SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீராத விளையாட்டுப் பிள்ளை

2021-08-27@ 17:04:53

சிற்பமும் சிறப்பும்

தீராத விளையாட்டுப் பிள்ளை

ஆலயம்: திருக்குறுங்குடி அழகிய நம்பி பெருமாள் ஆலயம். திருமழிசை  ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர்  மங்களாசாசனம் செய்துள்ளனர். திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவில்  உள்ளது.காலம்: கிபி.10-ஆம் நூற்றாண்டில் இவ்வாலயத்தில் வழிபாடுகள்  நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. இன்றுள்ள அழகிய சிற்பங்களுடன்  கூடிய ஆலய கட்டுமானங்கள், நாயக்க மன்னர்கள் (15-16 ஆம் நூற்றாண்டு)  ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டவை.

அவதார தெய்வ குழந்தை, குறும்புக்காரன், காதலன், சூத்திரதாரி, ராஜதந்திரி, மாயங்கள் புரிபவன் என கண்ணன் பலவகை
களில் போற்றப்படுகின்றார். கிருஷ்ணரின் வாழ்வைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், பாகவத
புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற இந்துமத புராண நூல்களில் உள்ளன.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் (கி.பி 2 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது) கண்ணன் (திருமால்) வழிபாடு பற்றி கூறியுள்ளார். கிருஷ்ணர் பிறந்தது கி.மு. 3228 ஆம் ஆண்டு  எனவும், அவரின் மறைவு கி.மு. 3102 ஆம் ஆண்டு என புராண நூல்கள் மற்றும் சோதிட கிரக நிலை கணிப்புகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றின் படி கண்ணனின் காலம் இன்றைய தேதியிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, 125 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். (அக்காலகட்டத்தில் மனிதரின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள்)
கிருஷ்ணர் 3 வயதுவரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7-வது வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

யசோதையிடம் ஆயர்பாடியில் அனைவரையும் கவரும் அழகு, துறுதுறுப்பான விழிகள், குறும்புச்செயல்கள் என செல்லப் பிள்ளையாய் வளர்கின்றான், கண்ணன்.
தன் தாய் யசோதையிடம் குறும்புகள் செய்து தண்டனை பெறுதல், நண்பர்களுடன் சேர்ந்து பானைகளிலிருந்து வெண்ணெய் திருடி உண்ணுதல், நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லுதல், குழலிசைத்து ராதையுடன் காதல் என கண்ணனின் சிறு வயது விளையாட்டு லீலைகள் கணக்கிலடங்காதவை.

இது போன்ற கண்ணனின் லீலைகள் அனைத்தும் திருக்குறுங்குடி அழகிய நம்பி பெருமாள் ஆலய சுவர்களில் அற்புத எழில் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளது.

கோபியர் துகில் கவரும் கண்ணன்:
‘ஆற்றில் இருந்து விளையாடு வேங்களை
சேற்றில் எறிந்து, வளைதுகில் கைக்கொண்டு,
காற்றிற் கடியனாய் ஓடி அகம்புக்கு
மாற்றமும் தாரானால், இன்று முற்றும்;
வளைத்திறம் பேசானால், இன்று முற்றும்.’
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-10)

‘‘நாங்கள் ஆற்றில் நீராடிக்கொண்டும், ஆற்றங்கரை மணலில் விளையாடிக் கொண்டுமிருந்தோம். இந்தக் கண்ணன் அங்கே வந்து சேற்றினை வாரி எங்கள்மீது வீசியெறிந்தான். நாங்கள் நீராடும்போது களைந்து கரையில் வைத்திருந்த எங்கள் சேலைகளையும் வளையல்களையும் எடுத்துக்கொண்டு காற்றினும் விரைவாக ஓடி வீட்டினுள் புகுந்து கொண்டு விட்டான். அவற்றைத் திரும்பத் தருவேன் என்றோ... தரமாட்டேன் என்றோ கூறவும் இல்லை! நாங்கள் இவன் செய்த இந்தச் செய்கையால் இன்று தொலைந்தோம்,” என்று இளம் பெண்கள் குழுவொன்று வந்து
யசோதையிடம் புலம்புகின்றனர்.

கோபியர் நீராடும் பொய்கைகளில் இருந்த அவர்களின் உடைகளை கவர்ந்து வந்து மரக்கிளைகளில் போட்டு, அருகே மரத்தின் மீது கண்ணன் அமர்ந்துள்ள பாங்கு, குறும்புக்கார நண்பர்கள் அருகிலிருப்பது, வெட்கத்துடன் உடலை மறைத்தபடி கோபியர் தம் ஆடைகளைத்தரும் படி கெஞ்சுவது, என அழகு சிற்பமாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வெண்ணெய் திருடிய கண்ணன்:
கோகுலத்தில் கோபியர் தயாரிக்கும்,
வெண்ணெய் வெயில் பட்டால் இளகிவிடும் தன்மையுடன் கூடிய மிருதுவான வெண்மை நிற வெண்ணெய் குட்டிக் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்.பிருந்தாவனத்தில் அவன் வயதுக்குழந்தைகளை ஒன்று திரட்டி, அருகிலிருக்கும் வீடுகளுக்கு சென்று, அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி வெண்ணெய் திருடி தின்பதே கண்ணனது வேலை. எனவே, வீடுகளில் வெண்ணெய் பானைகளை பாதுகாப்பாக உயரமான இடத்தில் உறி கொண்டு கட்டி மேலெழுப்பி வைத்திருப்பர்.

உறிகளில் தொங்கும் வெண்ணெய்ப் பானைகள், குட்டிக் கண்ணன் எட்டி ஏறி பானைகளிலிருக்கும் வெண்ணெயைத் திருடுவது, அதை நண்பர்கள் பகிர்ந்து உண்ணுவது, அருகில் குரங்கும் தன் பங்குக்காக காத்திருப்பது என அற்புத புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

குழலூதும் கண்ணன்:
கண்ணனின் குழலோசை கேட்டு மயங்கி நிற்கும் விலங்குகள், மரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகள், வணங்கும் முனிவர்கள், தலையில் பானையுடன் நிற்கும் மனிதர்கள்,
பானையினுள் உற்று நோக்கி, கைவிட்டு தேடும் குரங்கு என உயிரோட்டத்துடன் செதுக்கப்பட்டுள்ள அழகு சிற்பம் இது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்