SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வியில் தடை; அனுபவ அறிவால் மிளிரவைத்த புதன்

2021-08-24@ 16:53:17

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 5

நல்வாக்கு நாயகர் ஜோதிடர்எஸ். கோகுலாச்சாரி

வழக்கம்போல நண்பர்களோடு உற்சாகமான ஜோதிட உரையாடல் தொடர்ந்தது. அப்போது நான் தெரிவித்த சில கருத்துக்கள். ஜோதிடம் என்பது ஒருவருக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விட, எதிர்காலத்தை எப்படி எல்லாம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற கலையாகத்தான் பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தின் எந்த அமைப்பு நம்மை வழிநடத்துகிறது. அதுமுறையாக வழி நடத்த என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வைப்பதுதான். ஜாதகம் பார்ப்பதால் கிடைக்கும் அபரிமிதமான பலன். மனிதனுக்கு, மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு விஷயத்தைக் கொடுத்து, கடவுள் அனுப்பி இருக்கின்றான். இதனை ஆறாவது அறிவு என்று சொல்லுகின்றோம். ஆடு, மாடு அல்லது வேறு உயிரினங்கள், எந்த முயற்சியும் செய்யாமல் தனக்கு இட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றன.

ஆனால், மனிதன் தனக்கு இடப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும், தன் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே முயற்சிக்க வேண்டும். நம்முடைய நண்பர்கள் பல பேருடைய ஜாதகங்களைப் பார்க்கும்பொழுது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. ஏதோ குறைந்த அளவு, முட்டி மோதி படித்து, வேறு வழியில்லாமல் ஒரு வேலைக்கு வந்து விடுகிறார்கள். மேல் கல்வி படிக்க முடிவதில்லை. அவர்கள் கல்வி பல்வேறு குடும்பச் சூழல்களால் தடைபட்டு விடுகிறது. வேலைக்குப் போவதற்கு குறைந்தபட்ச கல்வி எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் படிக்க முடிந்தது.

ஆனால், பல ஆண்டுகள் கழித்து திருமணம், குழந்தைகள் பிறந்த பின்னும் அவர்கள் முயற்சி செய்து தொடர்கல்வி படித்து உயர்ந்த நிலையை அடைந்ததையும் காண முடிந்தது. அதற்கு உதாரணமாக பல ஜாதகங்கள் உண்டு. ஒரு ஜாதகத்தைப் பார்க்கலாம். கும்ப லக்னம். லக்னத்தில் சந்திரனும் சுக்கிரனும். இரண்டில் கேது. நான்கில் செவ்வாய். எட்டில் ராகு. பத்தில் குரு. 11ல் சனி. 12ல் சூரியன், புதன். இதுதான் ஜாதகம்.

இவருக்கு இருபத்தி ஐந்து வயது வரை குரு திசையும் சனி திசையும் நடந்தது. இந்த திசைகள் பள்ளிப் படிப்பிலும் கல்லூரிகளிலும் பல தடைகளைத் தரவே செய்தன. சூரியனும் புதனும் இணைந்திருந்தாலும் கூட விரய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். அங்கே சூரியன் பகைகூட. எனவே, இந்த விரய ஸ்தான சூரியன் + புதன் சேர்க்கை இரண்டு விஷயங்களைச் செய்தது.

1. லக்ன விரயத்தில் தந்தைக்கான சூரியன் அஷ்டமாதிபதி புதனோடு ஏறியதால், கல்வி தடைபட்டது.

2. தந்தையும் காலமானார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 9க்குரிய சுக்கிரனுக்கு பன்னிரண்டாம் இடத்தில் தகப்பனாருக்கு உரிய சூரியன் மறைந்ததும் ஒரு காரணம். புதன் விரய ஸ்தானம் ஏறியதால், தாய்வழி உறவுகள், அதாவது மாமன் உறவுகள் மகிழ்ச்சியாக இல்லை. ஆதரவாகவும் இல்லை. ஆனால், இதே புதன் பஞ்சம ஆதிபத்தியம் பெற்றதால், அடுத்து வந்த தன் திசையில் போராடி மேல் படிப்பைப் படிக்க வைத்தார். இயல்பாகவே நுட்பமான அறிவைக் கொடுத்த புதன், அடுத்தடுத்து சுமார் பத்தாண்டுகள் உயர் படிப்புகளை முடித்து, பதவி உயர்வுகளைப் பெற வைத்தார்.

ஒன்று நேர்மறை என்றால் இன்னொன்று எதிர்மறை. இரண்டு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் இரண்டையும் செவ்வனே செய்யும் என்கின்ற விதியை மறந்துவிடக் கூடாது.  புதனுக்கு அஷ்டமாதிபத்யம் இருக்கிறது. எட்டுக்குடையவன் 12ல் மறைகின்றபோது அங்கே “விபரீத ராஜயோகம்” பிறக்கும் என்ற ஜோதிட விதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லக்கினாதிபதி சனி பதினோராம் இடத்தில் இருந்து லக்னத்தைப் பார்ப்பதால் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் ஆயுள் பலத்தையும் தருகிறது. ஜீவனகாரகனான 10-ஆம் இடத்து செவ்வாய் நாலில் இருக்க, தன - லாபாதிபதியான குரு, அவரை நேர்பார்வை பார்க்கிறார்.

அதனால் செவ்வாயின் சுபத்துவம், நான்காம் இடத்தின் பலம் கூடியது. வீடு, வண்டி வாகனம் முதலிய சௌ கரியங்களையும் தந்தது. உயர் கல்வித்துறை பாவத்தில் செவ்வாய் இருப்பதால், பொறியியல் துறையில், கல்வி நிலையும் உத்தியோகமும்  அமைந்தது. குரு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செல்வநிலை வளர்ந்தது. அழகான குடும்பம் அமைந்தது. 10ம் இடத்திலிருந்து குரு, 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், (பத்தாமிடம் ஜீவனம், இரண்டாம் இடம் பேச்சு) பேசி ஜீவனம் செய்கின்ற பேராசிரியர் தொழில் அமைந்தது. இந்த சூரியன் புதன் கூட்டை வேறொரு முறையிலும் பார்க்கலாம். நான்காம் இடமான கல்விக்கு பாக்கிய ஸ்தானத்தில், அதாவது ஒன்பதாமிடத்தில், “பாவத் பாவம்” என்கிற அமைப்பில் பார்க்கின்ற பொழுது, மறைந்திருக்கும் கல்வி உத்தியோக வெற்றியைச் சுட்டிக் காட்டுகிறது.

இந்த மாதிரியான ஜாதகங்களை எப்படி அணுகுவது? தீர்வு என்ன?

1. சில ஜாதகங்களில் சில நேரத்தில் கல்வித் தடை ஏற்பட்டு, “நெருப்பு சாம்பலில் மூடி கிடப்பது போல்” கிடக்கும். அதனை கிளறிவிட்டு கொஞ்சம் விசிறி விட்டால் “திகு திகு” என்று மறுபடியும் எரிய ஆரம்பித்துவிடும்.

2. சொல்லப்போனால் ஆரம்பத்தில் ஒரு நெருப்பை உண்டாக்குவதுதான் கடினம். அந்தக் காலத்தில் அடுப்பை ஊதி ஊதி நெருப்பு உண்டாக்குவார்கள். ஆனால், ஏற்கனவே எரிந்து அடங்கிய நெருப்பில் ஒரு செத்தை அல்லது கட்டையை வைத்தால் மிக விரைவாக பற்றிக்கொள்ளும். அதேதான் கல்வி விஷயத்திலும். தடைபட்ட கல்வியை பற்ற வையுங்கள்.

3. பல்வேறு குடும்பச் சூழல், சில தசை புக்தி நிலைகள், ஏழரைச் சனி போன்ற கோசார நிலைகள் தற்காலிகத் தடைகளைத் தரும். அதை அப்படியே விட்டுவிட்டால் அதோடு நிற்க வேண்டியதுதான். ஆனால், ‘‘நீ ஏன் உயர்கல்வியை படிக்கக் கூடாது? இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது. என்பதையெல்லாம் சொல்லிச்சொல்லி உயர்கல்வியில் சேர வைத்தால் நெருப்பு பற்றிக் கொள்வதுபோல பற்றிக் கொள்ளும்.

4. இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. இது வெறும் ஜாதக கட்டம் வைத்து மட்டும் முடிவெடுத்துவிடும் விஷயமல்ல. சூட்சுமமாக மனோகாரகன் சந்திரன் எப்படிச் செயல்படுகின்றான் என்று பார்க்க வேண்டும். சவம் போல் கிடப்பார். ஆனால் லேசான இதயத்துடிப்பும் நாடியும் இருக்கும். அவர்களுக்கு அவசர சிகிச்சை தந்து பிழைக்க வைக்க முடியும்.

5. இன்னொன்றும் மருத்துவ சாஸ்திரத்தில் சொல்வார்கள் மிகக் கடுமையான நோயாளிகூட வாழவேண்டும் என்கின்ற ஆசையோடு வந்து சேர்ந்து இருப்பான். மருத்துவர் சொல்வார். “அவன் பிழைத்ததற்கு காரணம் என்னுடைய வைத்தியம் மட்டுமல்ல. நோயோடு போராடும் குணமும், என் வைத்தியத்தோடு ஒத்துழைத்த அவன் குணமும், தெய்வ அனுகூலமும்தான் பிழைக்க வைத்தது” என்பார். அதேதான் ஜாதகத்திலும்.

6. ஒன்று ஜாதகனுக்கே முன்னேறவேண்டும் என்கின்ற நினைப்பு வேண்டும். இரண்டாவது, அதை ஊதிஊதிப் பெரிதாக்கி ‘‘உன்னால் முடியும்” என்று சொல்ல வேண்டும். தைரியத்தைத் தரவேண்டும். மூன்றாவது தெய்வ அனுகூலமும் வேண்டும்.

7. ஒரு குழந்தையின் ஜாதகத்தை ஆராய்கின்றபொழுது அதனுடைய கல்வி நிலைகளை ஆராயுங்கள். புதன் நிலை சரியில்லை எனினும் வேறு சந்திரன் சூரியன் போன்ற நிலைகளைப் பாருங்கள். சில குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். அதனைத் தந்தால் சரியான தசாபுத்திகள் நடக்கின்றபோது கல்வி பற்றிக் கொள்ளும்.

8. தெய்வ அனுகூலமும், பிராயச்சித்தமும் எல்லா விஷயங்களுக்கும் தேவை என்பதால், சரியான பிரார்த்தனை செய்யுங்கள். அதற்குக் காசு பணம் செலவழிக்க கூடாது. ஆனால், மனம் செலவழிக்க வேண்டும். ஆம் மனதார பூஜை செய்ய வேண்டும். அது உங்கள் கவனத்தைக் குவியச்  செய்யும். அதற்குப் பிறகு வெற்றிதானே வரும்.

9. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்குகிறோம். வெள்ளிப்பதக்கம் வாங்குகிறோம்  என்பதுதான் வெற்றி என்று நினைக்காதீர்கள். ஒலிம்பிக்கில் போய் கலந்து கொள்வதே வெற்றி. ஒவ்வொரு ஜாதகத்திலும் உயர்வதற்கான மாற்று வழிகள் இருக்கவே செய்யும். அதனைத் தெரிந்து கொண்டு முறையாக முயற்சி சலிக்காது செய்தால் வாழ்வு சிறக்கும். எத்தனை கிரகங்கள் எதிராக இருந்தாலும் அந்த கிரகங்களை முறையாக எதிர்கொள்வதுதான் வாழ்க்கை. அதற்காகத்தான் அத்தனை கிரகங்களும் நம் ஜாதகத்தில் நம்மை கட்டம் கட்டுகின்றன. கட்டங்கள் விதி. கட்டங்களை விட்டு வெளியே வருவது மதி. அந்த வெளிவரும் சூட்சுமமும் கட்டங்களிலேயே ஒளிந்து கிடக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்