SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எது வலியது, தவமா சத்சங்கமா ?

2021-08-27@ 16:58:12

அயோத்தியில் தசரதன் ஆண்டு கொண்டிருந்தார். சபையில் வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், பண்டிதர்கள், கவிகள்… இவர்களுடன் கூட மகரிஷிகளான ராஜகுரு வசிஷ்டரும் மஹா தபஸ்வி விஸ்வாமித்ரரும் இருந்தனர். ஒருநாள் விஸ்வாமித்ரருக்கும் வசிஷ்டருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. விஸ்வாமித்ரர் தவத்தின் வலிமை பெரிது என்றும், வசிஷ்டர் சத்சங்கம்தான் அதிக வலிமை கொண்டது என்றும் வாதிட்டனர். இருவரும் அரசன் தசரதனிடம் முறையிட்டனர். அவையில் குழுமியிருந்தவர்கள் விவாதித்து, சிலர் தவம்தான் சிறந்தது என்று இன்னும் சிலர் சத்சங்கமே சிறந்தது என்றும் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். ஆனால், அறுதியான விடை கிடைக்காததால் தசரதன், ‘‘நீங்கள் இருவரும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு சிவனிடம் சென்று இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு கொண்டு வாருங்கள்’’ என்று ஆலோசனை சொன்னார்.

அவ்வாறே இருவரும் முதலில் பிரம்ம லோகம் சென்று நான்முகனிடம் கேட்டனர். பிரம்மா அவர்கள் இருவரையும் ஆதரவுடன் வரவேற்று உபசரித்தார். அவர்களின் பிரச்னையைக் கேட்டு, ‘‘நான் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் எனக்கு நேரமில்லை! நீங்கள் மஹாவிஷ்ணுவை அணுகினால் உங்களுக்கு விடை கிடைக்கலாம்’’ என்று சொல்லி அனுப்பினார். அங்கிருந்து வைகுண்டத்தை அடைந்து விஷ்ணுவிடம் தங்கள் பிரச்னையைச் சொன்னார்கள். ‘‘நான் நிரந்தரமாக நடக்க வேண்டிய காத்தல் தொழிலில் இருப்பதால் நீங்கள் பரமசிவனைப் போய்ப் பாருங்கள். உங்களுக்கு விடை கிடைக்கலாம்’’ என்றார்.

கைலாசத்தில் சிவன் தவத்தில் ஆழ்ந்திருந்தார். கொஞ்சநேரத்தில் எழுந்தவர் இவர்கள் பிரச்னையைக் கேட்டுவிட்டு, ‘‘நான் தவம் செய்து கொண்டிருப்பதால் உங்கள் பிரச்னைக்கு விடையளிக்க ஆதிசேஷனே சரி. பாதாளத்திற்குச் சென்று அவரைப் பார்த்துக் கேளுங்கள்’’ என்றார்.அவர்களிருவரும் பாதாளம் சென்று சேஷ பகவானிடம் விண்ணப்பித்தனர். அவர், ‘‘பாருங்கள்! ஆதியிலிருந்து இன்றுவரை நான் பூமியைத் தலையில் தாங்கிக் கொண்டிருக்கிறேன். என் கஷ்டத்தை யாரிடம் சொல்வேன்? அதனால் என் தலைமேல் இருக்கும் இந்தப் பூமியின் சுமையை உங்கள் இருவரில் யாராவது இறக்கி வைக்க முடியுமா?’’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த விஷயத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர். முதலில் விஸ்வாமித்ரர், ‘‘நான் இத்தனைக் காலம் செய்த தவத்திற்கு ஏதேனும் பலன் இருக்குமானால் ஆதிசேஷன் தலையை அழுத்திக் கொண்டிருக்கும் பூமியின் பாரம் தலையை விட்டு மேலே போகட்டும்!’’ என்று சொல்லி, துளசி இலைமீது நீர் வார்த்துத் தர்ப்பணம் செய்தார். பூமி எள்ளளவும் அசையவில்லை!
விஸ்வாமித்ரர் மௌனித்தார்.இப்போது வசிஷ்டருடைய முறை! அவர், ‘‘இன்று வரையில் நான் செய்த சத்சங்கத்திற்கு ஏதேனும் பலன் இருக்குமேயானால் ஆதிசேஷனின் தலையை விட்டு இந்த பூமி மேலே போகட்டும்!’’ என்று அவரும் துளசி இலையில் நீர் வார்த்துத் தர்ப்பணம் செய்தார்.

உடனே பூமி ஆதிசேஷனின் தலையிலிருந்து ஒரு ஜாண் மேலேறி நின்றது! விஸ்வாமித்ரரை நோக்கி ஆதிசேஷன், ‘‘உங்கள் கேள்விக்கு விடை கண்ணெதிரிலேயே தெரிவதால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!’’ என்றார். வசிஷ்டரின் சத்சங்கத்தின் பலனால் ஒரு ஜாண் உயர்ந்த பூமி விஸ்வாமித்ரரின் தவ வலிமைக்கு அசைந்து கொடுக்கவில்லை! விஸ்வாமித்ரருக்கு தவத்தை விட சத்சங்கம் எவ்வளவு உயர்ந்தது என்று புரிந்து கொண்டார். அதனால், தவமே தேவையில்லை என்று பொருள் கொள்ளக் கூடாது. கிடைத்த சத்சங்கத்தை விட்டு விடக்கூடாது என்று புராண புருஷர்கள் சொல்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தவம் செய்து சத்சங்கத்தை கைக்கொண்டவர்கள். சத்சங்கத்தோடு சேர்ந்த தவத்தையும் அறிந்திருந்தார்கள்.

கே. நிருபமா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • wildfire-13

  கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

 • plane-crashe-13

  அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

 • wine-12

  இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

 • Tiruppp1

  திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

 • andhratirupp

  திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்