ஆவணி மாதத்தின் உயர்வும்,பெருமையும்!
2021-08-17@ 11:21:33

17-8-2021 முதல் 16-9-2021 வரை
பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்
நவகிரகங்களுக்கும் நாயகன் என வேத காலத்திலிருந்தே பூஜிக்கப்பட்டுவரும் சூரியன், அவரது ஆட்சி வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே “சிராவண மாதம்'' எனக் கொண்டாடப்படும் “ஆவணி” மாதமாகும்! உலகின் அனைத்து உயிர்களுக்கும் ஜீவ சக்தியை அளித்தருளும் சூரியன், ஒரு நாள் & ஆம்! ஒரேயொரு நாள் உதயமாகாவிடில்கூட, உலகம் என்னவாகும் என்பதை ஊகித்து, உணர்ந்து கொள்ளலாம்! மகரிஷி காஸ்யபரின் புதல்வனான சூரியனுக்கு தினகரன், பாஸ்கரன், ஆதவன், திவாகரன், கதிரவன், அருணன், பகலவன், ஜீவஸ்வான் எனப் பல பெயர்கள் உண்டு.
ஜோதிடக் கலையில்....!
ஜோதிடக் கலையில் சூரியன் “சரீர காரகர்”, “பித்ரு காரகர்”, “ஆத்ம காரகர்” என விசேஷப் பெருமைகளுடன் போற்றப்படுகிறார். திதி பூஜைகள், அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய-சந்திர கிரகண காலங்கள் போன்ற புண்ணிய தினங்களில், நாம் செய்யும் தர்ப்பணம் (எள்ளுடன்கூடிய தீர்த்தம்), மரண காலச் சடங்குகள் ஆகியவற்றின் பலன்களை நமது முன்னோர்களிடம் (பித்ருக்கள்), அவர்கள் எந்த உலகத்தில் இருந்தாலும், எத்தகைய பிறவி எடுத்திருந்தாலும், அவர்களிடம் மிகச் சரியாகக் கொண்டு சேர்க்கும் மகத்தான சக்தி பெற்றவராதலால், அவரை “பித்ரு காரகர்” எனப் புகழ்கின்றன வேத நூல்களும், இதிகாச புராணங்களும், உபநிஷத்துக்களும், ஜோதிடக் கலையும்! ஏழு குதிரைகள் பூட்டிய தங்கமயமான ரதத்தில், ஓய்வில்லாது பவனிவரும் சூரியன், மக்களுக்கு ஆத்ம பலத்தை அளிக்கும் உன்னத சக்தி பெற்றவர். மந்திரங்கள் அனைத்திற்கும் தாய் எனப் பூஜிக்கப்படும் காயத்ரி மகா மந்திரத்திற்கு உரியவரும் சூரியனே!
அகத்திய மகரிஷி உபதேசித்த “ஆதித்ய ஹிருதயம்'' எனும் சூரிய மகா மந்திரத்தால் ஸ்ரீ ராமபிரான், ராவணனை வெற்றிபெற முடிந்ததை ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் விவரிக்கின்றது.
ஜாதகத்தில் சூரியன்!
ஜெனன கால ஜாதகத்தில் சூரியன் சுப-பலம் பெற்று விளங்கினால், அரசாங்க உத்தியோகம், செல்வாக்கு, நோயற்ற வாழ்க்கை, நேர்மை, ஒழுக்கம் அகியவற்றால் பெருமை ஆகியவை கிட்டும். பெண்கள் கற்புக்கரசிகளாக பெருமை பெற்று விளங்குவார்கள். ஜாதகத்தில் சூரியன் பலம் குறைந்திருந்தாலும், பாபக் கிரகச் சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும், பலவித சர்ம நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என ஆயுர்வேதம் கூறுகிறது. மனித உடலில் ரத்தம், நரம்புகள், இதயம், சர்மம் ஆகியவை சூரியனின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றதை அதர்வண வேதமும், “அஷ்டாங்க ஹ்ருதயம்'' எனும் ஆயுர்வேத நூலும் விவரித்துள்ளன.
ஜாதகத்தில் சூரியன் சுப-பலம் குறைந்திருந்தாலும், பாபக் கிரகச் சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும், அவற்றிற்குத் தகுந்த சக்திவாய்ந்த, எளிய பரிகாரங்கள் உள்ளன. சூரிய கிரணங்களின் மருத்துவ சக்தியை மிகப் பழமையான சுஸ்ருத ஸம்ஹிதையும், சரக் ஸம்ஹிதையும் விவரிக்கின்றன. இதனைத் தற்கால ஆங்கில மருத்துவமும் ஏற்றுள்ளது. உதாரணமாக, வெண்குஷ்டம் (Leucoderma) சருமநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தினமும் சுமார் இரண்டு மணிநேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் சிகிச்சையை பல மருத்துவர்கள் கையாண்டு வருவது அனைவரும் அறிந்ததே!
வெளிப்பார்வைக்கு பெரிய மனிதர்களாகவும், சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமற்றவர்களாகவும் இருக்கும் “பிரமுகர்களை” அவர்களது ஜாதகத்தில் சூரியனின் நிலையை வைத்து, மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட முடியும். அதேபோன்று, ஏழ்மையிலும், வறுமையிலும் சிக்கி, எளிய குடிசையில், வாடி, வதங்கினாலும்கூட ஒழுக்கத்தினால் வைரமாகத் திகழும் உத்தமர்களையும் ஜாதகத்தில், சூரியனின் ஜெனன கால நிலையை ஆராய்வதின் மூலம் கண்டுகொள்ள முடியும். மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் சூரியனின் நிலையை வைத்து, தந்தையின் மரண கால வருடம், நாள், நேரம் ஆகியவற்றை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அற்புத கணித முறைகள் பிருஹத் ஜாதகம் மற்றும் பூர்வ பாராசர்யம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
மகன் - தந்தை ஆகிய இருவரிடையேயும் நிலவும் பரஸ்பர அன்னியோன்னியமும், பாசமும் சூரியனின் நிலையே நிர்ணயிக்கிறது! சூரியனின் அன்றாட அஸ்தமனம், நமது ஆயுட்காலத்தில் ஒருநாள் கடந்துவிட்டதை நினவூட்டுவதால், நற்செயல்களில் மனத்தைச் செலுத்துமாறு வியாஸ பகவானின் ஸ்ரீமத் மஹாபாரதம் வலியுறுத்தி, உபதேசிக்கிறது. ஆண்டுதோறும், திதி பூஜையன்று, நமது முன்னோர்கள் சுவர்ணமயமான (தங்கம்) விமானம் மூலம், சூரியனின் கிரணங்கள் மூலம் நமது இல்லங்களுக்கு எழுந்தருளி, நாம் பக்தியுடன் செய்யும் பூஜையை ஏற்று, நம்மை ஆசீர்வதித்து, அதே கிரணங்கள் மூலம் தங்கள் உலகிற்குத் திரும்பிச் செல்வதாக, கருட புராணம், மற்றும் பல சூட்சும கிரந்தங்கள் விவரிக்கின்றன.
சூரிய பகவானின் உச்ச வீடு, மேஷ ராசியாகும்.
துலாம், நீச்ச வீடு. ஜாதகத்தில் சூரியன் பலம் குறைந்திருந்தாலும், பாபக் கிரக சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும், அத்தகைய ஜாதகத்தினர், மனவுறுதியற்றவர்களாகவும், எந்தப் பிரச்னையிலும் தீர்மானமான முடிவு எடுக்கமுடியாமல் குழப்பத்திலேயே நீந்திக்கொண்டு, மன-நிம்மதியற்றவர்களாகவும், தத்தளிப்பார்கள் என ஜோதிட ரத்னாவளி எனும் பண்டைய நூல் விளக்கியுள்ளது. இந்நூல், காஷ்மீரில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் ஆசிரியர் யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பாரதம் சுதந்திரம்பெற்ற போது, காஷ்மீரிலுள்ள ஓர் பழைமையான திருக்கோயிலின் குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. அக்காலத்தில், காஷ்மீரில் சம்ஸ்கிருதம் அன்றாட பேச்சுமொழியாக இருந்துவந்துள்ளது.
அப்போதுதான், காஷ்மீரின் மிகப் பிரசித்திப்பெற்ற கல்கஹனரினின் ராஜதரங்கிணி எழுதப்பட்டதாக ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வேத காலம் என சரித்திர ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகிறார்களே, அந்தக் காலத்திற்கு முன்பே சூரிய பகவானை, மக்கள் பூஜிக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஸ்ரீ ராமபிரானும், அவரது மூதாதையர்களும், சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களே! சூரியனுக்கு, குரு, சந்திரன், செவ்வாய், ஆகிய மூவரும் நண்பர்கள். சிம்மம், ஆட்சிவீடாகும். தான் இருக்குமிடத்திலிருந்து, 7-ம் ராசியை முழு சுபப்-பார்வையாகப் பார்க்கும் சக்தி கொண்டவர், சூரிய பகவான்.
இத்தகைய பெருமை பெற்ற சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள ஆவணி மாதத்தின் கிரக நிலைகள் எத்தகைய நன்மைகளை அளிக்கப்போகிறது என்பதை மிகத் துல்லியமாகக் கணித்து, எமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெறுகிறோம். பொதுவான பலன்களேயானாலும்கூட, ஷோடஸ ஸதவர்க்கம் என்னும், மிகத் துல்லிய, சூட்சும கணித முறையின் மூலம் கணித்துக் கூறியுள்ளபடியால், அவை குறிப்பிடும் பலன்கள் மிகச் சரியாக இருக்கும். மகரிஷி யாக்ஞவல்கியருக்கு, மிகக்கடினமான சுக்கில யஜுர் வேதத்தை, உபதேசித்த ஈடிணையற்ற பெருமை, சூரியனுக்கு உண்டு. மருத்துவ சாஸ்திரத்தில், சூரிய நமஸ்காரத்தின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளது. தீராதது, தீர்க்க முடியாதது, என மருத்துவர்களால் கைவிடப்பட்ட சில குறிப்பிட்ட இதய சம்பந்தமான ரோகங்கள்கூட சூரிய நமஸ்காரத்தினால் நிவர்த்தியாகும் என ஆயுர்வேத நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.
கொடைக்கும், தியாகத்திற்கும் பெருமை பெற்ற கர்ணனின் தந்தை, சூரிய பகவானே! கீழ்க்கண்ட சூரிய தியான ஸ்லோகம், மகரிஷி வியாஸரால் இயற்றப்பட்ட, சக்திவாய்ந்த துதியாகும். தினமும் காலை நேரத்தில், இதனைச் சொல்லி, நெய் விளக்கேற்றி, அவரை நமஸ்கரித்து வருவது நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும், தெய்வீகம் நிறைந்த குடும்ப வாழ்க்கையையும் அளித்தருளும். இதனை அனுபவத்தில் காணலாம்.
“ஜபாகுஸும ஸங்காஸம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்”
(பொருள்:- மகரிஷி காஸ்யபரின் புதல்வரும், தன்னிகரற்ற ஒளியினால் பிரகாசிப்பவரும், செம் பருத்தி மலரின் வண்ணமுடையவரும், அனைத்து பாபங்களையும் போக்குபவருமான சூரியனை நமஸ்கரிக்கின்றேன்.) அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், ஞாயிற்றுக் கிழமைகளில் கருவறையிலுள்ள தீபத்தில் (தூங்கா விளக்கு) சிறிது பசுநெய் சேர்த்துவருவது எத்தகைய கிரக தோஷமானாலும், நிவர்த்தியாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் பசுவிற்கு சிறிது உணவளிப்பது, பல பிறவிகளில் நமக்குக் குறைவின்றி உணவு கிடைக்கும், பரம புண்ணியமாகும்.
மேலும் செய்திகள்
மான் மழுவேந்திய கணபதி
சமயமும் தொன்மமும்
ஆன்மிக அமுதத் துளி-2
பிரதோஷம்
மந்திரங்களின் தொன்மம்
புண்ணியங்களை அள்ளித் தரும் புனித மஹாளயபட்சம்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!