SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோக்கிப் பார் இரட்சிப்பார்

2021-05-03@ 14:32:23

ராபின்சன் க்ருஸோ என்ற கப்பல் மாலுமி, கப்பலை ஓட்டிச் செல்லும்போது, எதிர்பாராவிதமாக கப்பல் விபத்துக்குள்ளானது. அந்த மாலுமிக்கு பல பாவ பழக்க வழக்கங்கள் இருந்தன. அவர்மீது சில வழக்குகளும் இருந்தன. விபத்தினால் இன்னும் சற்று நேரத்தில் தான் மரித்துப் போகப்போவதாக எண்ணினார். நான் இறந்துவிட்டால் என் மீதுள்ள வழக்கு என் குடும்பத்தை பாதிக்குமே என்ற அச்ச உணர்வு இன்னும் மனவேதனையை அதிகரிக்கச் செய்தது. அவ்வேளையில், கப்பலில் எழுதப்பட்டிருந்த ஆபத்துக்கு கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்; (சங்கீதம் 50 :15) என்ற திருமறை வசனம் அவர் கண்களில் தென்பட்டது. பலமுறை கண்டு, வாசித்த வசனம் என்றாலும், அன்று அவ்வசனம் அவரது உள்ளத்தில் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்தது. ஆண்டவருடைய வார்த்தையை நம்பி, அந்த இடத்திலேயே முழங்கால்படியிட்டு, இருகரங்களையும் உயர்த்தி, சத்தமிட்டு, ஆண்டவரே இந்த ஆபத்திலிருந்தும், வழக்குகளிலிருந்தும் என்னை விடுவியும் என்று ஜெபித்தார். கடவுள் அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்தார். அக்கப்பல் ஒரு தீவில் மோதி கரை ஒதுங்கியது. அத்தீவில் ராபின்சன் க்ருஸோ பத்திரமாக கரை சேர்ந்தார். தன்னை அற்புதமாக பாதுகாத்த கடவுளுக்கு நன்றி கூறினார்.
நமது வாழ்விலும் ஆபத்துக்கள் நம்மைச் சூழ்ந்து வரும் வேளையில், நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், எந்தவொரு ஆபத்துகள் நம்மை சூழ்ந்திருந்தாலும், கடவுளை நாம் நோக்கிப் பார்க்கும்போது, அவர் நம்மை விடுவிப்பார் என்பதுதான். ேமலும், இந்த ஆபத்திற்கு காரணமாக நம்மிடத்தில் ஏதேனும் தவறுகள் உள்ளதா என்றும் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, நமது வழிகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்வில் பலவேளைகளில் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்து, அதன் காரணமாக பல ஆபத்துக்களில் சிக்கிக் கொண்டனர். எனினும், அவர்கள் மனந்திரும்பி, கடவுளின் இரக்கத்திற்காக வேண்டிக் கொண்டபோது, அன்பே உருவான கடவுள் அவர்கள்மீது மனதுருகி, அவர்கள் தவறுகளையெல்லாம் மன்னித்து, அவர்களை விடுவித்தார் என்று விவிலியத்தில் நாம் காண்கிறோம்.ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தபோது கடவுள் அவர்கள்மீது கோபங்கொண்டு, கொள்ளிவாய் சர்ப்பங்களை அவர்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் அநேகர் இறந்தனர். மடிந்து கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள் தங்களுக்காக வேண்டிக் கொள்ளும்படி கடவுளின் அடியவராகிய மோசேயிடம் கேட்டுக் கொண்டனர். மோசே அவர்களுக்காக, கடவுளை நோக்கி வேண்டுதல் செய்தார். அப்பொழுது கடவுள், வெண்கல சர்ப்பம் ஒன்றை செய்து ஜனங்கள் எல்லாரும் காணும்படி ஒரு கம்பத்தின்மேல் வைக்கும் படி கூறினார். அதை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்க வாதை நின்றது என்று திருமறை கூறுகிறது (எண்ணாகமம் 21 :1-9).

அன்புக்குரியவர்களே! உங்கள் வாழ்விலும் பிரச்னைகளும், ஆபத்துக்களும் சூழ்ந்திருக்கிறதா ? பயப்படாதீர்கள்! கடவுள் நம்மோடு இருக்கிறார். அவர் மிகவும் கருணை நிறைந்தவர்; அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்; நாம் பிறப்பதற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார்; நமது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவர் கவனிக்கிறார். நாம் தவறு செய்தபோதும், அத்தவறுகளை உணர்ந்து, உண்மையாக மனந்திரும்பும்போது, கடவுள் நம்மீது மனதுருகி, மனமிரங்குகிறார்.ஆகவே, இஸ்ரவேல் மக்கள் வெண்கல் சர்ப்பத்தைப் பார்த்து விடுதலை பெற்றுக்கொண்டது போல, நாமும் நமது பாவங்களுக்காகவும், அக்கிரமங்களுக்காகவும் சிலுவையில் அறையப்பட்டு, மரித்த அருள்நாதர் இயேசுவை நோக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். அவ்விதம் அவரை நாம் நோக்கிப் பார்த்தால், அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள் (சங்கீதம் 34:5) என்று திருமறை கூறுவதற்கேற்ப கடவுள் நம்மைவிடுவிப்பார்.  நோக்கிப் பார்ப்போம்! விடுதலை பெறுவோம்!

Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம்,
பேராயர், தூத்துக்குடி -
நாசநேரத் திருமண்டலம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்