SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்த வாழ்வருளும் கீழரங்கன்

2021-02-27@ 16:06:31

மார்க்கண்டேய மகரிஷி தன் எதிரே மகாபிரவாகமாக பெருக்கெடுத்தோடும் காவிரியையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆற்றின் போக்கை நிகர்த்ததொரு பக்திப் பிரவாகம் தமக்குள் பொங்கிக் கிளர்ந்தெழுதலை  தாங்காது தவித்தார். வைகுந்த நாயகன் உறையும் பாற்கடல் இப்படியல்லாவா இருக்கும் என்று நினைக்கும்போதே எப்போது காண்போம் எனும் தாபம்  நெஞ்சை முட்டித் தள்ளியது. வைகுண்டத்தில் பெருமான் எப்படி சயனித்திருப்பான். ஆதிசேஷன் ஐந்தலை நாகத்தை இதமாக அசைத்து  குளிரூட்டுவாரோ.. ரிஷிகள் எங்கு நின்று சேவிப்பார்கள். திருமகளின் பாதசேவையை காண வேண்டுமே என்று துடித்தார்.

ஜகமாளும் ஜகந்நாதன் எடுத்த அவதாரங்களை மனதிற்குள் நிறுத்தினார். பெருமானின் லீலா விநோதங்களை தமக்குள் நிகழ்த்தி மகிழ்ந்தார். இடையறாத  பக்திச் சுழலில் மனம் சிக்குண்டு கிடந்தது. அவதாரங்களை முழுவதுமாக அனுபவித்து உயர்ந்த ரசானுபவத்திலேயே கிடந்தார். மனம் அவதாரங்கள்  சுட்டும் ஆதிநாயகனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. தம்மால் தாளாத தாபத்தினால் மனம் அறுந்து பேரின்பக் கடலில் கரைந்தது. உலகம்  மறைந்தது. எங்கிருந்து இந்த ஜகம் உருவானதோ அங்கு அவர் நிலைபெற்றார். ஆயினும் இந்தப் பெருந்தவத்தின் மத்தியிலேயும், அனுபவம் தாண்டியும்  வைகுந்தவாசனைக் கண்ணாரக் காணவேண்டுமே என்று ஆசை அதிகரித்தது. தொடர்புள்ளியாக பேரின்பத்தோடு  தொடர்ந்தது. அந்தப் பெருந்தவம்  தெய்வத்தையே அழைத்தது. வைகுந்தன் ஆயர்குல அழகனாக  இடையனாக யாவருக்கும் எளியவனாக மாறினான்.

காவிரிக்கரை ஏனோ யமுனாநதியின் சாயலையுற்றது. பிரவாகமாக சென்றவள் சற்று பணிந்து நடந்தாள். காவிரியும் யமுனையும் தோழிகளானார்கள்.  கோபாலன் நீந்திக்குளித்த நதியல்லவா யமுனை அதனால் அவளும் கண்ணனைத் தொடர்ந்தாள். அவ்விடத்தில் குளுமையும், ஒரு குதூகல உணர்வும்  ஒன்றாகப் பரவிற்று. கோகுலத்து பசுக்கள் பரவசமாக நடந்தன. தொலைவே இடையனாக குச்சியை தோளில் வைத்துக்கொண்டு, தலைப்பாகையோடு
புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினான். ராகதேவதைகள் குழலுக்குள் புகுந்தனர். ஒவ்வொரு விரல்களையும் ஏற்றி இறக்க தேவகானமாக காற்றில்  கசிந்தனர். மரங்கள் தலையசைத்து ஆடினர். மீன்கள் ஆற்றில் துள்ளித்துள்ளி நர்த்தனமிட்டன.

மார்க்கண்டேயர் புறவுலகை முற்றிலும் இழந்து வேறொரு நிலையில் கிடந்தார். இப்போது ஆற்றருகே நடந்தான் கோபாலன். புல்லாங்குழலை  உதட்டோரம் வைத்து மெல்லியதாக இசைத்தான். காவிரியும், யமுனையும் ஒரு சிலிர்த்து நின்றனர். தங்களை மறந்தனர். மீண்டும் ராகம் அலையை  தழுவ நதி உந்தி நகர்ந்தது. ஜதிபோல நடைபயின்றது. கானம்போல் அடர்ந்திருந்த மார்க்கண்டேயரின் அகத்தவத்திற்குள் மெல்லிய குழலின் இசை  தவழ்ந்து மிதந்தது. மார்க்கண்டேயர் இப்போது சற்று அயர்ந்தார். தேனிசை பாய்ந்து வரும் திசைநோக்கி மனதை நகர்த்தினார். மனம் திரண்ட  வெண்ணெய்யாக வெளிவந்தது. காதுகளுக்குள் காவிரியின் சிரிப்பும் பசும்புற்களின் மணமும், பசுக்களின் குளம்புக் குதியலும் சட்டென்று  கண்விழிக்க  வைத்தன. அதிர்ந்தார். அவதாரக் கண்ணனாக கண்ணுக்குள் நின்றவன் கண்ணெதிரே நிற்கிறானே என்று குழைந்தார். மெல்லிய விசும்பலாக  கிருஷ்ணா...கோபாலா...கோவிந்தா... என்று தமக்குள் பீறிட்டெழுந்த ஒட்டு மொத்த உணர்வையும் அடக்க முடியாது அரற்றினார்.

கண்ணனின் மந்தகாச புன்னகையும், சுடர்விட்டு ஒளிரும் வதனத் திருமுகமும் அவரை நெகிழ்த்தியது. பரந்தாமனின் பாதம் பணிந்தார், காவிரிச்  சாரலும், கண்ணனின் அருளும் அவர் மீது மாரிமழையாகப் பொழிந்தது. யாருக்குக் கிட்டும் இப்பாக்கியம் என்று பாதத்தை இறுக்கினார். அந்த அன்புப்  பிடிக்குள் அகப்பட்டான் கண்ணன். மின்னல்போல் அவர் நெஞ்சினின்று வேறொரு ஆசையும் மேலெழுந்தது. அழகிய கோபாலனாக நிற்கிறாயே  அரங்கனாக பள்ளிகொண்டருள்வாயா என்று தலை தூக்கி முகம் பார்த்தார். பணிவாக எழுந்தார். எம்பெருமான் மெல்ல வளர்ந்தார். காவிரி தாண்டி  அலைகடலாடும் வங்கக்கடற்கரையோரம் ஒய்யாரமாக கிடந்த கோலத்தில் திருவரங்கனாக திருக்காட்சி அளித்தார். வங்கக் கடலோரம் பாற்கடல்  பரந்தாமனாக கிடந்ததைக் கண்டவர், எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாது, திசை புரியாது அரங்கனாக திருக்கண் வளர்ந்த தலம்  நோக்கி ஓடினார். அந்த ஒய்யாரக்கோலம் பார்த்து தன்வயமிழந்தார்.

அழகிய பாக்கள் பேரலையாக அவர் நாவில் புரண்டு எழுந்தன. தான் கண்ட அற்புத அனுபவத்தை சமஸ்கிருத ஸ்லோகங்களாக மொழிந்தார். ‘‘அம்ருத  ரஸஜரீனாம்....’’ என்று தொடங்கும் ஸ்லோகத்தின் பொருள் உயர்வானது.  இந்த பூர்வரங்க ஷேத்ரத்தில் சேஷசயன ரங்கனைப் பார்க்கும்போது, மேருமலையை கடைந்ததால் வெளிப்பட்ட அமிர்தம் என்கைகளில்  வந்தமர்ந்ததைப் போலுள்ளது என்று மேனிசிலிர்க்கப் பாடினார். ‘‘பூர்வரங்கே ஸயானம்’’ என்று முடித்திருக்கிறார். உலகத்தில் பூர்வபாகம் எனும்  வங்காளவிரிகுடாவிற்கு அருகில் இருப்பதை மார்க்கண்டேயர் இப்பாடலில் குறிப்பிடுகிறார். இன்னும் பலநூறு ஸ்லோகங்களால் இந்த அரங்கனை  மங்களாசாஸனம் செய்தார். அங்கேயே அமர்ந்தார். யுகம்தோறும் தாங்கள் இங்கிருந்து அருள்வெள்ளம் பெருக்க வேண்டுமென பிரார்த்தித்தார்.  மார்க்கண்டேயனின் மட்டற்ற பக்தியால் தம்மையும் இத்தலத்தில் நிறுத்திக் கொண்டார். பிராகாசிக்கிறார்.

இப்பேற்பட்ட மகரிஷி தரிசித்த அரங்கனை நாமும் தரிசிக்கலாம். பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்று ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று.  ரங்கம், வடரங்கம், ஆதிரங்கம், மேலரங்கம், கீழரங்கம் போன்றவை ஆகும். பஞ்சரங்கத்தில் தென் அரங்கம் என்பது ரங்கம் ஆகும். அதுபோல  இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று. கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். ரங்கத்தின் அபிமான தலம் இது. கீழையூர்  என்கிற கீழரங்கம் நாகப்பட்டினத்திலிருந்து - திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ளது. \

அமைதி தவழும் அழகிய கிராமம். மூன்று நிலை அடுக்குள்ள ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. சிறியதுமல்லாது பெரியதுமல்லாது பழமையான  ஆலயம். மிக நீண்ட, உயரமான திருமதில் சூழ்ந்திருக்க மையத்தே மிளிர்ந்திருக்கிறது இந்த ஆலயம். மாடக்கோயில்போல சற்று மேடுயர்த்திக்  கட்டியிருக்கிறார்கள். சோழற்காலத் திருப்பணியை அதிகம் கொண்ட ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. இவ்வூரிலேயே பஞ்சபாண்டவர்கள்  வனவாசத்தின் போது பூஜித்த சிவன்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இதையும் தரிசித்து வரலாம். துவஜஸ்தம்பம் தாண்டி நேராக மகா மண்டபம்,  அர்த்த மண்டபம், கர்ப்பக் கிரகம் என்று வரிசையாக அமைந்துள்ளன. மார்க்கண்டேய மகரிஷியை மனதிற்குள் நினைத்த வண்ணம் ஆவலோடு  கருவறை நெருங்குகிறோம். அருகே நகரும்போதே பேரலை வீசினாலும் கடலின் மத்தியில் மையமிட்டுள்ள பேரமைதிபோல ஓருணர்வு நம்மைச்  சூழ்கிறது.
    
பெருமாள் சந்நதி சுமார் 15 அடி உயரத்தில் திருவெண்ணாழி பிராகாரத்துடன் கூடியதாக உள்ளது. அரங்கன் மார்க்கண்டேய மகரிஷிக்குக் காட்டிய  கோலம் கம்பீரமும், அமைதியும் கலந்த யோகியைப் போலுள்ளது. அவர் கிடந்தகோலத்தின் பிரமாண்டம் பிரமிப்பை அளிக்கிறது. மார்க்கண்டேயரின்  யோக தவத்தை முன்னிறுத்தி, உலகம் அனைத்தும் தமக்குள் தேக்கி யோக சயனத்தில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டருளுகிறார். வளைந்தெழும்  ஆதிசேஷன் குடையாக கவிழ்ந்திருக்கிறான். ‘‘குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி’’ என்பதுபோல மேற்கே திருமுடியையும், கிழக்கே  திருவடியையும், வடக்கே பின்புறமாக தெற்கு நோக்கி சேவைசாதிக்கும் அழகுபார்க்க ஆயிரம் ஜென்மம் புண்ணியம் புரிந்திருக்க வேண்டும். அருகேயே  மார்க்கண்டேயரும் முகம் முழுதும் பரந்திருக்கும் பேரின்பத்தோடு சேவை சாதிக்கிறார். இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதே காம்பினின்று  உதிரும் மலர்போல மனம் தன்னை  விடுவித்துக்கொள்ளும் மாயம் நிகழ்கிறது.

ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து புரண்டாலும் தன் நிலையிற் பிறழாத பரந்தாமனின் யோகநிஷ்டையை காட்டும் சூட்சும தலம் இது. காலமிலாப்  பெருவெளியில் அலையும் அனுபவத்தை, பெருவானில் சிறுபுள்ளிபோல் இருக்கும் ஒன்றுமில்லா தன்மையை உணர்த்தும் மகோன்னதமான சந்நதி.  வேண்டும் வரங்களை இச்சந்நதியில் கேட்டுப்பெறுதலல்லாது, அரங்கனே பாத்திரம்பார்க்காது அள்ளிக் கொடுக்கிறான். மார்க்கண்டேயர் ஆனந்த  மயமாக தரிசித்ததால் பெருமாள் குடிகொண்டருளும் விமானத்திற்கே ஆனந்தவிமானம் என்று பெயர். அழைத்தகுரலுக்கு வருவான் ஆயர்பிள்ளை  என்பதுபோல முதலில் கோபாலனாக மகரிஷிக்கு தரிசனம் கொடுத்தார். அதனாலேயே இங்கு உத்ஸவமூர்த்திக்கு ஆயனார் என்று திருநாமம்.  மூலவருக்கு முன்பு ஆயனாரும் நின்றருள்கிறார். உத்ஸவத் தாயாரின் திருநாமம் அதிரூபவல்லித்தாயார் என்பதாகும்.

கருவறை மூலவர் மாலவனின் அருட்சாரலில் மூழ்கியெழுந்து மற்ற சந்நதிகளை சேவிப்போம். மகாமண்டபத்தில் வலதுபுறம்  ராமர் சந்நதியும்,  இடதுபுறம் கிருஷ்ணர் சந்நதியும் உள்ளன. ராமரோடு சுக்ரீவன் எழுந்தருளியுள்ளான். இதுபோன்ற விக்ரகங்கள் மிகச் சில இடங்களில்தான்  காணப்படுகின்றன.  கோபாலனுடன் நர்த்தன கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் எழுந்தருளியுள்ளது சிறப்பம்சமாகும். கோபாலன்  பொன் ஓலையை ஒரு காதில் ஆபரணமாக சூடிக்கொண்டிருக்கும் கோலம் காண்பதற்கரியது.

மகாமண்டபத்தை தாண்டி வரும்போது வலப்புறம் தாயார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம் ரங்கநாயகி. இக்கோயிலின் வடக்கே உள்ள  பத்மதடாகம் எனும் புஷ்கரணியில்எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும்  ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். திருமணங்குடியில் இப்போது சிறு மண்டபம் போன்றுதான் அவ்விடம் காணப்படுகிறது. எனவே  திருமணம் கைகூடுவதற்காக பலபேர் வேண்டிக்கொண்டு வருகிறார்கள். ரங்கநாயகி அதிரூபவல்லியாக பேரழகியாக இங்கு ஜொலிக்கிறாள். ரங்கநாதரின்  யோக சயனத்தை கண்ட பிரமிப்பு அவளையும் சாந்தமாக்கியதுபோலும், தாயாரும் தவக்கோலம்போல் பேரமைதியில் முகிழ்த்திருக்கிறாள். எல்லாம்  நாராயணன் செயல் என்று சரணாகத்தை போதிக்கும் விதமாக அமர்ந்திருக்கிறாள்.

இத்தலமே ஒரு தவக்குகையை நினைவுபடுத்துவது போலுள்ளது. தாயார் சந்நதிக்கு முன்னுள்ள பால ஆஞ்சநேயரின் பக்தியில் நெக்குருகி, பிராகாரத்தை  வலம் வருகிறோம். சற்று மேடாக உள்ளது. இடது புறமாக ஓரத்தில் தாயாரின் சந்நதியைப் போலவே மூன்றடுக்கு சிறிய விமானத்துடன் ஆண்டாளின்  சந்நதி அமைந்துள்ளது. இங்குதான் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. தாமரை பூத்துக்குலுங்கும் தடாகம் மனதை சட்டென்று பூக்கூடையாக  மாற்றுகிறது. எப்போதும் இதமான காற்றும், தாயாரே தவம் செய்த தடாகமாதலால் கண நேரத்தில் மனம் ஒருமையாகிறது. கோயில், மூர்த்தம், தீர்த்தம்  மூன்றும் புண்ணியமென்பர். அது இங்கு நிதர்சனம். தென்மேற்கே ஸ்வாமி தேசிகன் சந்நதியும் மண்டபத்தோடு அமைந்துள்ளது.

காற்றோடு காற்றாக மனம் அலைய அருள்பொங்கும் ஊற்றாக நிமிர்ந்த கொடிமரத்தின் கீழ் படர்ந்து வணங்குகிறோம். தடாகத்தாமரையாக இதயம் மணந்து மலர்வதை இதமாக உணரலாம்.நாகப்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் நாகையிலிருந்து 30 கி.மீ. தொலைவில்  உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்