SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்வத் திருமகள்!

2021-08-25@ 14:27:22

செல்வத் திருமகள்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-73

லட்சுமி, சரஸ்வதி, துர்கை என்னும் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒவ்வொரு மனிதரும் அவசியம் பெறவேண்டும்.செல்வமும், கல்வியும் துணிவும் ஒருங்கே பெற்ற தேசம்தான் உலக அரங்கில் முன்னணியில் முகம் காட்ட முடியும்.

பணமும், படிப்பும், பராக்கிரமும் அவசியத் தேவை என்றாலும் லட்சுமி தேவியின் திருவருள் தான் ஒருவளை உயரத்தில் தூக்கி உட்கார வைக்கிறது.படிப்பில் உயர்ந்த பட்டங்கள் பெறாவிட்டாலும், பன்முகத் திறமைகள் ஒருவனிடம் பளிச்சிடாம போனாலும் செல்வ வளத்தோடு ஒருவன் திகழ்ந்தால் அவனுக்குத் தான் இந்த அவனி மதிப்பளிக்கிறது. தமிழ் மூதாட்டி
ஔவையார் பாடுகின்றார்.

‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று எதிர் கொள்வர்-
இல்லாளை
இல்லாளும் வேண்டாள்!  மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.
கசப்பான உண்மையாக இருந்தாலும் இதைத்தானே நாம் நிதர்சனமாக,
நேரிடையாகப் பார்க்கின்றோம்.

‘பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது’
‘பணம் இல்லாதவன் பிணம்’
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’
பொதுவாக படித்தவன் சொல் தான் சபையில் ஒலிக்க வேண்டும்.
ஆனால் நிதர்சனமாக
இவ்வுலகில் நடப்பதைக் கண்ணதாசன்
அற்புதமாகப் பாடுகின்றார்.
படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா? பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?

தேவியின் திருவருள் மானிடர்க்கு என்னென்ன பலன்களை ஏற்படுத்தித் தரும் என்று
பட்டியல் இடுகிறபோது அபிராமி பட்டர் பணத்திற்குத் தான் தன் பதிகத்தில் முதன்மை தருகிறார்.
தனம் தரும், கல்வி தரும். ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் குல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே !

‘சகல செல்வங்களும் தரும்
இமய திரிராஜதனயை மாதேவி’ என்றும் அபிராமியம்மை பதிகத்தில் பாடுகின்றார்.
திருவள்ளுவர் தம் திருக்குறளில் செல்வத்தின் பெருமையை ‘பொருள் செயல்வகை’
என்றும் அதிகாரத்தில் தீர்மானமாகத் திறம்படத் தெரிவிக்கின்றார்.

எதுவுமே அறியாக ஒருவனை, ஒன்றுக்கும்
பயனில்லாத ஒரு உதவாக்கரையைக் கூட அவனிடம் செல்வம் மட்டும் சேர்ந்து
விட்டால் உலகத்தினர் மதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்ல தில்லை பொருள்
எனவே செல்வத்தை தேடிப் பெருக்கிவைத்துக் கொண்டாய் உனக்குப் பகைவர்களே இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். பகைவர்களைத் தீர்த்துக்கட்டு
வதற்குத் துப்பாக்கியோ, வாளோ, வில்லோ, ஆயுதங்களோ தேவையில்லை பணத்தைச் சேர்த்துக்
கொண்டாலே போதும். பகை தானாக அழியும் என்கிறார்.
பாரதியார் பாடுகின்றார்.

செல்வத் திருமகளை
திபம் கொண்டு சிந்தனை செய்திடுவோம்!
செல்வம் எல்லாம் தருவாள்!
நமதொளி திருக்கனைத்தும் பரவும்!
கவியரசர் பாரதியார் முப்பத்து ஒன்பது

ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்தார். கணித மேதை ராமானுஜம் முப்பத்து மூன்று ஆண்டுகளிலேயே முடிந்து போனார்.  இரு மேதைகளும் இளமையிலேயே இறந்துபோக, செல்வம் இல்லாத அவர்களின் வறுமையான குடும்பச் சூழலும் ஒரு காரணம்.வறுமை நிலை நீங்க வரலட்சுமியிடம் உள்ளம் உருகி  வேண்டுவோம்.  அனைவராலும் ஏற்றிப் போற்றப்படும் உயர்நிலையை லட்சுமி தேவி அருள்கின்றாள். திருமகள் அருளால் பெறும் செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஒவ்வொருவரும் முக்தி பெறும் அருளைப் பெற முயல்வதே வாழ்வாங்கு வாழும் வழிமுறை.

அருள் என்னும் அன்பின் குழவி
பொருள் என்னும் செல்வச் செவியால் உண்டு.
 - என்று குறளாசான் குறிப்பிடுகின்றார்.
வறுமையால்  தான் வாடியபோதும், இருந்த ஒரு நெல்லிக் கனியை
ஆதி சங்கரருக்கு அளித்த காரணத்தால் தானே பொன் மழையே
பொழிந்தது!

எனவே பொருள் பெறுவோம்!
பெற்றபொருளை பிறர்க்குப் பகிர்ந்தளித்து
அருள்பெறுவோம்!

இலக்குமி தேவியின் இருகரங்களிலிருந்தும் வறுமையைத் தீர்க்கும் செல்வமழை வழிந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறே வரலட்சுமியின் வரம்பெற்ற செல்வந்தப் பெருமக்களிடமிருந்தும் உலகினர்க்கு உதவி செய்யும் மனோபாவம் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

‘செல்வத்துப் பயனே ஈதல்’
‘ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கும்’.
- என்று அறிவோம்.
அகம் உருகி செந்தாமரையில் அமர்ந்
திருக்கும் தேவியின் திருவருளை
வேண்டுவோம்!

மாமலர் அமரும் மடமயிலே!
வானுயர் மாடம் உன் ஒயிலே!
தாமரை அமர்ந்த இள வெயிலே!
தாரணி வளர்ச்சி உன் செயலே!
கனகம் கொட்டுக உன் கரங்கள்!
காசினி எட்டுக நல்வரங்கள்!
அனைத்து நிகழ்வும் உன்னால்தான்!
ஆசி அளிப்பாய் கண்ணால் தான்!

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்