SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருகனின் அருளால் வாழ்வு சிறக்கும்

2021-04-28@ 15:30:32

?22 வயதாகும் என் மகனுக்கு சுத்தமாக திறமை கிடையாது. படிப்பும் ஏறவில்லை. வேலைக்கு அனுப்பியும் அடிக்கடி தூங்கிக்கொண்டே இருக்கிறான் என்று வேலையைவிட்டு அனுப்பி விடுகிறார்கள். மனநல மருத்துவரை அணுகியும் பலன் இல்லை. அவனது எதிர்காலம் சிறக்க வழிகாட்டுங்கள்.
- அருளானந்தம், மதுரை.

ஜென்ம லக்னத்தில் உள்ள கேதுவும், ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் சனியும் இதுபோன்ற ஸ்திரமற்ற புத்தியைத் தருகிறார்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி அவரது 27வது வயதில் இருந்து நல்லகாலம் பிறக்கிறது. அதுவரை அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அவரது ஜாதகத்தைப் பொறுத்தவரை கொடிபோலப் படரும் அமைப்பு உள்ளது. ஒரு கொடியானது நன்கு வளர ஒரு ஊன்றுகோல் எவ்வாறு தேவையோ, அதுபோல அவரது வாழ்வு சிறக்க உரிய துணை என்பது தேவை. அவரது பித்ரு ஸ்தானத்திற்கு உரியவர் குரு பகவான் என்பதால் தந்தை ஆகிய நீங்கள்தான் அவருக்கு குருவாக இருந்து அவரை நல்வழிப்படுத்த இயலும். உங்கள் அருகாமையிலேயே அவரை வைத்துக்கொண்டு அவருக்குப் பிடித்தமான கைத்தொழில் ஒன்றினை கற்றுக் கொடுங்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி அவருக்கு சமையல் கலையில் நல்ல திறமை என்பது உண்டு. 27வது வயது முதல் கொஞ்சம், கொஞ்சமாக அந்தத் திறமை மெருகேறி சமையல் தொழிலில் புகழ் பெறுவார். திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்கள் பிரார்த்தனைகளை வையுங்கள். பிரதி மாதந்தோறும் கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானை தரிசிப்பது நன்மை தரும். கீழ்க்கண்ட துதியை உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்து அவனை திரும்பச் சொல்லச் செய்யுங்கள். முருகனின் அருளால் அவனது வாழ்வு சிறக்கும்.

 “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
 மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
 கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.”

?என் மகன் எம்.எஸ்.சி., முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார், ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லும் அவர் பெற்றோர் சம்மதத்துடன் அந்தப்பெண்ணையே திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அவர்களது திருமணம் நடக்குமா? அரசு வேலை கிடைக்க உரிய வழி காட்டுங்கள்.
- கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீரங்கம்.

உங்கள் மகனின் ஜாதகப்படி 13 ஏப்ரல் 2022க்கு மேல் நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். அரசுப்பணிக்காக காத்திராமல் கிடைக்கின்ற வேலையை முதலில் ஏற்றுக்கொண்டு பணியாற்றச் சொல்லுங்கள். அவருடைய சம்பாத்யமும் எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைந்துள்ளது. அவர் ஒரு பெண்ணை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தப் பெண் ரிஷப ராசியில் பிறந்தவர். உங்கள் சகோதரர் தனுசு ராசியைச் சேர்ந்தவர். இரண்டு ராசிகளுக்கும் இடையே ஷஷ்டாஷ்டகம் என்பது பிரதான இடத்தைப் பிடிப்பதோடு எதிர்மறையான பலனைத் தரும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் அவர்கள் இருவரின் ஜாதகப்படி, இருவரும் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவது என்பது எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பான வாழ்க்கையைத் தராது. பரஸ்பரம் பேசி நண்பர்களாகவே பிரிந்துவிடுவது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. அந்தப் பெண்ணிற்கும் சிறப்பான மண வாழ்க்கை என்பது அமையும். உங்கள் மகனுக்கு உறவு முறையில் இருந்தே பெண் அமையும். அவரது மண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஞாயிறு தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவதால் உங்கள் மகனுக்கு விரைவில் நல்ல உத்யோகம் கிடைத்துவிடும். கீழ்க்கண்ட துதியை தினமும் சொல்லி வணங்கி வர வாழ்க்கை வளம் பெறும்.
“முன்னெறியாகிய முதல்வன் முக்கணன் தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கடைந்த வர்க்கெலாம் நன்னெறியாவது நமச்சிவாயவே.”

?இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய் ஆகிய என்னை எனது கணவர் அடிக்கடி சந்தேகப்படுகிறார். அவரது நண்பருடன் என்னை இணைத்து பேசுகிறார். இதனால் குடும்பத்தில் சண்டையும் தேவையில்லாத மன உளைச்சலும் நிலவுகிறது. நல்ல தீர்வு சொல்லுங்கள்.
- திருப்பூர் வாசகி.

உங்கள் ஜாதகப்படி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சனி தசை என்பது நடந்து வருகிறது. அது முதலே நீங்கள் மன உளைச்
சலுக்கு ஆளாகி வருகிறீர்கள் என்பது புரிகிறது. உங்கள் ஜாதகத்தில் சுப கிரகங்களான புதன், குருவோடு, சனியும் வக்ரம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பது சற்று சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. வக்ரம் பெற்ற சனியோடு ராகுவும் இணைந்திருப்பதால் நீங்கள் நல்லது செய்தாலும் அது மற்றவர் கண்களுக்கு தவறாகப்படுகிறது. ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து நீங்கள் செயல்படுவதாக உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வார்கள். யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாது படபடவென்று காரியம் ஆற்றும் உங்களது குணமே உங்களுக்கு பலமாக உள்ளது. அதை மாற்றிக் கொள்ள வேண்டாம். பிரதி செவ்வாய் தோறும் மாலை ஆறு மணி வரை மௌன விரதம் இருந்து அருகிலுள்ள அம்மனின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு விரதத்தினை பூர்த்தி செய்யுங்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி அம்பிகையை வணங்கி வாருங்கள். 29.07.2022 வாக்கில் உங்கள் கணவர் உண்மையை உணர்ந்துகொண்டு தனது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு உங்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். கவலை வேண்டாம்.
“சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே”

?45 வயது ஆகும் எனது மனைவி கடந்த ஆறு மாத காலமாக தலைவலியால் அவதிப்படுகிறார். அவரது 29வது வயதில் இதேபோல தொடர்ந்து ஒரு வருடத்திற்கு தலைவலியால் அவதிப்பட்டு மருத்துவம் பார்த்ததில் குணமாகி இருந்தது. தற்போது மீண்டும் இந்தப் பிரச்சினை வந்திருப்பதால் மிகவும் பயப்படுகிறார். என் மனைவி ஆரோக்யமாய் வாழ உரிய பரிகாரம்
சொல்லுங்கள்.
- ரமேஷ் கண்ணன், பெங்களூரு.

உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்காலம் 28.10.2021 வரை ராகு தசையில் சந்திர புக்தி நடைபெற்று வருகிறது. பொதுவாக ராகு தசையில் சந்திர புக்தியின் காலத்தில் டென்ஷன், மன உளைச்சல், தேவையற்ற மனக்குழப்பம் போன்றவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகக் கூட அவருக்கு தலைவலி வரக்கூடும். ஆனால், அவரது 29வது வயதில் தலைவலி வந்ததற்கான காரணம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தப் பிரச்சினை சரியாகிவிட்டது. மீண்டும், அதே காரணத்தால் தலைவலி வருகிறது என்று எண்ணி அதே மருந்துகளை உபயோகிக்க வேண்டாம். காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தற்போது வந்திருக்கும் பிரச்னை தற்காலிகமானதே. பயம் வேண்டாம். வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்திற்கு உங்கள் மனைவியை அழைத்துச் சென்று ஸ்ரீவைத்யநாதேஸ்வரரை தரிசிக்க வைத்து அவரது பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் கீழ்க்கண்ட துதியைச் சொல்லி பரமேஸ்வரனை வணங்கி வருவதால் விரைவில் அவரது பிரச்னை முற்றிலும் காணாமல் போகும்.
“ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரணாசகர்த்ரே முனிவந்திதாய
ப்ரபாகரேந்த்ர வக்னிவிலோசனாய ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய”

?என் மகன் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருந்தும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவனது நண்பர்கள் பலருக்கும் வேலை கிடைத்த நிலையில் தனக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லையே என்று மிகவும் வருந்துகிறான். வங்கிக் கடன் உதவியுடன் படித்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எனது மகனுக்கு வேலை கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- ரங்கநாதன், பெருந்துறை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி சனி வக்ர கதியில் சஞ்சரிப்பது அவரது தயக்க குணத்தைக் காட்டுகிறது. சிம்ம ராசியில் பிறந்த அவரிடம் தயக்கத்தினை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் இன்டர்வியூவினை எதிர்கொள்ளச் சொல்லுங்கள். 26.05.2021க்குப் பின் தனியார் நிறுவனம் ஒன்றில் அவருக்கு உத்யோகம் கிடைத்துவிடும். சென்னை போன்ற பெருநகரத்தில் வேலை தேடச் சொல்லுங்கள். அவருடன் கல்லூரியில் படித்த நண்பர்களில் ஒருவரின் உதவியால் வேலை கிடைப்பதற்கான வழி பிறக்கும். திங்கட்கிழமை தோறும் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வெளிப்பிராகாரத்தை ஐந்து முறை வலம் வந்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்குவதும் நல்லது. சிவபெருமானின் அருளால் உங்கள் மகனுக்கு உத்யோகம் கிடைப்பதோடு குடும்பமும் கடன் பிரச்னையில் இருந்து விடுபடும்.“பானுப்ரியாய பவஸாகர தாரணாய காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய தாரித்ர்ய துக்க தஹனாய நமசிவாய.”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்  திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்