SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீ மதங்கீஸ்வரர்

2021-04-23@ 14:24:52

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் கிராமத்தில் அருட்பாலிக்கிறார் ஸ்ரீ மதங்கீஸ்வரர். நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வரும் அடியார்களது வாழ்வில் ராஜயோகத்தினையும், பதினாறு வகை செல்வங்களையும் பெற்று மகத்தான வாழ்வு வாழ்ந்து வருவது கண்கூடு. தலத்தின் இறைவனாக மதங்கீஸ்வர சுவாமியும், இறைவியாக ஸ்ரீ ராஜமாதங்கீஸ்வரி அஞ்சனாட்சி அம்பிகையும் அருட்பாலிக்கிறார்கள். சகல கலைகளுக்கும் அதிபதியாக திகழ்கின்ற அம்பிகையாக காட்சி தருகின்றாள். அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் சொன்ன பதினாறு பேறுகளை பெற இத்தல இறைவியை மனம், மொழி, மெய் ஒன்றுபட ஆத்மார்த்தமாக பூஜித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.

மகாசரஸ்வதி தேவிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்ததால் இத்தல இறைவியை வழிபடுவோர் கல்வி, உயர்பதவி, தொழில் மேன்மை பெறுவர் என்பது ஐதீகம். திருமணத் தடைகள் நீங்கி இனிய இல்லறம் நல்லறமாக அம்பிகை அருளால் அமையும். இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஆனந்த மகாகாளி வடக்கு திசை நோக்கி ஆனந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இத்தாயை வழிபட்டால் ஆனந்த வாழ்வை பெறலாம். இத்தலத்தில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவை கிழக்கு நோக்கி உள்ள நந்தியின் பெயர் சுவேத நந்தி. மேற்கு நோக்கி உள்ள நந்தி பெயர் மதங்க நந்தி எனவும் வழங்கப் பெறுகிறது. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய என்று இவ்விரு நந்தியம் பெருமான்களை பிரதோஷ தினங்களில் மனமுருக தரிசித்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ராஜயோகம் கிடைக்க திருவருள் பெற்றவர் மட்டுமே இத்திருத்தலத்தை தரிசிக்க முடியும் என்று கூறுவர். பராசவனம் என்பது திருநாங்கூரின் புராண கால பெயராகும். பராசவனத்தில் மதங்காசிரமத்தில் கடுந்தவம் புரிந்த மதங்க மாமுனிவரின் வேண்டுதல்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி சர்வேஸ்வரனை வழிபட்டதாக பராசவனப் புராணம் கூறுகிறது. சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் தம் திருமுறையில் இத்தலத்தைப் பற்றி பெரிதும் போற்றி உள்ளார். சுந்தரர் காலம் 9ஆம் நூற்றாண்டு எனும்போது இத்தலமும் அதற்கும் முந்தியது எனலாம்.
சங்க இலக்கியங்களில் திருநாங்கூர் பற்றி உள்ளது பெருஞ்சிறப்பு.

பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் “நாங்கூர் வேளிர்” என்ற குருநில மன்னன் மகளை கரிகாற்சோழன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் உள்ளது. எனவே கரிகாற் சோழனின் மனைவி நாங்கூரைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகின்றது. சைவ சமயப் பெரியோர்களில் ஒருவரான சேந்தனார் திருவிசைப்பா  திருப்பல்லாண்டு பாடியவர். இவர் திருநாங்கூரைச் சேர்ந்தவர். நாங்கூர் சேந்தன் என்று போற்றுகின்றனர். மதங்க மகரிஷிக்கு இத்தல அம்பிகையே மகளாகத் தோன்றி திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை மணம் புரிந்தார் என்று பராசவன புராணம் கூறுகின்றது.

கோயில் அமைந்த விதமும் மகா அற்புதம். இத்தல கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், திருச்சுற்று மதில் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் கிழக்கு புறத்தில் இடது பக்கத்தில் மாதங்கீஸ்வரி சந்நதியும், சண்டிகேசஸ்வரர் சந்நதியும் உள்ளது. திருச்சுற்றின் வடக்குப் புறத்தில் தெற்கு திசை நோக்கி காளி சந்நதியும், அடுத்து மதங்கமுனி சந்நதியும் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சந்நதிகளும், வடமேற்கு மூலையில் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சந்நதிகளும் திகழ்ந்து அருட்பாலிக்கின்றனர்.

இத்தல சிற்பங்கள் முற்கால சோழர்காலத்தை சார்ந்தவையாகும். ஒவ்வொன்றும் எழில் நலம் மிகுந்து காணப்படுகின்றன. திருச்சுற்று சந்நதிகளிலுள்ள நாராயணி சிற்பம், நவகிரக சிற்பங்கள் அருள் ததும்பும் விதமாக வீற்றிருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகப் பெருமான், பைரவர், சூரியன், தெய்வச் சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளது.

‘‘நாங்கூர் ஈசனை நாடி தொழுவோர்க்கு
நாளும் கோளும் நன்மை நல்குமே’’

என்ற ஆன்றோர் அருளமுத வாக்கிற்கேற்ப இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமங்கையாழ்வார் திருநாங்கூர் பற்றி அற்புதமாக போற்றியுள்ளார். மணம் மல்கு நாங்கூர் எனவும் நின்றருளுமிடம் நாங்கை எனவும் சிறப்பித்து கூறுகின்றார். 108 வைணவ திவ்ய திருப்பதிகளில் பதினொன்று திருநாங்கூரில் அமைந்துள்ளது மிகவும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் 11 கருட சேவை உற்சவம் நடைபெறும். மிக மிக விசேஷம் இந்த 11 கருட சேவை உற்வசம் தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். இதேபோன்று 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.

தேங்கூரும் திருச்சிற்றம்பலமும் சிராப்பள்ளி
பாங்கூரும் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர் நாட்டு நறையூரே!
என்று ஸ்ரீ சுந்தரர் திருவாக்காகும்.

தலவிருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. திருநாங்கூர் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் தண்வயல் சூழ் தெய்வத் திருத்தலம். பதினொரு வைணவ திருப்பதிகளையும் 11 (ஏகாதசி) ருத்ரர்களையும் தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம் திருக் கயிலாய் மகா தரிசனம் செய்த பெரும் புண்ணியம் சித்திக்கும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெறவும், இழந்த நல்ல விஷயங்களை மீண்டும் பெற்று ராஜயோகத்துடன் பரிபாலனம் செய்யக்கூடிய உச்சத்தை வாழ்வில் பெற இத்தல இறைவியான ஸ்ரீ ராஜமாதங்கியையும் ஸ்ரீ மதங்கீஸ்வரரையும் மனதாற வழிபட்டாலே போதும். திருத்தலம் நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளது.

கடலூர் சீனு.செந்தாமரை

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்