SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறளில் நூறும் ஆயிரமும்!

2021-03-16@ 12:24:08

குறளின் குரல்: 143

வள்ளுவர் தமது 1330 குறட்பாக்களால் அகில உலகப் புகழைப் பெற்றுவிட்டார். அவர் நூறு என்ற எண்ணையும் ஆயிரம் என்ற எண்ணையும் தம் இரு குறட்பாக்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

`ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்
உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு’
(குறள் எண் 932)
ஒன்றைப் பெற்று நூற்றினை இழந்து
போகும் சூதாடுபவர்க்கு நல்லதைப் பெற்று வாழும் ஒரு வழி உண்டோ? இல்லை என்கிறது திருக்குறள்.

சூதாடுதல் எவ்வளவு கெடுதலானது என்பதைச் சொல்லவென்றே ஒரு புராணமும் ஓர் இதிகாசமும் எழுந்தன. நள சரிதம் நள மகாராஜன் சூதாடியதால் நேர்ந்த விளைவுகளைச் சொல்கிறது. அவன் தன் காதல் மனைவி தமயந்தியையும் பிரிய நேரிட்டது. தமிழில் அதிவீரராம பாண்டியன் எழுதிய நைடதமும் புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவும் நளனது கதையைப் பேசுகின்றன. `நளன் சரிதம்’ மகாபாரத காலத்திற்கும் முற்பட்டது.மகாபாரதம் தர்மபுத்திரர் சூதாடியதால் நேர்ந்த விளைவுகளைப் பேசுகின்றது. பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியோடு வனவாசத்தில் வாழும் காலத்தில் அவர்களைச் சந்திக்க வருகிறார் வியாச முனிவர்.

அவரிடம் `என்னைப் போல் சூதாடி
நாடிழந்து அவமானப் பட்டவர் யாருண்டு '
என வருந்துகிறார் தர்மபுத்திரர்.
`உன் கஷ்டத்தை விடவும் அதிக கஷ்டத்தைச் சூதாடியதால் அனுபவித்தான் முன்னர் நளன் என்றொரு மன்னன். நீ உன் மனைவியோடு வசிக்கிறாய். அவனோ தன் மனைவியையும் இழந்து துயரடைந்தான்’ எனக் கூறி நளனது சரிதத்தை விளக்கி தர்மபுத்திரரை ஆறுதல்படுத்துகிறார், வியாச முனிவர்.

`அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.’ (குறள் எண் 259)

-என்ற குறளில் ஆயிரம் என்ற எண்ணைப் பயன்படுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.

நெய் முதலிய பொருட்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் யாகங்கள் செய்வதை விடவும், ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது என்பது இந்தக் குறளின் பொருள். புலால் மறுத்தலை ஓர் உயர்ந்த அறமாக இந்தக் குறள் போற்றுகிறது. பின்னாளில் தமிழகத்தில் தோன்றிய ஆன்மிக ஞானி வள்ளலாரும் கொல்லாமையைத் தீவிரமாக வலியுறுத்தினார்.

மகாபாரதத்தில் நூறு என்ற எண் முக்கியத்துவம் பெறுகிறது. கெளரவர் நூறுபேர் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அவர்கள் நூற்றியோரு பேர்.திருதராஷ்டிரரின் மனைவி காந்தாரி கருவுற்றிருந்தபோது அவள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அப்போது கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய சுகதா என்ற ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டாள். அவளது பணிவிடை திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியது. அதன் காரணமாக அந்தப் பணிப்பெண்ணும் கருவுற்றாள்.

அவளுக்குப் பிறந்த பிள்ளையின் பெயர் யுயுத்சு. இவன் பண்புகளில் கெளரவர்களிலிருந்து மாறுபட்டவனாக இருந்தான். தர்மநெறி
களிலேயே இவன் நாட்டம் சென்றது.மகாபாரதப்போர் தொடங்கிய தருணத்தில், யுதிஷ்டிரர் யாரேனும் அணி மாற விரும்பினால் மாறும் உரிமை உண்டு என அறிவித்தார். அப்போது யுயுத்சு கெளரவர்களை விடடு விலகி பாண்டவர் அணியில் சேர்ந்துவிட்டான்.

யுத்த முடிவில் கெளரவர்கள் நூறுபேர் அழிய பாண்டவர் அணியிலிருந்த யுயுத்சு மட்டும் கண்ணன் அருளால் காப்பாற்றப்பட்டான். பின்னர் திருதராஷ்டிரர் காலமானபோது யுயுத்சு தான் அவருக்கு இறுதிக்கடன் செய்தான் என்று மகாபாரதம் பேசுகிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்பது பீஷ்மரால் பஞ்ச பாண்டவர்கள் முன்னிலையில் போர்க்களத்தில் அருளப்பட்ட புனித நூல். கீதைசொன்ன கிருஷ்ண பகவான், கீதையைப் போர்க்களத்திலேயே அர்ச்சுனனுக்கு உபதேசித்தார். கிருஷ்ணர் கடவுள் என்பதை உணர்ந்துகொண்ட பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது அவரும் போர்க் களத்திலேயே ஆயிரம் நாமங்களால் கண்ணனைத் துதித்தார்.

அந்த ஆயிரம் நாமங்களின் தொகுப்பே ஸஹஸ்ர நாமம். ஸஹஸ்ரம் என்ற சம்ஸ்க்ருதச் சொல் ஆயிரம் என்ற பொருளுடையது. சஹஸ்ரநாம ஸ்லோகத்தைச் சொல்வது எண்ணற்ற மங்கலங்களைத் தரும் என்றும், முக்கியமாக நோயற்ற உடல் நலனைத் தரும் என்றும் மகாசுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார்.

கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பற்றி கம்பராமாயணத்தின் இடையே நூறு நூறு பாடல்களுக்கு ஒருமுறை அவர் பெயர் இடம்பெறுமாறு முதலில் இயற்றியிருந்தார் என்று ஒரு செவிவழிக் கதை சொல்கிறது. அரங்கேற்றத்தின்போது அதைக் கேட்ட பிற புலவர்கள் நரஸ்துதி அதிகமாக உள்ளது, நன்றியுணர்வு முக்கியம் என்றாலும் ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளல் பெயர் இடம்பெற்றால் போதும் எனக் கருத்துக் கூறினார்களாம்.

அதைக் கேட்ட கம்பர், `என்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூற்றில் ஒருவர் என நினைத்தேன், ஆனால் இப்போதுதான் அவர் ஆயிரத்தில் ஒருவர் எனப் புரிந்துகொண்டேன்!’ என நகைத்தவாறே பதில் சொல்லி, பின் மற்ற புலவர்களின் கருத்தை ஏற்று அதன்படியே மாற்றிப் பாடினாராம்.
சடையப்ப வள்ளலைப் பட்டாபிஷேக நிகழ்விலும் நினைவுகூர்கிறார் கம்ப நாட்டாழ்வார். சடையப்ப வள்ளலின் முன்னோர் வசிஷ்டரிடம் மணிமகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி வசிஷ்டர் ராமபிரானுக்கு முடிசூட்டினார் என்கிறது கம்ப ராமாயணப் பாடல்.

`அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் வாங்க
பரதன் வெண் குடை கவிக்க
இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலியோங்க
வெண்ணெய்மன் சடையன் வண்மை
மரபுளோர் கொடுப்ப வாங்கி
வசிஷ்டனே புனைந்தான் மெளலி.’

கம்பர் மகன் அம்பிகாபதி குலோத்துங்க சோழனின் மகளான இளவரசி அமராவதியைக் காதலித்ததாகச் சொல்லும் காதல் கதை நூறு என்ற எண்ணைக் கணக்கிடுவதில் நேர்ந்த ஒரு சிறிய கணிதப் பிசகால் உயிரே போன அவலத்தைத் தெரிவிக்கிறது.கவிஞன் மகன் மன்னன் மகளைக் காதலிப்பதாவது? கம்பர் மேல் பொறாமை கொண்ட ஒட்டக்கூத்தரின் மனம் மறுகியது. மன்னன் குலோத்துங்கனிடம் ஒரு போட்டி அறிவித்து அதில் வெற்றி பெற்றால் அம்பிகாபதியை அமராவதிக்குப் பதியாக்கலாம், தோற்றால் அம்பிகாபதிக்கு மரண தண்டனை வழங்கலாம் என வாதிட்டார் ஒட்டக்கூத்தர்.

மன்னனும் மற்றுள்ள அனைவரும் ஒப்புக்கொண்டனர். அம்பிகாபதி சிற்றின் பம் கலவாமல் நூறு பாடல்கள் பாட வேண்டும் என்பது விதிக்கப்பட்ட நிபந்தனை.கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்கிறபோது கம்பன் மகன் கவிபாடக் கேட்க வேண்டுமா என்ன? அரசவையில் போட்டி அரங்கேறியது. கடவுள் வாழ்த்தைப் பாடி, பின்னர் தொண்ணூற்றி ஒன்பது பாடல்களைப் பாடினான் அம்பிகாபதி. கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு எனக் கணக்கிட்டுவிட்டு அடுத்த பாடலைக் காதல் மயக்கத்தில் சிற்றின்பப் பாடலாகப் பாடினான்.

கடவுள் வாழ்த்தைக் கணக்கில் சேர்க்கக் கூடாதாகையால் அவன் போட்டியில் தோற்றதாக அறிவிக்கப்பட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்தாள் அவனை உயிருக்குயிராக நேசித்த அமராவதி. தன் ஆருயிர்க் காதலன் அம்பிகாபதியின் உடல்மேல் விழுந்து அவள் தானும் உயிர்நீத்தாள் என்கிறது அந்த உருக்கமான காதல் கதை.தூய காதலின் குறுக்கே  நூறு வில்லன்கள் வரலாம். ஆனால் நூறு என்ற எண்ணே வில்லனாக வந்த சோகத்தை என்ன சொல்ல!

நாராயணனுடனான தன் திருமணத்தைப் பற்றிக் கனவு காண்கிறாள் ஆண்டாள் நாச்சியார். திருமால் `ஆயிரம்' யானைகள் புடைசூழ ஊர்வலமாக வருவதாகவும் அப்போது பொன்மயமான பூரண கும்பங்கள் வைத்து நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாகவும் தன் கனவில் கண்ட காட்சியை மிக அழகிய தமிழ்ப் பாசுரத்தில் ஆண்டாள் பதிவு செய்திருக்கிறாள்.

`வாரண மாயிரம் சூழ வலம்வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்!’

ஆயிரம் யானைகள் புடைசூழ நாராயணன் ஊர்வலம் வருவதாகக் கனவுகாணும் ஆண்டாளின் கற்பனை வளம் எத்தனை அழகானது!
நூறின் மடங்காய்த் தொகுக்கப்பட்ட நூல்கள் தமிழில் பல உண்டு. சங்கப் பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு போன்ற நூல்களெல்லாம் நூறின் மடங்காகவே தொகுக்கப்பட்டுள்ளன.

நூறு பாடல்களைக்கொண்டு புனையப் பட்ட தொகுப்பல்லாத தனிச் செய்யுள் நூல்கள் தமிழில் உண்டு. அவை சதகம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. சதம் என்ற சம்ஸ்க்ருதச் சொல். நூறு என்ற பொருளைத் தருவது. அந்தச் சொல்லின் அடியாகப் பிறந்ததே சதகம் என்ற சொல். சதகம் என்ற சொல்லுக்கு நூறு கொண்டது எனப் பொருள். தோத்திர நூல்கள், நீதி நூல்கள், வரலாற்று நூல்கள் என மூன்று வகையிலும் சதக நூல்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளன.

கார்மண்டலச் சதகம், தொண்டை மண்டலச் சதகம், சோழமண்டலச் சதகம், கொங்கு மண்டலச் சதகம் எனச் சதக நூல்கள் பல உண்டு. கொல்லிமலை அருகே அறப்பள்ளி என்னும் சிற்றூரில் எழுந்தருளி யுள்ள இறைவன் மீது அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுவர சதகம் புகழ்பெற்றது.
சுப்ரமண்யஐயர் என்னும் இயற்பெயரைக் கொண்டவரும் அன்னை அபிராமியின் பக்தருமான அபிராமி பட்டரால் பாடப்பட்ட அபிராமி அந்தாதி மொத்தம் நூறு பாடல்களைக் கொண்ட உயரிய பக்தி நூல்.

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் காலத்தைச் சேர்ந்தவர் அபிராமி பட்டர். மன்னர் ஓர் அமாவாசையன்று கோயிலுக்கு வந்தார். மன்னரின் வருகையைக் கூடக் கவனிக்காமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் அபிராமி பட்டர். தரிசனம் முடிந்து திரும்பிவரும்போது மீண்டும் அபிராமி பட்டரைப் பார்த்தார் மன்னர். அவர் பக்திமானா இல்லை பித்தரா? அறியவேண்டி இன்று என்ன திதி என்று அவரிடம் கேட்டார்.

தேவியின் நிலவு போன்ற திருமுகத்தை அகக்கண்ணால் தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் வாய்தவறி இன்று பெளர்ணமி எனச் சொல்லி விட்டார்.தியானம் கலைந்தெழுந்த பட்டர் தாம் சொன்னதை எண்ணி வருந்தினார். அரசர் வரும் வேளையில் பக்திப் பெருக்கால் தான் செய்த தவறை அபிராமியே சரிசெய்ய வேண்டும் என முடிவு செய்தார். அபிராமி சந்நதி முன் ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகடுக்கித் தீ மூட்டினார். தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

அதற்கு மேல் ஒரு விட்டம் அமைத்து அதில் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்தார். `அம்பிகை நான் நூறு பாடல்கள் பாடுவதற்குள் எனக்குக் காட்சி தந்து நான் பொய் சொன்னேன் என்ற என் பழியைத் துடைக்காவிட்டால் தீப்பாய்ந்து உயிர்விடுவேன்` எனச்
சூளுரைத்தார்.

`உதிக்கின்ற செங்கதிர்’ என்று தொடங்கி நூறு பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடலானார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்துக் கொண்டே வந்தார். எழுபத்தெட்டு கயிறுகள் அறுக்கப்பட்டுவிட்டன. எழுபத்தொன்பதாவது பாடலைப் பாடத் தொடங்கினார் பட்டர்.`விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்னவழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழி கிடக்கப்பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செயது பாழ்நரகக்குழிக்கே அழுந்தும் கயவர் தம் மோடென்ன கூட்டினியே’இந்த அழகிய பாடலைக் கேட்ட அம்பிகை நேரில் வெளிப்பட்டுத் தோன்றினாள்.

தன் தாடங்கம் என்னும் காதணியை எடுத்து வானில் வீசினாள். அது வானில் மிதந்து பெளர்ணமியாய் ஜொலித்தது.`நீ சொன்ன சொல்லை மெய்யாக்கினேன். நீ நினைத்தவாறு நூறு பாடல்களையும் பாடி அபிராமி அந்தாதியைப் பூர்த்திசெய்!’ எனச் சொன்ன அம்பிகை காற்றில் கலந்து மறைந்தாள்.

அபிராமி பட்டர் மனமுருகிப் பாடித் தம் மீதி நூலையும் நிறைவு செய்தார். வியந்த மன்னர் பட்டரை வணங்கி அவருக்கு ஏராளமான மானியங்கள் கொடுத்து கெளரவப் படுத்தினார் என்கிறது அபிராமி பட்டரின் வரலாறு.திருக்குறளில் ஆயிரம் அல்ல, கோடிக் கணக்கில் கருத்துகள் கொட்டிக் கிடக்
கின்றன. தமிழின் பொக்கிஷமான அதைப் பயின்று அந்தக் கருத்துகளை நாம் பின்பற்றத் தொடங்கினால் தமிழகம் சொர்க்கமாகும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்