SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

2021-03-11@ 11:14:31

1. லிங்கோத்பவர்

பிரம்மனும், திருமாலும் முறையே இறைவனின் முடியையும் அடியையும் காண முயன்றனர் அல்லவா? அப்போது இறைவன் கொண்ட கோலமே லிங்கோற்பவ மூர்த்தம் எனப்படும். சிவாலயங்களில்  சுவாமி சந்நதிக்குப் பின்புறம் இத்திருவுருவம் அமைந்திருக்கும். அகண்டாகரமான, ஜோதி வடிவமாக இறைவனைப் பிரம்மனும், திருமாலும் முறையே அன்னமும், பன்றியும் ஆகித்தேடி நிற்கும் நிலையில்  இம்மூர்த்தி அமைந்திருக்கும். அப்போது இறைவன் எடுத்த அனல் வடிவமே சுருங்கிப் பின்னர் திருவண்ணாமலை ஆகியது என்பது வரலாறு. செல்வத் தேவதையின் கணவனும், கல்வித் தெய்வத்தின்  கணவனும் இறைவனைக் காணும் முயற்சியில் தோற்றனர். ஆகவே, செல்வத்தாலும், கல்வியாலும் இறைவனை அடைய முடியாது; அவன் அருளால்தான் அவனை அடையலாம் என்பதே இதன்  உட்பொருள்.

2. சோமாஸ்கந்த மூர்த்தம்

சோ+உமா+ஸ்கந்த மூர்த்தி. அதாவது உமையுடனும், கந்தனுடனும் விளங்கும் வடிவம் என்பது பொருள். சூராதி அசுரர்களை அழித்ததற் பொருட்டு இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து முருகனைத்  தோற்றுவித்தான் இறைவன். முருகன் சரவணப் பொய்கையில் ஆறு சேய்களாகி வளர்ந்தான். சிவசக்தி அங்கு எழுந்தருளினார். ஆறு குழந்தைகளையும் அன்னை ஆவலோடு சேர்த்து எடுக்க அறுவரும்  ஒன்றாகிய பெருமான் ஆயினான். சேர்க்கப்பட்டவன், ‘ஸ்கந்தன்’ ஆனான். அவனை எடுத்து வந்து அன்னை தனக்கும் இறைவனுக்கும் இடையில் இருக்கச் செய்தாள். உண்மை - அறிவு - இன்பம் (ஸத் -  சித்-ஆனந்தம்) என்ற மூன்றும் இறைவனின் வடிவம். சிவன்-ஸத், உமை-சித், முருகன்-ஆனந்தம். உண்மை, அறிவு, மகிழ்வு என்ற மூன்றின் சேர்க்கையே சோமாஸ்கந்த
மூர்த்தியின் தத்துவம்.

3. ஸதா நிருத்ய மூர்த்தம்

எப்போதும் நடனமிடும் திருக்கோலம் என்பது இதன் பொருள். பஞ்சாட்சரமென்னும் திருவைத்தெழுந்தையே திருமேனியாகக் கொண்டு, பஞ்ச க்ருத்ய நடனத்தை அவர் எப்போதும் புரிகிறார். அதாவது,  ஐந்தொழில் நடனத்தை அவர் எப்போதும் புரிகிறார். உடுக்கை ஏந்திய கரத்தால் படைத்தலையும், அபயக்கரத்தால் காத்தலையும், மழுவேந்திய கரத்தால் அழித்தலையும், முயலகன் மீது வைத்த  திருவடியால் மறைத்தலையும், எடுத்த பொற்பாதத்தால் அருளலையும் புரிகிறார் என்பர். பல இடங்களிலும் அவன் ஆடிய வரலாறுகள் உண்டு. எனினும் அம்பிகை காண அவன் எப்போதும் பஞ்சாட்சரத்  திருமேனி கொண்டு திருமால், நந்தி முதலானோர் பக்க வாத்தியங்கள் இசைக்க ஆடும் நடனமே ஐந்தொழில் நடைபெற மூலகாரணமாகிறது. இதனை ஆங்கிலத்தில் Cosmic Dance என்பர்.

4. அர்த்தநாரீஸ்வர மூர்த்தம்

பிருங்கி என்ற முனிவர் சுத்த சைவர். அதாவது சக்தியை விடுத்து இறைவனை மட்டும் வழிபடும் இயல்பினர். இறைவியை விலக்கி இறைவனை மட்டும் தனியே வலம் வருவார். அதனைக்கண்ட தேவி  தனது அம்சமான சக்தியினை பிருங்கியின் உடலிலிருந்து விலக்கினாள். அதனால் சளைக்காத பிருங்கி இறைவனிடம் வேண்டி மூன்றாவது காலொன்றைப் பெற்று விட்டார். அக்காலினைக்கொண்டு நடந்து  இறைவனை மட்டுமே வலம்வரத் தொடங்கி விட்டார். இறைவனின் உடலிலேயே பாதியாக இணைந்திட விரும்பினாள் அம்பிகை. திருக்கேதாரத்தில் கடுந்தவமும், விரதமும் அனுஷ்டித்தாள். கெளரி  கேதாரத்தில் இருந்த அந்த விரதமே இன்னும் கேதார கெளரி விரதமென கொண்டாடப்படுகிறது. அவளது தவத்தால் மகிழ்ந்த இறைவன் தனது இடப்பாகத்தில் சக்தியை இணைத்துக் கொண்டான். அன்று  முதல் அவன் அர்த்தநாரீஸ்வரன் அல்லது மாதொருபாகன் என்று பெயர் பெற்றான். திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் மிகவும் புகழ் பெற்றவர்.

5. கேசவார்த்த மூர்த்தம் என்ற சங்கர நாராயண மூர்த்தம்

வலப்புறம் சிவப்பாய் மழுவும் அபயமும் தரித்து, இடப்புறம் நீலமாய்ச் சக்கரமும் வரதமும் கொண்டு ‘சங்கர நாராயண’ராகத் தோன்றுவர். இது சிவ-விஷ்ணு ஒருமைப்பாட்டை உணர்த்தும் மூர்த்தம்.  நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் சங்கரநாராயணப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். அத்தல வரலாற்றில் அம்பிகை தவமியற்றி ‘அரன் பெரிதா?’ ‘அரி பெரிதா?’ எனத் தெளிவு பெற  விரும்பினாள் என்றும், இருவரும் சமமென உணர்த்த இணைந்த கோலத்தில் காட்சி தந்தார் எனவும் காண்கிறோம். கேசவன் என்ற திருமாலைப் பாதியாகக் கொண்ட வடிவுதான் கேசவார்த்த
மூர்த்தம்.

6. பிட்சாடன மூர்த்தம்

இதுவே இறைவன் ‘இரவலர்க் கோலம்’ எனப் போற்றப்படுகிறது. தாருகாவனத்து முனிவர்கள் வேள்வி முதலாய கருமங்களே முக்தியளிக்குமென்று கருதி இறைவனையே விளக்கினர். அவர்களது  மனைவிமார்களும் தமது கற்பொன்றே போதுமென்றும் எண்ணினர். வேள்வி முதலாய நற்கருமங்கள் நடைபெறவும், மகளிர் தம் கற்பு நிலைக்கவும் இறையருள் இன்றியமையாதது என்பதனை உணர்த்த  எண்ணினார் பெருமான். தான் வாலிபப் பருவத்து அழகனாய் வடிவெடுத்து தாருகாவனம் சென்றார். அங்கு இல்லந்தோறும் பிச்சை ஏற்கும் இரவலராய் அவர் இசை பாடி நின்றார். அவரழகில் மயங்கிய  மாதர் தம் நிறை அழிந்தது. மோகினியாய்ச் சென்ற திருமாலினால் முனிவர் தம் வேள்வியும் சித்தமும் சிதைந்தன. அப்போது இறைவன் ‘பிட்சா பாத்திரம்’ ஏந்திச்சென்ற கோலமே பிட்சாடன மூர்த்தம்.  இறை நினைப்பு எதற்கும் இன்றியமையாதது என்பது இவர் உணர்த்தும் தத்துவம். சிவாலயத்தில் வருடந்தோறும் நடக்கும் பெருவிழாவில் ஒன்பதாம் நாள் இறைவன் இரவலர்க் கோலங்கொண்டு வருவது  தொண்டை மண்டலத்தில் நிலவும் முறை. தென் மாவட்டங்களில் விடையாற்றி விழாவில்பிட்சாடனர் திருவீதியுலா வருவார்.
- ஜெயலட்சுமி
வண்ண ஓவியம்: வெங்கி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்