SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகரங்கள், கிராமங்களில் உள்ள ஆலயங்களில் வழிபாட்டு முறைகளில் வித்தியாசம் காணப்படுவது ஏன்?

2021-03-22@ 12:46:33

நகரங்களில் உள்ள ஆலய வழிபாட்டு முறைக்கும் கிராமங்களில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைக்கும் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முரண்பாடு?
 - சுந்தரமூர்த்தி, திருவாண்டார்கோவில்.

நகர கோவில்களிலும், கிராமக் கோவில்களிலும் உள்ள தெய்வங்களின் உருவங்கள் மட்டுமல்ல, வழிபாட்டு முறையும் வித்தியாசப்படுகிறது. நம் கண்களுக்குப் புலப்படாத இறைசக்தியை வழிபடுவதற்கும், ஆஹூதிகள் கொடுப்பதற்கும் அக்னியைத் தூதுவனாகப் பயன்படுத்துகிறது இந்து மதம்.
‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அதனால் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் இந்து மதத்தில் ஹோமங்கள் செய்யப்படுகின்றன. வரலாற்றினை ஆதாரமாகக் கொண்டு காணும்போது ஆதியில் மனிதன் தனது அறிவிற்கு எட்டாத இடி, மின்னல், காற்று, மழை முதலான இயற்கை சீற்றங்களைக் கண்டு அஞ்சினான். அவற்றை வருணன் என்றும், இந்திரன், அக்னி என்றும் பெயரிட்டு வணங்கினான். நாளடைவில் தன் கண்களுக்குத் தெரிந்த சூரிய, சந்திரர்களை வணங்க ஆரம்பித்தான்.

கிரஹண காலங்களில் சூரிய, சந்திரர்களையும் விட பெரிய சக்தி ஏதோ ஒன்று உள்ளது என்று பயப்பட ஆரம்பித்தான். இவ்வாறு தனது அறிவிற்கு எட்டாத, தான் பயப்படுகின்ற சக்திகளை இறைசக்தி என்று நம்ப ஆரம்பித்தான். மனித நாகரிகம் வளர, வளர இறைவனுக்கும் தன்போலவே கை, கால்கள், தலை, என உருவகப்படுத்தி வணங்க ஆரம்பித்தான். தான் வாழுகின்ற பகுதியில் எந்தப் பொருள் அதிகமாக விளைகிறதோ அதனை இறைவனுக்கும் உணவாக அளித்து வணங்கினான்.

மனிதனுக்கு அழிவு இருந்தாலும் இறைவனுக்கு அழிவில்லை என்பதை உணர்ந்துகொண்டான். மனித நாகரிகம் வளர்ந்திருந்த காலத்திலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட தனது வீட்டினை சுண்ணாம்பினாலும், களிமண்ணாலும் கட்டிக்கொண்ட மனிதன், இறைவனுக்கு மட்டும் மிகவும் உறுதியான கருங்கற்களால் ஆலயங்களை எழுப்பினான். மன்னர்களின் அரண்மனைகள் அழிந்தாலும் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் இன்றும் உறுதியாய் நிற்கின்றன.

மனிதனைக் காட்டிலும் இறைவன் உயர்ந்தவன் என்பதை உணர்ந்தாலும், அந்த இறைசக்தியை மனிதன் ஆதிகாலம் முதல் இன்று வரை என்றுமே தன்னிலிருந்து பிரித்துப் பார்ப்பதில்லை. தனக்கு பிடித்த உணவு வகைகளையே இறைவனுக்கும் வைத்து படையலிட்டான். தங்களுடைய பாதுகாப்பிற்காக பயன்படுத்திய கருவிகளை இறைவனின் கையிலும் கொடுத்து அந்த இறைசக்தி தங்களைக் காக்கும் என நம்பினான். இதனாலேயே கிராமப்புறங்களில் வீச்சரிவாள் முதலான ஆயுதங்களைத் தாங்கிய ஐயனார் சிலைகள் அமைக்கப்பட்டன.

நகர்ப்புறங்களில் அத்தகைய பயம் இல்லை என்பதால் வழிபாட்டு முறை மாறுகிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையைக் கொண்ட நகரங்களில் மன அமைதியை நாடுபவர்கள் அதிகம் என்பதால் சாயிபாபா முதலான குருமகான்களின் வழிபாட்டிற்கு மக்கள் கூட்டம் கூடுகிறது. நாம் வாழுகின்ற முறையும், கலாச்சாரக் கட்டமைப்புமே இறை வழிபாட்டினில் மாறுபாடு உண்டாவதற்குக் காரணம். மற்றபடி பரம்பொருள் ஒன்றுதான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்