SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

2021-08-11@ 17:28:45

?55 வயதாகும் எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. கடந்த ஆறு மாதமாக உடல்நிலை சரியில்லை. சரியாக நடக்க முடியவில்லை, கொஞ்சம் நடந்தால் முழங்கை, கால், முட்டி வலிக்கிறது. சோர்வு ஏற்படுகிறது. என் உடல் ஆரோக்யம் பெற நல்ல வழி காட்டுங்கள்.
- பாஸ்கர், சென்னை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் எட்டாம் பாவக அதிபதி புதன் 12ம் வீட்டில் கேதுவுடன் இணைந்திருப்பதும் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் ராகுவின் அமர்வு நிலையும் வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவிற்கான பிரச்சினையை உங்கள் உடல்நிலையில் தோற்றுவித்திருக்கிறது. எந்தவிதமான ஒளிவுமறைவும் இன்றி மருத்துவரிடம் உங்கள் பிரச்சினையைச் சொல்லி மருந்து மாத்திரைகளை சரிவர உட்கொண்டு வாருங்கள். ராகுவின் சாதகமற்ற சஞ்சாரம் மூட்டு வலியை உண்டாக்குவதில் வியப்பேதும் இல்லை. ‘பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடிதே’ என்று ஜோதிஷ சாஸ்திரம் சொல்கிறது. முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவினை அனுபவித்து வருகிறீர்கள். தான தருமங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே உங்கள் உடல்நிலையை நீங்கள் சரிவர பாதுகாத்துக் கொள்ள இயலும். வாரந்தோறும் வரும் சனிக்கிழமை நாட்களில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் வறியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். வஸ்திரம் வாங்கித் தருவதும் நல்லது. 29.07.2022 முதல் உடல்நிலையில் முன்னேற்றம் காணத் துவங்குவீர்கள்.

?என் மருமகள் வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக தாய்வீடு சென்றவர் பெண் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை திரும்பி வரவில்லை. குழந்தை பிறந்த செய்தி அறிந்து நாங்கள் சென்று பார்த்து வந்ததோடு சரி, அதன்பிறகு எந்தவித தொடர்பும் இல்லை. சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் என் மகன் மனைவியைப் பிரிந்து வாழும் நிலை கண்டு மனம் வேதனைப்படுகிறது. இந்தப் பிரச்சினையை எவ்வாறு நிவர்த்தி செய்வது?
- ஷேக் அஹமத், திருச்சி.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நீங்கள் மருமகளின் ஜாதகத்தையோ அல்லது பிறந்த குறிப்பினையோ அனுப்பவில்லை. உங்கள் மகனின் ஜாதகத்தில் மனைவியைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது நல்ல நிலையே, என்றாலும் அவரது ஜாதகத்தில் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவின் இணைவும் மூன்றாம் வீட்டில் புதனின் நீச சஞ்சாரமும் இருப்பதோடு தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலமும் அவரது நடத்தை குறித்து உங்கள் மருமகளின் மனதில் ஒரு சில சந்தேகங்களை உண்டாக்கியிருப்பதுபோல் தோன்றுகிறது. வீண் கௌரவம் பாராது உங்கள் மகனை அவரது மனைவியிடம் தனிமையில் மனம் விட்டுப் பேசச் சொல்லுங்கள். மனைவி புகுந்த வீட்டிற்கு வர மறுத்தாலும் உங்கள் மகனை அவ்வப்போது தனது மகளைச் சென்று பார்த்து வர வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் நாகூர் தர்காவிற்குச் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்வதும் நல்லது. 09.12.2021 முதல் அவரது வாழ்வினில் மகிழ்ச்சி திரும்பக் காண்பீர்கள்.

?என் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து வாழ்கிறேன். கேட்டால் குடிப்பழக்கம் எனக்கு உள்ளதாகவும் என் மகனின் பிறந்த நேரத்தின்படி இன்னும் சில வருடங்கள் கழித்துத்தான் எல்லோரும் ஒன்றிணைய முடியும் என்றும் என் மாமனார் கூறுகிறார். நாங்கள் ஒன்றிணைந்து வாழ உரிய பரிகாரம் கூறுங்கள்.
- முத்துமாரியப்பன், ராஜபாளையம்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் ஜென்மச் சனியின் காலத்தையும் பூசம் நட்சத்திரம், கடக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மனைவி கண்டச்சனியின் காலத்தையும் எதிர்கொண்டு வருகிறீர்கள். உங்கள் மூவரின் ஜாதக நிலைகளை ஆராயும்போது உங்கள் மாமனார் கூறுவது போல் இன்னும் சிறிது காலம் பொறுத்திருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. உங்கள் மகனுக்கு 11 வயது முடிந்து 12வது வயது துவங்கும்போது உங்கள் குடும்பம் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு உண்டு. அதற்குள் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவரை நீங்கள் அவ்வப்போது சென்று மனைவி மற்றும் மகனைப் பார்த்து வருவதோடு அவர்களுக்கு பணமும் தர வேண்டியது அவசியமாகிறது. மனைவி தனது கடமையை மறந்திருந்தாலும் நீங்கள் ஒரு கணவராகவும் மகனுக்குத் தந்தையாகவும் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து வாருங்கள். பிரதி ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று ஆலய பிரகாரத்தை 11 முறை வலம் வந்து வணங்குவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். பிரிந்து வாழ்ந்தாலும் உங்கள் மகன் எப்பொழுதும் தந்தையின் மீது மிகுந்த பாசமும் அளவில்லாத அன்பும் கொண்டிருப்பான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?என் பேத்திக்கு 19 வயது துவங்க உள்ளது. அவளுக்கு அப்பா இல்லை. அம்மா, தம்பியுடன் அனுசரித்து போவது இல்லை. பிடிவாத குணம் அதிகம். வருமானத்திற்கு மீறிய ஆசையும் நினைப்பும் உள்ளது. +2 முடித்திருக்கும் அவள் மேற்கொண்டு நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்வாளா? அவள் நல்லபடியாக வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- கனகா, திருப்பத்தூர்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி துவங்கி உள்ளது. உங்கள் பேத்தியின் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. அப்பா இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அந்தக் குழந்தையின் கற்பனையை தடை செய்யாதீர்கள். மேற்கொண்டு கல்லூரி படிப்பினை தொடர்வதற்கு உறவினர்கள் இணைந்து உதவி செய்யுங்கள். அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரனின் இணைவும் ஒன்பதாம் வீட்டில் புதன் மற்றும் குருவின் இணைவும் அவரை உயர்ந்த உத்யோகத்தில் அமர வைக்கும். பதின்ம வயதில் இருக்கும் ஒரு இளம்பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசி வாருங்கள். அவரது ஜாதக பலத்தினைக் கொண்டு காண்கையில் அவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவது
என்பது பெரியவர்கள் ஆகிய உங்கள் கைகளில்தான் உள்ளது என்பது நன்றாகத் தெரிகிறது. நிச்சயமாக அவர் வளர்ந்த பின்பு தனது தாயாரையும், சகோதரனையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். குழந்தையின் தாயாரை பிரதி சனிக்கிழமை தோறும் நவகிரகங்களில் மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சனி பகவானுக்கு எள் முடிச்சிட்ட விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். சனிக்கிழமை தோறும் ஒரு பொழுது விரதம் இருப்பதும் நன்மை தரும். உங்கள் பேத்தியின் எதிர்கால வாழ்வு என்பது பிரகாசமாகவே உள்ளது. கவலை வேண்டாம்.

?கூரியர் கம்பெனி ஏஜென்சி நடத்தி வந்த எனக்கு 2019 அக்டோபரில் ஒரு வாடிக்கையாளரால் பிரச்னை ஏற்பட்டு அதன் விளைவாக சிறையில் உள்ளேன். கடந்த 2 வருடங்களாக சிறையில் உள்ள எனக்கு மறுபடியும் எனது குடும்பத்தாரோடு வாழும் அமைப்பு உள்ளதா? பரிகாரம் ஏதும் உண்டா?
- சீனிவாசன், சிறை கைதி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் (மீன லக்னம் என்று எழுதி இருக்கிறீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் பிரச்னையைத் தரக்கூடிய ஆறாம் வீட்டில் புதன் உச்ச பலம் பெற்று தசையை நடத்தி வருவதும் நீசம் பெற்ற ஜென்ம லக்னாதிபதி செவ்வாயுடன் இணைந்து ராகு நான்கில் அமர்ந்திருப்பதும் புதன் தசையில் வந்த ராகு புக்தியின் காலத்தில் சிறை வாசத்திற்குள் உங்களை நுழைத்திருக்கிறது. உடன் ஏழரை சனியின் காலமும் துவங்கியிருப்பதால் கடுமையான சோதனைக்கு உள்ளாகி இருக்கிறீர்கள். என்றாலும் அடுத்து வர உள்ள கேது தசையின் காலம் திருப்பு முனையை உண்டாக்கும். உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் சாரம் பெற்று கேது பத்தில் அமர்ந்திருப்பதும் சந்திரன் குருவுடன் இணைந்து 11ல் சஞ்சரிப்பதும் நல்ல நிலையே. 05.03.2024 முதல் உங்கள் வாழ்வு ஆன்மிகப் பாதையில் செல்லும். குடும்பத்தினருடன் இணைந்து வாழ்ந்தாலும் மனம் குடும்ப வாழ்வினில் ஒட்டாமல் தத்துவ சிந்தனைகளை நாடும். ஓய்வு நேரத்தில் தனித்து அமர்ந்து கண்களை மூடி சிவபெருமானை மனதில் தியானித்து ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வாருங்கள். பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையாலும் உங்கள் நன்னடத்தையினாலும் வெகுவிரைவில் விடுதலை அடைவீர்கள். அத்துடன் உங்களுக்கு உண்டான அவப்பெயர் நீங்கி மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வாழ்வினில் உயர்ந்து நிற்பீர்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்