SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணையற்ற தியாகத்திற்கு ஒரு திருநாள்!

2021-07-20@ 17:15:09

தியாகத் திருநாள் என்றால் யாருடைய தியாகம்? யாருக்காகச் செய்த தியாகம்? அதை ஏன் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு விடை,  இறைத் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.இறைவனுக்காக அவர் செய்த தியாகங்கள் ஒன்றா இரண்டா? தியாகத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்தாம் இப்ராஹீம் நபி. ஓரிறைக் கொள்கையை உலக மக்களுக்குப் போதிப்பதற்காக அவர் வீறுகொண்டு எழுந்தபோது அவருடைய வீடு எதிர்த்தது. சமூகம் எதிர்த்தது. ஊர் எதிர்த்தது. உறவு எதிர்த்தது. ஊரின் பெரிய மதகுருவான அவருடைய தந்தையே கடுமையாக எதிர்த்தார்.

“நீ உன் கொள்கையைக் கைவிடாவிட்டால் கல்லால் அடித்துக் கொல்வேன்” என்றார் தந்தை. ஆயினும் தந்தை மீது துளியும் வருத்தம் கொள்ளாத இப்ராஹீம் நபி, தம் தந்தையின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்,இது முதல் தியாகம்.“இறைவன் ஒருவனே, அவனை மட்டுமே வழிபடுங்கள்” எனும் கொள்கையை இப்ராஹீம் என்பவர் பரப்புரை செய்கிறார்’’ என்பதை அறிந்த மன்னன் நம்ரூத் வெகுண்டெழுந்தான். “மன்னனாகிய என்னையே மக்கள் தெய்வமாக வழிபட்டு வரும் சூழலில் ஏகத்துவத்தைப் போதிக்கும் இப்ராஹீமை நெருப்பில் வீசுங்கள்” என்று ஆணையிட்டான் மன்னன் நம்ரூத்.இது இரண்டாவது சோதனை.தீக்குண்டம் தயார் செய்யப்பட்டது. இப்ராஹீம் அதில் வீசி எறியப்பட்டார். ஆனால், இறைவனின் திருவருளால் அந்தத் தீக்குண்டம் சொர்க்கச் சோலையாக மாறி அவரைக் குளிர்வித்தது.

மூன்றாவதாகப் பெருஞ்சோதனை ஒன்று காத்திருந்தது. முதிய வயதில் தமக்குப் பிறந்த அன்பு மகன் இஸ்மாயீல் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார் இப்ராஹீம். ஆனால், இறைவனுக்காக மகனை அறுத்துப் பலிகொடுப்பதுபோல் கனவு கண்டார். “இறைநேசத்தை விடவா மகனின் நேசம் உயர்ந்தது? என் மகனின் உயிரும் இறைவனுக்கே” என்று அன்பு மகனைப் பலியிடவும் துணிந்து விட்டார்.
தடுத்தாட்கொண்டான் இறைவன். “மகனைப் பலியிட வேண்டாம், அதற்குப் பதிலாக இதோ இந்த ஆட்டைப் பலியிடுக” என்று ஆணையிட்டான் இறைவன். (அந்தத் தியாகத்தை நினைவுகூரும் வகையில்தான் இன்றும் பக்ரீத் பண்டிகையின் போது பிராணி பலியிடப்படுகிறது)அதற்குப் பிறகு தம் குடும்பத்துடன் ஆள் அரவமற்ற மக்கா எனும் இடத்திற்கு வந்தார் இப்ராஹீம். கஅபா ஆலயத்தை அவரும் அவருடைய மகன் இஸ்மாயீலும்  புதுப்பித்துக் கட்டினார்கள். அந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதுதான் “ஹஜ்” எனும் புனிதப் பயணம்.

இறைத்தூதர் இப்ராஹீமின் ஈடு இணையற்ற தியாக வாழ்வை நினைவுகூரும் உன்னதமான திருநாள்தான் “தியாகத் திருநாள்” எனும் ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகை.இந்த நன்னாளில் “நம் தொழுகை, நம் தியாகம், நம் வாழ்வு, நம் மரணம் அனைத்தும் இறைவனுக்காகவே” என்று நாமும் உறுதி கொண்டு தியாகத் திருநாளைக் கொண்டாடுவோம்.
வாசகர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.
- சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்