SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இழந்ததை மீட்டுத் தரும் சயன ஏகாதசி

2021-07-20@ 17:13:32

நம்முடைய இந்து சமயத்தில் பற்பல விரதங்கள் உண்டு. ஏதாவது ஒரு விரதம், பாரத தேசம் முழுமைக்கும், எல்லாச் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாலும் அனேகமாக ஏகமனதாகக் கடைபிடிக்கப்படுகிறது என்றால் அது ஏகாதசி விரதம் மட்டுமே. பெண்களுக்கும் இது மிக உயர்ந்த பலனைத் தருகின்ற விரதம். காரணம் ஏகாதசி என்பதே  ஒரு பெண்ணின் பெயர்தான். ஏகாதசி அனுஷ்டானம் செய்பவர்களில் சில பேர் கேட்கின்ற கேள்வி இது. ஏன் ஏகாதசி என்று இரண்டு நாட்கள் பஞ்சாங்கத்தில் போடப்பட்டு இருக்கின்றன? எந்த நாளை ஏகாதசி விரதத்திற்கு உரிய நாளாக எடுத்துக்கொள்வது?
சிராத்த திதியாக ஏகாதசி பஞ்சாங்கத்தில் போட்டிருந்தால், அன்று சிராத்த திதியாக அனுஷ்டிக்கலாம். ஆனால், தசமி கலந்திருந்தால் அடுத்த நாள்தான் ஏகாதசி விரதத்திற்குத் தேர்ந்தெடுப்பார்கள். இதைப்பற்றிய பிரமாணங்கள்.

தசமி கலந்த ஏகாதசி அசுரப் ப்ரீதி என்பதை சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த விரதம் பகவானுக்குப் பிடிக்காது என்பது பாத்ம புராணம். தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளைத் தரும் என்பது பிரம்ம வைவர்த்தம் தரும் பிரமாணம்.கருட புராணம், விரதங்களைப்பற்றி குறிப்பிடும்போது, உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருப்பின், ஏகாதசியை விட்டுவிட வேண்டும் என்கிறது.சூரியோதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது. அன்று துவாதசி வந்து விடுகிறதே என்றாலும்கூட, அதைப்பற்றிப் பிரச்னை இல்லை. அன்று ஒரு நாழிகை நேரம் ஏகாதசி இருந்தாலும் போதும். ஆனால், தசமி கலந்த ஏகாதசி ஸ்ரீ வைஷ்ணவ அனுஷ்டானத்தில் பின்பற்றுவதில்லை.இந்த அனுஷ்டான வேறுபாட்டினைக் கவனத்தில் கொண்டு, உங்களுக்கு உரிய அனுஷ்டானம் எது என்பதை நீங்கள் உங்கள் குடும்ப ஆச்சாரியரிடம் கேட்கலாம். இதைக் குறித்து நீங்கள் பெரியோர்களிடம் விளக்கம் பெறுவது நல்லது.
இப்பொழுது வருகின்ற ஏகாதசி சிறப்பைப் பற்றியும் பார்த்து விடுவோம். மாந்தாதா என்ற ஒரு அரசன் நன்றாக ஆண்டு கொண்டிருந்தான்.

மக்கள் எந்தவிதக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை மழை பொய்த்துப் போனது. பயிர்கள் காய்ந்து வாடின. கால்நடைகள் தண்ணீருக்குத் தவித்தன. மக்கள் உணவின்றி கொடும் பஞ்சத்திற்கு ஆளானார்கள். இதுவரையில் செழிப்போடு இருந்த இந்த நாடு, ஏன் இப்பொழுது வறட்சியால் தவித்துக் கிடக்கிறது என்பதை யோசித்துப் பார்த்தான் அரசன்.என்னதான் முயற்சி செய்தாலும், இயற்கையான முறையில் மழையை எப்படி வரவழைக்க முடியும்? மன்னன் முனிவர்களிடம் கேட்டு பரிகாரம் பெறுவோம் என்று அவர்களைச் சந்திக்கக் காட்டுக்குச் சென்றான். ஆங்கீரஸ முனிவர் என்ற முனிவரைச் சந்தித்தான்.மக்கள்படும் இன்னல்களை சொல்லி தீர்வு கேட்டான்.‘‘அரசனே... உன்னுடைய நாட்டில் ஒரே ஒருவன் தீமையே உருவானவனாக  இருக்கிறான். ஒழுக்கம் கெட்டவனாக  இருக்கிறான். பிறரைக் கெடுப்பவனாக இருக்கின்றான்.’’

‘‘ஒரே ஒரு தீயவன் இருப்பதால் என்ன குறை?’’ என்று மன்னன் கேட்க, ஆங்கிரஸ முனிவர் சிரித்தார்.‘‘ஒரு குடம் பால் இருக்கிறது அதில் ஒரே ஒரு துளி விஷம். இத்தனைப் பாலில் ஒரே ஒரு துளி மட்டும்தானே விஷம் என்று அந்தப் பாலை ஏற்பாயா? ஏராளமான நல்லவர்கள் இருக்கக்கூடிய நாட்டிலே, பாலில் கலந்து விட்ட விஷம்போல, ஒருவன் கெட்டவனாக இருக்கிறான். மற்றவர்களும் கெடும்முன் அவனை
அப்புறப்படுத்து.’’ மன்னன் ஒரு கணம் அப்படியே திகைத்தான். ‘‘மன்னிக்க வேண்டும்! நீங்கள் ‘‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்” என்று சொன்னீர்கள். அடியேன் மனத்தில் “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்ற வாசகம் நினைவுக்கு வருகின்றது. ஒரு நல்லவன் இருந்தாலே மழை பெய்ய வேண்டுமே! என் நாட்டிலேயே இத்தனை நல்லவர்கள் இருந்தும் ஏன் மழை பொழியவில்லை?

‘‘நீங்கள் சொன்ன கெட்டவனை கொன்றுவிட எனக்கு மனமில்லை. ஒருவனைக் கொன்று மற்றவர்கள் வாழ நினைப்பது எனக்கு எவ்விதத்திலும் சரியாகத் தோன்றவில்லை’’ ஆங்கிரஸ முனிவர் மன்னனைக் கருணையோடு பார்த்தார்.‘‘உன்னுடைய அன்பு உள்ளத்திற்கு நாட்டிலே நிச்சயம் மறுபடியும் மழை பெய்யும்.  நான் ஒரு விரதம் சொல்லுகிறேன். ஆடி வளர்பிறை ஏகாதசியை அனுசரி.இந்த ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். வழக்கமாக ஏகாதசியை விட சக்தி வாய்ந்தது. காரணம் தேவர்களின் இரவு காலமாகிய தட்சிணாயனம் தொடங்கும் மாதத்தின் முதல் ஏகாதசி.”  மன்னன் விரதமிருந்து நல்வாழ்வை அடைந்தான்.இந்த ஏகாதசியால் எந்தச் செல்வமாக இருந்தாலும் சரி, இழந்தது எல்லாம் மறுபடியும் கிடைத்துவிடும். சந்நியாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கக் கூடிய காலகட்டத்தில்  வருகின்ற முதல் ஏகாதசி.

ஸ்ரீ மன் நாராயணன் ஆடி மாதம் பௌர்ணமி திதியில் ஆரம்பித்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி வரையில் சயனித்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த ஏகாதசியை சயன ஏகாதசி என்று சொல்லுகின்றார்கள். பெருமாள் சயனம் கொள்ளும் ஏகாதசியில் நாம் சயனம் கொள்ளாமல் விரதம் இருப்பது சிறப்பு. பித்தளை, வெள்ளியால் செய்யப்பட்ட  விளக்கை, ஒரு தட்டின் நடுவில் வைத்து விளக்கில் நெய் ஊற்றி, திரியிட்டு, தீபம் ஏற்றி, வேதம் கற்றவருக்கு தானமாக தந்தால் ஞானமும் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.வழக்கம்போல முதல் நாளாகிய தசமி திதி அன்று இரவு உணவை தவிர்த்து விடவேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பெருமாளை வணங்க வேண்டும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலை திருமால் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வலம் வரவேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக ஏகாதசியின் முழுப் பலனையும் நாம் அடைய முடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்