SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்துனுக்கு 1000 நாமங்கள்!

2021-07-16@ 16:38:24

341. சூராய நமஹ: (Shooraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -
பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒரு கணவனும் மனைவியும் கண்ணன் மீது பொறாமை கொண்டிருந்தார்கள். “இந்த யசோதையின் மகனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன! அவன் வீடு வீடாகச் சென்று விஷமம் செய்வதும், வெண்ணெய்ப் பானைகளையும் தயிர்ப் பானைகளையும் உடைப்பதும், ஆட்டம் போடுவதும் கொஞ்சம் கூட நன்றாக இல்லை!” என்று கண்ணனைக் குறை சொல்லி ஏசுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அத்தம்பதியர்.

ஒருநாள் மாலை, அந்தக் கணவர் சந்தை வரை செல்ல வேண்டி இருந்தது. அதனால் தன் மனைவியை அழைத்து, “இப்போது நான் சந்தை வரை செல்லப் போகிறேன். பொழுது இருட்டி விட்டதால், அந்த யசோதையின் மகன் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து விஷமம் செய்யப் புறப்பட்டு விடுவான். அதனால் கதவை நன்றாகத் தாழ் இட்டுக்கொள். யாராவது கதவைத் தட்டினால் திறந்து விடாதே! நான் வந்து தட்டினால் மட்டும் தான் நீ கதவைத் திறக்க வேண்டும்!” என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். மனைவியும் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

அரை மணிநேரம் கழித்து யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று உள்ளிருந்து இந்தப் பெண் கேட்க, “நான் தான் வந்திருக்கிறேன்!” என்று அவளது கணவரின் குரலில் பதில் வந்தது. “ஆஹா! நம் கணவர் தான் திரும்ப வந்துவிட்டார்!” என்று எண்ணி அந்தப் பெண் கதவைத் திறந்தவாறே, அவளது கணவர் வெளியே நின்று கொண்டிருந்தார். “சீக்கிரம் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டு விடுவோம்! கண்ணன் வரும் நேரம்!” என்று சொல்லிக் கொண்டே வேகமாக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுவிட்டார் அவளது கணவர்.

அதன்பின் கணவனும் மனைவியும் இணைந்து வீட்டினுள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று அப்பெண் கேட்க, “நான்தான் வந்திருக்கிறேன்!” என்று மீண்டும் அவளது கணவரின் குரலிலேயே பதில் வந்தது. அவள் ஆச்சரியத்துடன் தன்னுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள். ஊஞ்சலில் இருந்த கணவர், “இது கண்ணனின் வேலையாக இருக்கும்! கதவைத் திறக்க வைப்பதற்காக என் குரலிலேயே பேசுகிறான்!” என்றார்.

“இப்போது என்ன செய்வது?” என்று மனைவி கேட்க, அருகிலிருந்து ஒரு முறத்தை எடுத்துக் கொடுத்த கணவர், “நீ கதவைத் திறந்து விட்டு வெளியே நிற்கும் கண்ணனை இந்த முறத்தால் அடித்துத் துரத்திவிடு!” என்றார். அவளும் கையில் முறத்தோடு போய்க் கதவைத் திறந்தாள். வெளியே அவளது கணவனைப் போன்ற உருவத்தோடேயே ஒருவர் நிற்பதைக் கண்டாள். கண்ணன் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என எண்ணி, வெளியே நிற்பவரை முறத்தால் அடித்தாள். வெளியே நின்றவரோ, “உன் கணவனான என்னை ஏன் அம்மா அடிக்கிறாய்?” என்று கதறினார். அவளோ, “நீ மாறு வேடத்தில் வந்தவன் என்று எனக்குத் தெரியும்!” என்று சொல்லி மேலும் அடித்தாள்.

“இங்கே பார்!” என்றொரு குரல் வீட்டின் உள்ளிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அப்பெண். ஊஞ்சலிலே கையில் சங்கு சக்கரங் களைத் தாங்கியபடி கண்ணன் அமர்ந்திருந்தான். “அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவன் தான் கண்ணனா? என்னிடம் அடி வாங்கியவர் உண்மையிலேயே என் கணவரா!” என்று உணர்ந்து திகைத்துப் போனாள் அப்பெண்.

அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்கும் அருள்புரியத் தான் இத்தகைய லீலையைச் செய்தேன்!” என்று சொல்லி, இருவரையும் அழைத்து, அவர்களுக்கு இம்மை மறுமை அனைத்துக்குமான நலன்களையும் அருளினான். அன்று முதல் அந்தத் தம்பதியர் தீவிர கிருஷ்ண பக்தர்களாக மாறி விட்டார்கள்.இப்படித் தன்னை வெறுக்கும் மனிதர்களிடம் தனது அழகு, குணங்கள், லீலைகள் ஆகியவற்றைக் காட்டி, அவர்களையும் பக்தர்களாக மாற்றி, வென்று எடுப்பவராகத் திருமால் திகழ்வதால் அவர் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.

“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா”என்று இவ்வாற்றலை ஆண்டாளும் பாடி இருக்கிறாள்.நமது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், “ஒருவரை வீழ்த்துவது சுலபம், வெல்வதே கடினம்!” என்று கூறுவார். அதாவது, தன்னை வெறுப்பவரைப் போரில் வீழ்த்துவது மிக எளிது, ஆனால் அந்த எதிரிகளின் மனங்களைக் கவர்ந்து அவர்களைப் பக்தர்களாக்கி வென்றெடுப்பதே அரிது. ஆனால் திருமாலோ அனாயாசமாக எல்லோரையும் வென்றெடுத்து விடுவதால் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘சூர:’ என்றால் அனைவரையும் வெல்வதற்குரிய சாமர்த்தியம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 341-வது திருநாமம்.“சூராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைவரின் மனங்களையும் வெல்லும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

342. சௌரயே நமஹ: (Shouraye namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -
பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பற்பல லீலைகள் புரிந்து அடியார்களுக்கு அருள்புரிவதற்காகவும், பூமிக்குப் பாரமாக உள்ள தீயவர்களை அழிப்பதற்காகவும், நல்லறத்தைப் பூமியில் நிலைநாட்டுவதற்காகவும் கண்ணனாகப் பூமியில் அவதரிக்கத் தீர்மானித்தார் திருமால். அப்போது மகாலட்சுமி திருமாலிடம், “கடந்த ராமாவதாரத்தில் தசரதரைத் தந்தையாகத் தேர்வு செய்தீர்கள். இந்த அவதாரத்தில் யாரைத் தந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள்.

அப்போது திருமால், “சூரர் எனப்படும் வசுதேவரை இந்த அவதாரத்தில் எனக்குத் தந்தையாகத் தேர்வு செய்துள்ளேன்!” என்றார். “என்ன காரணத்துக்காக அவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள் மகாலட்சுமி.அதற்குத் திருமால், “இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் வசுதேவர் யது குலத்தைச் சேர்ந்தவர், அதாவது யது மகாராஜாவின் வம்சத்தில் தோன்றியவர். அக்காலத்தில் யது மகாராஜா மிகச்சிறந்த தானப் பிரபுவாகத் திகழ்ந்தார் என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றார் திருமால்.

அதற்கு மகாலட்சுமி, “ஆம் சுவாமி! தினந்தோறும் யதுவிடம் தானம் வாங்குவதற்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அவரது மாளிகை வாசலில் நின்றிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் நிற்கும் மக்களுள் முதல் மனிதருக்குரியது தானம் செய்தாலே, அந்த தானம் பெற்ற நபர் மீதமுள்ள அத்தனை பேருக்கும் தானம் செய்யும் அளவுக்குப் பணக்காரராக ஆகிவிடுவார். யதுவிடம் தானம் பெற்ற ஒருவன், அதன்பின் தானம் வேண்டும் என்று இன்னொருவரை நாடிச் செல்ல வேண்டிய நிலையே இருக்காது. அந்த அளவுக்குக் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் யது!” என்றாள்.

திருமால், “ஆம். சரியாகச் சொன்னாய். முன்பு ராமாவதாரத்தில் நான் ரகு குலத்தில் ஏன் அவதாரம் செய்தேன்? ரகு மகாராஜா மிகச்சிறந்த தானப்பிரபுவாக இருந்தார், வறியவருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தார் என்பதனால் தானே ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகனாகத் தோன்றினேன்? அதே போல் இம்முறை யதுவின் தானத்தைக் கௌரவிக்கும் விதமாக அவரது குலத்தில் தோன்றிய வசுதேவரின் மகனாக அவதரிக்கப் போகிறேன்!” என்று கூறினார்.

“தானம் செய்பவர்கள் உங்கள் விசேஷ அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க உள்ளீர்கள் போலும்!” என்று சொல்லி புன்னகைத்த மகாலட்சுமி, “இரண்டாவது காரணம் என்ன?” என்று கேட்டாள்.அதற்குத் திருமால், “முன்னொரு சமயம் சுதபஸ்-பிருச்னி என்ற தம்பதியர் என்னைக் குறித்துத் தவம் செய்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா?” என்று மகாலட்சுமியிடம் கேட்டார். “ஆம் சுவாமி, அறிவேனே! அவர்களின் தவத்துக்கு உகந்து அவர்களுக்குக் காட்சி அளித்த நீங்கள், மூன்று முறை அவர்களின் மகனாகப் பிறக்கப் போவதாக அவ்விருவருக்கும் வரம் அளித்திருந்தீர்களே!” என்று சொன்னாள் மகாலட்சுமி.

“ஆம் தேவி! முதலில் சுதபஸ்-பிருச்னிக்கு மகனாக பிருச்னிகர்ப்பன் என்ற பெயரோடு நான் அவதாரம் செய்தேன். அடுத்த பிறவியில் அவர்களே கச்யப முனிவராகவும், அதிதி தேவியாகவும் பிறந்தார்கள். அப்போது அவர்களின் மகனான வாமன மூர்த்தியாக நான் அவதாரம் செய்தேன். இப்போது அந்த சுதபஸ் தான் சூரர் என்று பெயர்பெற்ற வசுதேவராகவும், பிருச்னி தான் தேவகியாகவும் பூமியில் பிறந்துள்ளார்கள்.

எனவே இப்போது அவர்களின் மகனாக, மூன்றாவது முறையாக, நான் அவதாரம் செய்து அவர்களுக்குக் கொடுத்த வரத்தை முழுமையாக நிறைவேற்றப் போகிறேன்!” என்று கூறினார்.உடனே மகாலட்சுமி, “சுவாமி! நீங்கள் அவதரிக்கும் போதெல்லாம் நானும் உடன் வருவது வழக்கம் அல்லவா? நீங்கள் பிருச்னிகர்ப்பராகவும், வாமன மூர்த்தியாகவும் அவதரித்த சமயத்தில், உங்கள் திருமார்பிலேயே நான் இருந்தேன். இப்போது நீங்கள் மதுராவில் வசுதேவர் மகனாக அவதாரம் செய்ய உள்ளீர்கள். நான் விதர்ப்ப நாட்டில் பீஷ்மகன் மகள் ருக்மிணியாகப் பிறக்கிறேன். பூமியில் சந்திப்போம்!” என்று சொல்லித் திருமாலை வழியனுப்பி வைத்தாள்.

இவ்வாறு வசுதேவரின் குலமுன்னோரான யதுவைக் கௌரவிக்கும் விதமாகவும், வசுதேவர்-தேவகி செய்த தவத்துக்கு முழுமையான பலன் அளிப்பதற்காகவும் வசுதேவர் மகன் கண்ணனாகத் திருமால் அவதரித்தார். வசுதேவருக்கு ‘சூர:’ என்று பெயர். சூரரின் மகனாக அவதரித்ததால், திருமால் ‘சௌரி:’ என்று அழைக்கப்படுகிறார். ‘சௌரி:’ என்றால் சூரரின் மகன். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 342-வது திருநாமம்.
“சௌரயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு நல்ல சந்ததி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

343. ஜனேச்வராய நமஹ:
(Janeshwaraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -
பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கோபாலார்ய மகாதேசிகன் என்ற மகான் வாழ்ந்துவந்தார். வேதாந்த தேசிகரின் மறு அவதாரமாகவே போற்றப்பட்ட அவரைத் ‘திருக்குடந்தை தேசிகன்’ என்று அன்பர்கள் அழைப்பது வழக்கம். இல்லறத்தில் வாழ்ந்த திருக்
குடந்தை தேசிகனை மூன்று சந்நியாசிகள் அடி
பணிந்து அவருக்குச் சீடர்களாய் ஆனார்கள்.

 இத்தகைய பெருமைகள் இருந்த போதும், துளியும்
கர்வமோ அகங்காரமோ இல்லாமல், பணிவே
வடிவெடுத்தவராய்த் திகழ்ந்தார். இதைக் கண்ட சில பண்டிதர்கள் திருக்குடந்தை தேசிகனிடம், “சுவாமி! பொதுவாக இல்லறத்தில் இருப்பவர்கள் துறவியரை வணங்கிப் பார்த்திருக்கிறோம். ஆனால் மூன்று
துறவிகள் உங்களை வந்து அடிபணிந்து உங்களுக்குச் சீடர்களாய் ஆகி இருப்பது வியப்பைத் தருகிறது. அதைக் காட்டிலும் அதிக வியப்பைத் தரும் விஷயம் என்னவென்றால், மூன்று துறவிகள் உமக்குச் சீடராக இருக்கும் நிலையிலும், நீங்கள் மிகுந்த பணிவோடு, அகங்காரமே இல்லாமல் இருக்கிறீர்களே! அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்குத் திருக்குடந்தை தேசிகன், “அடியேனுக்கு எப்போதெல்லாம் ஆணவம் வருவது போலத் தோன்றினாலும், குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளின் கிரீடத்தை நினைத்துக் கொள்வேன். உடனே எனது ஆணவம் எல்லாம் பறந்துபோய், மனத்திலே பணிவு குடிகொண்டுவிடும்!” என்று பதில் அளித்தார்.அது எப்படி என்று பண்டிதர்கள் கேட்க, திருக்குடந்தை தேசிகன்,

“நானா ரத்ன ப்ரதித மஹிமா ஸ்ரீ மதாபீட நத்த:
ஸர்வேசத்வ ப்ரகடன சணோ நிர்மித: அதுல்ய ஹேம்னா
மால்யோந்நீத ஸ்திர பரிமளோ வைதிகாக்யே விமானே
வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட:”
என்ற ஸ்லோகத்தால் அதற்கு விடை சொன்னார்.

“நம் குடந்தை ஆராவமுதப் பெருமானின் கிரீடம் எப்படிப்பட்டது தெரியுமா?
நானா ரத்ன ப்ரதித மஹிமா - வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம் போன்ற
ரத்தினங்கள் பதிக்கப்பெற்றது.

ஸ்ரீ மத் ஆபீட நத்த: - அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.
நிர்மித: அதுல்ய ஹேம்னா - ஒப்பற்ற தங்கத்தாலே செய்யப்பட்டது.
மால்யோந்நீத ஸ்திர பரிமள: - பூ வைத்தாலும் வைக்காமல் போனாலும், எப்போதும் மணம் கமழக் கூடியது.
வைதிகாக்யே விமானே வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட: - வைதிக விமானத்தின் கீழே கோவில்கொண்டிருக்கும் அப்பெருமானின் கிரீடம் என் மனத்திலும் இருக்கிறது.

ஸர்வேசத்வ ப்ரகடன சண: - அந்த இறைவனின் ஒப்பற்ற ஆளுமைக்கு அடையாளமே அந்தக் கிரீடம். சாதாரணமாகத் தொப்பி அணிந்திருக்கும் ஒருவர், சயனிக்கச் சென்றால் தொப்பியைக் கழற்றி வைப்பது வழக்கம் அல்லவா? ஆனால் இங்கே குடந்தையில் ஆராவமுதப் பெருமாள், சயனிக்கும்போது கூட கிரீடத்தை அகற்றாமல் சயனித்துள்ளாரே! இது எதை உணர்த்துகிறது?

அவரே மிகவும் உயர்ந்தவர்! கிரீடத்தை அகற்றி இன்னொருவருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை! அதனால்தான் சயனிக்கும் வேளையிலும் கிரீடத்தைத் தலையில் அவர் அணிந்துகொண்டே இருக்கிறார்!இவ்வாறு அவரது ஆளுமைக்கு அடையாளமாக இருக்கும் அந்தக் கிரீடத்தை நினைத்த மாத்திரத்தில், அவர் எவ்வளவு உயர்ந்தவர், நாம் எவ்வளவு தாழ்ந்தவர் என்பது மனதில் நன்கு பதிந்து விடும். அதை நினைக்க நினைக்க மனதில் அகங்காரமே எழாது!” என்பதே திருக்குடந்தை தேசிகன் தந்த விளக்கம்.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் தத்துவம் என்னவென்றால், எப்போதும் ஒளிர்கின்ற ஆளுமையோடு கூடியவர் திருமால், அதன் அடையாளமாகத் தலையில் கிரீடத்துடன் திகழ்கிறார். உலகில் பொதுவாக நாம் ஆளுமை என்று சொல்லும் நபர்களின் ஆளுமைகளை எல்லாம் திருமாலின் ஆளுமை மூழ்கடித்துவிடுகிறது.

‘ஐச்வர்யம்’ என்றால் ஆளுமை. ‘ஈச்வர:’ என்றால் ஆளுமை மிக்கவர், அல்லது ஆள்பவர். ‘ஜன’ என்பது உலகிலுள்ள அனைத்து மக்களையும் குறிக்கும். உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஒப்பற்ற ஆளுமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ஜனேச்வர:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஜனேச்வர:’ என்றால் அனைவரையும் ஆள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 343-வது திருநாமம்.
“ஜனேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் வாழ்வில் நல்ல நிர்வாகத்திறனும் ஆளுமையும் பணிவும் ஒருங்கே பெற்றுத் திகழத் திருமால் அருள்புரிவார்.

344. அநுகூலாய நமஹ:(Anukoolaaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -

பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வளர்ந்த கண்ணன் தளர்நடை நடக்கத் தொடங்கிய பின், திடீரென வீட்டில் இருந்து மாயமாகிவிடுவது அவன் வழக்கம். யசோதை எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. சிறிது நேரம் கழித்து, உடலெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு எங்கிருந்தோ வருவான்.

மேலும், ஒரு நொடிப்பொழுது கூட ஓர் இடத்தில் நிற்க மாட்டான் கண்ணன். திடீரென மாட்டுத் தொழுவத்தில் புகுந்து தொந்தரவு செய்வான். அங்கே போய் அவனைப் பிடிக்க முயன்றால், கன்றுக் குட்டிகள் கட்டப்பட்ட தொழுவத்துக்கு ஓடி விடுவான். அப்புறம் எப்படியோ அவனைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தால் மீண்டும் மாயமாகிவிடுவான்.

பசு மற்றும் கன்றுகளின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடுவான். இப்படித் துருதுரு என்று விளையாடும் கண்ணனை யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணனிடம், “நான் உன்னைப் பார்ப்பதா? வீட்டு வேலையைப் பார்ப்பதா? சிறிது நேரம் கூட ஓரிடத்தில் இருக்க மாட்டாயா?” என்றெல்லாம் அறிவுறுத்திப் பார்த்தாள் யசோதை. ஆனாலும் கண்ணன் அதை எல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

ஒருநாள் கண்ணன் அதிகமாக விஷமம் செய்யவே, யசோதை பிரம்பினால் அவனை அடிக்கப் போனாள். ஆனால் பிரம்பால் அடித்தால் குழந்தைக்கு வலிக்குமோ என்று அஞ்சிய யசோதை, பிரம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு, தாம்புக் கயிற்றை எடுத்து அடிக்கப் போனாள். ஆனால் கண்ணனோ, பயந்தவன் போல் நடிக்கத் தொடங்கினான். அவன் உண்ட வெண்ணெய் தோய்ந்த கைகளால் யசோதையைத் தொழுதான். மை தீட்டிய கண்களில் இருந்து மை கரைந்து வரும்படி கண்ணீர் விட்டு அழுதான். அச்சத்துடன் யசோதையை நோக்கி ஒரு பார்வை பார்த்தான். பயத்தில் குழந்தை கண்ணனின் உதடுகள் துடித்தன. மேனி நடுங்கியது. பார்த்த யசோதை, “குழந்தாய்! உன்னைப் போய் அடிப்பேனா?” என்று சொல்லி அவனைத் தழுவிக்கொண்டாள்.

அடுத்த நொடியே, அங்கிருந்து மாயமான கண்ணன், மேலும் லீலைகள் புரியச் சென்று விட்டான். இவனை ஓரிடமாகக் கட்டிப்போட வேண்டும் என்று கருதிய யசோதை, இரண்டு கயிறுகளை எடுத்தாள். ஒரு கயிற்றை ஓர் உரலைச் சுற்றி மூன்று சுற்றுகள் சுற்றி, அதை ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள். மறுபுறம் இன்னொரு கயிற்றைக் கண்ணனின் இடுப்பைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி அதையும் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள். இரண்டு கயிறுகளையும் இழுத்துப் பார்த்த போது அவற்றுக்கு இடையே இரண்டு அங்குலம் இடைவெளி இருந்தது.

வேறு சில கயிறுகளைக் கொண்டு வந்து இவற்றோடு சேர்த்துக் கட்டிவிட்டுப் பார்த்தாள் யசோதை. உரலும் நகரவில்லை, கண்ணனும் நகரவில்லை, ஆனாலும் இரண்டு அங்குலம் இடைவெளி மட்டும் அப்படியே இருக்கிறது. வியர்த்து விறுவிறுத்துப் போன யசோதை, “கண்ணா! உன் தாயான எனக்கு உன்னைக் கட்டும் உரிமைகூட இல்லையா?” என்று கேட்டாள். அவளது அன்புக்கு மனம் இரங்கினான் கண்ணன். அதனால் அடுத்த கயிற்றை அவள் கொண்டு வந்த சேர்த்து முடிச்சு போட்ட போது, இரண்டு கயிறுகளும் இணைந்துவிட்டன.

கண்ணனை உரலோடு கட்டிவிட்டாள் யசோதை.
இப்படிக் கண்ணனைக் கட்டிய யசோதை, அவனைப் பார்த்து,
“யதி சக்னோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித!” (விஷ்ணு புராணம் 5-6-15)

“ஓரிடத்தில் நிற்க மாட்டேன் என்று விஷமம் செய்தாயே! முடிந்தால் இதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்!” என்று சொல்லி விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள். தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அப்படியே உரலோடு கட்டுண்டு கிடந்தான் கண்ணன்.
இறைவனுக்கு எத்தனையோ மேன்மைகள் இருந்தாலும், அவன் தன் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, அவர்களிடத்தில் எளியவனாக இருக்கிறான்.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய
எளிவே”

என்று இப்பண்பை நம்மாழ்வார் பாடுகிறார்.ஆக, மிகவும் உயர்ந்தவராக இருக்கும் திருமால், அத்தன்மைகளை மறைத்துக் கொண்டு, தன் பக்தர்களிடத்தில் இனியவராக, எளியவராக, அவர்களுக்குக் கட்டுப்பட்டவராக இருப்பதால், அவர் ‘அநுகூல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘அநுகூல:’ என்றால் இனியவர், எளியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 344-வது திருநாமம்.“அநுகூலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவரிடத்திலும் திருமால் இனியவராக, எளியவராக இருந்து அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்