SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழித்துணைநாதர்

2021-03-01@ 15:48:08

அருணகிரி உலா-115

ஷேத்ரக் கோவைப் பாடலில் மூதூருக்கு அடுத்தபடியாக அருணகிரிநாதர் குறிப்பிட்டிருக்கும் தலம் விரிஞ்சை எனப்படும் திருவிரிஞ்சிபுரம் ஆகும்.  இத்தல இறைவன் அடியவருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணைநாதர் எனவும் மார்க்கபந்தீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். இறைவி மரகதாம்பிகை, கம்பீரமாக அமைந்துள்ள உயர்ந்த மதிற்சுவர்கள் ஆலயத்தின் அழகைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. எனவே ‘மன்னார்குடி மதிலழகு என்று சோழநாட்டில் கூறுவதுபோல, தொண்டை நாட்டில் ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்று கூறுவார். வேலூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம்.

திருவண்ணாமலையில் சிவனாரது முடி காணமுடியாமல் தாழம்பூவைப் பொய் சாட்சியாகக் காட்டி சிவநாதர் எனும் ஆதிசைவருக்கு சிவசர்மன் எனும் மகனாகப் பிறந்து வளர்ந்தார். சிறு வயதிலேயே தந்தை இழந்த பாலகனைத் தாயாதிகள் அவன் தீட்சை பெறாததால் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. தாயார் மார்க்கபந்தீஸ்வரிடம் முறையிட்டபோது, இரவில் அவன் கனவில்  தோன்றிய  இறைவன் ‘நாளைக்கு காலையில் பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை மங்கள நீராட்டு’ என்றார்.

அடுத்த நாள் தாயார், சிவசர்மனை அழைத்துக் கொண்டு தீர்த்தக் கரைக்குச் சென்றபோது ஈசன் ஒரு முதியவராக வந்து நீரில் முழ்கி சிறுவனுக்கு உபநயனமும் தீட்சையும் செய்வித்து மறைந்தார். ஆகம விதிப்படி  சிறுவன் சிவ பூஜை செய்வது கண்டு உறவினர்கள் மிகவும் வியந்தனர். அபிஷேகம் செய்ய முயன்ற சிறுவனுக்கு லிங்கத் திருமேனி யின் உச்சி எட்டவில்லை. கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டியபோது, இறைவன் தம் திருமுடியை வளைத்துக் காட்டினார்.

சிறுவன் மகிழ்வுடன் செய்த பூஜையைத் தானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மஹாலிங்கமாக இறைவன் காட்சி அளிக்கிறார். அன்று பிரம்மாவின் கண்ணுக்கு எட்டாத முடி இன்றுதானே வளைந்து அவனுக்குக் காட்சி அளித்தது. பிரம்மன் பூஜை செய்த தலமாதலால் விரிஞ்சிபுரம் என்று பெயர் பெற்றது.

 (விரிஞ்சன் - பிரம்மனுக்கு மற்றொரு பெயர்) இந்நிகழ்ச்சி நடந்த தினம் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு. இன்றளவும் இந்த ஐதீக விழா நடைபெற்று வருகிறது. மிளகுப்  பொதிகளை வியாபாரத்திற்கு எடுத்துச் சென்ற வணிகன் ஒருவனுக்கு வழித்துணையாக வந்த காரணத்தினால் இறைவன் வழித்துணை நாதர் என்று பெயர் பெற்றார். (மார்க்கபந்து)கோயிலுக்குள் நுழையும் போது ஹேரம்ப விநாயகரையும் தண்டபாணியையும்தரிசித்து நந்தி, கொடிமரம், பலிபீடம் போன்றவற்றை வணங்கிச் செல்கிறோம். வெளியில் வலப்புறம் காலபைரவர் உள்ளார்.

நேரே சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். இறைவன் லிங்கவடிவில் சற்று சாய்ந்த வண்ணம் காட்சி அளிக்கிறார். இறைவனை வணங்கி மீண்டும் வெளிப்பிராகாரத்திற்கு வரலாம். கருவைக் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, கருவறைக்குப் பின்புறம் உள்ள திருமால், பிரம்மா, துர்க்கை, சண்டீசர் ஆகியோரைத் தரிசிக்கிறோம்.

இரண்டாம் பிராகாரத்தில், சொர்ண விநாயகர், வள்ளலார், நவகிரஹங்கள், சனீஸ்வரர், சுதையாலான  அழகிய பிட்சாடனர் இவர்களைத் தரிசித்து, பின்னர் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகசாமியைத் தரிசித்து மகிழலாம். வடக்குப் பிராகாரத்தில் இறைவி மரகதவல்லியின் சந்நதி உள்ளது. அம்பாளின் கர்ப்பக்கிரகம் பாதாள அறையுடன் கூடியது. இவ்வறை வழியாகத்தான் வேலூர்க்கோட்டை கோயிலுக்கு 10 கி,மீ. தொலைவிற்கு கற்களால் அமைக்கப் பெற்ற பாதாள வழி இருந்ததாகவும் தற்போது தூர்ந்துபோய் விட்டதாகவும் கூறுகின்றனர்.

திருவிரிஞ்சை முருகன் பேரில் அருணகிரியார் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். ‘ஒருவரை’ எனத் துவங்கும் பாடலில், ‘திருச் சுரபுரத்தறு முருகப் பெருமானே  என்று  விளிக்கிறார். விரிஞ்சிபுரத்தில் (கரம்) கழுதை முகமுடைய அசுரராஜன் பூசித்தான் என்பதால் கரபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

‘‘கமுகினிற குலையறக் கதலியிற் கனியுகக் கழையின் முத்தம் உதிரக் கயல் குதித்துலவு நற் கனவயற்றிகழ் திருக் கரபுரத் தறு முகப் பெருமாளே’’
‘‘பாக்கு மரத்தின்  குலை அற்றுவிழ, அதன் காரணமாக அதிரும் வாழை மரத்தினிலும் அதன் பழங்கள் விழ, அப்பழங்கள் தன் மீது விழும் அதிர்வினால் கரும் பினின்றும் முத்துக்கள் விழ, கயல் மீன்கள் குதித்து விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் விளங்கும் அழகை உடைய திருக்கரபுரம் எனும் பெயருடைய விரிஞ்சையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே’’ என்று விளித்து மிக அழகிய கருத்துடைய பிரார்த்தனையும் முன் வைக்கிறார்.

‘‘சகல துக்கமும்  அற, சகல சற்குணம் வர தரணியில் புகழ்பெற, தனசுமை பெற்று உனது பொற்சரணம் எப்பொழுது நட்போடு நினைத்திட அருள் தருவாயே’’சொல்லழகும் பொருளழகும் உடைய மிக அழகிய இவ்வேண்டுகோளை மனனம் செய்வது மிக நன்மை பயதிரும்.பிரம்மன் பூசித்த தலம் எனும் பொருளில்  ‘நிகரில் பஞ்சபூதமு’ எனத் துவங்கும் பாடலில், ‘‘திசைமுகன் பராவிய திருவிரிஞ்சை மேவிய பெருமாளே’’ என்று பாடுகிறார்.

‘‘நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு நெகிழ வந்து நேர்படும்
அவிரோதம் நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம்
பராபர நிருப அம் குமாரவேள் என வேதம்
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதகர் அறியாத தனிமை
கண்டதான திண்கிணிய தண்டை சூழ்வன
சரண புண்டரீகம தருள்வாயே’’

ஐம்பூதங்களும், நெஞ்சும், உயிரும் நெகிழும்படி வந்து கூடுகின்ற அவிரோத ஞானத்தைக் கொடுக்கின்ற ஞான ஒளியானவனே!  அழிவற்ற மேலான பொருளே! அரசே! அழகிய குமர வேலே! என வேதங்கள் முழங்குவதும், சகரரால் ஏற்பட்டதும் சங்குகள் உள்ளதுமான கடல்போல ஒலி எழுப்பி வாதம் செய்யும் சமயவாதிகளாகிய பஞ்சபாதகர்கள் அறியாததும், ஊழிக்காலத்தில் தனித்து நிற்பதுமான , கிண்கிணி  தண்டை இவை சூழ்ந்துள்ள உனது திருவடித்தாமரை யதினத் தந்தருள்க’’ என்கிறார்.

பாடலின் பிற்பகுதியில் பிரம்மன் திருவிரிஞ்சையில் பூஜை செய்த குறிப்பு வருகிறது.

‘‘மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுதி வெந்து வாய்விட நெடுவான
வழி திறந்து சேனையும் எதிர்மலைந்த சூரனு
மடிய இந்திராதியர் குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்திர சேகரர் பெருவாழ்வே
திசை தோறும் ப்ரபூபதி திசை முகன்
பராவிய
திருவிரிஞ்சை மேவிய பெருமாளே!’’

மகர மீன்கள் உள்ளதும், ஒளி கொண்டதும், அலை உள்ளதும், பேரொலி உடையதும், (அ) சங்குகள் கொண்டதும் மரக்கலங்கள் செல்வனவுமான கடல் கலங்கி, சூடுண்டு கொந்தளித்தது. பெரிய ஆகாய வழி திறந்து வந்த சேனைகளும், எதிர்த்துப் போர்செய்த சூரனும் மாண்டதனால் இந்திரன் முதலான வீரர்கள் விண்ணில்குடியேறினார்.

சிகரங்களை உடையதும், மாயையில் வல்லதுமான கிரௌஞ்சமலை பொடிபட்டழிய வெற்றி வேலைச் செலுத்திய  இளையோனே! சந்திரனை முடியில் சூடியுள்ள சிவனது பெருஞ்செல்வமே! திசைகள் தோறும் உள்ள மேன்மை பொருந்திய அரசர் திசைக்கொரு முகமுடைய பிரம்மனும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சையில் வீற்றிருக்கும் பெருமானே  என்று பாடியுள்ளார்.

‘‘இசையும் அருமறைப் பொருள்கள் தினமுறைத் தவனி தனில் எழிற்களும் முனிவருக் கினிய சுரபுரப் பதியில் அனுமுகப் பெருமாளே என்று ஒரு திருவிரிஞ்சைப் பாடலில் கூறுகிறார். திருவிரிஞ்சை மான்மியத்தை ஆறுமுகன்பால் கேட்ட வசிஷ்டர், பல முனிவர்களுக்கும் அதை எடுத்துச் சொன்னதாகத் திருவிரிஞ்சைப் புராணம் கூறுகிறது. எனவே தான் இங்கு ‘‘ பொருந்திய அரிய வேதங்களின் பொருளை நாள்தோறும் ஆய்ந்து வைத்து, இப்பூமியில் அழகிய தமது கடமைகளைச் செய்யும் முனிவர்க்கு (வசிஷ்டருக்கு) இனிய பெருமாளே’’ என்று பாடியுள்ளார்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

 • ambedkar

  சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • AIADMK

  பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

 • animal-snake-6

  சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

 • trichy 06

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்