SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடி பெயர்ந்த ராமரும் குணம் தரும் அனுமனும்

2021-04-07@ 14:35:03

செங்கல்பட்டு

சென்னை ராஜதானி என அழைக்கப்பட்ட இன்றைய கேரளம்’ ஆந்திரம் தமிழ்நாடு, கர்னாடகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை, பிரிட்டீஷாரும், டச்சு போர்ச்சுக்கீசியர்களும் காலனிகளை அமைத்துக் கொண்டு கூறு போட்டுக்கொண்டு  சிறு மன்னர்களை அடிமைகளாக்கி வரிவசூல் செய்து கப்பம் கட்ட வைத்தனர். காலத்தின் கட்டாயத்திற்குட்பட்டு இங்கு உள்ளவர்கள் அவர்களுக்கு அடங்கி ஆண்டனர்.

வியாபாரத்திற்காக வந்தவர்கள் வசதிக்காக ரயில் மார்க்கத்தை ஏற்படுத்தத் தொடங்கினர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய இருப்புப்பாதை அமைக்கும் திட்டம்  துவங்கப்பட்டது. தமிழகத்திலும்  தென்னிந்தியாவிலும் ரயில்பாதை அமைக்கும் பணி ராயபுரத்தில் ரயில் நிலையம் கிபி 1856ல் துவக்கப்பட்டது, 1856 ஜூன் 28ம் தேதி முதலில் சென்னை கடற்கரை முதல் அரக்கோணம் வரை ரயில் பாதையும் துவக்கப்பட்டது. தென் தமிழகம் செல்லும் ரயில் பாதைகள் அமைக்க நிலங்கள் அளக்கப்பட்டு காஞ்சிபுரம்’, மகாபலிபுரம் மற்றும் பட்சி தீர்த்தம் எனப்படும் திருக்கழுக்குன்றம் ஆகியவற்றுக்கு இடையே இருப்புப்பாதை அமைக்க நிலங்கள் அளக்கப்பட்டன.

அப்போது குறுக்கிட்டது செங்கல்பட்டு என்னும் ஊர். செங்கல்பட்டில் சுமார் 800 ஆண்டுகட்கு முன்பாக விஜயநகர காலத்தில் அமைக்கப்பட்ட ஏரி, அதை ஒட்டி அமைக்கப்பட்ட கோட்டை கோட்டைக்குள் விஜயநகர மன்னர்களின் வழிபாட்டுத் தெய்வமான ராஜ்ய பரிபாலன ராமர் கோவில் ஆகியவை சிறப்புமிக்கவையாகும்.  திம்மராஜா என்பவர் கட்டிய  கோட்டைக்குள் இருந்ததால்  கோட்டை கோதண்டராமர் என வணங்கப்பட்டார்.

செங்கழுநீர்ப்பட்டு என அழைக்கப்பட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து செழித்திருந்த செங்கழுநீர்பட்டு செங்கல்பட்டு என மருவியது. செங்கல்பட்டு சுற்றியுள்ள பொதுமக்களின் வழிபாட்டிலிருந்த ராஜ்ய பரிபாலன ராமர் கோவிலுக்கு எதிரே சுயம்புவாய் ஒரு பாறையில் ஆஞ்சனேயர் திருவுருவம் கோட்டை வீர ஆஞ்சனேயர்  என்ற பெயரில் அமைந்து இருந்தது.

ஏரி அருகில் இருக்கும் கிராமங் களுக்கு பாசன வசதிக்காகவும். பெய்யும் மழை அனைத்தும் சமுத்திரம் போன்ற அகன்று விரிந்த கொள்வாய் ஏரியாகவும் அமைந்து இருந்தது. இப்போது ‘‘கொளவாய் ஏரி ” என மருவி அழைக்கப்படுகிறது. பெரிய மலைப்பகுதிகளை உடைத்து இருப்புப்பாதை அமைப்பதைவிட  ஏரிக்கரையின் மீது ரயில் பாதை அமைக்க வெள்ளை அரசு முடிவு செய்தது.

ஆனால், ரயில் பாதை அமையும் இடம் ராஜ்ய பரிபாலன ராமர் கோவிலின் குறுக்கே ஆகும். ஆங்கில அரசாங்கம் ஏரிக்கரையைத் தொடர்ந்து கோட்டை ராஜ்ய பரிபாலன  ராமர் கோவில் குறுக்கே நிற்பதை அகற்றிவிட்டு புதிய  ரயில் பாதை அமைக்க முடிவு எடுத்தது. இதனால் கொந்தளிப்பு உண்டாகி எதிர்ப்புகள் வலுத்தது.

சென்னை கவர்னருக்கு பிரிட்டீஷ் மகாராணியிடம் இருந்து வந்த தாக்கீதில் பிரச்னைகளை உரிய முறையில் நியாயவாதிகளைக் கொண்டு பொதுக் கருத்து உருவாக்கி கோயிலைப் பிரித்து கட்டச் சொல்லியது. இப்பணியை  செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தர்மத்திலும் நியாயத்திலும் சிறந்த வக்கீல்கள் வசம் ஒப்படைத்தது மலை அடிவாரத்திலிருந்த மற்றொரு புராதனப் பெருமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே இரட்டைப் பெருமாள் கோயிலாக இக்கோயிலை மாற்றி பழமை மாறாமல் மக்களிடம் ஒருமித்த கருத்தை உருவாக்கி கட்ட முடிவு செய்தனர்.

மலையை ஒட்டி இருந்த வரதராஜர் சந்நதி தெற்கு நோக்கியும், பெருந்தேவித் தாயார் சந்நதி கிழக்கு நோக்கியும் அதே விஜய நகர காலம் முதல் அமைந்து இருந்தது. இரண்டுக்கும் இடையில் கிழக்கு நோக்கி ராமர் சந்நதியை அமைப்பது என கோவில் அமைப்பதில் வல்ல சிற்பிகளைக் கொண்டு முடிவு செய்து, கோட்டைக்குள் இருந்த ராமர் சந்நதியின் கற்கள் ஒவ்வொரு பக்கத்திற்கும் எண்ணிட்டு பிரித்து அனேகருடைய உதவி பெற்று தண்டலம் மிராஸ்தார் வெங்கடாசலம் பிள்ளை என்பவரால் ஆனந்த விமானத்தின் கீழ் முன்னின்று கட்டி முடிக்கப்பட்டது.

கிழக்கு பார்த்து இருந்த ராமர் சந்நதி விக்ரகங்கள் முதல் அனைத்தும் புலிப்பாக்கம் வெங்கட நாராயணப்ப நாயுடு என்பவரால் சேதம் ஏதும் ஏற்படாமல் கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டது. அதேபோல் சப் ஜட்ஜாயிருந்த சூரா நரசிம்மலு நாயுடுகாரு திருமதில், மடப்பள்ளி, வாகன மண்டபம், வசந்த மண்டபம் திருக்குளம் ஆகியவற்றைக் கட்டி, கோபுர வாயிற் கதவு கல்யாண மண்டபம் ஆகியவற்றுக்கு அஸ்திவாரம் போட்டு வைத்தார். இவை அனைத்தும் கி.பி. 1885ம் ஆண்டு நடந்தது.

கோட்டைக்குள் இருந்த சந்நதி வீரஆஞ்சநேயரைப் பெயர்த்து எடுக்க முடியாத நிலை வந்தது. ஒரு சிறிய பாறையில் சந்நதிக்கு எதிரில் சுயம்புவாய் உருவாகி இருந்த வீரஆஞ்சனேயரைப் பிரித்து எடுக்க முடியாத நிலை இருந்ததால் ஆஞ்சனேயர் அவ்வாறே விடப்பட்டது. கோட்டை வீர ஆஞ்சனேயர் இன்றும் அங்கேயே பாறையில் ரயில்வே தண்டவாள ஓரமாகவே பயணிகள் பாதுகாப்பிற்காக எழுந்தருளியுள்ளார். பட்டாபிஷேக ராமர் இருக்கும் இடத்தில் அனுமன் சந்நதி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்ற காரணத்தால் கோட்டைக்குள் இருந்த மற்றொரு வீர ஆஞ்சனேயர் கொண்டு
வரப்பட்டு ராமர் சந்நதியின் வலப்புறம் தனியாக  சிறியதாக அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து விக்டோரியா மகாராணி வேறிடத்தில் மாற்றிக் கட்டப்படும் கோவில் வளர்ச்சி குறித்து ஆர்வமுடன் இருந்தார். மகாராணியாரின் 50வது வயது பிறந்த நாளை முன்னிட்டு 16-02-1887ம் தேதியில் 12.2 தோலா எடையுடைய, 70 பொன் காசுகள் கோர்த்த பொன் காசுமாலையை சக்கரவர்த்தினியவர்கள் பெயரால் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ரீடர் மா ராமானுஜ நாயுடு சமர்ப்பித்தார். அப்போதே அதன் மதிப்பு ரூபாய் 300 ஆகும்.

07-04-1877ம் ஆண்டில் புதியதாக செங்கல்பட்டு ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து பிரித்து மலையடிவாரத்தில் கொண்டு வந்து கட்டப்பட்ட  குடிபெயர்ந்த ராமர் சந்நதிக்கு திருக்கடல் மல்லை திவ்விய தேசப் பெருமாளான ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார். அப்போது செங்கல்பட்டு ராஜ்ய பரிபாலன ராமர்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் இங்கிலாந்து சக்கரவர்த்தினியவர்கள் வேண்டுதல் செய்து சமர்ப்பித்த பொன் காசு மாலை முதன்முறையாக சார்த்தப்பட்டு சிறப்பாக  நடைபெற்றது.

இந்த வரலாறுகள் ராமர் கோயிலின் கிழக்குப்பக்க முன் வாயில் மரக் கதவிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளைச் செம்புப் பட்டயத்தின் மூலமும் கதவின் அருகினிலுள்ள கல்வெட்டின் மூலமும் அறிய முடிகிறது. கோயில் கட்டி முடித்து பிரபலமாகத் தொடங்கியவுடன் கோயில் பின்புறம் பழைய சாலை அமைக்கப்பட்டது. முன்புறம் இருந்த நிலங்கள் மனைகளாக அமைக்கப்பட்டு சுற்றிலும் வீடுகள் அமைந்தன. தனியாக அமைக்கப்பட்ட ராஜ்ய பரிபாலன பட்டாபிஷேக ராமர் கோயில் வேதாசலம் நகர் என்ற பகுதிக்குள் அடங்கியது.

மூலவர் ராஜ்ய பரிபாலன பட்டாபிஷேக ராமர் பத்திராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதை இடப்புறம் அமர்ந்திருக்க பின்புறம் தம்பி லட்சுமனன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்கின்றனர். ராமருக்கு வலப்புறம் பரதனும் இடப்புறம் சத்ருக்ணனும் கைகூப்பித் தொழுத வண்ணம் காட்சி தருகின்றனர். அனுமன் எதிரில் கைகூப்பி வணங்கும் பாவனையில்  இருக்கின்றார். சந்நதியின் பின்புறம் ஆண்டாள் சந்நதியும் இடப்புறம் வரதராஜர் சந்நதியும் உள்ளது, வெளிப்பிராகாரத்தில் வரதராஜப் பெருமாளின் தனிக்கோவில் நாச்சியார் பெருந்தேவித் தாயார் அமர்ந்த கோலத்தில் இருந்து அருளுகிறாள். இதைத்தவிர ஆழ்வார்கள் சந்நதி, கருடன் சந்நதி ஆகியவை அமைந்துள்ளன.

திருக்கோவிலின் வடகிழக்கு மூலையில் தனி வீர ஆஞ்சனேயர் கீழ்ப்பாகத்தில் சனி பகவானை வதம் செய்யும் சனி துயர் துடைக்கும் ஆஞ்சனேயராகத்
தோன்றினார். சீதையை மீட்க ராமன் யுத்தம் செய்து கொண்டிருந்தான். அனுமன் இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டும் பணியில் ஈடு பட்டிருந்தார். எல்லோரையும் பிடிப்பதைப்போல் சனி பகவான் அனுமனையும் பிடிக்க அருகில் சென்றார். தான் ராமனுக்காக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதனால், பின்னர் வந்து பிடித்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார். அவரை தலையில் பிடித்துக் கொள்ள வேண்டியது தன் கடமை என சனீஸ்வரர் பிடிவாதம் பிடித்தார். அனுமன் தான் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் பணிக்கு இடையூறு இல்லாதவாறு காலில்  பிடித்துக் கொள்ளுமாறு கூறினார்.

சரியென சனீஸ்வரன் காலடிக்கு வர கடுமையான பணியில் ஈடுபட்டிருந்த அனுமன் அவரை கவனிக்காமல் காலடியில் மாட்டிக் கொண்டார். காலடியில் மாட்டிய சனீஸ்வரன். அனுமனின் பலத்தையும் வீரத்தையும் கண்ணால் கண்டதால் அவரைப் பிடிக்க வந்ததற்காக மிக வருந்தி இனிமேல் உங்களையும் உங்கள் பக்தர்கள் இருக்கும் பக்கமும் திரும்பவே மாட்டேன். என்னை விடுவியுங்கள் என வேண்ட அவர்கள் எவருக்கும் எவ்விதமான தொந்தரவும் தரமாட்டேன் என சத்தியம் செய்தார், சனீஸ்வரன்.

அனுமனும் பணி செய்ய வந்த அவரை  சிரமப்படுத்தியதற்காக வருந்தி விடுவித்தார். இதனால் அனுமனை வணங்கியவர்களை சனீஸ்வரன் துன்பப்படுத்துவது இல்லை என ஆனந்த ராமாயணத்தில் குறிப்பு உள்ளது. அதனடிப்படையில் அமைந்த மிக அபூர்வமான சந்நதி அமைந்த கோயில் ஆகும். இவருக்கென பிரார்த்தனைகள் தனியாக  நடைபெறுகின்றன. எந்த காரியங்கள் நடைபெற வேண்டுமென பிரார்த்தனை செயது கொண்டு சந்நதியில் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் பழக்கம் உண்டு. பிரார்த்தனைகள் வெற்றி பெற்றவுடன் தேங்காய் முடிச்சவிழ்த்து உடைத்து ஆஞ்சனேயருக்கு அர்ச்சனை செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. வேண்டியோருக்கு வேண்டிய வகையில் வரம் அருளும் வரப்பிரசாதி இந்த ஆஞ்சனேயர் ஆகும்.

வில்வத்தையும் புன்னை மரத்தையும் தலவிருட்சமாகக் கொண்ட இத்திருக்கோவில் தினமும் 2 கால பூஜைகள் நடைபெறுகின்ற திருக்கோயிலாகும். காலை 7.30 மணி முதல் 11.00 மணி வரையும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையும் பொதுமக்கள் தரிசனத்திற்காக சன்னதி திறந்திருக்கும். மற்ற வார நாட்களில் புதன்கிழமைகளில் வரதராஜரையும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோதண்டராமரையும், அனுமனையும் வழிபாடு செய்வது என்பது அதிக பலனையும் அளிக்கிறது என்பது கருத்தாக உள்ளது. இந்நாட்களில் ராமர் சந்நதியில் வேண்டிக்கொண்டு அனுமார் சந்நதியில் தேங்காய் கட்டுவது என்பது பழக்கத்தில் உள்ளது.

 மாத அமாவாசை பூசம் மூலம் ஆகிய நாட்களில் அனுமன் மற்றும் ராமருக்கு திருமஞ்சனம் செய்து வழிபாடு செய்வதும் பழக்கத்தில் உள்ளது. அதனோடு தாயார் சன்னதியில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்வதே தாலி பாக்கியம் ஏற்படுவதற்கும் தாலி பலம் பெறுவதற்கும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது பொதுமக்கள் வசதிக்காக ரயில் நிலையம் அமைய இடம் கொடுத்து குடி பெயர்ந்து வந்தமர்ந்து பதவி.

இழந்த பலருக்கு  பதவி  திரும்பவும், பலருக்கு பதவி உயர்வும், பிரிந்த தம்பதியர் சேரவும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடவும். வழக்குகளில் வெற்றி பெறவும், ஆட்டம் கண்ட அரசுகள் நிலை பெறவும் மஹாராணிகள் காணிக்கை வழங்கியும் உள்ள கோவில் மட்டுமில்லாமல். இன்றைக்கும் செங்கல்பட்டு நீதிபதிகளும் சிப்பந்திகளும் ஒருநாள் தங்கள் சார்பாக உபயம் நடத்தும் ராஜ்ய பரிபாலன ராமர் மற்றும் சனீஸ்வர உபாதை நீக்கி சனித் துயர் நீக்கும் ஒரு கோவிலாக அமைந்துள்ளது.

 செங்கல்பட்டு வேதாசல நகரில் குடிபெயர்ந்து அருளும் கோதண்டராமர்  திருக்கோவிலுக்கு நீங்களும் ஸ்ரீராம நவமி உற்சவத்தில் ஒரு நாளிலோ அல்லது பிற நாட்களில் ஏதாவது  ஒருமுறை சென்று தரிசனம் செய்து பலன் பெற்று வாருங்களேன் . செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து உள்ளது.

இரா. இரகுநாதன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்