SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரும்பாய் இனிக்கும் குறள்!

2021-08-06@ 15:49:35

கரும்பாய் இனிக்கும் குறள்!

குறளின் குரல்: 148

திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவும் கரும்பாய் இனிக்கிறது. ஒரு குறட்பாவில் கரும்பு என்ற சொல்லே நேரடியாகப் பயன்படுத்தப்பட்டு அது கூடுதலாய் இனிக்கிறது! கயமை என்ற நூற்றியெட்டாம் அதிகாரத்தில் வரும் குறள் அது.
`சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.’
(குறள் எண் 1078)

சான்றோர், சொல்லிய அளவிலேயே பிறர் துன்பம் போக்கப் பயன்படுவார்கள். அது சான்றோரின் இயல்பு.ஆனால், கயவர்கள் மட்டும் கரும்புபோல் கசக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவார்கள். வேறு வழியில்லை.கரும்பு மூங்கில்போல் நீண்டு வளர்கிறது. கணுக்கணுவாகப் பிரிந்திருக்கிறது. இனிக்கும் சர்க்கரை, கரும்புச் சாறில் உள்ளது.

ஆனால், அந்தக் கரும்புச் சாறை எளிதாய் எடுக்க இயலாது. இயந்திரத்தில் இட்டுக் கசக்கிப் பிழிந்தால்தான் சாறு கிடைக்கும். கரும்பை வள்ளுவர் உவமையாகப் பயன்படுத்தியிருப்பதிலிருந்து பழங்காலத்தில் தமிழகத்தில் கரும்பு விளைச்சல் அதிகம் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கரும்பிலிருந்து கரும்புச் சாறை எடுக்கும் கருவிகளும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. நம் இலக்கிய மரபிலும் ஆன்மிக மரபிலும் கரும்பு தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கிறது.

காதல் உணர்வைத் தூண்டுபவன் மன்மதன். அவன் ரதிதேவியின் கணவன். தன் கையில் கரும்பு வில்லை வைத்திருப்பவன். அந்தக் கரும்பு வில்லின் நாண் எதைக் கொண்டு அமைந்தது தெரியுமா?  தொடர்ச்சியான வண்டுகளின் வரிசைதான் நாணாக இருக்கிறதாம். தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய ஐந்து மலர்கள்தான் மன்மதனின் அம்புகள் என்கிறது புராணம். கரும்பு வில்லில் வண்டு நாணை இழுத்து மலர் அம்புகளைப் பொருத்தி அவன் எய்தால் யாராயிருந்தாலும் காதல் வயப்படுவார்கள்.

அன்னை காஞ்சி காமாட்சி கையில் ஒரு கரும்பு இருக்கிறது. இந்தக் கரும்பு எப்படி வந்தது என்பதையும் இந்தக் கரும்புக்கும் மன்மதன் கையில் உள்ள கரும்புக்கும் என்ன வேறுபாடு என்பதையும் மகாசுவாமிகள் விளக்கியுள்ளார்.பரமசிவன்மேல் தன் கரும்பு வில்லைக் கொண்டு மலர்க்கணைகளை எய்தான் மன்மதன். தவத்தில் ஆழ்ந்திருந்த ஈசன் அதனால் தவம் கலைக்கப்பட்டார். கடும் சீற்றத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.  தோற்றுப்போன மன்மதனின் கரும்பு வில், வெற்றிபெற்ற சிவபெருமானின் கைக்கு வந்தது. அதை, தான் வாங்கித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள், அன்னை காமாட்சி.

அன்பு பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம் கரும்பு. எப்போதும் அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். கட்டுமீறிச் செல்லலாகாது என்பதை உணர்த்தவே அன்னை தன்கையில் கரும்பை வைத்திருக்கிறாள்.  மன்மதனின் கரும்பு காமத்தைத் தூண்டக் கூடியது. அன்னை காமாட்சியின் கையில் உள்ள கரும்பு தன்னை வழிபடுபவர்களின் மனத்திலிருந்து காமத்தை அகற்றக் கூடியது. காமாட்சியை வழிபட்டால், அவள் அருளால், தேவியின் திருக்கரத்தில் உள்ள கரும்பின் கருணையால் நாம் நம் மனத்தில் தோன்றும் காம உணர்வை வென்று ஆன்மிகத்தில் முன்னேற முடியும் என்கிறார் மகாசுவாமிகள். காமதகனம் செய்த சிவபெருமானின் மனைவி நம் மனத்தில் உள்ள காமத்தைத் தகனம் செய்துவிடுவாள்.

`கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்’ என்றொரு கோயில் கும்பகோணத்தில் உண்டு. அங்கே உறையும் விநாயகப் பெருமானின் திருநாமம்தான் `கரும்பாயிரம் பிள்ளையார்’ என்பது. அவருக்கு அப்படிப் பெயர் வந்ததற்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.கரும்பு வியாபாரி ஒருவன் வண்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்தான். அப்போது எதிரே ஒரு சிறுவனாய்த் தோன்றி தனக்குப் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு கேட்டார் பிள்ளையார்.

அவர் யாரென்று அறியாத வணிகன், அனைத்தும் உப்புக் கரிக்கும் என்றும் அவை கரும்பல்ல, நாணல் குச்சிகளே என்றும் சொல்லி ஏமாற்றிச் சென்று விட்டான். `சிறுவன் மேல் இரக்கமில்லையே உனக்கு? உன் கரும்பெல்லாம் நாணல் குச்சிகளாகவே ஆகட்டும்!’ எனக் கூறிவிட்டு
அருகிலுள்ள ஆலயத்தில் சென்று மறைந்துவிட்டான் அந்தச் சிறுவன்.என்ன ஆச்சரியம்! ஆயிரம் கரும்பும் தித்திக்காமல் உப்புக் கரிக்கத் தொடங்கியது. பிறகு கரும்பு எப்படி வியாபாரம் ஆகும்?வணிகன் தவற்றை உணர்ந்து உள்ளம் உருகி வேண்ட, விநாயகர் அவன் கனவில் தோன்றினார். அவனை மன்னித்தார். ஏழைகளுக்கு இரங்கவேண்டும் என்று அவனுக்கு நீதி புகட்டினார். மறுபடி ஆயிரம் கரும்பையும் தித்திக்கச் செய்தார் என்கிறது கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் தலபுராணக் கதை.

*தத்துவத் தமிழ்க் கவிஞரான பட்டினத்தார் கையில் ஒரு கரும்பு உண்டு. அந்தக் கரும்பு பற்றி இனிப்பான ஒரு கதையும் உண்டு.
பட்டினத்தாருக்கும் முன்பாகவே அவரது சீடர் பத்திரகிரியாருக்கு திருவிடைமருதூரில் முக்தி கிடைத்துவிட்டது. பத்திரகிரியார் இறைஜோதியில் கலந்ததைக் கண்ட பட்டினத்தார், `சீடனுக்கே முக்தி கிட்டி விட்டதே, எனக்கு எப்போது முக்தி கிட்டும்?’ என உள்ளம் உருகச் சிவபெருமானை வேண்டினார்.

சிவன் அவர்முன் தோன்றி, அவர் கையில் ஒரு கரும்பைக் கொடுத்தார். `இந்தக் கரும்பைத் தாங்கியவாறு பல்வேறு இடங்களுக்குத் திருத்தல யாத்திரை நிகழ்த்து. எந்தத் திருத்தலத்தில் இந்தக் கரும்பின் மேற்புறம் இனிக்கிறதோ அங்கு உனக்கு முக்தி கிட்டும்’ என அருளினார்.
பட்டினத்தார் கையில் கரும்போடு திருவெண்காடு, சீர்காழி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. சென்னை அருகே திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்தபோது கரும்பின் நுனி தித்தித்தது. அதுவே தாம் முக்தியடையவிருக்கும் திருத்தலம் என்பதைப் பட்டினத்தாரின் உள்மனம் உணர்ந்து கொண்டது.

அங்கிருந்த சிறுவர்களைத் தன்னைக் கூடையால் மூடும்படி அவர் வேண்ட அவர்கள் அவ்விதமே மூடினார்கள். வேறோர் இடத்தில் தோன்றினார் அவர். சிறுவர்கள் ஓடோடிப் போய் அங்கும் அவரைக் கூடையால் மூடினார்கள். இப்படியான விளையாட்டு பலமுறை நடந்தது. இறுதியில் ஒரு கூடையால் மூடப்பட்ட அவர் கூடையின் உள்ளே சிவலிங்கமாக மாறிச் சிவனுடன் கலந்தார்.  பட்டினத்தார் கையில் உள்ள கரும்பைப் பற்றி ஒரு திரைப்பாடலில் குறிப்பு வருகிறது. ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். குரலில் இடம்பெற்ற பாடல் அது:

`ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக் கிளி
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆடவந்த வேளையிலே பாடவந்த என்னை மட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட...
நான் சிரிக்குறேன் சிரிக்குறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகுறேன் அழுகுறேன் அழுகை வல்லே...

பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார்முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு - இது
கீழ்ப்புறத்தில் இனிப்பு மேல்புறத்தில் கசப்பு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...’

*கரும்பாய்த் தித்திக்கும் சங்க இலக்கியத்தில் கரும்பு பற்றிய செய்திகள் பல இடங்களில் உள்ளன.
கரும்புச் சாறு பிழியும் எந்திரத்திலிருந்து எழும் ஒலி யானையின் பிளிறல் ஒலிபோல் இருந்தது என்கிறார் புலவர் ஓரம்போகியார். `கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்` என்பது அவர் எழுதிய ஐங்குறுநூற்றுப் பாடலின் வரி. (ஐங்குறுநூறு 55.)`அரும்பெறல் அமிழ்தமன்ன கரும்பிவண் தந்தோன்’ என அதியமானைப் புகழ்கிறார் அவ்வையார். (புறநானூறு 392). அதியமானின் முன்னோர்கள் தான் வேற்றுத் தேசத்திலிருந்து தமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்தார்கள் என்ற கருத்துக்கு வலுச் சேர்க்கிறது இந்த வரி.

`கரும்பின் எந்திரம் நிலைப்பின் அல்லது இருஞ்சுவல் வாளை பிறழும்...’
(புறநானூறு 322)
கரும்பு எந்திரம் கரும்பைச் சாறுபிழியும் ஓசையைக் கேட்டதும் பக்கத்து வயலில் இருக்கும் வாளைமீன் புரண்டு ஓடும் என்கிறது இந்தப் பாடல்.
`கரும்பின் தீஞ்சாறு விரும்பினர்’ என்ற வரிமூலம் தமிழர்கள் கரும்புச் சாறை விரும்பிப் பருகினார்கள் என்பதற்குச் சான்று தருகிறது பெரும்பாணாற்றுப்படை.

கரும்பை மையமாக வைத்து எந்த வகையான நட்பு சிறந்தது என்பதை உணர்த்துகிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் வரும் ஒரு வெண்பா.`கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை

நுனியின் கரும்பு தின் றற்றே - நுனிநீக்கித்
தூரின் தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமிலாளர் தொடர்பு!’  
- (நாலடியார், பாடல் எண் 13)
கரும்பை நுனியிலிருந்து அடிநோக்கித் தின்றுகொண்டே சென்றால் போகப் போக இனிப்பு கூடிக்கொண்டே செல்லும். அதுபோலக் கற்றறிந்தார் நட்பில் இன்பம் வளர்ந்துகொண்டே இருக்கும். நல்ல பண்பும் நெஞ்சில் ஈரமும் இல்லாதவர்களின் நட்பு, கரும்பை அதன் வேர்ப்பகுதியிலிருந்து நுனிநோக்கித் தின்பதுபோல சுவை குறைந்துகொண்டே செல்லும் என்கிறது, அந்தப் பாடல்.

திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சியில் அதன் கதைத் தலைவி வசந்தவல்லியை வர்ணிக்கும்போது அவள் பேசும் சொற்கள் கரும்புபோல் இனிக்கும் என்கிறார், கவிராயர்.

`இருண்ட மேகம் சுற்றிச்
சுருண்டு சுழிஎறியும் கொண்டையாள்
ஏறி ஆடி நெஞ்சைச்
சூறையாடும் விழிக் கெண்டையாள்
அறிவை மயக்கும் ஒரு
கருவம் இருக்கும் மங்கைப் பருவத்தாள்
கரும்புபோல் இனித்து
மருந்துபோல் வடித்த சொல்லினாள்...’

கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு கரும்புச் சாறு அல்லது கருப்பஞ்சாறு எனப்படுகிறது. மாணிக்கவாசகரின் வாசகங்களைத் தான் கலந்து பாடும்போது கருப்பஞ்சாற்றில் தேனையும் பாலையும் கலந்ததுபோல் இனிமை உண்டாகிறது என மணிவாசகரைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார்.

`வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!’

பிஜித் தீவில் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்ய இந்தியப் பெண்கள் அழைத்துச் செல்லப் பட்டார்கள். அங்கே அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. செய்தித் தாள்களின் வாயிலாக அந்தச் சகோதரிகளின் துயரத்தை வாசித்தறிந்த மகாகவி பாரதியாரின் மனம் பதைபதைத்தது. பிஜித் தீவில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றிப் பாரதியார் மனம் கொதித்து எழுதிய பாடல் இதோ...

`கரும்புத் தோட்டத்திலே  - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே - இந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே  - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற்கிலையோ?  - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார்....
பெண்ணென்று சொல்லிடிலோ  - ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ?  - அந்த
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே  - தனிக்
காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார்....’

குழந்தைகளைக் `கண்ணே மணியே!’ என்றும் `கட்டிக் கரும்பே!’ என்றும் கொஞ்சுகிற வழக்கம் உண்டு. `சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி வாணிஜெயராம் குரலில் ஒலிக்கும் திரைப்பாடல் இந்த மரபைப் பின்பற்றுகிறது.

`கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீயிங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆளில்லை
வா என்று சொல்ல வாயில்லை...’
பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கரும்பில்லாமல் யாரும் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. கரும்பின் விளைச்சலும் பொங்கலை ஒட்டியேதான் தை மாதத்தில் நிகழ்கிறது.

இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருள்களில் ஒன்று சர்க்கரை. கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்குப் பெயர்பெற்றது கியூபா நாடு. அங்கே கரும்பு விளைச்சல் மிக அதிகம். அதனால் கியூபா `உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.  கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?’ என்றொரு பழமொழி உண்டு. கரும்பு இனிக்கக் கூடியது.

அதன்பொருட்டே அதைத் தின்னலாம். அப்படியிருக்க அவ்விதம் தின்பதற்குக் கூலி வேறு வேண்டுமா என்ன? ஒரு செயலைச் செய்வதே மனத்திற்கு மகிழ்ச்சி தருகிறபோது அந்தச் செயலைச் செய்வதற்கு எதற்குக் கூலி என்பதை விளக்க வந்த பழமொழி இது.பற்பல அறநெறிக் கருத்துகளைத் தித்திக்கும் தமிழில் சொல்லும் திருக்குறளைப் படிப்பதற்கு யாராவது கூலி கேட்பார்களா? கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்ன?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்