SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன சொல்கிறது,என் ஜாதகம்?

2021-08-06@ 15:48:55

?எனது மகனுக்கு 40 வயதாகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. பல இடங்களில் பெண் பார்த்தும் - பல பரிகாரங்கள் செய்தும் திருமணம் கை கூடவில்லை. எவ்வளவோ பரிகாரம் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது மகனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவனுக்கு ஏன் இதுபோல் நடக்கிறது? நிரந்தர வேலையும் இல்லை. எப்போதுதான் இது சரியாகும்?
திருமணம் எப்போது நடைபெறும்?
 - தமிழ் அரசன். சேலம்.

உங்கள் மகன் பிறந்தது ஆடி மாதம் - புனர்பூச நட்சத்திரம் - கடக ராசி. கடக லக்னம் - லக்ன பாதசாரம் ஆயில்யம் - 2ம் பாதம். தற்போது கேது தசையில் ராகு புத்தி நடக்கிறது. உங்கள் மகனுக்கு ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. திருமணம் கண்டிப்பாக நடைபெறும். கவலை வேண்டாம். திருமணம் நடக்கக்கூடிய காலகட்டம் பிறந்து விட்டது. அதிகபட்சம் 2022 ஜனவரிக்குள் திருமணம் நடைபெறும். விவாகரத்து ஆன அல்லது கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்வது நன்மை தரும். ஒரே பெண்ணாக இருக்க மாட்டாள். உடன் பிறந்தோர் உண்டு.

ஓரளவு படித்த பெண் அமையும். நீங்கள் இருக்கும் திசைக்கு கிழக்கு - வடக்கில் தேடிப் பார்க்கவும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. வேலை என்பது திருமணம் நடந்த பின் தான் நிரந்தரமாகும். தினமும் அபிராமி அந்தாதி சொல்லி அம்பாளை துதிக்க சொல்லச் சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.
?இதில் எனது பேத்தியின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக ஏகப்பட்ட ஜாதகங்கள் வரன் பார்த்து வருகிறோம். ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா? ஓர் உறவினரின் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்து விட்டு வந்தோம். அது சரியாக நடந்திருக்கிறதா? அதே போல் உத்தியோகமும் சரியாக அமையவில்லை. வழி கூறவும்.
 - திருமதி ஆறுமுகம். திருச்சி.

உங்கள் பேத்தி பிறந்தது ஆவணி மாதம்.  பூரட்டாதி நட்சத்திரம்.  கும்ப ராசி.  மிதுன லக்னம்.  புனர்பூசம் சாரம். தற்போது சனி தசையில் குரு புத்தி நடக்கிறது. உங்களுக்கு ப்ரஸ்ணம் பார்த்த போது வந்த லக்னம்: கன்னியா லக்னம். தில ஹோமம் நல்ல முறையில் நடைபெற்றிருக்கிறது. எனவே,  அதைப்பற்றிய கவலையை விடுங்கள். திருமணத்தைப் பொறுத்தவரை அடுத்து வரக்கூடிய  ஒன்றரை  வருடத்திற்குள் முடிந்து விடும். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பேத்திக்கு எந்த தோஷமும் கிடையாது. பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. குலதெய்வ கிருபையும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் சிறப்பாக உள்ளது.

?எனது முதல் மனைவி இறந்துவிட்டாள்.  ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். எனது மாமனார் மாமியாரிடம் அவன் வளர்கிறான். அடிக்கடி இறந்த மனைவி கனவில் வருகிறாள். என்னுடைய பெற்றோர் எனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். என்னுடைய ஜாதகத்தை தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். ஒரு விதவை பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க ஆசைப்
படுகிறேன். என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து பலன் கூறவும்.
 - எம். என். சென்னை.

நீங்கள் பிறந்தது ஆனி மாதம், பூச நட்சத்திரம்,- கடக ராசி, தனுசு லக்னம் - லக்ன பாதசாரம்: மூலம் 1.  உங்களுக்கு தற்போது சுக்கிர திசையில் சனி புத்தி நடக்கிறது. உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு தற்போது இரண்டாம் திருமணம் செய்யக்கூடிய பாக்யம் வந்திருக்கிறது. தாராளமான முறையில் உங்கள் ஜாதகப்படி இரண்டாம் திருமணம் செய்யலாம். ஓர் விதவைப் பெண்ணை மறுமணம் செய்வதற்கு நீங்கள் எடுத்த முடிவு சரியானது. உங்கள் மனதிற்கேற்றாற்போல் கண்டிப்பாக இந்த இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். மேலும்,  உங்கள் மகனை உங்களுடன் வைத்துக்கொள்ளலாம். ஒருமுறை இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்துவிட்டு வரவும்.

?எனது மகன் டிப்ளமோ முடித்துள்ளான். இதுவரை வேலை சரியாக அமையவில்லை. நாங்கள் பரம்பரையாக தொழில் செய்து வரும் குடும்பம். எனது தந்தை 2002 ல் காலமாகிவிட்டார். அதிலிருந்து வீட்டில் நிம்மதி இல்லை. மேலும், தொழில் என்று சொன்னால் எவரும் பெண் கொடுக்கவும் மறுக்கிறார்கள். வீடே போர்க்களமாக உள்ளது. தெய்வ கட்டுக்கள் எதுவும் இருக்கிறதா என்று கூறவும். எங்களுக்கு ஒரு வழி கூறவும்.
 - எம். ஆர். திருச்சி

உங்கள் மகன் பிறந்தது பங்குனி மாதம் - சதயம் நட்சத்திரம் -  கும்ப ராசி - சிம்ம லக்னம் - லக்ன பாதசாரம்: மகம் 3 ல் ஜனித்துள்ளார். தற்போது அவருக்கு சனி திசையில் புதன் புத்தி நடக்கிறது. உங்களுக்கு பிரஸ்னம் பார்க்கும்போது வந்த லக்னம் கன்னி. உங்கள் வீட்டில் உடனடியாக சண்டி ஹோமம் செய்யவும்.

உங்கள் மகனுக்கு திருமணம் 2021 - நவம்பருக்கு மேல் நடைபெறும். வரும் பெண் சொந்தமில்லை. அசல். ஒரே பெண்ணாக இருக்க மாட்டாள். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சந்தாண பாக்கியம் நன்றாக உள்ளது. உங்கள் மகன் ஜாதகப்படி அவர் வேலைக்குச் செல்வதை விட தொழில் செய்வது சிறந்தது. வரக்கூடிய பெண் கிழக்கு - தெற்கு திசையில் இருந்து வருவாள். உங்கள் குடும்பத்திற்கு குலதெய்வ கட்டு, தெய்வ கட்டு என்பதெல்லாம் இல்லை. தைரியமாக இருக்கவும்.

?எனது வாழ்க்கையில் இதுவரை நான் ஆசைப்பட்டது எதுவுமே தட்டிக்கழித்து வேறு பாதையில் செல்கிறது. சிறுவயதில் மருத்துவம் படிக்க நினைத்தேன். ஆனால் தற்போது பொறியியல் துறையில் மாஸ்டர் டிகிரி முடித்துள்ளேன். எனது வாழ்க்கையில் யு.பி.எஸ்.சி தேர்வின் மூலமாக ஆட்சி அதிகாரமிக்க பதவிக்கு வருவேனா? அல்லது ஆராய்ச்சி படிப்பில் வெற்றி பெறுவேனா? என்பதை பிரஸ்னம் பார்த்து கூறவும்.
 - டி.பி. பாலாஜி. சென்னை.

பாலாஜி, உங்கள் ஜாதகப்படி நீங்கள் பிறந்தது மாசி மாதம் - அவிட்டம் நட்சத்திரம் - கும்ப ராசி - கன்னி லக்னம் - லக்ன பாதசாரம்: சித்திரை 1.  தற்போது உங்களுக்கு குரு திசையில் சனி புத்தி நடக்கிறது. பிரஸ்னம் பார்த்ததில் சில தோஷங்கள் இருப்பது தெரிகிறது. உடனடியாக இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்யவும். மேலும் வீட்டில் நவக்கிரக சாந்தி ஹோமம் மற்றும் சர்வதேவதா ஹோமம் செய்யவும். உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பு வெற்றி அடையும். அரசாங்க தேர்வுகள் பலன் அளித்தாலும் அதனை விட ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பு நன்மையைக் கொடுக்கும். உங்களுக்கு இந்த வருடம் ஐப்பசி மாதத்திற்கு பிறகு நல்ல மாற்றங்கள் வந்து சேரும்.

?இதில் எனது மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். மேல்நிலைக்கல்வி முடியும் வரை நன்றாகவும், ஒழுங்காகவும் படித்து வந்தான். இன்ஜினியரிங் சேர்ந்ததும் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு படிப்பினை கெடுத்துக் கொண்டான். இனி வரும் காலத்தில் அவனுக்கு தொழில் வைத்துக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நன்றாக நடக்குமா? திருமணம் எப்போது. பொருந்தக்கூடிய நட்சத்திரங்கள் எவை?
- பிரபாகர். சிவகங்கை.

உங்கள் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் நீங்கள் எழுதி உள்ள விஷயங்களை முழுவதும் படித்தேன். ஒரு பொறுப்புள்ள தந்தையாக நீங்கள் பேசியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மகன் பிறந்தது மார்கழி மாதம் - சதயம் நட்சத்திரம் - கும்ப ராசி - துலா லக்னம் - லக்ன பாதசாரம்: விசாகம் 3. தற்போது உங்கள் மகனுக்கு சனி திசையில் சந்திர புத்தி நடக்கிறது. உங்கள் மகன் ஜாதகப்படி சில தோஷங்கள் இருக்கிறது. முதலில் அருகில் இருக்கும் ஏதேனும் ஓர் ஆலயத்தில் நாகபிரதிஷ்டை செய்யவும். அதன்பின் தொடர்ந்து மூன்று அமாவாசை அன்னதானம் செய்யவும். கண்டிப்பாக தொழில் விருத்தி உண்டு. மகனின் நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். திருமணம் அடுத்த ஒரு வருடத்திற்குள் நிச்சயமாக முடியும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்