SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனித வாழ்க்கையில் புதனின் விளையாட்டுக்கள்

2021-08-24@ 17:01:20

நாம் நவகிரகங்களுள் ஒருவரான புதன் துணையால்தான் சில அமைப்புகள் வாழ்வில் நமக்கு கிடைக்கும். அவர் இல்லையெனில் அந்த அமைப்புகள் நமக்கு தடை படும், அப்படி என்ன அமைப்புகளை புதன் நமக்கு தருகிறார் அவர் ஜாதகத்தில் எப்படி இருந்தால் அவை நமக்கு கிடைக்கும். அவரே கெட்டுவிட்டால் நமக்கு கிடைக்காதா எந்த நிலைகளில் புதன் நன்மையும் எந்த நிலையில் தீமையையும் தருவார் என்பதை பற்றி இந்த பதிவினில் காணலாம் வாருங்கள். பொதுவாக கிரகங்களுக்கு காரகம் மற்றும் ஆதிபத்தியம் என இரு பொறுப்புகள் ஜோதிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு கிரகமும் இந்த இரு நிலையில் இருந்து ஜாதகத்தில் தமது வேலையை ஜாதகருக்கு செய்கிறார்கள். இதில் காரகம் என்பது மிக முக்கியம் இது எப்போதும் மாறாது பிறவி குணம் போல், ஆதிபத்தியம் என்பது ஜாதகர் பிறக்கும் ஜென்ம லக்னத்தைப் பொருத்து ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். உதாரணமாக, நான் எனது தந்தைக்கு மகன் இது எந்த நிலையிலும் மாறாது ஆகையால் இது காரகம், இதே எனது பள்ளிபடிப்பு காலங்களில் மாணவன், தற்போது ஜோதிடர் என சமூகத்தில் என் நிலை மாறும் இது ஆதிபத்தியம். காரகம் மாறாது என்பதால் நாம் காரகங்களை முதன்மைப்படுத்தி பார்ப்போம்.

புதனின் காரகங்கள்

புதன் மனித உறவுகளை பொருத்தவரை இளைய சகோதரி, தாய்மாமன், காதலன்/ காதலி, பொதுவாக பருவம் அடையாத சிறு வயது பெண் குழந்தைகளை குறிப்பவர். (இவை உயிர் உள்ள காரகங்கள்) புத்தியை குறிப்பவர் புதன், அறிவு, வித்தை, கணிதம், ஜோதிடம், எண்கள், இளமை, அழகு, கம்ப்யூட்டர், மீடியா, செய்தித் தாள், பேச்சுத் திறன், பயந்த சுபாவம், நகைச்சுவை, போதனைகள் இவற்றையும் புதனே குறிப்பார். (இவை ஜடம் எனும் உயிர் அற்ற காரகங்கள்).

இவை அனைத்தும் ஒரு தனிமனிதனுக்கு தருவதற்கு அதிகாரம் பெற்ற கிரகமாக புதன் உள்ளார். புதன் என்ன தருவார் என பார்த்து விட்டோம். அவர் நம் ஜாதகத்தில் எப்படி இருந்தால் இவற்றை தருவார். எப்படி இருந்தால் தரமாட்டார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்;

எப்போது புதன் நன்மை செய்வார்

ஒரு கிரகம் தனது காரகம் மற்றும் ஆதிபத்தியம் இவற்றை ஜாதகருக்கு கொடுக்க வேண்டுமானால் அந்த கிரகம் முதலில் நல்ல நிலையில் நம் ஜாதகத்தில் அமையவேண்டியது அவசியம். கொடுப்பவன் பலமாக இருந்தால் தான் அவனால் தன்னிடம் இருப்பதை சரியாக அடுத்தவருக்கு அளிக்க முடியும். அந்த வகையில் புதனின் பலத்தை நாம் ஜாதகத்தில் கணிக்க வேண்டியது அவசியம்.

மேலே உள்ள கட்டத்தில் பாருங்கள் புதன் தனது மிதுன வீட்டில் ஆட்சி, கன்னி வீட்டில் உச்சம், ரிஷபம், துலாம், மகரம், கும்பம் இந்த வீடுகளில் நட்பு, சிம்மத்தில் அதிநட்பு என பலமான நிலையில் உள்ளார். இந்த நிலையில் உள்ள புதன் தனது காரகங்களை சிறப்பாக செய்வார். இங்கே நான் லக்னம் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த இடங்களில் இருக்கும் புதன் நான் மேற்சொன்ன காரகங்களை ஜாதகருக்கு நல்ல முறையில் கொடுப்பார். இது ஜோதிடம் அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

புதன் தீமை செய்யும் நிலைகள்

பொதுவாக புதன் மட்டுமல்ல எந்த கிரகமும் பலமற்ற நிலையில் ஜாதகருக்கு நன்மை செய்யும் தகுதியை இழக்கின்றது. அந்த வகையில், ராசி கட்டத்தில் மீனத்தில் புதன் நீச நிலையை அடைகிறார். மேஷம், விருச்சிகம், தனுசு இந்த வீடுகளும் இவருக்கு நல்ல இடமல்ல, கடகத்தை இவர் பகையாக கருதுகிறார். இந்த வீடுகளில் அமரும் புதன் தன் இயல்பு நிலையை இழந்து பதட்ட நிலை அடைகிறார். ஆகையால் இந்த நிலையில் இவர் ஜாதகருக்கு நன்மையை செய்ய மாட்டார், இதுவும் ஜோதிடத்தில் பொதுவாக ஒன்று.

மேற்சொன்ன இடங்கள் மட்டுமின்றி லக்னத்தை வைத்து பார்க்கும் போது கிரகங்கள் கேந்திர, கோணங்களில் அமைந்தால் நல்ல பலனையும், மறைவிடங்கள் என கூறப்படும் 6,8,12-ல் அமைந்தால் கெடுபலனும் தரும் என்பது ஜோதிட விதிகள். மேற்சொன்ன அனைத்தும் அனுபவத்தில் பார்த்தால் மாற்றமடையும் நிலையிலேயே உள்ளது. அதனைத்தான் விதி விலக்குகள் என ஜோதிடம் கூறுகின்றது. அற்புத விதிவிலக்கை ஜாதகங்களுடன் பார்ப்போம். இங்கு தான் உண்மையில் ஜோதிட சூட்சுமங்களின் விளையாட்டே ஆரம்பம் ஆகையால், இனி வாசகர்கள் மிகவும் நுணுக்கமாக கவனிப்பது ஜோதிடத்தை உங்களுக்கு வேறு ஒரு புதிய கோணத்தில் காட்டும்.

நாம் இந்த பதிவினில் புதன் தரும் விசித்திர பலன்களை இரு உதாரண ஜாதகங்களின் மூலம் விரிவாக பார்க்கலாம். இதில் முதலில் புதன் பாதிக்கப்பட்டாலும் எவ்வாறு அவர் அறிவு/ கல்வியை சிறப்பாக கொடுக்கிறார் என்பதனை பார்க்கலாம். பாரம்பரிய ஜோதிட விதிகளின் படி, புதன் கல்விக்கு காரக கிரகம் ஆவார். ஒருவரின் கல்வி நிலை, அறிவு மற்றும் புரிதல் திறன் இவை புதன் வலுத்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். இல்லையெனில் இவை ஜாதகருக்கு பெரிதாக கை கொடுக்காது பள்ளிப்படிப்பையும் தடை செய்து விடும்.

மறைந்த புதன் தரும் நிறைந்த கல்வி

இங்கு கொடுக்கப்பட்டுள்ள  இந்த ஜாதகத்தை நன்றாக கவனியுங்கள். நாம் முன்பு பார்த்த ஜோதிட விதிகளின்படி, ஜாதகர் சிம்ம லக்னத்தில் பிறந்த கல்வி காரகனாகிய புதன் நீசம் எனும் மிகவும் பலமிழந்த நிலையை ஆடைந்தது மட்டுமின்றி 8-ல் மறைவும் பெற்று கடுமையான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். நம் ஜோதிட விதிகளின்படி. இவருக்கு படிப்பு வராது, அறிவான நபராக இவர் இருக்கமுடியாது என்பது தான் பலனாகும்.

ஆனால், அதற்கு மாறாக இந்த ஜாதகரின் உண்மை நிலையை பார்த்தால் முற்றிலும் முரணாக அமைகிறது. இவர் முதுநிலை கணினி பட்டப்படிப்பு பயின்று தற்பொழுது ஒரு IT நிறுவனத்தில் 24 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 2020 October-ல் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவரின் படிப்பு நிலையை பார்த்தால் பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு 421 மதிப்பெண்ணும், +2 -ல் 1200 மதிப்பெண்ணுக்கு 1062 மதிப்பெண்ணும், BSc-ல் 74% மதிப்பெண்ணும், MSc-ல் 77% மதிப்பெண்ணும் பெற்று சிறந்து விளங்கியுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிட தக்க ஒன்றாகும்.

நம் விதிகள் இங்கே எடுபடவில்லை புதன் நீசம், மறைவு போன்ற பலமிழந்த நிலையிலும் எவ்வாறு நிறைந்த கல்வியை கொடுத்தார். இங்குதான் புதனின் அறிவு வெளிப்பட ஜோதிட விதிவிலக்குகள் நமக்கு தெரிய வருகின்றது. அவை, நிசபுதன் நீசபங்கள் எனும் அற்புதமான சூட்சும பலம் பெறும் நிலையை அடைகிறார்.

விதிவிலக்குகள்

* ஒளி நிறைந்த சந்திரனின் பார்வையில் உள்ளார்.
* தன் சுய நட்சத்திரத்தில் பலம் பெறுகிறார்.
* ராசி, அம்சம் இரண்டிலும் மீனத்தில்
நின்று வர்கோத்தம நிலையை அடைகிறார்.
* அனைத்திற்கும் மேலாக ஒரு உச்ச கிரகத்துடன் இணைந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட புதன் மீண்டும் மறைமுகமாக பலம் பெறுவதால் நீச பங்க ராஜயோகம் எனும் அமைப்பு படி, இந்த ஜாதகரை கல்வியில் நல்ல நிலையை அடைய புதன் உதவி புரிந்துள்ளார். நண்பர்களே இப்போது உங்களுக்கு ஓரளவு புரிந்து இருக்கும் ஒரு கிரகம் குறிப்பாக புதன் நம் ஜாதகத்தில் பலமிழந்தால் இப்படி ஆகிவிட்டதே என கவலை கொள்ள வேண்டாம். விதிவிலக்குகள் ஏராளம் அதன்படி, நீசபங்கம் அடைந்தால் புதனால் நமக்கு அனைத்துமே சிறப்பாக கிடைக்கும்.

ஜோதிடர் யோகி ஜெயபிரகாஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்