SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவள்

2021-03-09@ 17:10:38

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-77

சென்ற இதழில் திசை தேவதைகளைப் பார்த்தோம். இனி அங்கதேவதைகளைப் பார்ப்போம்.‘‘வாராகி’’ சப்த மாதர்களில் ஒருத்தி இவள் பூமி லாபத்தை அருள்பவள் அவரின் இந்த மந்திரத்தை தியானம் செய்து அப்பலனை அடைவோமாக.வாராகி தியானம்

ஹேம ப்ரக்கியம் பார்திய மண்லேவா
நீஹாராபம் நீரஜே  அக்நே  ஸ்ததாபம்
வாயோ : கிருஷ்ணம் த்யுருபம் வா திவிஸ்தம்
க்ரோடவ்யா ப்தம் சத்ய சம்ஸ்தம் யஜேதா

பிரிதிவீ (பூமி) மண்டலத்தில் பொன் போன்ற திருமேனி நிறமுள்ளவராகவும், ஜல மண்டலத்தில் பனி போன்றவராகவும், அக்னி மண்டலத்தில் அக்னி வர்ணமானவராகவும், வாயு மண்டலத்தில் கருமை நிறமுள்ளவராகவும், ஆகாய மண்டலத்தில் அதன் நிறமுள்ளவராகவும், சத்திய லோகத்தில் பன்றிகளால் சூழப் பெற்றவராகவும் பூஜிக்க வேண்டும். அங்க தேவதையில் இவள் தலை எனக் கருதப்படுபவள்.
‘‘சூலினி’’

நவ துர்கைகளில் ஒருத்தியாவாள். பண்டைய காலத்தில் மன்னர்கள் தன் நாட்டை சுற்றிய எட்டு திக்கிலும் உள்ள பகையை போக்கி கொள்ள அந்தந்த திக்கிலுள்ள தேவதைகளின் கோயிலை எழுப்புவர். எத்திசையில் இருந்தும் எதிரிகளினால் வரும் துன்பங்களை நீக்கும் இந்த துர்கையானவள் யுத்தத்தில் வெற்றியளிப்பவள். அச்சம் தீர்ப்பவள். அவளை வணங்கி பயன்பெற தியானமும் அதன் பொருளும் தரப்பட்டுள்ளது.
சூலினி தியானம்

பிப்ராணா சூலபாணாஸ்யரி  ஸதர  கதா சபா - பாசாஸ் கராப்ஜை :
மேக ச்யாமா கிரீடோல்லிகித  ஜலதரா பீஷணா - பூஷணாட்யா.
ஸிம்ஹஸ் கந்தாதிருடா சத்ஸ்ரு பிரஸிகேடான் - விநாயி : பரிதா
கன்யாபி: பின்ன தைத்யா பவது பவபயத்வம் - ஸினிசூலினிவா.

மேகம் போன்ற நிறமுள்ளவளும் மேக மண்டலத்தைத் தொடும் கிரீடத்தோடு கூடியவளும் பயங்கரமானவளும் கத்தி கேடயம், தரித்த நான்கு கன்னிகைகளால் சூழப் பெற்றவளும் சூலம், அம்பு, சக்கரம், சங்கம், கதை, வில், பாசம் இவைகளை எட்டு கைகளில் ஏந்தியவளும், சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவளும் அசுரனை வெட்டி வீழ்த்தியவளுமான சூலினி துர்க்கையைப் பிரார்த்திக்கிறேன். அங்க தேவதையில் இவர் மார்பாக கருதப்படுபவள்.

‘‘மாதங்கி’’
மாதங்கி என்ற தேவதையானவள் உபாசகனின் வாக்கை பலிக்கச் செய்வாள். கவிதையியற்றும் தன்மை, உலகியல் அறிவு, இவற்றை வழங்குவாள். பேச்சு வராதவர்களுக்கு பேச்சுத் திறனை வழங்குவாள். உலக இன்பத்தை தரக்கூடிய கலை ஞானத்தை அருள்வாள். அவளை வணங்கி பயன் பெற தியானமும் அதன் பொருளும் தரப்பட்டுள்ளது.

மாதங்கி தியானம்
பீம்போஷ்டீம் நவயௌவனார்த்ர சராணா சமாகீர்ண கேஷாலகாம்
ஹ்ருத்யாங்க் கீம் ஸித சங்க குண்டலா தரா லீங்கார வேஷாஜ்வலாம்
உச்சிஷ்டசண்டாள்யை மதங்க ஸ்ரீ தன்னோ தேவி பிரசண்ண ஆத்மணாம்

கொவ்வைப் பழம் போன்ற உதடுகளையுடையவள், புது யௌவனத்தில் ஈரமான அடிகளோடுயுடையவள், கட்டவிழ்ந்த சிதறிய குழல்கள், முன் கூந்தல்கள், இவற்றையுடையவள், வெண் சங்கினால் செய்யப்பட்ட குண்டலங்களைத் தரித்திருப்பவள். எழுத்து ஒலி உற்பத்திக்கு காரணம் ஆனவள். மகிழ்வான மனநிலை உடையவளாய் மாதங்கியை தியானிக்கிறேன். அங்க தேவதையில் இவள் நாபியாக கருதப்படுபவள்.

‘‘ஆயகி’’ஆய் என்ற சொல்லிற்கு தாய் என்று பொருள். அகி என்பதற்கு பாம்பு என்று பொருள், இந்த நாக வடிவமானது இரண்டு விதமாகவும் வழிபடப்படுகிறது. இந்த இரண்டையும் அபிராமி பட்டர் சூட்டியுள்ளார். இவை இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும் வேறாகும். ஆயகி, சாதி நச்சு வாயகி ஆகிய இரண்டும், ஒன்று விஷத்தை போக்குவது; மற்றொன்று புத்திரப்பேறை அருள்வது. மேலும், பிரம்மச்சர்ய விரதமிருக்கும் துறவியர் விநாயகரோடு இதை வைத்து உபாசனை செய்வர்.

 குண்டலினி சக்தியாக இந்நாக வடிவம் கருதப்படுகிறது. குண்டலினி சக்தி என்பது வடிவத்தில் பாம்பை ஒத்ததாகவும் மனித  உடலில் மூலாதாரம் துவங்கி சகஸ்ராரம் வரையில் இரண்டு நாகங்கள் பின்னியிருப்பதுபோல் இதன் வடிவத்தை அமைத்திருப்பார். இந்த வடிவம் சார்ந்தே குண்டலினியா, நாக யக்ஷியா, புத்திர தோஷம் நீங்க அமைக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். பட்டர் இதை குண்டலினியாகவே கூறுகிறார். மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் பேராற்றல் வானத்தில் மிதப்பது, தண்ணீரில் நடப்பது போன்ற அதிசய செயல்களை செய்யவல்ல ஆற்றலாகும். இதை பிரம்மசரிய விரதத்தினாலும், தேவதை ஜபத்தினாலும் இறையருளினாலும் பெறலாம். அதையே இங்கு ‘‘ஆயகி’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். அங்க தேவதையில் இவள் ஆண் பெண் அடையாள குறிகளாய் கருதப்படுகிறாள்.


ஆயகி தியானம்

நாகானாம்  வக்ஷயதே ரூபம்  நாபே  ரூர்த்வம்  நராக்ருத்தி
சர்வாகாராம் அதோ பாகம் மஸ்தகே போக மண்டலம்
ஏகம்பணம் த்ரையம் பாபி பஞ்சவா சப்தவாநவ
த்வி ஜிஹ்வா ஸ்தே விதா தவ்யாஹா
கட்க சர்ம கரயிர்யுகாதா:

நாகங்களின் வடிவம் கூறப்படுகிறது. இவர்களது வடிவம் நாபிக்கு மேல் மனித வடிவமாயிருக்கும், கீழ்ப்புறம் பாம்பு வடிவமாய் அமையும். தலையில் பாம்பில் உடல் வட்டவடிவமாய்க் காணப்படும். ஒரு படம் உள்ளதாக அமைக்கலாம். அல்லது மூன்று, ஐந்து எழு, ஒன்பது படங்களுள்ளதாகவும் அமைக்கலாம். இந்த நாகங்களின் நாக்கு இரண்டு பிளவுள்ளதாக அமைக்கப்பட வேண்டும். இரண்டு கைகள் உள்ளவர்கள். வாள், கேடயம் இவற்றை அக்கைகளில் தரித்திருப்பர்.

‘‘ஆதி’’
ஆதி என்பவள் அனைத்து சக்தி வழிபாட்டுக்கும் ஆதாரமாக திகழ்பவள். இதை ஒன்பது சக்தி மத தத்துவங்களில் ஆதார சக்தி வாதம், அல்லது ஆதி சக்தி தத்துவம் என்பர். இதையே பட்டர் ‘‘ஒன்றாய் அரும்பி’’- 56 என்கிறார். இவளே உடலில் உயிர் தங்கிடுவதற்கு காரணமான சக்தியாவாள். இவளை வணங்கினால் வியாதி நீங்கும். ஆயுள் நீளும் இதையே சுருக்கி ஒரு சொல்லால் ஆதி என்று குறிப்பிடுகின்றார்.
ஆதி  தியானம்

அத : கூர்ம சிலாசினம்
க்ஷீரோத சித விக்ரஹாம்
மௌலௌ பீஜாங்  குராகாராம்
வரதாம் அபயப்ரதாம்
பாசாங்குச தராம் சக்தீம்
க்ரீயாம் ஆதார ரூபினீம்

எல்லாவற்றிற்கும் கீழே மூலமாய் ஆதியாய் ஆமை முதுகில் அமர்ந்தவளாய் பாலைப் போல வெண்மை நிறம் உடையவளாய்; விதையிலிருந்து தோன்றும் முளை போன்ற கிரீடத்தை உடையவளாய் வரதம், அபயம் முத்திரை தரித்தவளாயும் பாசம் (கயிறு) அங்குசம் (யானையை அடக்கும் கருவி) தரித்தவளாய் செயலாற்றல் உடையவளாய் எல்லாவற்றிக்கும் ஆதிவடிவானவளை தியானிக்கிறேன். அங்க தேவதையில் இவள் வலது கையாக
தியானிக்கப்படுகிறாள்.

‘‘உடையாள் ’’

  இப்போது இந்த தியானம் வழக்கிலில்லை. உமையம்மையின் உறுப்புக்களை தனித்தனியாக வழிபடுவது ஐம்பத்தியொரு உடல் உறுப்பும் மகாவிஷ்ணுவின் சக்கரத்தால் வெட்டுப்பட்டு, விநாயகராலும், பைரவராலும் காவல் காக்கப்படுகிறது. இந்த சக்தி பீடங்களில் முதன்மையான காமாக்யாவை இப்பாடலில் மறைமுகமாக குறிப்பிடுகின்றார். சக்தி பீடங்களை வணங்குவோர்கள். அகில உலக இன்பங்களை அடைவார்கள். இதை சகஸ்ர நாமம்’’ பஞ்சாசத் பீடரூபின்யை’’ என்கிறது. அபிராமி பட்டரோ உடையாள் என்கிறார். உடையாள் என்றால் சிவலிங்க வடிவில் உள்ள அரசிலை போன்ற பகுதியையும் குறிக்கும் என்கிறது சைவம்.

உடையாள் தியானம்
உமாயை பகரூபீன்யை
லீங்க ரூப தராயச
சங்கராய நமஸ்துப்யம்
இதி ஸ்து த்வா  நு மோ த்யச
தோற்றுவாய் ஆகிற அரசிலை வடிவு உடைய உமையம்மை தோற்றத்திற்கு காரணமாகிற விதை வடிவான சிவனையும் நல்லவைகளை செய்யும் பொருட்டு இருவரையும் வணங்குகிறேன். அங்க தேவதையில் இவள் இடுகையாக கருதப்படுகிறாள்.

‘‘சாம்பவி’’ தியானம் திசை தேவதையில் கண்போம்சாம்பவி என்ற சொல்லானது ச - அம்பா - வீ என்ற மூன்றாகவும் தியானிக்கப்படுகிறது . ச - என்பது சிவபெருமானையும், அம்பா என்பது உமையம்மையையும், வீ - என்பது சேர்ந்தும் பிரிந்தும், உருவமும், அருவமுமாய் இருக்கும் தன்மையை குறிப்பிடுவதுமாகும். இந்த மூன்று தன்மையையும் இணைத்தே சாம்பவி என்றவார்த்தையால் குறிப்பிடுகின்றார்.அர்த்த நாரீஸ்வரர், அக்ஷரபீடம், உமாசகாயர் என்ற மூன்று வடிவங்களையும், குறிப்பிடுகிறார். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்