SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்மை வாழ வைக்கும் வாழை!

2021-08-17@ 11:47:40

“தன்னைத்தான் காக்கின், சினங்காக்க
காவாக்கால், தன்னையே கொல்லும் சினம்”

        - வள்ளுவப் பெருந்தகை

எந்த ஒரு சுப காரியமானாலும், தெய்வீக வழிபாடானாலும், விழாவானாலும், வாழை மரம் இருந்தேயாகவேண்டும் என்பது காலங்காலமாக நமது வழக்கில் வந்துவிட்டது! பெண், பிள்ளை கல்யாணம் என்றால், முதலில் நம்மை வரவேற்பது வீட்டுவாயிற் பந்தல்! அதன் நுழைவாயிலில் இருபுறமும் அலங்கரிக்கப்பது, வாழை மரங்கள்தான்! வாழைக்குலைகள்தான்!! சுமங்கலிப் பெண்கள், தட்டு, தட்டாக அழகாக ஏந்திச்செல்லும் சீப்புசீப்பாக வாழைப்பழங்கள், நடக்கவிருக்கும் மங்கல நிகழ்ச்சியை பறைசாற்றுகின்றன! மணமான புதுமணத் தம்பதியினர், திருமணம் முடிந்தபின், முதன்முதலாக மணமகன் வீட்டிற்கு வரும்போது, சுமங்கலிப் பெண்கள் மங்கல ஆரத்தி எடுத்து, பின்னர் முதலில் கொடுப்பது, வாழைப்பழமும், பசும்பாலும்தான்! பசும்பாலுக்குள்ள தெய்வீகம், வாழைப்பழத்திற்கும் உண்டு! திருக்கோயில்களுக்குச் செல்லும்போது, ஏழை, எளியவர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய எடுத்துச் செல்லும் முதல் உரிமை வாழைப் பழத்திற்கே உரியது!

காரணம், எந்த வொரு கனியும் காயும் ஜீவராசிகளால் புசிக்கப்பட்டு பின்பு கொட்டையை நிலத்தில் உமிழ்ந்துவிட்டபின்பே (எச்சில்பட்ட) முளைக்கும். ஆனால் வாழையோ யாருடைய எச்சிலும் படாத கொட்டை களற்ற ஸ்வயம் வ்யக்தமாகத் தோன்றுகிறதால், எவ்விதக் குற்றமுமற்ற அவற்றை ஆண்டவனுக்குப் படைக்கின்றோம்!இத்தகைய தனித் தெய்வீகப் பெருமை கொண்ட கதலியில்தான் எத்தனை வகைகள்! கற்பூரவல்லி, ரஸ்தாளி, பூவன், பச்சை நாடன், மலைப்பழம் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு தனி ருசி, தனி மணம்; தனி மருத்துவ குணம். வகைகளில்தான் இத்தனை என்றால், வண்ணங்களிலும் குறைவில்லை. செவ்வாழை, பச்சை நாடன், மஞ்சள் என பல நிறங்களில், ஒளிர்கின்றன. வாழை இல்லாத விவாகம் இல்லை. கதலி இல்லாத சுப-காரியமில்லை! வாழை இல்லாத விழா கிடையாது எனும் அளவிற்கு வாழை நாம் அன்றாட வாழ்வுடன் பின்னிப்பிணைந்துவிட்டது. இத்தகைய தனிச் சிறப்பும், ஆன்மிகப் பெருமையும் வாய்ந்த வாழைப்பழத்தின் தெய்வீக ரகசியத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நைமிசாரண்யம்!

வைணவ ஸ்வயம்வ்யக்த (தாமாகவே தோன்றிய) க்ஷேத்திரங்களில் தனிச் சிறப்பு பெற்றது, நைமிசாரண்யம்! புஷ்கரம் என்னும் க்ஷேத்திரத்தில், பகவான் ஜலஸ்வரூபியாக இருப்பதுபோன்று, இங்கு பகவான் வனஸ்வரூபியாக (அழகான அடர்ந்த காடாக) தரிசனமளிக்கின்றான். தற்போதைய உத்திரப் பிரதேசத்தில் திகழும் திருத்தலத்தின் பெருமை அளவற்றது! இங்குள்ள சக்கர தீர்த்தம், பாவங்களனைத்தையும் போக்கக்கூடியது. வேதவியாஸர், பீஷ்ம பிதாமகர், ஸப்த ரிஷிகள், அத்திரி, வசிஷ்டர், துர்வாசர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, போன்ற மகா தபஸ்வீகள், அருந்ததி, சீதை, அனுசூயை போன்ற உத்தம ஸ்திரிகள், ஸ்ரீ ராமபிரான், கிருஷ்ணர் ஆகிய அவதார புருஷர்கள் ஆகியோரின் பாதம் பட்ட புனித பூமியும் கூட! ஸ்ரீ சுக முனிவர், ஸ்ரீ மத் பாகவதம் மகா புராணத்தை ஸப்த ரிஷிகளுக்கும் உபதேசித்த மகத்தான புண்ணிய க்ஷேத்திரம் இது. மரணத் தருவாயில், நைமிசாரண்யத்தின் ஒரு சிட்டிகைத் துளி மண்ணை ஸ்பரிசித்தாலும், மகா பாவத்தைச் செய்தவர்கள்கூட, பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று சொர்க்கம் அடைவார்கள் எனக் கூறுகின்றது தல புராணம்.

ஒருசமயம், இத்தகைய புண்ணிய பூமியில்தான், மகரிஷி துர்வாசர் தங்கி, தவமியற்றி வந்தார். துர்வாசர், பிறவியிலேயே மகாக் கோபக்காரர்! ஒருசமயம் திருக்கையிலையில்,  ஸ்ரீ பரமேஸ்வரன் மிகக் கோபம் கொண்டபோது, பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த ஓர் அக்னிப் பொறியே துர்வாசராக மாறியது! ஆதலால், அவர் அவதரித்தது முதலே மிகுந்த சினத்துடனே காணப்பட்டார். மகா தபஸ்வி! ஆதலால் எவர் சிறிது பாவத்தைச் செய்தாலும் கடுமையான சாபத்தைக் கொடுத்துவிடுவார்! அவரை நினைத்தாலே தேவர்களும், முனிவர்களும்கூட அஞ்சுவார்கள்!! அவர் கண்களில் பட்டுவிட்டால், ஆபத்து என நினைத்தார்கள்-தங்களிடம் ஏதாவதொரு குறையைக் கண்டுபிடித்து, சாபம் கொடுத்துவிடுவாரோ என்று...!!!

அப்படிப்பட்ட துர்வாசர், நைமிண்ய சாரண்யம் ஆஸ்ரமத்தில் தவமியற்றிவந்தார். அந்த ஆரண்யத்தில் (காடு) ஏராளமான வேறு பல தவ முனிசிரேஷ்டர்களும், யோகிகளும் அவர்களுடைய சீடர்களும் ஆசிரமங்கள் அமைத்து, வசித்துவந்தனர். ஆனால், அனைவருமே துர்வாசரை நினைத்து அஞ்சி வந்தனர். அவர் கண்களில் பட்டுவிடுவோமோ, அதனால் ஏதாவது சாபத்திற்கு ஆளாவாவோமோ என்று அஞ்சி நடுங்கிவந்தனர். இந்தப் பிரச்னையை எவ்விதம் தீர்ப்பது? யார் தீர்ப்பது? எப்போது தீர்ப்பது? என்பதுதான் அனைத்து மகரிஷிகளுக்கும் கவலையளித்து வந்தது.

வாய்ப்பும் வந்தது!

எதிர்பாராது, அவர்கள் ஏங்கிய வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டியது! ஸ்வகீர்த்தி என்ற புகழ்பெற்ற மன்னன், மிகச் சிறந்த யாகம் ஒன்றை ஸ்வயமந்தபஞ்சசும் எனும் புண்ணிய பூமியில் நடத்த விரும்பினான். மிகவும் கடினமான யாகம் அது! சாதாரண மன்னர்களால் அதைச் செய்ய முடியாது. மாமன்னர்களால் மட்டுமே செய்யக்கூடிய மிகப் பெரிய யாகம் அது. அந்த யாகத்தை மகரிஷிகளில் சிறந்த துர்வாசரே முன்னின்று, தலைமை தாங்கி, நடத்தித் தர விரும்பினான் அம்மன்னன். அதற்காக, அக்காட்டிற்குத் தானே நேரில் சென்று பிரார்த்தித்தான். மன்னன், ஸ்வகீர்த்தி நீதிமான்! தர்ம நெறியிலிருந்து சிறிதும் வழுவாதவன்!! அவனே அக் கொடிய காட்டிற்குத் தனது சதுரங்க சேனைகளுடன் சென்று, துர்வாசரை நமஸ்கரித்து, அரிய யாகத்தை நடத்தித் தர வேண்டினான். அந்தக் காலத்தில் மகரிஷிகள், மாமன்னர்களேயானாலும், அவர்களுடைய அரண்மனைக்குச் செல்வதில்லை!

மன்னன் மிகவும் நேர்மையானவன். மக்களைத் தன் வயிற்றில் பிறவாத குழந்தைகளாகவே பாவித்து, நாட்டை பரிபாலித்து வந்தான். அவனே நேரில் வந்து அத்தகைய பணிவுடன் அழைப்பு விடுக்கையில் எவ்விதம் மறுப்பது? சரியென்று சம்மதம் தெரிவித்தார், மகரிஷி! மன்னருக்கோ அளவுகடந்த மகிழ்ச்சி!! மகரிஷிகளின் மகிழ்ச்சி! விஷயம் வெகு சீக்கிரமாகவே பரவிவிட்டது. நைமி சாரண்யத்தில் அனைத்து முனிசிரேஷ்டர்களுக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி. துர்வாசர், வெளியூர் செல்கிறார்; மீண்டும் திரும்புவதற்கு பல நாட்களாகும்; அதுவரையிலாவது பயமின்றி நடமாடலாமென்று!! எப்படியும் துர்வாசர் பிரச்னைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும் என்பது அனைவரின் ஆசையுங்கூட! எத்தனை காலத்திற்குத்தான் அவருக்கு பயந்துகொண்டே இருக்க முடியும்? துர்வாசரோ, தற்போது மன்னரின் யாகத்தை நடத்தித் தர வெளியூர் சென்றிருப்பதால், பயமின்றி அனைவரும் விவாதித்து, திட்டம் வகுக்கலாம் என்று ஒன்று கூடினர்.

 பலர், பல யோசனைகளைக் கூறினர். ஆனால், எதுவும் செயல்படுத்த இயலாதவையாக இருந்தன. துர்வாசருக்குத் தெரிந்துவிட்டால், அடுத்த கணமே பிடி சாபம்தான்! அஞ்சிநடுங்கினர் அனைவரும்!! அந்நிலையில் அங்கு நெடுங்காலமாக தவமிற்றிவந்த, வயோதிக மகரிஷி ஒருவர், தனது கருத்தினைக் கூறினார். துர்வாசரை “சம்சாரம்'' எனும் சங்கிலியில் பூட்டிவிடுவதுதான், துர்வாசரை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்பதுதான் அவர் கூறிய யோசனை!! அதாவது, துர்வாசருக்குத் திருமணம் செய்துவைத்துவிடுவது! சம்சாரம், சாகரம், துக்கம் என்றொரு மூதுரையே உள்ளது. ஆண்களின் பிடிவாதமும், முன்கோபம் ஆகிய அனைத்து துர்க்குணங்களையும் பொடிப் பொடியாக்கிவிடும் சம்சார வாழ்க்கை! மகுடிக்கு மயங்காத நாகமும் உண்டோ? அன்பும், பாசமும் காட்டும் மனைவியின் முன் மண்டியிடாத கணவனும் உண்டோ? அன்பிற்கு அடங்காத ஆண்களில்லை இந்த அவனியில்! இது எக்காலத்திலும் கண்டுவரும் அனுபவமாகும்.

அந்த முதியவர் கூறியதைக் கேட்ட அத்தனை முனிஸ்ரேஷ்டர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி! “ஆகா...! இதுவரை இதுபோன்ற எண்ணம் நம் மனத்தில் தோன்றவில்லையே!” என்று அங்கலாய்த்தனர்! ஆனால், அடுத்த விநாடி பயத்தினால் உடல் வியர்த்தது, கூடியிருந்த அத்தனை பேருக்கும். திருமணத்திற்கு துர்வாசர் சம்மதிக்கவேண்டுமே? அவர் சம்மதித்தாலும் அந்தக் கோபக்கார முனிவருக்கு யார் பெண் கொடுக்க முன்வருவார்கள்?!” என்ற பெருங்கவலை ஏற்பட்டது. அந்தப் பொறுப்பையும் அந்த வயோதிக முனிவரே ஏற்றுக்கொண்டார்! அந்தக் கானகத்தில் தங்கி, தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த மகா தபஸ்வி மித்ரஜானு. அவரது தர்ம பத்தினி  காலமாகிவிட்டார். அவருக்கு ஒரேயொரு செல்வ மகள் உத்கலை! உத்கலை என்றால், அனைத்து அம்சங்களிலும் பரிபூர்ணமானவள் என்பது பொருள். தனது பெயருக்கேற்ப,  அழகிலும், அனுஷ்டானங்களிலும், நற்பண்புகளிலும் உயர்ந்த பெண்ணாகத் திகழ்ந்தாள்.

தனக்குப் பின், தன் பெண்ணிற்குத் துணை ஏதுமின்றி இருப்பது பற்றி கவலைகொண்டிருந்தார் மகரிஷி. இந்நிலையில்தான், வயதில் மூத்தவர்களான மகரிஷிகள், அவரை அணுகி, அவருடைய பெண்ணை, துர்வாச முனிவருக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கும்படிக் கேட்டனர். முதலில் தயங்கிய முனிவர், தனது வயோதிகத்தை எண்ணி, இதற்குச் சம்மதித்தார். இதற்கிடையில், ஸ்யமந்தகபஞ்சக யாகமும் முடிந்து, துர்வாசரும் கானகம் திரும்பிவிட்டார். ஓர் நல்ல தினமாகப் பார்த்து, நன்கு மூத்த மகரிஷிகள், துர்வாசரை அணுகி,   மகரிஷிகளேயானாலும், மாமன்னர்களேயானாலும், அவர்களது வாழ்க்கையை மேம்படச் செய்வது அவரது தர்மபத்தினியே என்பதைப் பக்குவமாக எடுத்துரைத்து திருமணம் செய்துகொள்ளும்படி அவரை வேண்டினர்.  முதலில் தயங்கிய துர்வாசரும், இறுதியில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால், ஒரு நிபந்தனையையும் விதித்தார். தனக்கு மனைவியாக வரவிருக்கும் பெண், தன்னுடைய மனம் கோணாமலிருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே அந்த நிபந்தனை! இதை அப்பெண்ணிடம் கூறி, சம்மதம் பெற்றுவருமாறு கூறினார். அவர்களும் நிபந்தனையை உத்கலை யிடம் கூறி, அவளின் சம்மதத்தைக் கோரினர்! அவளும் பதிலுக்கு ஓர் நிபந்தனை போட்டாள்! அதாவது, துர்வாசரின் கோபம் நியாயமாக இருக்கவேண்டும்! எடுத்ததிற்கெல்லாம் கோபம், சாபம் என்றிருக்கக்கூடாது என்பதே அது. அதிலிருந்த நியாயத்தன்மையை உணர்ந்து, துர்வாச முனிவரும் ஏற்று, திருமணம் அந்தத் தெய்வீக வனத்திலேயே மிகச் சிறப்பாக நடைபெற்றது.

துர்வாசரின் திருமண வாழ்க்கை!

உத்கலையின் பணிவிடைகளினால் பரம திருப்தியடைந்து, தனது ஆஸ்ரமமே தெய்வீகப் பொலிவுடன் விளங்குவதைக் கண்ணுற்று, மகிழ்ந்தார், துர்வாசர். இந்நிலையில்தான் ஒரு அதிகாலையில், உத்கலை, ஆஸ்ரம பசுக்களைக் குளிப்பாட்டி, நெற்றிக்குக் குங்குமமிட்டு, பூச்சூட்டி, அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் விதி குறுக்கிட்டது,  அவர்களின் நல்வாழ்வில்! ஏதோ தன் அவசிய காரியத்திற்காக தன் தர்மபத்தினி உத்கலையைக் கூப்பிட்டார். முதல் தரம் அவர் கூப்பிட்டபோது, அவள் காதில் விழவில்லை; இரண்டாம் முறை கூவியழைத்தபோது அவள் கோபூஜையில் தன்னையும் மறந்தநிலையில் ஈடுபட்டிருந்தாள்! மூன்றாம் முறை பொங்கிவரும் கடுஞ்சினத்துடன், “உத்கலை” என்று கூவி அழைத்தார். அவள் தன்னிலைக்குத் திரும்பி, தன் கணவன் தன்னைக் கூப்பிடுகிறார் என்பதையுணர்ந்து ஓடிவந்தாள்! காலந்தாழ்த்தி வந்ததால், துர்வாசர் கடுஞ்சினங்கொண்டார். கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து, அவள் மீது தெளித்து, சாபம் கொடுத்தார். உத்கலை எரிந்து சாம்பலானாள்!

அந்த விநாடியே அவரது கோபம் மறைந்தது...! அதுவரையில் தனக்கு சிறிதளவும் மன வருத்தம் கொடுக்காத உத்தமியை தன்னுடைய முன்-கோபத்தினால் இழந்துவிட்டோமே எனக் கண்ணீர் சிந்திக் கலங்கினார். அவர் வாயிலிருந்து ஓர் உபதேசம் தானாகவே வெளிப்பட்டது, உலகினருக்கு! “உலகில் எந்த மனிதன் நியாயமற்ற முன்கோபத்தினால் தன்னை இழக்கின்றானோ, அவனுக்கு அப்பிறவியே அர்த்தமற்றதாக வீணாகட்டும்!” என கதறினார். விஷயமறிந்த மாமனார், “விட்டேனா பார், அந்த துர்வாசனை...!” எனக் கூவி அக்னி ஜவாலைக்குச் சமமான  கோபத்துடன் பூமியதிர துர்வாசரை நோக்கி விரைந்தார்.  இதற்குள், மற்ற மகரிஷிகள் ஒன்றுகூடி, அவரைச் சமாதானப்படுத்தினர். “இனி பழிவாங்குவதினால், என்ன பயன்?” என்பதை எடுத்துரைத்தனர்.

கோபமும் தணிந்தது!  அளவற்ற துக்கத்தையடைந்த துர்வாசர், மனைவியின் சாம்பலின்மீது மீண்டும் நீரைத் தெளித்து, “இனி உலகில் நடைபெறும் அனைத்து சுப-நிகழ்ச்சிகளிலும் நீ பெருமையுடன் விளங்குவாய்! நீ இல்லாத சுபச்-சடங்குகள் இருக்காது!! அந்த புண்ணிய பலன்கள் அனைத்தும் உன்னையே சேரும். அதன் பலனாக உத்தமியான நீ, சூரிய-சந்திரர் உள்ள வரையில், உலகில் தர்மம் உள்ள வரை, கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் உள்ளவரை சொர்க்கத்தில் சுகமாக வாழ்வாய்...!”என்று சாப விமோசனம் கொடுத்தார். ஒவ்வொரு சுப, தெய்வீக நிகழ்ச்சியிலும் நாம் வாழையின் மூலம் உத்கலையின் ஆசியையும், திருவருளையும் நாம் பெறுகின்றோம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்