SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள்: கூட்டுத் தொழில் ஏன் சரிந்தது? எப்படி நிமிர்ந்தது?

2021-07-20@ 14:17:49

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

முப்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு. நான் வழக்கமாக ஒரு அச்சகத்தில் என்னுடைய புத்தகங்களை அச்சடித்துக் கொண்டிருப்பேன். அந்த அச்சகம் ஒரு பழைய
கட்டிடத்தில் போக்கியத்திற்கு இடம் பிடித்து வைக்கப்பட்டிருந்தது. தாராளமான பழைய வீடு. அச்சக உரிமையாளர் மிகவும் நல்லவர். அவர் தனது நண்பருடன் இணைந்து கூட்டுத் தொழிலாக அச்சகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அச்சகத்தின் ஒரு பகுதியில் அவர் குடும்பம் இருந்தது. அவருடைய மனைவியும் அச்சகத் தொழிலில் பைண்டிங் போன்ற சில வேலைகளைச் செய்வார். அச்சக உரிமையாளர் இல்லாதபொழுது வருபவர்களுக்குப் பதில் சொல்லுவார். நிர்வாகத்தையும் நடத்திக் கொள்வார்.

நல்ல வாடிக்கையாளர்கள் அவருக்கு இருந்தனர். கையால் அச்சு கோர்ப்பதற்காக எட்டுப் பெண்கள், மெஷின் ஆபரேட்டர்கள் இரண்டு பேர், இரண்டு பைண்டர்கள், ப்ரூஃப் ரீடர் ஒருவர் என்று அமர்க்களமாக ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருநாள் சோகமாய் உட்கார்ந்திருந்தார். என்ன காரணம் என்று கேட்டேன். அவர் சொல்லவில்லை. ஆனால், அடுத்து ஓரிரு மாதங்களில் அவர் வியாபாரம் அடி வாங்க ஆரம்பித்தது. நன்றாகப் பேசுபவர் கோபப்பட்டார். எரிந்து விழுந்தார். தப்பு தப்பாக கணக்கு போட்டார்.

ஆட்களின் ஒத்துழைப்பும் குறைந்தது. மெஷின் மேன் அடிக்கடி லீவு போட ஆரம்பித்தார். ஒரு பெண் தொழிலாளி கட்டிங் மெஷினில் வேலை செய்யும்போது விரலை வெட்டிக் கொண்டாள். அவளைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்து செலவாகி விட்டது. அவள் கணவன், உரிமையாளரோடு சண்டை பிடித்து, இரண்டாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு என்று ஆட்களை கூட்டி வந்து வாங்கிக் கொண்டான்.

மூன்று பெண்கள் திடீரென்று வேலையை விட்டு நின்று விட்டார்கள். வேறு அச்சகத்தில் சேர்ந்து விட்டார்கள். வேலை சுணக்கம் ஆகி எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டி வந்தது.
உரிமையாளர் இன்னும் டென்ஷன் ஆனார். எரிந்து விழ ஆரம்பித்தார். அச்சகமும் வீடும் ஒரே இடத்தில இருந்ததால் கோபத்தை மனைவியிடம் காட்ட ஆரம்பித்தார். வீட்டில் கணவன்-மனைவி சண்டை. வியாபாரம் சரியாக ஆகவில்லை.

பங்குதார நண்பரும் அவ்வப்பொழுது நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில் என்னுடைய புத்தகப்பணிகளும் தாமதமாகியது.நான் ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

‘‘என்ன தான் விஷயம்? இரண்டு மாதங்களாக ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’’
அவர் சொன்னார் .
‘‘ஒரு நாள் நம்முடைய அச்சகத்திற்கு ஒரு ஜோதிடர் வந்திருந்தார். அவரிடம் சாதாரணமாக என்னுடைய ஜாதகத்தைப்பற்றி தெரிந்து கொள்ளக் காட்டினேன். அவர் பார்த்து கணக்கு போட்டு விட்டு, உங்களுக்கு நேரம் சரியில்லை. அச்சகம் கையை விட்டுப் போய்விடும். இப்பொழுதே விற்றுவிட்டால் நல்லது. இல்லை இன்னும் நஷ்டமாகும் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
‘‘ம்... நீங்கள் ஏன் தேவையில்லாமல் உங்கள் ஜாதகத்தை காட்டினீர்கள்?’’
‘‘விதி...’’
‘‘சரி ..சொல்லுங்கள்.’’
‘‘அதற்குத் தகுந்த மாதிரிதான் இரண்டு மாதமாகக் காரியங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன. தொட்டது எதுவும் விளங்கவில்லை. நீங்கள் தான் பார்க்கிறீர்களே.’’
‘‘சரி..உங்கள் ஜாதகம் நான் பார்க்கலாமா?”
‘‘நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களா?’’
‘‘பார்ப்பேன்.’’ என்றேன்.

ஜாதகம் குறித்து சில உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தேன். கிரகங்களின் செயல்பாடுகள் குறித்து எனக்கு சில சிந்தனைகள் இருந்தன. அதை உறுதி செய்துகொள்ள அவ்வப்போது இப்படி தெரிந்தவர்கள் ஜாதகத்தைப் பார்வையிடுவது உண்டு. அவர் சொன்னார். “உங்களுக்கு ஜாதகம் பார்க்கத் தெரியும் என்று தெரிந்திருந்தால் உங்களிடம் காட்டியிருப்பேன்?’’ என்று சொல்லி தன் ஜாதக புத்தகத்தைக் கொண்டு வந்தார். ஜோதிடர் எழுதிய கணக்குக் குறிப்புகளைக் காட்டினார்.

ஜாதக அமைப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், சரியான நேரம் வராதவரை அது எத்தனை மோசமான ஜாதகமாக இருந்தாலும் வெளிப்படாது. புற்றிலுள்ள பாம்புதான். அதற்கான நேரம் வந்து விட்டால் அது சீறி வந்து வேலை செய்ய ஆரம்பித்து விடும். ஜாதகத்தில் கிரகங்கள் வேலை செய்யும் நேரம்தான் முக்கியம். எந்த ஜாதகமாக இருந்தாலும் இந்தக் காலத்தை குறித்து ஓரளவு ஊகித்து விட்டால், நாம் எச்சரிக்கை ஆகி விடலாம். ஒரு ஜாதகத்தில் கிரக அமைப்புகளைப் பார்த்தவுடன், நடக்கின்ற திசையைத்தான் பார்க்க வேண்டும்.

என் கண்ணில் பட்டது ஜோதிடர் கணக்குப்படி, நடப்பு திசை சந்திரதசை என்று போட்டிருந்தார். இதற்குமுன் சூரிய திசை. அதற்கு முன் சுக்கிர திசை. அவர் சுக்கிர திசையின் கடைசிப்
பகுதியில் தான் கூட்டுத் தொழிலாக இந்த அச்சகத்தை ஆரம்பித்திருந்தார். மகர லக்னக்காரரான அவருக்கு மிதுனத்தில் சந்திரனும் ராகுவும் இணைந்திருந்தார்கள். சுக்கிரனும் சூரியனும் ரிஷபத்தில் இருந்தார்கள். சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும், பத்தாம் இடம் ஆகிய தொழில் ஸ்தானத்துக்கும் உரியவர். ஐந்தாமிடத்தில் ஆட்சி பெற்றிருந்தார்.
அந்த சுக்கிரன் ரிஷபத்தில் சந்திரனுக்குரிய ரோகிணி நட்சத்திரத்தில் இருந்தார்.

சந்திரன் 7ஆம் இடத்துக்கு அதிபதி. இப்பொழுது 7, 10, ஐந்தாமிடங்களின்  தொடர்பு  லக்னாதிபதிக்கு ஏற்பட்டு விடுகிறது. ஏழாமிடம், பத்தாம் இடத் தொடர்பு மிக முக்கியமானது. அது கூட்டுத் தொழிலைக் குறிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அடுத்து சூரியன் அட்டமாதிபதி. அவன் ரிஷபத்தில் செவ்வாய்க்குரிய மிருகசீரிஷ நட்சத்திரத்தில் இருந்தான். செவ்வாய் 4, 11 க்கு அதிபதி. லாபஸ்தான சம்பந்தமும் கிடைத்து விடுகிறது. ஆனால், இப்பொழுது சந்திர திசை ஆரம்பித்தவுடன், பல விஷயங்கள் எதிர்மறையாகச் செயல்பட ஆரம்பித்து விட்டன. காரணம், சந்திரன் 7 க்கு உரியவன் அல்லவா. அவன் திசாநாதனாகி ஆறில் மறைவதுதான் பிரச்னையின் துவக்கம்.

அந்த இடம் கூட்டுத் தொழிலுக்கு விரய ஸ்தானமாக அமைவதும், சந்திரன் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தின் பிடியில்  இருப்பதும் கூடுதல் பலவீனங்கள்.ஏன் இந்தத் தொழில் இப்படித் தடைபடுகிறது என்பதற்கான பூர்வாங்கமாக காரணங்களாக கண்டுபிடித்துவிடலாம். இதில் ராகு சந்திரன்   சேர்க்கை  முக்கியமானது .சந்திரனோடு ராகுவோ கேதுவோ இணைந்தால்  அவர்கள் பெரும்பாலும் எளிதில் குழப்பம் அடைபவர்களாகவும், ஒரு விஷயத்தில் தீர்க்கமான முடிவு செய்ய முடியாதவர்களாகவும், பிறர் சொன்னால் தவிர சொந்தமாக ஒரு முடிவு எடுக்கத் தயங்குபவர்களாகவும், முடிவு எடுப்பதில் தாமதம் உடையவர்களாகவும், எதையும் பெரிதுபடுத்தி கற்பனையோடு சிந்திக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.

இதில் ஏழாம் அதிபதி சந்திரன் 6ல் மறைவு. காரணம், 7 கூட்டுத் தொழிலை மட்டும் குறிக்காமல் களத்திர ஸ்தானமும் என்பதால் மனைவியிடமும் சண்டை சச்சரவுகள்.ஆறில்  ராகு இருப்பது லட்சுமியோகம் எனப்படும் யோகத்தைக் கொடுக்கும். எனினும், அது ஏழாம் இடத்திற்கு  குழப்பத்தை அவ்வப்பொழுது ஏற்படுத்தவே செய்யும். கணவன்-மனைவி சிக்கல்கள் உண்டாகும். அதன் மூலமாக எதிராளிகளாகிய வாடிக்கையாளர்கள், நட்பு வட்டம் மற்றும் பங்குதாரர்களிடம் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதற்குத் தகுந்தாற்போல், ஒரு ஜோதிடர் வந்து, ‘‘நீங்கள் அச்சகத்தை விற்றுவிடுவது நல்லது’’ என்று சொன்ன எண்ணம் ஆழமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ஒருவர் எண்ணங்கள் அவ்வப்பொழுது கிரக நிலைக்குத் தகுந்தவாறு மாறும். அதற்கேற்ற சூழல்கள் அமையும். அதிலிருந்து மீண்டு வரவே ஜோதிடம். அதில் அமர்ந்து இன்னும் குழப்பமாகி அழிந்து விடுவதற்கு அல்ல ஜோதிடம்.சரி, ஜோதிடரீதியான பிரச்னை இருக்கட்டும். இதற்குத் தீர்வு என்ன? அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா? சந்திர திசை 10 வருடம் நடக்கும். அந்த பத்து வருடமும் ஒன்றும் செய்யாமல் வீட்டில் அமர்ந்து இருக்க வேண்டியதுதானா? இல்லை எங்கேயாவது அடிமைத்தொழில் செய்யப் போக
வேண்டியதுதானா?

அடிமைத் தொழில் செய்தாலும் இதே  பிரச்சனைதானே... மனக் குழப்பத்தோடு சொந்தத் தொழில் செய்தால் என்ன? அடிமைத் தொழில் செய்தால் என்ன? குடும்பம் நடத்தினால் என்ன? பிரச்னை பிரச்னை தானே! இங்கேதான் நாம் சிந்திக்க வேண்டும்.  “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, சந்திர திசை அதன் வேலையைச்
செய்கிறது. அப்படித்தான் செய்யும். ஆனால், “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.” (மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.) என்றும், “முயற்சி திருவினையாக்கும்” என்றும் தானே வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

அப்பொழுது நான் சில தீர்வுகளைச் சொன்னேன்

* சந்திரன் மனக்குழப்பம் தருகிறார். எனவே மனக் குழப்பத்தை விட்டு வெளியே வாருங்கள். நல்ல நண்பர்களிடம் பேசுங்கள். சுய குழப்பத்திலிருந்து வெளியே வாருங்கள்.

* குடும்பத்தில் மனைவியோடு நன்றாகப் பேசுங்கள். கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள். உங்கள் பங்குதாரர்களிடம் உங்கள் நிலையை நிதானமாக விளக்குங்கள்.

* வருகின்ற வாடிக்கையாளர்களிடம் எரிச்சலோடு தாறுமாறாகப் பேசுவதையும், கோபப்படு வதையும் விட்டுவிடுங்கள். அவர்கள்தான் நமது எஜமானர்கள்.

* அதிக வேலையும் திட்டமிடாமல் செய்யும் வேலையும் குழப்பத்தை உண்டாக்கும். வேலையை வரன்முறை செய்து வைத்துக் கொள்ளுங்கள். கூடுதல் கவனம் செலுத்தி உழையுங்கள். உணர்ச்சி வசப்படாமலும், அவசரப்படாமலும் முடிவு செய்யுங்கள். சட்சட்டென்று மனதை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

* இதற்கெல்லாம் மனப்பூர்வமாக தைரியம் பெற, பரிகாரமாக, ஒருமுறை சூரியனார் கோயிலுக்கும் திங்களூருக்கும் அல்லது நேரம் இருக்குமானால் ஸ்ரீரங்கம் சென்று வாருங்கள். அங்கு சந்திர புஷ்கரணி அருகே அமர்ந்து ஐந்து நிமிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

* பவுர்ணமியன்று சத்திய நாராயணா பூஜை செய்யுங்கள். கிரகங்களின் வேலையை நம்மால் தடுக்க முடியாது. மாற்றவும் முடியாது. அது அதன் போக்கில் செய்யட்டும். ஆனால், அது நம்மை பாதிக்காத அளவுக்கு நான் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்துகொண்டு, நம் தொழிலை ஜாக்கிரதையாக மேலே கொண்டுபோக முடியுமோ, அப்படி மேலே கொண்டுபோவதும், போகாததும் நம் கையில்தான் இருக்கிறது.

* அவர் ஓரளவு தெளிவு பெற்றார். இருந்தாலும் சந்திரதிசை அதற்குரிய வேலையைச் செய்தது. ஆயினும் அச்சகத்தை அவர் விற்கவில்லை. சுயபுத்தி முடிந்தவுடன் சந்திர திசை தன் வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. செவ்வாய் புத்தியில் உழைப்பும் திறமையும் அதிகரித்தது. ராகு புத்தியில் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது. சந்திர திசை அதன் ஆட்டத்தைக் காண்பிக்கவும், அவர் அதற்கேற்ப தன்னுடைய நடவடிக்கைகளையும் மனநிலையையும் மாற்றிக் கொண்டதால் அந்த கஷ்டமான சூழ்நிலையை விட்டு வெளிவர முடிந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்