SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண வாழ்வு நல்லபடியாக அமையும்

2021-05-03@ 14:28:37

?எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. வேண்டாத தெய்வம் இல்லை, போகாத கோயில் இல்லை. நாங்கள் அனைவருமே தெய்வ சிந்தனை உடையவர்கள். என் மகளுக்கு குழந்தைபேறு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
- தேவி, சென்னை.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் புத்ர பாக்யத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சுக்கிரனும் ஐந்தாம் பாவக அதிபதி குரு ஒன்பதிலும் உச்சம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது நிச்சயமாக புத்ரபாக்யத்தைத் தரும். ஆயினும் குருவுடன் கேது இணைந்திருப்பது சிறிது தடையினை உண்டாக்குகிறது. உங்கள் மருமகனின் ஜாதகத்திலும் ஐந்தாம் பாவக அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்றிருப்பதும் குழந்தை பாக்யத்தில் தாமதத்தை உண்டாக்குகிறது. தம்பதியர் இருவரையும் முறையான மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடந்து வரச் சொல்லுங்கள். உங்கள் மகளை வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கில் சுத்தமான பசுநெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். முறையான மருத்துவ சிகிச்சையின் பயனாலும் உங்கள் மகளின் அயராத பிரார்த்தனையாலும் அம்பிகையின் அருளாலும் 12.01.2022க்குப் பிறகு உங்கள் மகள் பிள்ளைப்பேற்றினை அடைவார்.
“யாதேவீ சர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண சம்ஸ்திதா
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”

?நான் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மலச்சிக்கல், ரத்தப்போக்கு, சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றுக்கு மருத்துவம் பார்த்தும் எந்தவித பலனும் இல்லை. மேலும், மனதில் எப்போதும் சஞ்சலத்துடனும் ஒருவித பயத்துடனும் இருக்கிறேன். இதற்கு ஒரு தீர்வும் பரிகாரமும் கூறுங்கள்.
- சேகர், கும்பகோணம்.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ஒரு மாத காலமாக சனி தசையில் புதன் புக்தி தொடங்கி நடந்து வருகிறது. உங்களுடைய ஜாதகத்தில் சனி எட்டாம் பாவகத்தில் சந்திரனுடன் இணைந்து அமர்ந்துள்ள நிலையில் சனி தசை துவங்கிய காலத்தில் இருந்து உடல்நிலையிலும் மனநிலையிலும் இதுபோன்ற பிரச்னையை சந்தித்து வருகிறீர்கள். ஜென்ம லக்னாதிபதி புதனும் வக்ர கதியில் அமர்ந்திருப்பதோடு சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்றி ருப்பதால் ஆன்ம பலமும் குறைந்திருக்கிறது. உணவில் நல்லெண்ணெய் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். புதன் மற்றும் சனிக்கிழமை நாட்களில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சந்நதியை 11 முறை வலம் வந்து வணங்குதலும் நன்மை தரும். சனிக்கிழமை தோறும் எள்ளுப்பொடி சாதம் நிவேதனம் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். தினமும் காலை, மாலை இருவேளையும் கீழேயுள்ள மந்திரத்தை 11 முறை உச்சரித்து பரமேஸ்வரனை வழிபட்டு வர மனதில் உள்ள பயம் நீங்குவதோடு உடல்நிலையிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

“ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
 அம்ருதேஷாய சர்வாய மஹாதேவாயதே நம:”

?ஏழு வயதாகும் என் மகனுக்கு ஆட்டிஸம் உள்ளதாக நான்காவது வயதில் கண்டறிந்தோம். டாக்டரின் ஆலோசனைபடி சிகிச்சையும் செய்து வந்தோம். பெரிதாக முன்னேற்றம் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பினோம். படிப்பிலும் நாட்டம் இல்லை. கோபத்தில் அடுத்தவரை அடிக்கிறான். தினமும் ஒரு முறையாவது காரணம் இல்லாமல் அழுகிறான். மாற்றம் பெற உரிய பரிகாரம்
கூறுங்கள்.
- சங்கர், பெங்களூரு.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கன்யா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஆட்டிஸம் உள்ள குழந்தைகளை கடவுளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். இறைவன் தனது குழந்தையை நம்மிடம் அனுப்பி உரிய சேவைகளைச் செய்ய ஆணையிட்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு குழந்தையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளோடு இந்த குழந்தையை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்களுடைய விருப்பத்தை குழந்தையின் மீதுதிணிக்காமல் குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். மெல்லிசை, கர்நாடக சங்கீதம் போன்றவற்றை ஒலிக்கவிட்டு குழந்தையை கேட்கச் செய்யுங்கள். அவருடைய ஜாதகப்படி தற்போது நடந்து வரும் செவ்வாய் தசையின் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். செவ்வாய்கிழமை தோறும் அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு குழந்தையையும் அழைத்துச் சென்று கீழ்க்கண்ட மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சந்நதியை நான்கு முறை வலம் வந்து வணங்கி வாருங்கள். 13வது வயது முடியும்போது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் உண்டாகியிருப்பதைக் காண்பீர்கள்.

“கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
 தந்ந: ஸ்கந்த: ப்ரசோதயாத்.”

?என் மகள் வயிற்றுப் பேரன் தற்போது ஆறில் இருந்து ஏழாம் வகுப்பிற்கு போகிறான். வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறான். ஆனால், தேர்வில் விடை எழுத சிரமப்படுகிறான். அவன் கல்வியில் சிறந்து விளங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- பெரம்பலூர் வாசகி.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் வித்யா ஸ்தானம் ஆகிய நான்காம் இடத்திற்கு அதிபதி சுக்கிரன் ஜீவன ஸ்தான அதிபதி செவ்வாயுடன் இணைந்து அமர்ந்திருப்பது மிகவும் நல்ல நிலையே. உங்கள் பேரன் பள்ளிப்பாடத்தினை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க முயற்சிக்கிறார். புரியாதவற்றை அவர் படிப்பதில்லை. செய்முறை வகுப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார். அவரது திறனை குறைத்து மதிப்பிடுவது தவறு. அவருடைய எதிர்காலம் என்பது வெகு சிறப்பாக உள்ளது. அவரது மன ஓட்டத்தினைப் புரிந்துகொண்டு பெற்றோரை நடந்துகொள்ளச் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக  எதிர்மறையான பொருளைத் தரக்கூடிய பெயரை அவருக்கு வைத்திருக்கிறீர்கள். அவருடைய பெயரில் இடம்பெற்றிருக்கும் ‘ந்’ என்ற எழுத்தை நீக்கிவிட்டால் நேர்மறையான பொருளைத் தரக்கூடிய பெயராக மாறிவிடும். பிள்ளைகளுக்கு வடமொழிச் சொற்களில் பெயர் வைக்கும்போது வடமொழியில் புலமை பெற்றவர்களிடம் கேட்டறிந்து வைக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை பெயரிட்டு அழைக்கும்போது பெயரில் உள்ள அதிர்வலைகள் நிச்சயமாக அதற்குரிய பலனைத் தரும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டுள்ளபடி அந்த ஒற்றை எழுத்தை மட்டும் நீக்கிவிட்டு அவரது பெயரை உச்சரித்துப் பாருங்கள். நிச்சயமாக பேரனின் நடவடிக்கைகளில் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள். விநாயகர் வழிபாடு ஒன்றே போதுமானது. அவருடைய ஜாதகம் வலிமை பொருந்தியதாக இருப்பதால் சிறப்புப் பரிகாரம் ஏதும் தேவையில்லை.

?என் மகனுக்கு 2018ல் திருமணம் நடந்தது. மூன்றாம் மாதம் தாலி பிரித்து கோர்க்க பிறந்த வீட்டிற்குச் சென்ற மருமகள் திரும்பி வரவில்லை. வற்புறுத்தி அழைத்தபோது தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியும் தாலியை கழட்டிக் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுத்த சாமான்களையும் வாங்கிச் சென்றுவிட்டார். என் மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- புவனேஸ்வரி, வந்தவாசி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. ராகு தசையின் காலத்தில் மகனுக்கு திருமணத்தை நடத்தியிருக்கிறீர்கள். ராகு உங்கள் மகனின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் நீசம் பெற்றிருப்பதாலும் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாயுடன் கேது இணைந்திருப்பதாலும் இதுபோன்ற பிரச்னையை சந்திக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளார். தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக இருப்பதால் முதல் தாரத்தால் உண்டான பிரச்சினைக்கு சட்டபூர்வமான தீர்வினைக் காண முயற்சியுங்கள். அதன்பிறகு அவரது மறுமண வாழ்வு என்பது நல்லபடியாக அமைந்துவிடும். வியாழன் தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நவகிரஹத்தில் உள்ள குருவிற்கு வடக்குமுகமாக நெய்விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வணங்கிவரச் சொல்லுங்கள். நிரந்தரமான நல்ல வேலை கிடைப்பதோடு மறுமண வாழ்வும் நல்லபடியாக அமைந்துவிடும். கவலை வேண்டாம்.
“தேவானாஞ்ச ருஷீனாஞ்ச குரும் காஞ்சன சந்நிபம்
 பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.”

திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்