SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறளில் உலவும் மாடுகள்!

2021-07-19@ 15:30:50

குறளின் குரல்: 147

மாடு என்றால் தமிழில் செல்வம் என்று ஒரு பொருள் இருக்கிறது. ஒருவரிடம் எத்தனை செல்வம் இருக்கிறது என்பதை அவனிடம் இருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிட்ட காலம் முன்பு இருந்தது. மாடு உழைப்பின் அடையாளம். மாட்டைப்போல் அத்தனை அதிகமாக மனிதர்க்காக உழைக்கும் இன்னொரு விலங்கு இல்லை. அதனால்தான் கடுமையாக உழைக்கும் மனிதர்களைப் பார்த்து `இவன் மாடாய் உழைக்கிறான்' என்று பாராட்டுகிறோம்.

வள்ளுவரும் திருக்குறளில் மாட்டைப் பற்றிப் பேசுகிறார். உவமையாக மாடுகளை அழைத்துக் கொண்டுவந்து நம் முன் நிறுத்திப் பல்வேறு அறநெறிகளைத் தெளிவு படுத்துகிறார். வள்ளுவர், மாடு என்ற பொருளைத் தரும் `ஆ, பெற்றம், பகடு' ஆகிய சொற்களை மாட்டைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.

`வலியில் நிலைமையான் வல்லுருவம்
பெற்றம் புலியின் தோல்போர்த்து மேய்ந்தற்று.’
(குறள் எண் 273)

 மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட தவக் கோலம் புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு பசு மேய்ந்ததைப் போன்றது. (பசுத்தோல் போர்த்திய புலிகளைப் பற்றி நாம் அறிவோம். வள்ளுவர் சொல்வது புலித்தோல் போர்த்திய பசு!)வள்ளுவரின் இந்தக் குறளிலிருந்து என்ன தெரிகிறது? போலித் துறவிகள் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது!

தங்கம் மிக உயர்வானது. எனவே தங்கத்தைப் போல் ரோல்டுகோல்ட் என ஒன்று மக்களைத் தங்கம் என்றே ஏமாற்றும் வகையில் உருவாகிறது. ரோல்ட் பித்தளை என்று எதுவும் கிடையாது. காரணம் பித்தளை தங்கத்தைப் போல் அத்தனை மதிப்புடையதல்ல.

எதற்கு மதிப்பு அதிகமோ அதற்கே போலிகள் உருவாகும். ஆன்மிகம் உலகிலேயே மிக உயர்ந்த ஒன்று என்பதால்தான் ஆன்மிகத்தில் போலித் துறவிகளும் உருவாகிறார்கள். உண்மைத் துறவிகள் மிகுந்த மதிப்பிற்குரியவர்கள் என்பதையே ஒருவகையில் போலித் துறவிகள் நமக்குப் புரியவைக்கிறார்கள்.  

`ஆபயன் குன்றும் அறுதொழிலோர்
நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.’
(குறள் எண் 560)

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி நாட்டைக் காக்க வேண்டும். அப்படிக் காக்காவிட்டால், அந்நாட்டில் வாழும் பசுக்கள் சரிவரப் பால்தராது. அந்நாட்டிலுள்ள ஞானியர் தாங்கள் கற்றறிந்த அறநூல்களை மறந்து விடுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

`மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
 இடுக்கண் இடர்ப்பாடுடைத்து.'

(குறள் எண் 624)
தடைப்பட்ட இடங்களில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் மாட்டைப்போல், விடாமுயற்சி உடையவனுக்குத் துன்பம் வந்தால், அப்படி வந்த துன்பம்தான் துன்பப் படும். (அவன் துன்பத்தால் துன்பப் படுவதில்லை.)
`ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்.’

(குறள் எண் 1066)
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் கேட்டால் அதுவும் பிச்சையாகக் கேட்கப்படுவதுதான் என்பதால் நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறில்லை. எனவே எதன்பொருட்டும் பிறரிடம் எதையும் யாசிக்காமல் இருப்பது நல்லது.மாடுகள் புராணகாலம் தொட்டுப் பராமரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. மாடுகள் நம் கலாசாரத்தின் அடையாளம். ராமாயணத்தில், ராமன் கைகேயி கேட்ட வரத்தின்படி பதினான்கு ஆண்டு கள் வனவாசத்திற்குப் புறப்பட்டான்.

அப்போது தசரதன் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் மகன் ராமன் பிரிவைத் தாங்காமல் உயிரையே விட்டவன் அல்லவா தந்தை தசரதன்?
ராமன் கானகம் போனபோது தசரதன் மட்டுமா அழுதான்? இன்னும் என்னவெல்லாம் அழுதன என்று கம்பர் ஒரு பாடலில் அழகாகப் பட்டியலிடுகிறார்.

`ஆவும் அழுத அதன் கன்றும் அழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல்புள் ளழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால்வயப்போர்
மாவும் அழுத அம் மன்னவனை மானவே’..
(கம்பராமாயணம்.)

 பசுக்களும் அதன் கன்றும் அன்றலர்ந்த மலர்களும் பறவைகளும் சோலைகளும் யானைகளும் போரில் வல்ல குதிரைகளும் கூட தசரத மாமன்னனைப் போலவே அழுதன என்கிறார் கம்பர். கம்பரின் பட்டியலில் `ஆவும் அழுத’ என முதலில் குறிப்பிடப்படுவது பசுமாடுதான்.
கண்ணன் இடையர் குலத்தில் பிறந்த இடையன். இடையர்களின் தொழில் மாடு மேய்த்தல். கண்ணனும் மாடு மேய்த்தான். அவன்
கடவுளல்லவா? அவன் புல்லாங்குழல் எடுத்து ஊதியபோது அந்த வேணுகானத்தில் மாடுகள் மயங்கின. எப்படி மயங்கின என்பதைத்
தமிழ்நயத்தோடு வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.

`சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண்கோடச்
செய்யவாய் கொப்பளிப்ப
குறுவியர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன்
 குழல்கொடு ஊதினபோது
பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து
படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச்  
செவியாட்ட கில்லாவே!’
கறவைக் கூட்டங்களான ஆடு மாடுகள் எல்லாம் காலைப் பரப்பிக்கொண்டு கவிழ்ந்து
படுத்துச் செவிகளைக் கூட அசைக்காமல் கண்ணன் குழலிசையைக் கேட்டனவாம்.

புராணங்களில் காமதேனு என்ற வித்தியாசமான பசுவைப் பற்றிய குறிப்பு வருகிறது. தேவர்கள் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலிலிருந்து பல்வேறு அரிய செல்வங்கள் தோன்றின. லட்சுமிதேவியும் அப்போதுதான் தோன்றினாள். கற்பக மரத்தைப் போல் கேட்டதையெல்லாம் தரும் காமதேனு என்கிற பசுவும் பாற்கடலில் உதித்தது. தேவ லோகத்துப் பசுவான அது பெண்ணின் தலையும் பசுமாட்டின் உடலும் மயிலின் தோகையும் கொண்டு திகழ்வது. தவவலிமை மிகுந்த பிரம்ம ரிஷியான வசிஷ்டர் ஆசிரமத்தில் பாதுகாப்பாக வசித்துவந்தது அது.

அங்கு வந்த மன்னர் விஸ்வாமித்திரருக்கும் அவரது படையினருக்கும் காமதேனுவின் உதவியால் உணவை வரவழைத்துப் பரிமாறி விருந்துபசாரம் செய்தார் வசிஷ்டர். கேட்டதையெல்லாம் தரும் காமதேனுவின் மேல் மன்னர் விஸ்வாமித்திரருக்கு ஆசை எழுந்தது. அத்தகைய அரிய விலங்கு அரண்மனையில்தான் இருக்க வேண்டும் என விஸ்வாமித்திரர் அதை இழுத்துச் செல்ல முற்பட்டார். அப்போது வசிஷ்டரின் யோசனைப்படி காமதேனு எண்ணற்ற படை வீரர்களை உற்பத்தி செய்து அவர்களைக் கொண்டு விஸ்வாமித்திரரின் படையை அழித்தது.

உடல் வலிமையை விடத் தவவலிமையே பெரிதென்ற உண்மையை உணர்ந்த விஸ்வாமித்திரர் அதன்பின் கடுந்தவம் புரிந்து வசிஷ்டராலேயே பிரம்மரிஷி என அங்கீகரிக்கப்பட்டார் என்கிறது புராணக் கதை.தமிழ் இலக்கணம் புறப்பொருள் திணையாக வெட்சித் திணை என்ற திணை பற்றிக் குறிப்பிடுகிறது. வெட்சி என்பது நிரை கவர்தல். அதாவது பசுமாடுகளைக் கவர்ந்து செல்லல்.

ஒரு நாட்டின் மீது போர்தொடுக்க விரும்பும் அரசன் அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து அங்குள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வருவான். அதுவே வெட்சித் திணை. அப்படிக் கவரப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டு வருவதும் வெட்சித் திணைதான்.`வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்' எனப் புறப்பொருள் இலக் கணத்தில் ஏழு திணைகள் உண்டு. மன்னர்களின் போரைப் பற்றிப் பேசும் பகுதிகள் அவை. போரே பசுமாடுகளைக் கவரும் வெட்சித் திணையில் தான் தொடங்குகிறது என்பதைச் சித்தரிக்கிறது நம் தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம்.  

`ஓடி விளையாடு பாப்பா’ என்ற தமது பாப்பாப் பாடலில் பாரதியார், பசுவின் இயல்பைப் போற்றுகிறார். குழந்தைகளுக்கு பசுவோடு இணக்கமாக இருக்கவேண்டும் எனச் சொல்லித் தருகிறார்.

`பாலைப் பொழிந்துதரும் பாப்பா - அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!’

அந்தக் காலத்தில் ஒருவன் வீரனா என்பதை நிர்ணயிக்க அவன் காளையை அடக்க வேண்டியிருந்தது. காளையை அடக்கிய காளையைத் தான் பெண்கள் திருமணம் செய்துகொண்டார்கள். ஜல்லிக்கட்டு என்பதே அந்த மரபில் வந்த விளையாட்டுத்தான். ஜல்லிக்கட்டு காளையைத் துன்புறுத்தும் போட்டியல்ல. காளையை அடக்கும் போட்டி. அது ஒரு வீர விளையாட்டு.  

`அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க
யாராச்சும் ரோசமிருந்தா மாட்டுப் பக்கம் போங்க'
என்று `பழனி’ திரைப்படத்தில் ஒலிக்கும் கண்ணதாசன் எழுதிய பாடல், ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்தான்.
தானங்களில் சிறந்தது கோதானம். கிரகண புண்ணிய காலத்தில் கோதானம் செய்வதென்பது மிக விசேஷமானது. ஒரு பசுமாட்டைத் தானம் செய்தால் அதைத் தானம் பெற்றவர் அதன்மூலம் பாலை விற்றும் மோரை விற்றும் சாணத்தை விற்றும் வருவாய் ஈட்டி வாழ்க்கை நடத்த முடியும்.

பசுவின் சாணம் சிறந்த கிருமி நாசினி. அதனால்தான் வீட்டைச்  சாணத்தால் மெழுகும் வழக்கமும் வீட்டுவாசலைச் சாணத்தால் அதிகாலையில் சுத்தம் செய்யும் வழக்கமும் ஏற்பட்டுள்ளன.

பசுமாட்டின் சிறுநீர் கோமியம் எனப்படுகிறது. அதற்கு மருத்துவ குணங்கள் உண்டு. பசுவின் பால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய் இவற்றுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றையும் சேர்த்து அந்த ஐந்தின் முலம் தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம் எனப்படுகிறது. பஞ்சகவ்யம் மூளை தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

மாடுகளுக்கென்றே ஒரு தனிப்பண்டிகை வைத்து மாட்டைக்கொண்டாடுகிறார்கள் தமிழர்கள். பொங்கலை ஒட்டி வரும் அந்தப் பண்டிகையை மாட்டுப் பொங்கல் என அழைக்கிறோம். மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாட்டுக்கு மாலையிட்டு மரியாதை செய்து அதை வழிபடுகிறோம். வேறு எந்த விலங்கிற்கும் தனிப் பண்டிகை இல்லை. ரேஸ் பிரியர்கள் கூட குதிரைப் பொங்கல் கொண்டாடுவதில்லை!

சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் சரஸ்வதியே பசுமாட்டுக்கு பூஜைசெய்வதாக ஒரு பாடல் காட்சி வருகிறது. கண்ணதாசன் எழுதி பி. சுசீலா குரலில் ஒலிக்கும் `கோமாதா எங்கள் குலமாதா' என்ற அந்தப் பாடலில் பசுவின் சிறப்புகள் சொல்லப்படுகின்றன.

`பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே!
பழகும் உறவிலே பிள்ளை நீயே!
கருணை மனதிலே கங்கை நீயே!
  கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே!
இணங்காதோர் மனம் கூட இணங்கும் -  நீ
எதிர்வந்தால் எதிர்காலம் துலங்கும்!
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும் - உன்னை
வலம்வந்தால் நலம் எல்லாம் விளங்கும்!’

பசுமாடு எதிரே வந்தால் அது நல்ல சகுனம் என்ற நம்பிக்கையை, `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதிய கண்ணதாசன் இந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார். `நீ எதிர்வந்தால் எதிர்காலம் துலங்கும்’ என்ற வரி அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வரி.  

`மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே கன்னியம்மா - உன்
காசுமால பத்திரமா பாத்துக்கம்மா..’
 என `வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்
படத்தில், இவ்வாண்டு நூற்றாண்டு காணும் அமரர் கு.மா. பாலசுப்பிரமணியம் எழுதிய திரைப்பாடல் புகழ்பெற்றது.  

`பாசம்’ திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிய  
`ஜல்ஜல்ஜல் எனும் சலங்கையொலி
சலசலசல வெனச் சாலையிலே
செல்செல்செல் எங்கள் காளைகளே
 சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே!’
என்ற திரைப்பாடலும் அதேபோல் புகழ்பெற்ற பாடல்தான்.

இவை தவிரவும் பற்பல தமிழ்த் திரைப்பாடல்கள் மாட்டை மையப்படுத்தி எழுதப்பட்டு இன்றளவும் திரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. `மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கப்பா!', `சாட்டை கையில்கொண்டு காளைரெண்டு வாங்கக் கண்டு' போன்ற பாடல்கள் எடுத்துக்காட்டுகள்.

அன்று திருக்குறளில் போற்றப்பட்ட மாடு இன்று திரைப்பாடல்களிலும் போற்றப்படுகிறது. தமிழர்களின் பண்பு, விலங்குகளையும் நேசிப் பதுதான் என்பதும் வழிவழியாக அந்தப் பண்பு நம்மிடையே தொன்றுதொட்டுப் பயின்று வருகிறது என்பதும் உண்மைதானே?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்