SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாதன் நாமம் நமசிவாய!

2021-03-10@ 15:14:49

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்

மாசி மாதத்தில் சிவபெருமான் ஆசி வழங்கு கின்ற நன்னாளாக சிவராத்திரி விரதம் அமைந்துள்ளது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
சிவனடியைச் சிந்திப்பதற்கும், வந்திப்பதற்கும் ஏற்ற நாளாக மாசி மாதம், கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி திதி அமைந்துள்ளது. முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வரும் நோன்புகள் மிகமிக சக்தி வாய்ந்தவை.

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்பது பழமொழி. எனவே, உரிய முறையில் சிவபெருமானை இன்று வணங்கி வழிபட்டு மகாமந்திரமான நமசிவாய எனும் அவன் நாமத்தை நெஞ்சுருகி உச்சரிப்போம். தெய்வமே மேலானது! அத்தெய்வத்தை விடவும் மேலானது திருநாமம்! தெய்வத்தைக் கண்டவரும் விண்டவரும் இல்லை. எனவே, தெய்வத் திருமந்திரமே நமக்கெல்லாம் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வைத் தரும்.

படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட் செய்கின்றேன்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமசி வாயவே.

- என்றும் திருமுறை பாடுகின்றது.

சிவராத்திரியில் இரவு முழுவதும் நாம் விழித்திருந்து இயங்குகின்றோம். அபிஷேகம், ஆராதனை, கூட்டு வழிபாடு, முற்றோதல் என இருட்டு நேரம் பகல் பொழுதை விட சுறுசுறுப்பாக விளங்குகின்றது. அம்பிகை தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கியதுபோல மாசி சதுர்த்தசியை மகாதேவர் பகல் பொழுது ஆக்குகிறார். வழிபடு வோர் வாழ்வில் ‘இருட்டே இனி இருக்காது’ என திருவருள் பொழிகிறார்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
- என்கிறார் திருவள்ளுவர்.விரதங்களை நம்பிக்கையுடன் மேற்கொள்ளாதவர்கள் வாழ்வில்தான் வறுமை, துன்பங்கள் வருகின்றன என்பதை  புரிந்து கொண்டு முன்னோரின் வழிமுறைகளைப் பொன்போல் போற்றுவோம்.

ஐம்புலனும் ஒன்று இன்று ஆண்டவனின் நாமகான
ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லுவோம்! - வில்வ
அர்ச்சனையால் முன்வினையை வெல்லுவோம்!
அம்பலத்தில் ஆரூரில் அருணையிலே விளங்குகிற
அரனாரின் அடிமலர்கள் போற்றுவோம்! - சிவன்
ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுவோம்!
கோடி அர்ச்சனை, லட்சார்ச்சனை, ஸஹஸ்ர நாமம், நூற்றெட்டு போற்றி என சிவபெருமான் திருநாமத்தை உச்சரிப்பதின் பலனை சிவராத்திரியின் ஒரே இரவில் பெற்றுவிடலாம் என்கிறது சாத்திரம்.
வள்ளலார் அற்புதமாகப்  பாடுகின்றார்.

பாடற்கு இனிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்தம் கூட்டம்
அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல்
என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் ‘சிவாயநம’ என்று இடுநீறே
பிணிகொள் வனபவம் நீக்கும் வெண்ணீறு

‘அந்தியும், நண்பகலும் அஞ்சுபதம் சொல்க’ என அறிவுறுத்துகின்றார்கள் தேவார ஆசிரியர்கள்.அஞ்சு பதம் சொல்பவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை ஏன் தெரியுமா ?நாம் பயந்து நடுங்குகின்ற பலவும் சிவபெருமானிடம் அடங்கி, ஒடுங்கி தன் ஆற்றலைக் காட்டாமல் அமைதியாக இருக்கிறது.நெருப்பு என்றாலே நாம் நெஞ்சம் நடுங்குகின்றோம்.

ஆனால் அந்தத் தீ சிவன் கையிலே ஒரு தீபம் போல் சுடர் விடுகின்றது
அனல் ஏந்தி ஆடுகின்றார் ஆதிசிவன்!
பாம்பு என்றால் படையே நடுங்குகின்றது!
ஆனால் பரமசிவன் மார்பிலோ அது பவித்ரமான மாலையாக அல்லவா மாற உள்ளது.
விஷம் என்றால் நாம் விதிர் விதிர்த்து போய் விடுகின்றோம்!
ஆனால் பரமேஸ்வரனோ ‘விடம்  உண்ட கண்டன்’
ஆலகால விஷத்தையும் அருந்தி அதன் பின்னே ஆனந்தமாக
வீணையும் அல்லவா மீட்டுகிறார் அவர்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
- என நயமாகப் பாடுகிறார் ஞான சம்பந்தர்.

சுடுகாடு என்ற சொல்லே நம்மைச் சுடுகிறது. அவரோ சுடலையில் நடனமிடுகிறார். அதுவும் நள்ளிரவில்!மேற்சொன்ன அனைத்திற்கும் மேலான பயம் மரணபயம். மரணத்தை எண்ணி மனித மனம் நிமிடம்தோறும் நிம்மதியற்று புலம்புகிறது.சிவபிரானோ காலனைக் காலால் உதைத்தவர்.

எனவே. சிவனைச் சிந்திப்பவர்கள்  ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை; இனி அஞ்சி வருவதும் இல்லை’ என வெற்றி முழக்கமிடலாம்.பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவுஇலா அடியார்க்கு என்றும்வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும்மருந்தும் ஆகித்தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்டபோரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே!.

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ambedkar

  சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • AIADMK

  பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

 • animal-snake-6

  சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

 • trichy 06

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

 • sandart-18----

  ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்