SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாழ்மையுடன் வாழ்வோம்!

2021-07-27@ 15:01:39

இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இஸ்ரவேல் தேசம் கி.பி. 1948-ஆம் ஆண்டு, புதிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது, இந்நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்றவர்தான் டேவிட் பென் கூரியன் என்பவராவார். இவர் ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்துக்கு வரும் போதெல்லாம் தனது கரங்களில் பழைய சூட்கேஸ் ஒன்றையும் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரது மனதிலும் பிரதமர் ஏன் இந்த சூட்கேஸை ஒவ்வொரு முறையும் அவைக்கு எடுத்து வருகின்றார் என்ற கேள்வி இருந்தது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் இவர் பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லுகிறார் என்று டேவிட் பென் கூரியன்மீது குற்றம் சாட்டி வந்தனர். ஒருமுறை எதிர்கட்சியினர், பிரதமர் அவர்கள் தனது வீட்டிற்கு செல்வதற்கு முன் சூட்கேஸை திறந்து காட்ட வேண்டுமென்று அமளியில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி, டேவிட் பென் கூரியன் அவர்கள் தனது சூட்கேஸை திறந்து காண்பித்தார். அதற்குள், உடைந்து துண்டு, துண்டாக இருந்த தடி (கம்பு) ஒன்றும், பழைய கோட் (மேலாடை) ஒன்றும் இருந்தது.

ஏன் இந்தப் பொருட்களை ஒவ்வொரு முறையும் அவைக்கு வரும்போது எடுத்து வருகிறீர்கள் என்று அவையிலிருந்தோர் கேள்வி எழுப்பினர். அப்பொழுது அவர் பின்வருமாறு பதிலளித்தார். நான் சிறுவனாக இருந்தபோது, ஆடுகளை மேய்த்து வந்தேன். கடவுள் அருள்கூர்ந்து எனக்கு இந்த உயர்வைக் கொடுத்தார். ஒருபோதும் எனது பழைய நிலையை நான் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எப்பொழுதும் எனது கரங்களிலே இந்த பொருட்களை நான் எடுத்து வருகிறேன்; இந்த சூட்கேஸ் என்னோடு இருப்பதுபோல, என்னுடைய பழைய நினைவுகளும் என்னோடு இருக்கின்றன என்று கூறினார். பூர்வ நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார் (உபா.32:7) என்று திருமறை கூறுவதற்கேற்ப நாம் அனைவரும் நமது இளமைப் பருவக் காலத்தை எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம்.

1948 ஆம் ஆண்டில் மீண்டும் உருவான புதிய இஸ்ரவேல் தேசத்தின் பிரதமர் டேவிட் பென் கூரியன் போல, கி.மு.10ம் நூற்றாண்டில் இருந்த இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்த அரசர் டேவிட்டும் (தாவீது ராஜா) ஆடு மேய்க்கும் தொழில் செய்தவர்தான். எனினும் கடவுள் அவரை ஆசீர்வதித்து அரசராக உயர்த்தினார். இஸ்ரவேல் தேசத்தை அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று திருமறையில் காண்கிறோம். அவரும் தனது முந்தின நிலையை எப்போதும் நினைவு கூர்ந்தவராக வாழ்ந்தார். எனவே, தான் ஒருமுறை தேவனாகிய கர்த்தாவே தேவரீர் என்னை இது வரைக்கும் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (1 நாளா.17:16) என்று கடவுளுக்கு நன்றி கூறினார். இவ்விதம் தாழ்மையோடு வாழ்ந்ததினால் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ்ந்த பல இறைமனிதர்களைக் குறித்து நாம் திருமறையில் காண்கிறோம்.

அன்பானோரே! தாழ்மை என்னும் குணம் கொண்டோரை கடவுள் அதிகம் நேசிக்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். (நீதி.3 :34); மேன்மைக்கு முன்னதானது தாழ்மை (நீதி.15:33) தாழ்மைக்கும், கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐஸ்வரியமும், மகிமையும், ஜீவனுமாம் (நீதி. 22:4), மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் (நீதி.29:23) என்று தாழ்மையாக வாழ்வதினால் நாம் பெற்றுக் கொள்ளும் மேன்மை களையும் ஆசீர்வாதங்களையும் குறித்து திருமறை கூறுகிறது.ஆகவே நாமும், நமது பூர்வ நாட்களை நினைவு கூருவோம்! தாழ்மை என்னும் சிந்தையைத் தரித்திருப்போம்! கடவுள் அருளும் கணக்கில்லா நன்மைகளை பெற்றிடுவோம் !!
                                                                                                                                                  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்