விடாது காத்திருந்து தண்டிப்பவர் சனி பகவான். நியாயவான் என்று பெயர். ஆனால், திருந்தி மன்னிப்பு கேட்டு விட்டால், மன்னித்து வரமளிக்கும் தயை குணம் உண்டு.எதிலும் தடைகளைச் சந்திப்பவர்கள், சிக்கல்களைச் சந்திப்பவர்கள், சனி ஜெயந்தி அன்று, அவசியம் நவகிரக சந்நதி உள்ள கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். எள் சேர்த்த எண்ணெய் தீபம் ஏற்றுங்கள் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கோ விநாயகர் கோயிலுக்கோ சென்று வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • christmas-30

  நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்