SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

2021-05-03@ 14:36:06

நமது சமய மரபில் ஐந்து என்கிற எண் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் என்று பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமனாக  அவதரித்தார். அவருடைய பரிவாரங்கள் பற்பல வடிவங்களில் பூலோகத்தில் அவதரித்தனர். ருத்ரனின் அம்சமாக  ஆஞ்சநேயர் அவதரித்தார்.
ருத்ரன் அழிக்கும் சக்தி படைத்தவர். கெட்ட சக்திகளை அழிக்கும் வல்லமை ருத்ராம்சத்திற்கு உண்டு. இராமாயணத்தில் இராவணன் அழிந்ததற்கும், இந்திரஜித் அழிந்ததற்கும், இராமனும் இலட்சுமணனும் மருந்து மலையால் போர்க் களத்தில் காப்பாற்றப்பட்டதிலும் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. அடுத்து ராம நாமத்தில் திளைத்தவர் ருத்ர அம்சமான ஆஞ்சநேயர்.இது அப்படியே பரமசிவன்  பார்வதியிடம் “ராம நாமம் மூன்று முறை சொன்னால் சஹஸ்ர நாமத்திற்கு சமம்” என்று சொல்வதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ருத்ராம்சம்  உடைய  ஆஞ்சநேயர், ஐந்து முகம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயராகவும்  விளங்குகின்றார். அப்படி ஐந்து முகங்களோடு அவர் விளங்கும் பொழுது, அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்.

கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்கும்., தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமது எதிரிகளை நாசமாக்கும். மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீ கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும்விஷத்தையும் முறிக்கும்.வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது, நமக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளித்து கிரக தோஷங்களை நீக்கும்.மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தையும், காரிய வெற்றியினையும், புத்ர பாக்கியதையும் வித்தைகளையும் அளிக்கும்.மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வம் பஞ்சமுக ஆஞ்சநேயர். அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது. அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்ச நேயர் வடிவங்கள் நம் நாட்டில் பல ஊர்களிலும் உண்டு. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் புதுச்சேரி அருகே பஞ்சவடி என்கிற ஊரில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தமாக  உண்டு. சென்னைக்கு அருகில் திருவள்ளூரில், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உண்டு. ஐந்து முகங்கள் தவிர பத்து முகங்களைக் கொண்ட தசமுக ஆஞ்சநேயரும் உண்டு.

ஐந்து முகங்களோடு காட்சி தருவதற்கு என்ன காரணம்?

நாம் ஒரு இராவணன் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இரண்டு இராவணன்கள்  உண்டு. இருவரும் நண்பர்கள். இரண்டாம் இராவணனுக்கு மஹிராவணன் என்று பெயர். இராமனோடு போர் புரிந்த இராவணன், தன் ஆயுதங்களை இழந்து நின்றான். கருணா மூர்த்தியான இராமன், இன்று போய் நாளை வா என்றார். அவன் திருந்துவான் என்றே இராமர் நினைத்தார். ஆனால், அவன் பாதாளலோகம் சென்றான்.அங்கு தன் நண்பனான  மஹிராவணனின் உதவியை நாடினான். இதை அறிந்த ஹனுமார், மஹிராவணனோடு போர் செய்ய பாதாள லோகம் சென்றார். அப்போது கடுமையான யாகம் ஒன்று ராம லஷ்மணர்களை அழிப்பதற்காக மஹிராவணன்  செய்துகொண்டிருந்தான். அதை தடுக்க விஸ்வரூபம் எடுத்தார் ஆஞ்சநேயர். தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்தார். பயங்கரமான போர் மூண்டது. கொடியவன் மஹிராவணன் மாண்டான். மஹிராவணனை அழிக்க எடுத்த விஸ்வரூப  தரிசனம் தான்பஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவம். கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஞ்ச முக ஆஞ்சநேயரை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வில் நினைத்த காரியம் யாவும் வெற்றியாகும்.

அசாத்ய சாதக ஸ்வாமிந் அசாத்யம்
தவகிம்வத  
ராம தூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.

பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்