SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நித்தம் நீரு தவம்

2021-07-19@ 15:36:30

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-80

வையம்  துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
பாடல் எண் - 52.

மழை வருவதை மேகம் கருப்பதால் அறியலாம். மாலை பொழுதை சூரியன் மறைவதால் அறியலாம். அது போல இறை அருள் பெற்றவர்களை எப்படி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான அடையாளம் என்ன? அந்த அடையாளங்களை பொருத்தி பார்த்து இறையருள் அனுபவத்தை அளந்தரிய இயலுமா? என்றால் இறையருளால், அபிராமி பட்டர் போன்ற மெய் அன்பர்களால் அதை அடையாளப்படுத்தி அனுவச் சாத்திய படுத்தி முடியும். அந்த வகையில் தவத்தின் அடையாளத்தையும் அவற்றின் வழியாய் பெறும் பேற்றின் அடையாளத்தையும் இப்பாடலில் நமக்கு அடையாளப்படுத்துகிறார். அதை கொண்டு அபிராமி அருளை அடைய முற்படுவோம். இனி பாடலுக்குள் செல்வோம்.

‘‘தவம்’’ - தவம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் தான் தவமுடையாரைப் பற்றியும், அவர்களின் தனி அடையாளமாகிற சின்னங்களை பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அந்த சின்னங்களே இப்பாடலில் விளக்கமாக அமைகிறது.

இனி ‘‘தவம்’’ தவமானது தன்னை சார்ந்தவரை காத்து இறை உணர்வை விளங்கச் செய்யும் ஓர் உள் உணர்வு.உமையம்மையே தவத்தின் வடிவாக இருப்பவள் இதை ‘‘உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் ’’-  1 என்பதனால் அறியலாம். அடியார்களுக்குள் ஞானத்தை விதைப்பதுவும் அதற்கு அடிப்படையான ஆன்ம உணர்வை காப்பதுவும். இயல்பாகவே எப்பொழுதுமுள்ள ஆணவமலத்தை விலக்குவது மாகின்ற தன்மை எதுவோ அதற்கு ‘‘தவம்’’ என்று பெயர். பூத்தவளே, காத்தவளே, மூத்தவளே - (13) உலக காட்சியை மறைப்பதுவும், உண்மையை காட்டுவதுமாகிற
பண்பும் ‘‘தவமே’’ இதை ‘‘பின் கரந்தவளே’’ (13)
என்பதனால் உணரலாம்.

இறைவனின் உருவத்தை மனதிலே பதித்து உலகிலியலிருந்து விலகி தனிமையாக இருக்கும் பண்பிற்கு தவம் என்று பெயர். இதையே
‘‘கருத்தில் வைத்து தன்னந் தனியிருப்பார்கு இது போலும் தவம் இல்லையே’’ (53) என்பதிலிருந்து உணரலாம்.

ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு இடைவிடாது மனம் சலிக்காது முயற்சியுடன் செய்வது தவம். இதையே ‘‘நித்தம் நீரு தவம்’’ (54) என்கிறார்.
கைதவம் என்பது பொய்யாக செய்த தவத்தின் பயனாய் தொண்டு செய்யாமலும் இறைவன் பாதம் தொழாமலும், அப்படி செய்வது போல் தன்னை காட்டிக் கொள்கின்ற உண்மையற்ற பண்பு. தனது இச்சையின் காரணமாக தோன்றுவது. இதையே ‘‘தொண்டு செய்யாது நின்பாதம் தொழாது துணிந்திச்சையே பண்டு செய்தார்’’- 45 என்கிறார் பட்டர்.

‘‘செய்தவம்’’
என்பது மெய்யடியார்களைக் கண்டு மிகுந்த பொறுமையுடன் அவர்கள் வெறுக்கவே செய்தாலும் முகம் சுலியாது தொண்டு செய்து அவர்
களின் பாதம் தொழுது தொடர்ந்து ஆசையின்றி பணி செய்வது ‘‘செய்தவம்’’ இதையே ‘‘கண்டு செய்தால் அது கை தவமோ அன்றி செய்தவமோ’’ என்பதிலிருந்து அறியலாம். மேலும்செய்தவம் என்பது இறை எண்ணி ஆன்ம லாபத்திற்காக செய்வதாகும்.

‘‘செய்தவம்’’ என்ற சொல்லானது காலம் காட்டாது செய்து கொண்டு இருக்கின்ற தவம், செய்து முடித்த தவம், இனி செய்யப் போகின்ற தவம் என்று முக்காலத்திற்கு உரிய ஒரே சொல்லாக பயன்படுத்துகின்றார்.‘‘செய் தவம்’’ என்பது சித்தாந்த நோக்கில் இறைவனை அடைவதற்கு இறைவனாலேயே உபதேசிக்கப்பட்ட மானுட முயற்சியினால் தோன்றும் படியான இறையருளை அடைவதற்குரிய மிகச் சிறந்த சாதனமாகும். அதை செய்வதனால் மட்டுமே பலனை அடையலாம். செய்யாதவர் அதை அடைய இயலாது. செய்தவர்கு அருளினால் அனுபவமாக மட்டுமே பெறப்படுவதாகும். ஒரு உதாரணத்தால் இதை விளக்கலாம்.

தீட்சை பெற்றுக் கொண்டு மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பயன் பெறுவார்கள். ஜபிக்காதவர்கள் மந்திரத்தின் பயனை அடைய இயலாது. அப்படி மந்திரம் ஜெபித்தாலும் எத்தனை முறை (ஆவர்த்தி) ஜெபிக்கின்றார்கள் அந்த அளவே பலனை பெறுகிறார்கள்.எண்ணிக்கை குறைந்தால் பலனும் குறையும். எண்ணிக்கை அதிகரித்தால் பலனும் அதிகரிக்கும்.

இத்தகைய பண்புடைய எளிய முயற்சியினால் அடைய தக்கதாக உபதேசிக்க பட்ட மந்திரத்தை ஜெபிப்பதையே ‘‘செய் தவம்’’ என்றும் ‘‘மன்னியது உன் மந்திரம்’’- 6 என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.ஆன்மாவிற்கு உள்ளே எண்ணங்களைக் கொண்டு [ புறப்பொருள் எதையும் பயன்படுத்தாமல்] வாய்மை, புலனடக்கம், ஷமா ( பொறுமை) அனுபவம் போன்ற ஒழுக்கங்களை பின்பற்றி அகத்து உள்ளேயே (மனத்தினால்) இறைவனை தியானிப்பது தவம் எனப்படும்.

நாம் அடைய விரும்பும் ஒரு பயனை இறைவனின் அருளால் பெற முயற்சி செய்ய மேற்கண்ட ஆசார, அனுஷ்டான சம்ஸ்கார பூஜை முறையை மனிதன் மனதாலும், வாக்காலும், காயத்தாலும் செய்யும் அக, புற செயல்களுக்கான கட்டுப்பாடு ஒழுக்க முறையையே, யோகமே ‘‘தவம்’’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

இந்த தவமானது செய்தவம், செய்ததவம், செய்ய போகும் தவம் என்று மூன்றாக பிரிக்கப்படுகிறது. செய்தவம் என்பது மனம், வாக்கு காயத்தை இறையருளை குறித்து செயல்படுத்துவதாகும்.

‘‘செய்த தவம்’’- என்பது இந்த பிறவியில் செய்த காலம் சார்ந்து அமைவது. ‘‘தவம் முயல்வார் முத்தியும்’’- 28 என்பதனால் அறியலாம்.
‘‘முன்செய்தவம்’’ - என்பது இறைவனை குறித்து முயற்சியெல்லாம் செய்து பயிற்சி தவறானதாலோ, இறையருள் முழுவதுமாய் பெறாததாலோ தோல்வியுற்ற நிலையில் ஏக்க முற்று இறந்தால் [அடுத்த பிறவியில்] அந்த தவத்தின் பயனாய் இப்பிறவியில் முயற்சிக்காமலே இறையருளும் நன்மையும் நம்மை வந்தடையும்.

இதைத்தவிர தவம் செய்வது போல் நடத்து அதற்கான பயனை (இறையருளன்றி) தன் முயற்சி இன்றி பிறர் உதவியால் பெற முயல்வது. பொய்யால் பெறுவது இதற்கு கை தவம் என்று பெயர். இந்த மூன்று தவத்தையுமே அபிராமி பட்டர் குறிப்பிட்டுள்ளார். இதை,
‘‘கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய்தவமோ’’- 45 என்பதனால் அறியலாம்.

‘‘சின்னங்களே’’ சின்னம் என்ற சொல் ஏழு பொருளை தரும்.சின்னம் என்பது யாதொன்றிலும் இல்லாத தனித்தன்மை மிக்க பண்பை சிறப்பாக
குறிப்பிடுவது.உதாரணமாய் - வைரம், சூரியன், சந்திரன், தீ இவையெல்லாவற்றிலும் பொதுவான பண்பு ஒளிரும் தன்மை உள்ளது. ஆனால் வைரத்தில் திடத் தன்மையும் சூரியனில் உள்ள படைப்பாற்றலும், தீயில் உள்ள அழிக்கும் தன்மையும், சந்திரனில் உள்ள குளிர்ந்த மற்றும் வளர்ந்து தேயும் தன்மையும், அதனதனிடத்து உள்ள சிறப்பு தன்மையாகும்.

ஒரு பொருளை முழுவதுமாய் விளக்காமல் அதை புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கி சொல்லுகிற பண்பிற்கு ‘‘சின்னம்’’ என்று பெயர். உதாரணமாய் தற்போதுள்ள போக்குவரத்து துறையில் பயன்படுத்தப்படுகின்ற (சிக்னல்) வலதுபுறம் திரும்பு, இடது புறம் திரும்பு, நேராக செல், தயாராக இரு, செல்லாதே, புறப்படு என்பதாக நாம் புரிந்து கொள்கிற வகையில் அமைந்துள்ள மின் விளக்குகளைக் கொண்டு கருத்தை உணர்த்தப் பயன்படுகிற குறியீடே ‘‘சின்னம்’’ எனப்படுகிறது.

‘‘பாசாங்குசமும் கரும்பும்’’- (நூல் பயன்) என்பது உமையம்மையின் ஆயுதம் என்பதையே இங்கு அவளின் சின்னமாக குறிப்பிடுகிறார். மருத்துவத் துறையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இருப்பதை காட்டிக் கொடுக்கிற கருவியே சின்னம் எனப்படுகிறது.‘‘ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேவி உரைபவளே’’- 19 என்று எண்ணிக்கைைய அடையாளமாக காட்டுகிறார்.ஆலயங்களில் துவாரபாலகர்களால் விளக்கப்படும் கை அமர்வுகள் (முத்திரைகள்) சின்னங்கள் எனப்படுகிறது. உதாரணமாக ஒற்றை விரலை மேல் நோக்கி நீட்டுவது ‘‘ஏகம் சத்’’ என்பது ஒன்றே இறைவன் என்பதை குறிக்கும்.அதையே கீழ்நோக்கி காட்டினால் ‘‘தர்ஜனிமுத்திரை’’ இது தண்டிப்பதை குறிக்கும். சின்னங்களாகும்.

‘‘மருங்குல் மனோன் மணி’’- 5 அபயமுத்திரை காட்டும் திருக்கோலம்.
 பண்டைய காலங்களில் கடைகளில் உள்ள பொருட்களை உணர்த்துவதற்கு வண்ணக் கொடியை பயன்படுத்தினர். இதையும் சின்னம் என்றே அறியலாம்.துதியுறு ‘‘சேவடி’’- 7 கொடி உமையம்மையினுடைய நந்தி கொடியே காட்டப்படுகிறது.ஒரு பொருள் இருக்கும் இடத்தை வேறு சில அறிகுறிகளால் அறிந்து கொள்வது சின்னம் எனப்படும்.
‘‘கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம்’’- 19
அபிராமி பட்டர் இப்பாடலில் சின்னம் என்று இறையருள் பெற்றவர்களின் அருளை அடையாளமாக குறிப்பிடுகின்றார். இப்பாடலை பொறுத்தவரை அவைகளே சின்னங்களாக கருதப்படுகிறது.

‘‘அடித்தாமரைக்கு’’அடித்தாமரை என்பது நான்கு பொருளிலே வந்தது தாரை போன்ற மென்மையான திருவடிகளைக் கொண்டவள் என்பது இதற்கு பொருள்.உமையம்மையின் திருவடிகளே மங்கள அடையாளமாகிய செம்பஞ்சு ரசம் (நலங்கு) பூசப்பட்டதால் சிவந்துள்ளது. (இது
உமையம்மையாக கருதி நலங்கு பூசப்பட்ட பெண்களின் திருவடி (சுவாசினி).

அர்ச்சகர்கள் குங்குமத்தால் அர்ச்சித்ததால் சிவந்த திருவடி. இந்த இடத்தில் கோயில்களில் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட பாதத்தின் மேல் உள்ள குங்குமத்தையும் பாதத்தையும் குறித்தது.‘‘அடித்தாமரை’’ என்ற சொல்லானது உமையம்மையின் மந்திரத்தை உபதேசமாக பெற்ற உபாசகனானவன் மனதிலே தாமரையை நினைத்து அதன் நடுவிலே உமையம்மையின் திருவடி இருப்பதாக எண்ணி மனதிலே உள்ள எண்ணங்களாலேயே உபாசகனுக்குள்ளேயே அமைக்கப்படும் திருவடி. ‘‘கஞ்சமோ என்தன் நெஞ்சகமோ’’- 20 என்பதனால் அறியலாம்.

மேலும்,அடித்தாமரை என்பது ஸ்ரீ  சக்ரம் மேரு போன்ற யந்திர அமைப்புக்களை உருவமாக அல்லது அருஉருவமாக அமைத்து வழிபடுவது அந்த யந்திரத்திலுள்ள தாமரை போன்ற அமைப்பு இங்கு திருவடி தாமரை என்று சூட்டி சொல்லப்படுகிறது. இதை பாதத்தின் கீழே அதாவது உமையம்மையின் திருமேனியில் உள்ள பாதத்தின் கீழ் வைத்து வழிபடுவர்.

அடித்தாமரைக்கு அன்பு என்பது உமையம்மையின் வழிபட்டு நெறியில் ஒன்பதில் ஒன்றாகும்.
1.புராண சாத்திரங்கள், - அயன் சிறம் ஒன்று செற்றகையான் ( சிவமஹாபுராணம்)
2.யோகம் பயிலுதல் - ‘‘கண்ணியது உன் புகழ்’’ - 12.

3.வேதத்தில் உள்ள உபாசனை நெறிகளை  பழகுதல் -  ‘‘வேதம் சொன்ன விழிக்கே’’- 79.4.ஆகமத்தில் உள்ள உபாசனை நெறிகளை பழகுதல். பின்னே திரிந்து உன் அடியாரை பேணி - 25.5.தாந்கீகம் எனப்படும் ஒருவகை உமையம்மை வழிபாட்டு நெறியை பின்பற்றுவது பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி, மாலினி சூலி வராகி - என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே - 77 இப்பாடல் முழுவதும் தாந்ரீக நெறியில் வழிபடப்படும் தெய்வத்தை குறிப்பிடுவதாகும்.

6.ஒரு சில பொருட்களில் ெதய்வம் இருப்பதாக எண்ணி வழிபடுதல். குறிப்பாக வெற்றிலை, பாக்கு, தாமரை, வில்வம், தங்கம் போன்றவை.
‘‘வதனாம் புயமும் கராம்புயமும் ’’- 58 (தாமரை)
   ‘‘அணியே’’- 24 (தங்கம்)
7.மனிதர்களையோ, குவையோ, பெண்களையோ உபாசனை தெய்வமாக வழிபடுவது. பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிசிறைவண்ட ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையம் வார்குங்கும  முலையும் முலைமேல் முத்துமாலையுமே - 85 என்பதனால் அறியலாம்.

8.ஐபம் செய்து வழிபடுவது மன்னியது உன் திருமந்திரம் - 6.
9.கோயில்களுக்கும், குருவுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் கொடையளிப்பதால் வழிபடுவது ‘‘இல்லாமை சொல்லி ஒருவர் தம்பார் சென்று’’ - 54 என்று எதிர்மறையால் கூறுவதை உணரலாம்.இந்த ஒன்பது வகையான சக்தி வழிபாட்டு ஆன்மீக நெறியையே அதை பின்பற்றுவதையே அடித்தாமரைக்கு அன்பு என்கிறார்.

‘‘தவமுடையார்கு ’’தவமுடைமை என்பது இறைவனைக் குறித்து மனம், வாக்கு காயத்தால் செய்து அவன் அருளை பெறுவதற்குரிய முயற்சியாகும்.
வழிபாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வழிபாட்டிற்கும் சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கு செயல்கள் உண்டு.

அதில் சரியை என்பது உடல் சார்ந்து செய்யப்படும். குளித்தல் (ஸ்நானம்) முதலான. அதனை இயல்பாக செய்கையில் அது சாதாரண குளியல். ஆனால் அதனோடு மந்திரத்தை இயைத்து எந்தெந்த காலங்களில் எந்தெந்த இடத்தில் எதன் பொருட்டு எப்படி செய்ய வேண்டும் என்பனவைகளையெல்லாம் ஆகமங்களிலே குறிப்பிடபட்டிருக்கிறது. இதை பின்பற்றி செய்வது ஒரு தவம் (உதாரணத்திற்கு) மாசி மகத்திற்கு கடல் நீராடல் இது போன்று பிறவும் என உணர்க. இதை ‘‘பின்னே திரிந்து உன் அடியாரை பேணி’’ -25 என்பதனால் அறியலாம்.

மனதால் செய்யும் செயல் மந்திரம் ஜெபித்தல், தியானம் செய்தல் இவையெல்லாம் தவமாகும்.
‘இது போல் ஒரு தவமில்லையே’’- 53
என்பதனால் அறியலாம்.

சொல்லால் செய்கின்ற தவம் இறைவனை பற்றி பாடுவது. பிறருக்கு எடுத்துரைப்பது என்பதும் தவமாகும். இதை ‘‘தோத்திரம் செய்து தொழுது’’ என்பதனால் உணரலாம்.ஞானம் என்பது ஆகமத்தில் சொல்லப்பட்ட நூல்களை படித்து பொருள் உணர்ந்து கொள்ளுதல், இது அறிவால் செய்யும் ‘‘தவம்’’ இதை ‘‘கலையாத கல்வியும்’’ என்ற பதிகத்தால் உணரலாம். ‘‘பரமாகமபத்ததியே’’- 6 என்பது ஆகம நூலாகும்.
கிரியை என்பது இறைவனுக்கு உருவம் அமைத்து வழிபடுவது.

யோகம் என்பது மூச்சு பயிற்சி, பத்மாசனம், சவாசனம் என்று இருக்கை நிலைகளை அப்யாசிப்பது. இந்த நால்வகை பயிற்சிகளை கேட்டு சிந்தித்து நடைமுறைபடுத்தி அனுபவமாக்க முயற்சி ெசய்வதே தவமுடைமை எனப்படும். அதையே ‘‘தவமுடையார்கு - 68’’ என்பதனால் அதை அப்யாசித்து பெறும் அனுபவத்தை பெற்றவை குறிப்பிடுகின்றார்.

‘‘அன்பு’’ இறைவியிடத்து அன்பு செய்வதற்கு எங்கும் பரந்துள்ள அவளை ‘‘இவ்வுலகெங்குமாய்’’- 54,  புரிந்து கொள்வதற்கு, புலன்களுக்கு புலப்படுத்தி கொள்வதற்கு கருங்கல்லிலோ, அல்லது பஞ்சலோகத்திலோ, ஓவியத்திலோ ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிற இறை திருஉருவத்தை விக்ரஹம் என்பர். அதன்மீது நாம் செய்யும் அன்பையே இங்கு அன்பு என்கிறார்.

சாக்த நெறியை பொறுத்தவரை உபாசகன் ஐந்து நிலையில் உமையம்மையின் மீது அன்பு செலுத்துவதாக கூறப்படுகிறது. இதை மார்கம் என்பர். உதாரணமாக.தாசமார்கமானது உமையம்மையின் அடிமையாக இருப்பது. அரசியாக உமையம்மையை வழிபடுவது. மதுரை தலபுராணமானது மதுரையம்பதியை ஆண்ட பாண்டிய மன்னன் குலத்துதித்த அரசியாக உமையம்மையிருந்தாள். அம்மக்களுக்கு அரசியாக இருந்து அரசாண்டதை அக்கோயிலில் எட்டுயானைகள் அமைத்திருப்பதை கொண்டு உமையம்மையானவள் அரச நெறிப்படி எட்டு திக்கிலும் படையெடுத்து சென்று வென்று அரசாண்டாள் என்பதை அறிவுறுத்துகிறது.

அரசர்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரசரை சக்ரவர்த்தி என்பது போல் உமையம்மை உலகை தன் வெண்கொற்றை குடையின் கீழ் ஆளும் பேரரசியாக திகழ்ந்தாள் என்பதை சகஸ்ரநாமம் ‘‘மஹாராஜ்ஞ்யை’’ ‘‘ஸ்ரீ  மத் ஸிமஹாஸனேச்வரி’’ என்று கூறுவதிலிருந்து அறியலாம். ‘‘ஆளுகைக்கு உன்தன் அடித்தாமரைகள் உண்டு’’- 39 என்பதனாலும் உணரலாம்.

‘‘பிறைமுடித்த ஐயன் திருமனையாள்’’
ஆகமங்களில் சிவ பெருமானுக்கு சடை, பாம்பு நெற்றி கண், ரிஷபவாசனம் என்று பல அடையாளங்கள் உள்ளது.
அதில் கூறிய அடையாளங்கள் சார்ந்து அவரை வணங்குவதால் ஏற்படும் பயன்களும் வெவ்வேறாக மாறும். அந்த வகையில் அபிராமி பட்டர் இங்கு சந்திரமௌளீஸ்வரர், சந்திரசேகரர், சோமஸ்கந்தர் என்ற மூன்று சிறப்பு வடிவங்களையும் ‘‘பிறை முடித்த ஐயன்’’ என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இது ஆகமத்தை பொறுத்தவரை மூன்று பயன்களை தரவல்லது.

சந்திர மௌளீஸ்வரர் என்பது ஸ்ரீ சக்கரத்தோடு இணைத்து வழிபடக்கூடிய சிறிய சிவலிங்க மூர்த்தமாகும். இதை நிலத்தில் ப்ரதிஸ்ைட செய்யாமல் ஒரு பெட்டியில் வைத்து பூசிப்பர். இது ஞானத்தை தரக்கூடியது. இதில் சக்தி தாழ்ந்து சிவன் உயர்ந்து காணப்படும். இதை சிவபரம் என்பர்.  
சந்திரசேகரர் என்பது சிவாலயங்களில் அமைந்த உலா திருமேனியான பஞ்சலோகத்தில் அமைந்த திருமேனியாகும். வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை விருஷப கொடியேற்றி திருவிழா நடக்கும். அந்த சமயத்தில் காைலயிலும், மாலையிலும் பஞ்ச மூர்த்தி எனப்படும் விநாயகர், முருகன் சோமாஸ்கந்தர் உமையம்மை, சண்டிகேஷ்வரர் என்ற ஐந்து இறை திருமேனிகள் வாகனங்களில் அமர்ந்து பகலும், இரவும் வீதிஉலா வரும்.

அந்த சமயத்தில் காலையில் மட்டும் சில நேரங்களில் அமர்ந்த நிலையில் உள்ள சோமாஸ்கந்தருக்கு பதிலாக சந்திர சேகரர் உலாவருவார். இவர் ‘‘பட்டத்து நாதர்’’ என்ற சிறப்பு பெயரை உடையவர். மான், மழு, அபயவரதம் தாங்கி ஆனந்தவல்லி என்ற உமையம்மையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பார். இவரையே ‘‘பிறை முடித்த ஐயன்’’ என்கிறார் பட்டர். அவர் பரிச்சாரகள் ஆகையால் மூர்த்திகளின் வித்யாசத்தை தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகின்றார்.  

இந்த பிறைமுடித்த ஐயனாகிய சந்திர சேகரர் தனது மனைவிக்கு சமஉரிமையளித்தவர். இது உபாசனை நெறியில் சிவ சக்தி சமமாக நின்றருளும் நிலையை குறிக்கும். இதை உபயம் என்பர். இது மோட்ஷத்தை தரும்.இந்த சோமாஸ்கந்தர் என்ற வடிவம் நான்கு முக்கிய வடிவங்களுடன் இணைந்தே
தோன்றும். விநாயகர்,  முருகன், சண்டிகேஸ்வரர், இவர்களுடன் உமையம்மை.

இந்த விக்ரஹம் மூன்று பகுதியாக பிரித்து வைத்திருப்பர். இதை வடமொழியில் பின்னாசனம் என்பர். இதில் மான், மழ, அபயவரதம் தாங்கி தலையில் பிறை அணிந்து நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பார். இவரின் அருகில் சற்று தள்ளி உமை அமர்ந்திருப்பார். இருவரின் நடுவிலே ஸ்கந்தன் என்ற ஆன்ம வடிவிலான ஆனந்தமயமான மலம் நீங்கிய ஆன்மாவானது ஆடிய திருக்கோலத்தில் அமைத்திருப்பர். இந்த மூன்றையும் இணைத்தே ச- உமா-ஸ்கந்தன்- மோமாஸ்கந்தர் தோன்றுவார். இவரையே ‘‘பிறை முடித்த ஐயன்’’ என்கிறார்.

இவர் அருகாமையில் இருகரத்துடன், கணபதி, முருகன், இரு புதல்வர்களுடனும், தாசனாகிற சண்டிகேஸ்வரருடனும் திகழும் உமையம்மையையே திருமனையாள் என்கிறார்.ஆகம நோக்கில் பிறை முடித்த ஐயன் திருமனையாள் என்பது இந்த ஐந்து வடிவத்தையும் இணைத்தே குறிப்பிடுவர்.
இந்த மூர்த்தமானது சாக்த பர மூர்த்தம் எனப்பட்டது. இதையே பட்டர் ‘‘சக்தி தழைக்கும் சிவமும்’’- 29 என்கிறார். இந்த ஐந்து உருவத்தையும் வணங்குபவர்கள் போகத்தை அடைவார்.

இந்த போகம் என்பது உடலுக்கு ஆரோக்யம் ஆயுசு, உள்ளத்துக்கு மகிழ்ச்சி, அறிவுக்கு தெளிவு ஆன்மாவிற்கு மல நீக்கத்தையும் அருள் வல்லது.
இனி சொல்லப்படும் வையம், துரகம், மதகரி மாமகுடம், சிவிகை, பெய்யும் கணகம், பெருவிலை ஆரம் இவை எட்டும் பண்டைய காலங்களில் பாமரனால் பயன்படுத்த முடியாத அரசர்குரிய சிறப்பு அடையாளங்களாகும். இந்த சின்னங்களை தரித்தல் என்பது அரசர் அனுமதியுடனோ அல்லது பாராட்டுடனோ அந்தனர்களுக்கும் உரியவையாகும்.

அபிராமி பட்டர் சரபோஜி மன்னர் ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்து சூழலில் அரசர்கள் வாழ்வனைத்தும் உடையதாக அனைவராலும் விரும்பப்பட்டதாக உள்ள வாழ்க்கையாகும். அதற்குரிய அடையாளங்களே இவையெட்டும். இவை மகிழ்ச்சியையும், துன்பமற்ற தன்மையையும் குறித்து நின்றன. அரசரை பொறுத்தவரை அது பாதுகாப்பாகவும் இருந்தது. அபிராமி பட்டரோ அத்தகைய பெருமிதமான வாழ்க்கை என்பது இறைவியின் அருளை பெற்றவர்களுக்கே அமையும் என்கிறார்.

அதுவும் முயற்சியினால் மட்டுமே அமைவதன்று முயற்சியினோடு இறையருளும் சேர்ந்தால்  மட்டுமே அமையும். அரசர்குரிய அச்சின்னங்களை இறையருளாளர்களுக்கு உரியதாக கூறுகின்றார். இது அரசர் தன் முயற்சியால் பெறுவதை காட்டிலும் சற்று உயர்ந்து அடியவர்களுக்கு உமையம்மையின் அருளால் அதனினும் உயர்ந்த மோட்ஷத்திற்கும் உரியனவாகிய சின்னங்களாகும்.

அரச வாழ்க்கை நிலையற்ற தாயினும், அடியார் குரிய இச்சின்னங்கள் நிலை பெற்றதாகும். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.
‘‘வையம்’’ - என்பது இவ்விடத்தில் பூமியை  குறித்தது. பண்டைய காலத்தில் அதிக நிலத்தை தனக்கு சொந்தமாக பெற்றவரையே பணக்காரர்களாகவும், பெருமதிப்பிற்குரியவர்களாக கருதினர்.ஏழக்கமுடைய, உயர்ந்த வேதத்தை கற்றுணர்ந்த அந்தணர்களுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்பு பரிசு இறையிலி நிலங்களாம்.

சோமயாகத்தை செய்தவர்களுக்கும், அரசரின் சந்தேகத்தை தீர்த்தவர்க்கும், யுத்தத்தில் வெற்றி பெற உதவியவருக்கும் நிலங்களே பரிசாக வழங்கப்பட்டது. நான்கு வேதங்களை முழக்க  கற்றவர்களுக்கு ‘‘சதுர்வேதி மங்களம்,’’ ‘‘ப்ரம்மபுரம்’’, ‘‘ப்ரம்ம தேயம்’’ என்ற பெயரில் அனைத்து வசதிகளும் அமைந்த ஊர்கள் பரிசாக மன்னர்களால் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட இவ்வனைத்துமே அந்தணர்களுக்கும் இறையருளை பெற்ற அடியவர்களுக்கும், இறையருளாலும் இறை உபாசனையினாலும் பெறப்பட்டது என்கிறார் பட்டர். இத்தகைய சிறப்பு மிக்க நிலங்களையே  ‘‘வையம்’’ என்கிறார்.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sudan-26

  சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!: பிரதமர், அமைச்சர்கள் கைது..மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்