SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர் பதவி கிட்டும்!

2021-03-11@ 11:20:39

?நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்து ஏப்ரலில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மணப்பெண் என்னை வேண்டாம் என்று சொல்கிறார். பெண் பார்க்கும் படலத்திலும் நிச்சயதார்த்த  விழாவின்போதும் நன்றாக இருந்தவர் தற்போது மறுப்பதற்கான காரணம் தெரியவில்லை.
உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- ரமேஷ்குமார், திருவண்ணாமலை.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் கேது புக்தி நடக்கிறது. கேது எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் தற்போது  திருமணத்திற்கு உகந்த நேரம் என்று சொல்ல இயலாது. உங்கள் ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவம் சுத்தமாக உள்ளது. ஏழிற்கு அதிபதியான குரு இரண்டாம் வீட்டில்  அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே. உங்களைப் புரிந்துகொண்டு, உங்களது உயர்விற்கு பக்கபலமாகத் துணை நிற்கும் பெண்ணை மனைவியாக அடைவீர்கள். இந்தப் பெண்ணை கட்டாயப்படுத்த வேண்டாம்.  அவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும்போது உங்கள் ஜாதகத்தோடு அத்தனை உசிதமாக பொருந்தவில்லை. மேலும் அவரது மனதில் வேறு யாரையோ நினைத்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.  பெற்றோரின் கட்டாயத்தினால் அந்தநேரத்தில் அவர் ஒத்துக்கொண்டிருப்பார். நல்ல வேளையாக இப்போதே சொன்னாரே என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி  சந்நதியில் நெய்விளக்கு ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். 25.10.2021ற்குப் பின் உங்கள் மணவாழ்வு என்பது மங்களகரமாக அமைந்துவிடும்.
“நிரவதி ஸூகம் இஷ்ட தாதார மீட்யம் நதஜந மநஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபிந தவாக்நி நாமதேயம் ஸததமஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.”
 
?கடந்த மூன்று ஆண்டு காலமாக தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. இன்னும் என் இரு மகன்களுக்கும் திருமணம் நடக்கவில்லை. நான் என் பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக  நடத்தி பேரன், பேத்திகளை பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? உடல்நலம் சீரடைய உரிய
பரிகாரம் சொல்லுங்கள்.
-    மணிவாசகம், மயிலாடுதுறை.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் எட்டில்  அமர்ந்திருப்பதால் ‘நித்யகண்டம் பூர்ணாயுசு’ என்ற அமைப்பினைப் பெற்றுள்ளீர்கள். ஆயுளைக் குறிக்கும் எட்டாம் வீட்டில் சூரியன்- புதன்- ராகு இணைந்திருப்பது பலவீனமான நிலை என்றாலும், குருவும்,  செவ்வாயும் ஆட்சி பலத்துடன் அமர்ந்து உங்கள் ஆயுளைக் காக்கிறார்கள். முடிந்த வரை அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளில் உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ள  முயற்சியுங்கள். மருத்துவர்களின் ஆலோசனையின்படி பத்திய உணவினை உட்கொள்வது நல்லது. உங்கள் மனதில் மரணபயம் உண்டாகியிருப்பதை உங்கள் கடிதத்தில் வாயிலாக அறியமுடிகிறது. பிரதி  மாதம் தோறும் வருகின்ற உங்கள் ஜென்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளன்று வைத்தீஸ்வரன்கோவில் திருத்தலத்திற்கு சென்று முத்துக்குமார சுவாமியை தரிசித்து பிரார்த்தனை கொள்ளுங்கள்.  தினந்தோறும் மாலையில் விளக்கேற்றி வைத்து வீட்டுப் பூஜையறையில் கந்தசஷ்டி கவசம் படித்து வருவதும் உங்கள் பயத்தினைப் போக்கும். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி தினந்தோறும்  சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி வர பயம் நீங்கி ஆரோக்கியமாக
வாழ்வீர்கள்.
“ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்த்தம் ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே முகாந்நிஸ்ஸரந்தே கிரச்சாபி சித்ரம்.”
 
?திருமணத்திற்கு முன்பு நிம்மதியாக இருந்த நான் மணமான நாள் முதலாக கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறேன். கடன் சுமையைத் தவிர மற்றபடி குடும்பத்தில் வேறு ஏதும் பிரச்சினை  இல்லை. கடனிலிருந்து விடுபட உரிய பரிகாரம்
கூறவும்.
-    முருகானந்தம், பெங்களூரு.

 ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் நீசம் பெற்றிருப்பதும்,  மூன்றாம் பாவத்தில் சனி - கேது இணைந்திருப்பதும் பலவீனமான அம்சம் ஆக உள்ளது. தைரியக் குறைவும், அவ்வப்போது உண்டாகும் தயக்கமும், எந்த ஒரு விஷயத்தின் மீது உண்டாகும் சந்தேகமும்,  நம்பிக்கையின்மையும் உங்கள் வெற்றிக்குத் தடைக்கற்களாய் அமைந்துள்ளன. கடக லக்னத்தில் பிறந்துள்ள நீங்கள் எதையும் நம்மால் சாதிக்க இயலும் என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக்  கொள்ளுங்கள். கடனாளி ஆனதற்கு திருமணம் காரணமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடந்து குடும்பம் என்ற ஒன்று உங்களுக்கு இருப்பதால் தான்  நல்ல மனிதராக இந்த உலகத்தில் நடமாடி வருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சுற்றி இருப்பவர்களை நம்பாது உங்கள் மீது நம்பிக்கையை வையுங்கள். பிரதி சனிக்கிழமை தோறும்  ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்யுங்கள். 14.09.2021  முதல் கடன் பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரக் காண்பீர்கள்.

?13 வயது ஆகும் என் மகன் இன்னமும் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறான். எத்தனை முறை கண்டித்தும் பலன் இல்லை. இந்தப் பிரச்சினை தீர உரிய
பரிகாரம் சொல்லுங்கள்.
- கிருஷ்ணகுமார், ஆரணி.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது கேது தசை துவங்கியுள்ளது. ஜென்ம லக்னத்தில் சனியும் ராகுவும் இணைந்திருப்பதும், கேது ஏழில்  சனியின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதும் சற்று பலவீனமான அம்சம் ஆகும். அவருடைய ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் பிடிவாத குணமே அவரை இவ்வாறு நடந்துகொள்ளச் செய்கிறது. அவரைக் கடிந்து  பேசுவதோ, திட்டுவதோ கூடாது. சென்னை போன்ற பெருநகரத்தில் உள்ள தலைசிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று அவரது ஆழ்மனதில் புதைந்துள்ள ஆசைகளைப் பற்றித் தெரிந்து  கொள்ளுங்கள். அவர் மனம் தெளிவடைந்தால் இந்தப் பிரச்னை முற்றிலும் காணாமல் போய்விடும். பிரதி சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் எட்டு முறை சந்நதியை வலம்  வந்து வணங்கச் செய்யுங்கள். தினமும் இரவில் படுப்பதற்கு முன்னர் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயரை வழிபட்ட பின்பு உறங்க வேண்டும் என்று பழக்கப்படுத்துங்கள். மன வலிமை  கூடுவதுடன் அவரது குறையும் காணாமல் போகும். உங்கள் மகன் எதிர்காலத்தில் உயர் பதவியில் அமர்ந்து பெருமை தேடித் தருவார். கவலை வேண்டாம்.

“மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராம
தூதம் சிரஸா நமாமி.”

?நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சொத்துப் பிரச்னை வழக்கில் தீர்ப்பு எதிர்தரப்பிற்கு சாதகமாகி உள்ளது. மேல்முறையீடு செய்ய வேண்டும். என் பரம்பரை சொத்து எனக்கு கிடைக்குமா,  அல்லது கடைசி வரை இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டுமா, நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள்.
- காரைக்கால் வாசகர்.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் நீசம் பெற்றதோடு  12ம் இடத்தில் அமர்ந்திருப்பதும், சூரியனும், சனியும் அதே இடத்தில் இணைந்திருப்பதும் பலவீனமான அம்சமாக உள்ளது. தற்போது நிகழும் கிரகநிலையின் படி எதிரிகள் உங்களை எளிதில் ஏமாற்றி  விடுவார்கள். மேல்முறையீடு செய்தாலும் சாதகமான பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. நிதானமாக யோசித்துச் செயல்படுங்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் உழைக்க மறக்காதீர்கள்.  அதிர்ஷ்டத்தினை நம்பாது உழைப்பினை நம்புங்கள். உண்மையான உழைப்பு மட்டுமே உங்கள் வாழ்வினில் உயர்வு தரும். இஷ்டப்பட்டு உழைப்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் காணாமல் போகும்  என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரதி மாதம் வரும் பௌர்ணமி நாளில் விரதம் இருந்து திருக்கடையூருக்குச் சென்று மாலையில் சந்திரோதயத்துடன் அபிராமி அன்னையை தரிசித்த பின்பு  உணவருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.‘தனந்தரும் கல்வி தரும்’ என்று துவங்கும் அபிராமி அந்தாதி பாடலைச் சொல்லி அம்பிகையை அனுதினமும் வழிபட்டு வாருங்கள். உங்கள் உழைப்பின்  பலனாகக் கஷ்டங்கள் காணாமல் போவதை அனுபவித்து உணர்வீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்  திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்