SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளைப் பார்த்து விதையிடு கோளை பார்த்துப் பயிரிடு

2021-08-03@ 16:55:30

ஜோதிடம் என்பது காலக்கணிதம் காலம்தான் ஒரு விவசாயின் விவசாயச்  செயல்களை நிர்ணயிக்கிறது. காலம் தவறினால் பயிரும் தவறி விடுகிறது. எனவே விவசாயி காலத்தை அறிந்து பயிர் செய்ய வேண்டும் ஜோதிடத்தின் அடிப்படையான இரண்டு ஒளிக்   கிரகங்கள் சூரியனும் சந்திரனும். இவைகள் பலமாக இருந்தால் விவசாயத்தில் நல்ல லாபத்தை அடையலாம். மற்ற கோள்கள் பரிவார தேவதைகளைப் போல அருள் தரும்.  

ஆடிப்பட்டம் தேடி விதை

சூரியன் சந்திரனுடைய வீடான கடகத்தில் பிரவேசிக்கும் மாதமே ஆடி மாதம். எனவே விவசாயத்துக்கு முக்கியமானது ஆடி மாதம். ஆடி மாதத்தில் சூரியன் நீர் ராசியான சந்திர ராசியில்  பிரகாசிக்கும் நேரத்தில் தான் ஆடிப்பெருக்கு என்ற நீர்நிலைகளில் பெருக்கு ஏற்படுகிறது.  இந்த மாதத்தில் விதைக்க வேண்டும் என்பதால் ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொன்னார்கள். ஆடியில் விதைத்தால்தான் ஐப்பசியில் மழை வரும். தையில் அறுவடை செய்யலாம். ராசிகளில் மேஷ ராசி குறுங்காடுகளைக் காட்டுகிறது.

ஜீவன ராசிகளாக இந்த ராசிகள் வந்தால்

ரிஷபம் வயல்வெளிகளைக் காட்டுகிறது. கன்னி ராசி பூஞ்சோலைகளைக் காட்டுகிறது. மீன ராசி கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளைக்  காட்டுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் இந்த ராசிகள் ஜீவன ராசிகளாக வந்தால் அவர்கள் அந்த ராசிக்குரிய தொழிலைச்  செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற கிரக நிலைகள் இந்த வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன.

பயிர்களுக்கு நோய் வராமல் காக்கின்றாள் மகமாயி

பயிர்களுக்கு உயிர்ச்சத்து நீர்தான். அதுவும் மழைநீரை அமிர்த தாரை என்று சொல்வார்கள். நேரடியாக தண்ணீர் ஊற்றி ஒரு செடி வளர்வதை விட, மழையில் நனைந்து அந்தச் செடி வளருகின்ற பொழுது தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தை போல வீரியம் அதிகமாக இருக்கும்.  மழைக்கு அதிபதி வருணன். வருணனாக இருந்தாலும் கூட அவனை ஆணையிட்டு மழை பொழிய வைக்கும்  சக்தி அம்மனுக்கு உண்டு என்பதால், ஆடி மாதத்திலே அம்மனுக்கு கூழ் படைத்து,  பால் அபிஷேகம் செய்து, முளைப்பாரி எடுத்து வணங்குகிறார்கள். உயிர்களுக்கு நோய் வராமல் காப்பது போலவே பயிர்களுக்கு நோய் வராமல் காக்கின்றாள் மகமாயி என்பது எளிய விவசாயிகளின் நம்பிக்கை.

நெல் அளத்தல்

தங்கள் அருகில் உள்ள கோயிலுக்கு விவசாயத்தின் முதல் விளைச்சலின் சில மணிகளை அளந்து கொடுத்துவிட்டு வருவார்கள். இதற்கு நெல் அளத்தல் என்று பெயர். பல கோயில்களில் இதற்கென்றே தனி பகுதிகள் உண்டு. ரங்கத்திலும் திருமாலிருஞ்சோலை போன்ற கோயில்களிலும் மக்கள் தங்கள் விவசாய பொருள்களைக்  கொண்டு வந்து கோயிலில் காணிக்கையாகச் செலுத்துவதற்கு தனி இடம் உண்டு.

விதைப்பை சரியாக இருக்க கலப்பை

விவசாயிகளுக்கு மிக முக்கியமான விஷயம் கலப்பை. கலப்பையால் மண்ணை உழுதால்தான் விதைப்பை சரியாக இருக்கும். இந்த கலப்பையை ஆயுதமாகக் கொண்டவர் பலராமர். எனவே தெய்வங்களுக்கும் விவசாய கருவிகளைக் கொடுத்து வணங்கியவர்கள் நம் முன்னோர்கள். பலராமன் சங்ககாலத்திலேயே மிக அதிகமாக போற்றப்பட்டவர். நம்பி
மூத்தபிரான் என்று அவருக்குப் பெயர்.

நெல் நனையாது காத்த இறைவன்

முன்னொரு காலத்தில் தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார் அவர். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சந்நதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாதபடி இருப் பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறை வனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். ஊரும் திருநெல்வேலி என்று அழைக்கலாயிற்று. தானியங்களை இன்று வரை உலக உயிர்களுக்காக இறைவன் காத்துத் தருகிறான் என்பதை உணர்த்தும் கதை இது.

நாள் பார்த்து விதை போடு கோள்  பார்த்து எருவிடு

விவசாயம் செய்வதற்கு நாளும் கோளும் முக்கியம். எனவே பஞ்சாங்கம் பார்த்து பயிர் செய்யும் கலையை மனிதகுலம் தெரிந்து வைத்திருந்தது.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஏற்ற நாட்கள் இவை

1. உழவுத் தொழில் ஆரம்பிக்க ஏற்ற நாட்கள்  

ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், மூலம், பூராடம், உத்திராடம், ரேவதி ஆகிய  நட்சத்திரங்கள் நன்று. திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி, முதலிய திதிகளும், ரிஷபம், மிதுனம், கடகம், மகரம், மீனம் முதலிய லக்னங்கள் ஏற்றது.

2. எரு இட ஏற்ற நாட்கள்  

திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம்,  உத்திராடம், உத்திரட்டாதி, முதலிய நட்சத்திரங்கள். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி முதலிய திதிகள். ரிஷபம், மிதுனம், கடகம், மகரம், மீனம் முதலிய லக்னங்கள்  நல்லது. பூமிகாரகனுக்கு உரிய நாளான செவ்வாய்க்கிழமை நல்லது.

3. விதை விதைக்க ஏற்ற நாட்கள்  

ரோகிணி, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, முதலிய நட்சத்திர தினங்கள் ஏற்றவை. திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி உத்தமம். ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் ஏற்ற  லக்னங்கள். எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். பாதாள யோகினி கூடாது. ஜென்ம நட்சத்திரம் கூடாது.

4. கதிர் அறுக்க ஏற்ற நாட்கள்  

பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், விசாகம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, முதலிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, பௌர்ணமி முதலிய திதிகளும் நன்று. ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் முதலிய லக்னங்கள் அருமை. சனிக்கிழமை விசேஷம். சுமங்கலி அல்லது கன்னிப்பெண்ணை முன்னிட்டுக் கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

 5. தானியம் களஞ்சியத்தில் வைப்பதற்கு ஏற்ற நாட்கள்  

பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி முதலிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி திதிகளும் நன்று. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்னங்கள் நன்று.

6. தானியங்களை செலவிட ஏற்ற நாட்கள்  

அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி முதலிய நட்சத்திரங்கள் நன்று. துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் நன்று. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் முதலிய லக்னங்கள் நன்று. சனிக்கிழமை நல்ல நாள். வெள்ளிக்கிழமை கூடாது.

7. மாடு முதலான கால்நடைகளை வாங்கவும் கொடுக்கவும் ஏற்ற நாட்கள்

விசாகம், அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் நன்று. துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பௌர்ணமி ஆகிய திதிகள் நன்று. சிம்மம், தனுசு, மகரம் ஆகிய லக்னங்கள் நன்று. எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். மாடுகளை கொடுக்கும்போது புதன்கிழமை, வெள்ளிக்கிழமை கொடுக்கக் கூடாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்