SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

2021-07-16@ 15:51:14

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?என் மகன் மதுவுக்கு அடிமையாகி யுள்ளான். கடவுள் பக்தி சுத்தமாக கிடையாது. ஸ்திர புத்தி என்பதே இல்லை. அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது பாசமே இல்லை. அவர் எப்போது திருந்துவார், அவரை நல்ல மனிதனாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?
- ராமதிலகம், பாண்டிச்சேரி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகம் மிகவும் நல்ல ஜாதகமே. சம்பாதித்துக் கொடுக்க மனைவியும் பரம்பரை சொத்தும் இருப்பதால் அவர் சுகவாசியாக வாழ்ந்து வருகிறார். முதலில் உங்கள் மகனை தனிக்குடித்தனம் வையுங்கள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு பண உதவி எதுவும் செய்யாதீர்கள். கஷ்டமோ, நஷ்டமோ அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று பேசாமல் இருங்கள். அவர்கள் குடும்பப் பிரச்னையில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் இருவரின் நேரமும் தற்போது நன்றாக உள்ளதால் அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சுய கௌரவத்திற்கு குறைவு வரும் போது உங்கள் மகன் மனம் திருந்தி தனக்கென்று தனியாக ஒரு வேலையைத் தேடிக் கொள்வார். உங்கள் கணவரைப் போன்றே உங்கள் மகனின் நிலையும் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. உதவி செய்வதை நிறுத்துங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் மருமகளை வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் ராகுகால வேளையில் விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். மாரியம்மனின் அருளால் மகன் மனம் மாறி நல்லபடியாக வாழத்துவங்குவார்.
?
12ம் வகுப்பு படிக்கும் என் மகனின் நடவடிக்கைகள் சரியில்லை. இவன் மிகவும் நல்லவனாகத்தான் இருந்தான். உதவும் குணம் உடையவன். தற்போது இவனோடு சேர்ந்திருக்கும் நண்பர்கள் சரியாக இல்லை. பாதிபேர் படிப்பினை பாதியில் விட்டவர்கள். இவனது நடத்தையைக் கண்டு பயமாக உள்ளது. அவன் எதிர்காலம் சிறப்பாக அமைய உரிய பரிகாரம் கூறுங்கள்.
- வெள்ளையன், திருச்சி.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் கல்வியைப் பற்றிச் சொல்லும் நான்காம் வீட்டின் அதிபதி புதன் ஆறில் சூரியனுடன் இணைந்திருப்பது பலவீனமான நிலை என்றாலும் நான்காம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பது சாதகமான
அம்சம் ஆகும். மேலும், அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பது அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பதைக் காட்டுகிறது. முக்கியமான கிரகங்கள் ஆன குருவும், சனியும் வக்கிர கதியில் அமர்ந்திருப்பதும் நண்பர்களால் பிரச்னையைத் தரக்கூடும். அவர் உள்ளூரில் இருப்பது நல்லதல்ல. அவருடைய எதிர்காலம் கருதி வேறு ஊருக்கு உங்கள் பணியினை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் இடம் மாறிச் செல்வது நல்லது. சமாளிப்பது கடினம் என்றாலும் உங்கள் பிள்ளையின் நலன் கருதி முடிவெடுங்கள். அடுத்த வருடம் சேர உள்ள
கல்லூரியில் என்.சி.சி. போன்ற பயிற்சிக்கு அவரை அனுப்புவது நல்லது. அவருடைய நல்வாழ்வு கருதி ராணுவம் அல்லது காவல்துறையில் பணிக்குச் செல்ல அவரை தயார்படுத்துங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும், கிருத்திகை விரதம் இருந்து பிரார்த்தனை செய்வதும் நல்லது. முருகனின் அருளால் உங்கள் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

?நான் பிறந்தநாள் முதல் இதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஜாதகத்தில் சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் எப்போதுமே கஷ்டம்தான் என்கிறார்கள். நான் கடந்த 20 வருடமாக கூலி வேலைதான் செய்து வருகிறேன். ஏதேனும் சுயதொழில் செய்ய வாய்ப்பு
இருக்கிறதா? பரிகாரம் சொல்லுங்கள்.
- சிவக்குமார், சென்னை.

உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு-கேதுவிற்கு நடுவில் இருந்து சுக்கிரன் வெளியே வந்து இருப்பதால் சர்ப்ப தோஷம் என்பது இல்லை. அமாவாசை நாளில் பிறந்திருக்கிறீர்கள். பித்ரு தோஷம் என்பது கிடையாது. முன்னோருக்குச் செய்ய வேண்டிய கடன் நிலுவையில் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த நிலை எப்பொழுதும் உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்யாது. முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய உழைப்பும் இருந்தாலே எதிர்காலம் பிரகாசமாக அமையும். அதற்கான காலநேரமும் தற்போது கூடி வந்துள்ளது. நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்ய இயலும். பழைய இரும்பு சாமான் கடை வையுங்கள். துவக்கத்தில் குறைந்த முதலீட்டுடன்
ஆரம்பியுங்கள். இத்தனை வருட அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும். ஜென்ம லக்னத்தில் சூரியன், சந்திரன், புதன், சனி என்று நான்கு கோள்களின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் முதலாளியாக அமர்வதற்கு தகுதியானவர். கோபம் வரும்போது வார்த்தைகளை மட்டும் கட்டுப்படுத்துங்கள். ஏழுமலையானை இஷ்டதெய்வமாகக் கொண்டு வணங்கி வாருங்கள். வருடம் ஒருமுறை திருப்பதிக்குச் சென்று முடி காணிக்கை செலுத்துவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் தொழிலதிபராக உருவெடுப்பீர்கள்.

?34 வயது ஆகும் எனக்கு 8ல் செவ்வாய் உள்ளது. இதுவரை திருமணம் கூடி வரவில்லை. 7 அல்லது 8ல் செவ்வாய் இருப்பதுபோல் எத்தனையோ ஜாதகங்கள் வந்தும் எதுவும் கூடி வரவில்லை. எனக்கு திருமண யோகம் உண்டா? தடை இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- புவனேஸ்வரி, திண்டுக்கல்.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் உங்கள் திருமணம் தடைபடவில்லை. செவ்வாயுடன் இணைந்திருக்கும் சனியின் காரணமாக திருமணம் தாமதமாகிறது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் உங்களைப்போல் வசதி வாய்ப்பு நிறைந்த குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்க இயலாது. ஏழாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் அந்தஸ்தில் குறைந்த வீட்டிலிருந்தே சம்பந்தம் என்பது அமையும். உங்கள் தந்தையிடம் வேலை செய்யும் பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். தூரத்து உறவினர் ஆக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வசதி வாய்ப்பில் குறைவு இருந்தாலும் கௌரவத்தில் குறைவு இருக்காது. அந்தஸ்தை முக்கியமாகக் கருதாமல் குணத்தினை மட்டும் கருத்தில் கொண்டு மாப்பிள்ளை தேடுங்கள். செவ்வாயோடு சனி இணைந்திருப்பதால் செவ்வாய் தோஷம் என்பது உங்களுக்குக் கிடையாது. ஏழில் செவ்வாய் இருக்கும் வரன்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. செவ்வாய் தோஷம் உள்ள வரன்தான் பார்க்க வேண்டும் என்பது தவறு. திருமணம் நல்லபடியாக நடந்ததும் பழனியில் தங்கத்தேர் இழுப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் தந்தையிடம் வேலை செய்யும் பணியாளர்களின் வீட்டில் நடைபெறும் திருமணத்திற்கு உங்கள் செலவில் திருமாங்கல்யம்
வாங்கித் தாருங்கள். அவர்களது வாழ்த்து உங்களுக்கும் நல்லதொரு மண வாழ்வினை ஏற்படுத்தித் தரும்.

?2010ல் திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். செய்வினையால் 2019 நவம்பர் மாதம் முதல் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஜாதகத்தில் ஏதேனும் குறை உள்ளதா? நாங்கள் எப்போது இணைவோம்? செய்வினை அகல என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- சக்திவேல், அரக்கோணம்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடக்கிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மனைவியின் ஜாதகம் பலம் பொருந்தியது. அவருக்கு யாராலும் செய்வினை செய்ய இயலாது. உங்களுடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதி புதன் எட்டில் அமர்ந்திருப்பதும், தற்போது புதன் தசை தொடங்கியிருப்பதும் குடும்பத்தில் பிரிவினையைத் தோற்றுவித்துள்ளது. உங்களுடைய ஜாதகத்தில் தற்போது பலவீனமான கிரக சஞ்சாரம் உள்ளதால் தற்காலிகமாக இந்த பிரிவினையை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். குடும்பத்தை ஒன்றிணைக்கும் சக்தி உங்கள் பிள்ளைக்கு உண்டு. அவர் வளர, வளர குடும்பச் சிக்கல்கள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். ஏதேனும், ஒரு சுவாதி நட்சத்திர நாளில் சோளிங்கர் திருத்தலத்திற்குச் சென்று பெரிய மலையில் உள்ள யோகநரசிம்மரை தரிசித்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயர் சந்நதியில் உங்கள் மனைவியின் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். 12.03.2022ற்குப் பின் குடும்பம் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. கவலை வேண்டாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்