SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதனைப் புரிந்து கொள்வோம்

2021-08-24@ 16:57:41

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய, மிகவும் ஒளி பொருந்திய புதன், வித்தைக்கு அதிபதியாகச்  சொல்லப்படுகிறார். அறிவால் எதிரிகளைப் பந்தாடும் வீரியத்தைத் தருகிறார், மிதுனமும் கன்னியும் அவரது ராசிகள். நட்பை கொண்டாடுவார் என்பதால் காலச்சக்கரத்தின் 3, 6 ம் இடம் புதனுக்குத் தரப்பட்டது. ஒரு ஜாதகத்தில் புதன், நல்ல அமைப்பில் இருந்தால் கல்வி கல்லாமல் பாகம்படும். அவரிடமிருந்துதான் மற்றவர்கள் படிப்பார்கள். அத்தனை நுட்ப அறிவை புதன் கொடுப்பார். புதனின் வலுவைப் புரிந்துகொண்டால், நாம் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ளும் வழியும் கிடைக்கும்.  

இதனை எப்படிப் புரிந்து கொள்வது?
 
அதற்கான சில விளக்கங்கள் இப்போது பார்க்கலாம். ரிஷப லக்கினத்திற்கு புதன் அற்புதங்கள் செய்வார். இதனை பகவான் கண்ணன் ஜாதகம் கொண்டு பார்க்கலாம். ரிஷப லக்னத்துக்கு சுக்கிரன் அதிபதி. இவரே ஆறாம் இடத்திற்கு அதிபதியாகிறார். அதனால்தான், பிறக்கும் போதே எதிரிகள் தோன்றினார்கள். மறைமுகமாக பல்வேறு  வேடங்களில் வந்தார்கள். இவர் வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்ததாக இருந்தது. போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. தனம், வாக்கு, குடும்பம் ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பஞ்சம திருகோணத்திற்கும் அதிபதியாகிறார்.

சுக்கிரனுக்கு நண்பர் என்பதால் பேச்சில் கவர்ச்சி மிகுந்து காணப்படும். பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பார்கள். ஐந்தாம் இடத்தில் புதன் லக்னாதிபதியோடு இணைந்து இருக்கிறார். இங்கே புதன் உச்சம் பெறுவதால் வித்யாஸ்தானம் பழுதடைந்து இருந்தாலும், அறிவுச்சுடர் பிரகாசிப்பதால் எந்தத் துறையிலும் தலைமைப் பதவி கிடைத்தது. மந்திர சித்தி இருந்தது. குரு இல்லாமலே வித்தைகள் மேன்மையடைந்தது. அரிய சாதனைகளை நிகழ்த்தி புகழேணியில் ஜொலிக்க முடிந்தது. புதனின் இந்த நுட்பங்களை எல்லாம் கண்ணனுடைய ஜாதகத்திலே கண்டு கொள்ளலாம்.

எண்ணம் போல் வாழ்வு தரும் புதன்

கிருஷ்ண பகவான் ஜாதகத்தில், ஐந்தாமிடம் மாமன் இடம் என்பதாலும் அங்கேயே புதன் ஆட்சி உச்சம் பெற்றதாலும், மாமனுக்கு காரகபாவம் எதிரானது. இது கிரகம் அமைந்ததால் ஏற்பட்ட விளைவு அல்ல. கண்ணன் பிறப்பதற்கு முன்னாலேயே, கம்சன் கண்ணனை எதிரியாக நினைத்ததால், அப்படியே கிரகம் அமைந்தது. இதை எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வார்கள். ‘‘கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே’’ என்று ஆண்டாள் சொன்னதைப்போல தனக்கு ஒரு வயிற்று வலியாக, எரிச்சலோடு கண்ணனை கம்சன் நினைத்ததால், அப்படியே கிரகங்களும் நின்றன. இங்கே புதன் ஆட்சி உச்சம்பெற்று ஐந்தாம் இடத்தில் மாரக அதிபதியான சுக்கிரனோடு இணைந்து கம்சனை முடித்தார்.

புதன் தரும் சங்கீதமும் புகழும்

“நான் எந்தப் பள்ளியிலும் படித்ததில்லை. முறையான சங்கீதமும் பயின்றதில்லை” என்று இளையராஜா ஒரு கல்லூரியில் பேசும்பொழுது சொன்னார்.

ஆனால் என்ன?

உலகிலுள்ள சங்கீதக்காரர்கள் எல்லாம் அவர் சங்கீதத்தை ரசிக்கிறார்கள். அவர் ஜாதகத்தில் ரிஷப லக்கினத்தில் சூரியன், சந்திரன், புதன், சனி இருப்பார்கள். கடகத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பார்.4, 8, 1ல் சூரியனும் புதனும் சேர, அவருக்கு நல்ல ஐஸ்வரியங்கள் கிடைக்கும் என்று புலிப்பாணி சொல்லுகின்றார். அதைப்போலவே புதன் சுக்கிரனோடும், குருவோடும், சனியோடும் சேர, இந்தக் கூட்டு எப்படி வேலை செய்யும்? பலனை அப்படியே புட்டு புட்டு வைக்கிறது இந்தப்பாடல்.

பாரப்பா குரு புத்தி
சேர்ந்து நிற்க
“பாக்கியங்கள் கிட்டுமடா'' புனிதன் சேயின்
ஆரப்பா அசுரகுரு புத்தி சேர அப்பனே
“பாடகனாம்” பெரியோர் நேசம்
கூறப்பா கொடுஞ்சனியும் புத்தி மேய
கொற்றவனே கனிதானடா சத்துரு இல்லை
வீரப்பா விஷ பயமும் இல்லையில்லை
“வெகுதனங்கள் உள்ளவனாம்”
விளம்பக்கேளே.


அறிவுச் சுடர் தரும் புதன்

படிப்பு ஸ்தானம் இரண்டாம் பாவம். ஆரம்பக் கல்வியைக் குறிப்பது. நான்காம் பாவம் உயர்கல்வியைக் குறிப்பது. ஐந்தாம் பாவம் மேல் கல்வியையும், ஒன்பதாம் பாவம் ஆராய்ச்சி படிப்புகளையும் குறிப்பது. இந்த ஸ்தானங்களோடு புதன் நல்ல விதத்தில் தொடர்பு கொண்டால் அறிவும் ஆராய்ச்சியும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

புதன் கெட்டுவிட்டால் வரும் நோய்கள்

மனநிலை பாதிப்பு, நரம்பு சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வெண்குஷ்டம், உடம்பில் அதிகமான வியர்வை, ஆண் மலட்டுத்தன்மை, அவ்வப்பொழுது தலைசுற்றல், காது கேளாமை, உணர்ச்சி பாதிப்பு முதலிய நோய்கள், புதன் கெட்டு விட்டால், வருவதற்கான வாய்ப்பு உண்டு. புதன் கேதுவோடு சேரும்பொழுது மனநிலை பாதிப்பு ஏற்படும். சுக்கிரனோடு சேரும்பொழுது வெண்குஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படும்.

சந்திரனோடு சேர்ந்து கெட்டு விட்டால் மனதில் எப்பொழுதும் ஏதோவொன்றை யோசித்துக் கொண்டே செயலிழந்த நிலையில் இருப்பார்கள். தேவையற்ற கவலை வாட்டும். செவ்வாயோடு சேரும்பொழுது நரம்புத் தளர்ச்சியும் தலைவலியும் மனக் குழப்பமும் ஏற்படும். சூரியனோடு சேரும்பொழுது தலையில் உள்ள மூளை நரம்புகள் பாதிக்கும். சனியோடு சேர்கின்ற பொழுது எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும்.

12 பாவங்களில் புதன்

புதன் 1 ஆம் இடத்தில் இருக்க புத்தி சாதுரியம், இலக்கிய ஈடுபாடு, உயர்கல்வி. இரண்டாம் இடத்தில் இருக்க இனிமையாக சபையை மயக்கும் பேச்சு, மூன்றாம் இடத்தில் இருக்க கஞ்சத் தன்மை, ஆனால், பெண்களை கவர்ந்து இழுக்கும் தன்மை, நான்காம் இடத்தில் இருக்க, உயர்கல்வி, பூர்வீகச் சொத்து, ஐந்தாமிடத்தில் இருக்க தாய்மாமனுக்கு தொல்லைகள், ஆறில் இருக்க கல்வி தடைபடும். ஏழாமிடம் நல்ல மனைவி. மனைவி மூலம் செல்வம். எட்டில் இருக்க தீர்க்காயுள், நல்ல மக்கட்பேறு. 9ல் இருக்க இசை ஆர்வம், கலைகளில் நாட்டம். 10ல் இருக்க பேராசிரியர், நல்ல உத்தியோகம். 11ல் இருக்க லாபமும் செல்வமும். பன்னிரண்டில் இருக்க தர்ம சிந்தனை இருக்கும். சில ஜாதகங்களில் தாயாருக்கு ஆகாது.  

தமிழ் மொழிக்கு புதன்

புதனுக்குரிய தானியம் பச்சைப்பயிறு. மலர் வெண்காந்தள். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் புதனுக்குரியன. சுப கிரகங்களில் ஒன்றான புதன் ஆணும் பெண்ணும் அற்ற அலி தன்மை உடைய கிரகம். புதனுக்குரிய நிறம் பச்சை. உடலின் அங்கங்களில் கழுத்துப்பகுதியை குறிப்பது. உலோகங்களில் பித்தளை.  மொழிகளில் தமிழ். கலைகளில் கணிதம், சிற்பம், ஜோதிடம் போன்றவை. புதனுக்குரிய ரத்தினம் பச்சைக்கல். புதனுக்கு உரிய தீபம் கற்பூரம். புதனுக்குரிய மறைவு ஸ்தானங்கள் லக்னத்துக்கு 3, 6, 8, 12.

கல்வியைத்தடை செய்தும், அறிவைத் தருவார் புதன்

புத்திகாரகன் புதன் அறிவைத் தருபவர். வித்தையைத் தருபவர். சிந்திக்கும் திறனைத் தருபவர்.  வாக்கு சாதுரியத்தைத் தந்து ஏற்றத்தைச் செய்பவர். ஆனால், புதன் மட்டுமே இத்தனையும் தருவதில்லை. “புதன் கெட்டால் புத்தி கெடும்” என்பார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட கிரகம் மட்டும், ஒரு முழுமையான நிலையை ஒரு ஜாதகனுக்குச் செய்து விடுவதில்லை.
ஒவ்வொரு ஜாதகத்திலும் ஏதேனும் மாற்றுவழிகள் மறைந்து கிடக்கவே செய்கின்றன.

அதனை அகழ்ந்து எடுத்து, கைபிடித்துக் கொண்டு நடந்தால் கரையேறி விடலாம் என்பதுதான் ஜாதகம் காட்டும் உண்மை. அதனால்தான் எத்தனையோ துன்பங்களில் துவண்டு தவிப்பவர்கள் கூட அத்தனையையும் படிகட்டுகள் ஆக்கி, அற்புதங்கள் நிகழ்த்தி, சாட்சிகளாக நிற்கின்றனர். புதன் புத்திக்கு உரியவர்தான். அவர் கல்வியைக் கொடுப்பவர்தான். ஆனால், அதிலும் ஒரு நுட்பம் உண்டு.

சிலருக்கு அவர் நேரடியாகக் கல்லூரியில் சேர்ந்து படிக்க துணை செய்ய மாட்டார். தடையும் செய்து இருப்பார். ஆனால், அவர் எழுதிய நூல்களையோ அல்லது அவர் வாழ்க்கையையோ பல கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது அவர் பல கல்லூரிகளுக்குச்  சென்று பேசிக்கொண்டிருப்பார். (ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்றவர்களைச் சொல்லலாம்)

பத்ர யோகம் தரும் புதன்

பஞ்ச மகா புருஷ யோகம் என்ற ஐந்து யோகங்களைச் சொல்வார்கள். அதிலே ஒரு யோகம் பத்ர யோகம்.  புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது இந்த யோகத்தைக் காட்டும். இந்த யோகம், பலமாக உள்ளவர்கள், புதன் திசை நடக்கும் பொழுது, மிகப்பெரிய நன்மையைப் பெறுவார்கள். அவர்களது தோற்றமும், பேச்சும், எடுப்பாகவும் கம்பீரமாகவும் இருக்கும்.

சபைகளில் அவர்கள் பேசினால் கூட்டம் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும். நிறைய சம்பாதிப்பார்கள். பேச்சுத் தொழிலின் மூலமாக அல்லது பத்திரிகை தொழிலின் மூலமாக, அல்லது எழுத்துத்துறையில் மூலமாக அதிக வருமானத்தைப் பெறுகின்ற வாய்ப்பினை இந்த பத்ர யோகம் கொடுக்கும். மிகப்பெரிய புகழையும் தரும். பல வெற்றியாளர்களின் ஜாதகத்தில் இந்த பத்ர யோகம் காணலாம்.

மகாவிஷ்ணு அதிதேவதை

புதனுக்குரிய நாயுருவி கொண்டு ஹோமம் செய்தால் தோஷங்கள் கழியும். சுவைகளில் உவர்ப்புச் சுவை. பஞ்சபூதங்களில் வாயு கிரகம். வாத நாடி. வடக்கு திசைக்கு உரியவர். மகாவிஷ்ணு அதிதேவதை. ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு மாத காலம் இருப்பார். உபய ராசிகளான மிதுனத்துக்கும், கன்னிக்கும் உரியவர். தாமச குணம் மிகுந்தவர். கன்னி ராசியில் உச்சம் அடையும், புதன் மீனராசியில் நீசம் அடைகிறார். ஒரே ராசியில் உச்சமடைந்து ஆட்சியும் பெற்று மூலத்திரிகோண பலமும் பெறுகின்றவர் புதன் மட்டுமே. அவருடைய தசை 17 ஆண்டுகள் நடக்கும். புதன் திசை முழுவதும் அருகிலுள்ள பெருமாள் ஆலயத்திற்குச்  சென்று தீபத்திற்கு சிறிது நெய் சேர்ப்பது பல தோஷங்களைக் குறைக்கும்.

புதன் காயத்ரி மந்திரம்
 
ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரசோதயாத்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்