SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை

2021-03-08@ 14:30:18

மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிய நடத்திய திருவிளையாடல்கள் அறுபத்து நான்காகும். அவற்றைத் தொகுத்து திருவிளையாடற் புராணம் என்னும் பெயரில் புலவர்கள்  அழகிய நூலாகப் பாடியுள்ளனர். அதே போல் திருவாரூரில் தியாகேசப் பெருமான் அன்பர்களுக்காகப் புரிந்து அருள்விளையாடல் முன்னூற்று அறுபத்தைந்து ஆகும். அவற்றை வடமொழியில்  தியாகராஜலீலை என்னும் நூலாகப் பாடியுள்ளனர். இதில் அனேக அற்புதக் கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாக உருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை என்னும் திருவிளையாடல் இடம்  பெற்றுள்ளது.

நெடுங்காலத்திற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் ஒப்பற்ற சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் புண்ணியக் கதைகளை கேட்பதில் விருப்பமுள்ளவர், அவரது பெயர் நந்திதாசர் என்பதாகும். அவர் தினமும்  ஏகாம்பரநாதரையும், சந்திரமௌலீஸ்வரரையும் மற்றுமுள்ள சிவாலயங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமான்களையும் வழிபட்டு வருவார்.

புராணக் கதைகள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று அதை ஆர்வமுடன் கேட்டு மகிழ்வார். ஒரு சமயம் காஞ்சிபுரத்திற்கு வந்தபுராணிகர் ஒருவர் திருவாரூரின் பெருமைகளையும், அதில் வீற்றிருக்கும்  தியாகேசப் பெருமானின் பெருமைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். அவர் அக்கதையை எடுத்துக் கூறியது அதிஅற்புதமாக இருந்தது. அதைக்கேட்ட மாத்திரத்திலேயே நந்திதாசருக்குத் திருவாரூர்  செல்ல வேண்டும்; அங்கு எழுந்தருளியிருக்கும் தியாகேசரைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஆனாலும், அது உடனடியாகக் கை கூடவில்லை.

நந்திதாசரின் ஆர்வம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே வந்தது. அவரதுஆர்வத்தினை அறிந்த தியாகேசர் அவரது கனவில் தோன்றி தமது திவ்யமான ஒளிமேனியைக் காட்டி மறைந்தார். காலையில்  கண்விழித்த நந்திதாசன் கனவை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். ‘‘இனி தாமதிக்கக் கூடாது; விரைந்து சென்று தியாகேசரைத் தரிசித்தே ஆக வேண்டும்’’ என்ற எண்ணம் அவருள் உறுதி பெற்றது.

அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டார். காஞ்சியில் ஏகம்பம் முதலான அனைத்து ஆலயங்களிலும் தரிசித்து விடைபெற்றுக் கொண்டு திருவாரூரை நோக்கிப் பயணமானார். வழியிலுள்ள  திருத்தலங்களைத் தரிசித்து மகிழ்ந்தவாறே, திருவாரூரை அடைந்தார். அத்தலத்திலுள்ள கமலாலயம் முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தியாகேசர் ஆலயத்தை அடைந்தார். அங்கு  ஆதிமூலட்டானரை வணங்கியபின் பொற் சிங்காசனத்தில் பூங்கோயிலில் அமர்ந்திருக்கும் தியாகேசரைக் கண்டு வணங்கினார்.

கனவில் கண்டு மகிழ்ந்த தியாகேசரின் தெய்வத் திருமேனியை நேரில் கண்டபோது அவர் உள்ளத்தில் இனம் புரியாத பேரின்பம் தோன்றியது. அவர் ஆடிப்பாடி ஆனந்தம் அடைந்தார். தொடர்ந்து  அத்தலத்தில் தங்கி, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி நாள்தோறும் தியாகேசரைப் போற்றிப் பணிந்து மகிழ்ந்திருந்தார். நாட்கள் நகர்ந்தன.

அந்நாளில் நாட்டை ஆண்டுவந்த சோழமன்னன் வயோதிகனாக இருந்தான். அவனிடம் ஏராளமான பொருட்செல்வம் நிறைந்திருந்தது. அவன் தன் மனதில் நாம் இதுவரை நிறைவாக வாழ்ந்துள்ளோம்.  மரணத்திற்குப் பின்னும் சுகமாக வாழவே வேண்டும். அதற்காக இப்போதே பெரியதான தருமங்களைச் செய்ய வேண்டும் என்று எண்ணினான். தரும நூல்களை அறிஞர்களைக் கொண்டு அதற்கான  தருமங்களை ஆராய்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தான்.

மந்திரிகளிடம்,, ‘‘நாட்டு மக்களிடம் நீங்கள் எவ்வளவு தங்கம் வெள்ளி வைத்திருக்கிறீர்களோ அதை அப்படியே எடுத்து வந்து காட்டுங்கள். அதற்கு மும்மடங்கு அதே அப்படியே எடுத்து வந்து காட்டுங்கள்.  அதற்குப் பொருளை அளிக்கிறேன்’’ என்று பறை அறைந்து தெரிவிக்குமாறு ஆணையிட்டான். அவர்கள் அச்செய்தியை முரசறைந்து நாட்டு மக்களுக்குத் தெரிவித்தனர்.

அரண்மனை மண்டபத்தில் துலாபார மண்டபம் நிறுவப்பட்டது.மன்னனே, முன்னின்று மக்களுக்குப் பொருளை அளந்து வழங்கினார். மக்கள் தங்களிடம் இருந்து வெள்ளி, பொன் ஆகிவற்றை அரசனிடம்  கொடுத்து அதன் எடைக்கு மும்மடங்காக அப்பொருளை பெற்றுக் கொண்டனர். எதுவும் இல்லாதவர்கள் கூட மன்னனிடம் தங்களிடம் இல்லாமையைத் தெரிவித்துத் தமக்கு வேண்டிய பொருட்களைப்  பெற்றுக் கொண்டனர். அப்படி பொருட்களைப் பெற்றுக் கொண்ட மக்கள், பொருளைப் பெற்ற மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்து கொண்டு வீதிகளில் செல்வதை நந்திதாசர் கண்டார்.

அவருக்குத் தானும் மன்னனிடம் சென்று தனது குடும்பத்திற்காக ஏதாவது பொருள் பெற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அரண்மனையை நோக்கிச் சென்றார். அங்கு மன்னனைக் கண்டார். அரசன், ‘‘அன்பரே உம்மிடம் உள்ள தங்கம், வெள்ளியைக் கொடுங்கள். அதுபோல் மும்மடங்கு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்’’  என்றான். அப்போது நந்திதாசர், ‘‘அரசே என்னிடம் பொன்னோ வெள்ளியோ இல்லை. தாங்கள் இயன்றதை அளித்தால் போதும்,’’ என்று சொல்ல நினைத்தார்.

ஆனால், அவர் மூலம் திருவிளையாடல் புரியக் கருதிய தியாகேசர் அவர் மனதில் வேறுவிதமான எண்ணத்தைத் தோற்றுவித்தார். அதனால் நந்திதாசர், அரசனிடம், ‘‘மன்னா... என்னிடம் இருப்பது  இந்தஉருத்திராட்ச மாலைதான். இதில் உள்ள ஒரு மணிக்கு ஈடாகப் பொன் தந்தால் போதும். அதனால் நான் மகிழ்வேன்’’ என்றார்.மன்னன் அப்படியே ஆகட்டும்என்றான். நந்திதாசர் தாம் கழுத்தில்  அணிந்திருந்த உருத்திராட்ச மாலையில் இருந்து ஒரு மணியைப் பிரித்தெடுத்து, தராசுத் தட்டில் வைத்தார்.

அதைக் கண்ட மன்னன், ‘‘இது ஒரு பொருளா’’ என்று அலட்சியமாக எண்ணிச் சிறிய பொன்கட்டியை எடுத்து மறுதட்டில் வைத்தான். ஆனால், நிறை சரியாகவில்லை. பிறகு பெரிய கட்டியாக  வைத்தனர்.அப்போது பின்னர் பொற்குவியலை வைத்தனர். பின்னர், பெரிய தங்கப் பேழையை வைத்தனர். பின்னர் ஏராளமான நவரத்தினம் பதித்த பொன்னாபரணங்களை வைத்தனர். எவ்வளவு பொன்னை  இட்ட போதிலும் பொன் வைத்த தட்டு தாழவே இருந்தது. அதனை ஈடுகட்ட முடியவில்லை.

அதைக் கண்டு எல்லோரும் அதிசயித்தனர். நந்திதாசரும் வியந்தார். அவர் இது என்ன அதிசயம் என்று கண்களை மூடி தியாகேசரைத் தியானித்தார்.
அவருள்ளத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. அவர் அங்கு கூடியிருந்த அரசனையும் மக்களையும் நோக்கி, ‘‘அன்பர்களே, இவ்வுலக வாழ்வே சிறந்தது என்று நினைக்கும் மக்கள் இங்கு வந்து  அளவற்ற செல்வதைப் பெற்றுச் செல்வத்தைக் கண்டு நானும் அதுபோலவே செல்வத்தை அடைய விரும்பி இங்கு வந்தேன்.

தியாகேசர் என்மீது கருணை கொண்டு எனக்கு வைராக்கிய செல்வத்தை அளிக்க விரும்பியே என்னுள்ளிருந்து உருத்திராட்ச மணியை நிறைகட்டும்படி ஏவினார். அதன்படியே செய்தேன். இங்கு  நிகழ்ந்ததன் மூலம் ஈஸ்வர பக்தியும் வைராக்கியமுமே சிறந்தது என்று எனக்கு உணர்த்தினார்’’ என்று கூறினார்.

அதைக் கேட்ட அரசன் மகிழ்ந்தான். ‘‘அன்பரே, இந்தச் செல்வங்கள் அனைத்தும் உமது பக்திக்கு முன்னால் நிற்காதவை, என்றாலும் இவற்றை ஏற்றுக்கொண்டு உமது விருப்பம்போல் தர்மங்களை  செய்யுங்கள் என்றான். தியாகேசரது இந்த அற்புத லீலையால் அன்பர்கள் யாவரும் உருத்திராட்சம் ஏனைய செல்வங்களைக் காட்டிலும் உயர்ந்தது. அதுவே முக்தியை அளிக்கும் சிவசாதனம் என்பதை  அறிந்தனர். ஈஸ்வர பக்தியின் சின்னமாக இருப்பது
உருத்திராட்சமே என்பதை உணர்ந்தனர்.

ஆட்சிலிங்கம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2021

  இன்றைய சிறப்பு படங்கள்

 • nasa-helicopter-20

  செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

 • vaccine-cake-20

  ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

 • egypt-20

  எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

 • dell_aacccc

  கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்