SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சஞ்சலம் மறையும் சந்தோஷம் பொங்கும்

2021-02-25@ 15:49:22

?என் மகன் பி.டெக் முடித்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறான். மூன்று வருடங்களாக திருமணத்திற்கு பெண் தேடியும் அமையவில்லை. அவனுக்கு சம்பள உயர்வு கிடைப்பதோடு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம் கூறுங்கள்.
 - கிருஷ்ணவேணி, போளூர்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் சனி ஆட்சி பலம் பெற்றிருப்பதும், ஜீவன ஸ்தான அதிபதி சுக்கிரன் இரண்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பான எதிர்காலத்தினை உறுதி செய்கிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் உயர்ந்த உத்யோகத்தையும் சம்பள உயர்வினையும் நிச்சயமாகத் தரும். அதே நேரத்தில் அஷ்டமத்துச் சனியின் காலம் சிறு சிறு தடங்கல்களைத் தந்து கொண்டிருக்கும். ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குரு தொலைதூரத்தில் உத்யோகம் பார்ப்பதற்கான அம்சத்தினைத் தருகிறது. உங்கள் மகனை நீங்கள் தொலைதூரத்திற்கு அனுப்பத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் மகனை தொலைதூர உத்யோகத்திற்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். வருகின்ற ஜூலை மாதத்திற்குள்ளாக அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை என்பது கிடைத்துவிடும். திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவக அதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்ற செவ்வாயோடு இணைந்திருப்பதால் திருமணம் தாமதமாகி வருகிறது. பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்குச் சென்று மூன்று நெய் விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கி வாருங்கள். 14.07.2022க்குள் உங்கள் மகனின் திருமணம் நல்லபடியாக நடந்தேறும்.

?62 வயதாகும் நான் மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது மனைவியுடன் தகராறு உண்டாகி ஒரு மேன்ஷனில் தனியாக வாழ்கிறேன். மேன்ஷன் உரிமையாளர் சரியில்லை. நான் எங்கே போனாலும் என்னை யாரோ பின்தொடர்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்? என் முடிவுதான் என்ன? நல்வழி காட்டுங்கள்.
 - தேவதாசன் டேனியல், நாகர்கோவில்.

உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. தற்போது ஏழரைச் சனி நடந்து வருவதோடு சனி தசையும் உடன் இணைந்துள்ளது. அதிலும் தற்போது நடந்து வரும் கேதுபுக்தியின் காலம் மனதில் இனம் புரியாத பயத்தினையும் தேவையற்ற சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கிறது. மனைவியுடன் தகராறு ஏற்பட்டதற்கான காரணம் நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். முதுமையில் தனிமை என்பது மிகவும் கொடியது என்ற ஔவையாரின் கூற்று உங்கள் விஷயத்தில் மெய்ப்படுகிறது. வாழ்க்கைத்துணை அருகில் இருந்தால் வேறு துணை எதற்கு? தவறு யார் மீது இருந்தாலும் எந்தவிதமான கௌரவமும் பார்க்காமல் கரம் பற்றிய மனைவியிடம் மன்னிப்பு கோருங்கள். பிரதி சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள தேவாலயத்திற்கு தவறாமல் சென்று பிரார்த்தனை செய்வதோடு அங்கே வருகின்ற வயதான முதியவர்களுக்கு உங்களால் இயன்ற சிறுசிறு தொண்டினை செய்து வாருங்கள். ஆண்டவனின் கிருபையால் உங்கள் வாழ்வில் உள்ள சஞ்சலங்கள் மறைந்து சந்தோஷம் நிறைந்திருக்கட்டும்.

?நான்கரை வயதாகும் என் பேத்தி இதுவரை சரியாக பேசவில்லை. அப்பா, அம்மா யார் என்று தெரியவில்லை. அவள் நன்றாகப் பேச என்ன பரிகாரம்
செய்ய வேண்டும்?
 - மோகன், வேலூர்.

புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் (பூசம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னம் மற்றும் வாக்கு ஸ்தான அதிபதி ஆகிய சனி வக்ரம் பெற்றிருப்பதோடு வக்ர கதியில் சஞ்சரிக்கும் செவ்வாயோடு இணைந்துள்ளதும், வாக்கு ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதும் வாக்கு வலிமையைத் தரும் குரு வக்ரம் பெற்று தடையினைத் தரும் எட்டில் அமர்ந்திருப்பதும் சாதகமற்ற அம்சங்களாக உள்ளன.இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே உங்கள் பேத்தியால் பேச முடியும். முக்கியமான மூன்று கிரகங்களின் வக்ர சஞ்சார அமைப்பு பலவீனமான அம்சமாக உள்ளது. தற்போது சனி தசையின் காலமே நடந்து வருவதாலும் சனி அவருடைய ஜாதகத்தில் பலம் இழந்துள்ளதாலும் நேரம் அத்தனை உசிதமாக அமையவில்லை. என்றாலும் இறைசக்திக்கு முன்னால் கிரகங்களின் தனிப்பட்ட வலிமை என்பது பெரிய பாதிப்பை தராது என்பதே உண்மை. குலதெய்வ வழிபாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். அத்துடன் வெள்ளியில் ஆன சிறிய வேல் ஒன்றினை வாங்கி வைத்து தினமும் சிறிதளவு பால் அபிஷேகம் செய்து முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை படித்து வருவதும் நல்லது. இறையருள் ஒன்றினால் மட்டுமே உங்கள் பேத்தியை பேச வைக்க இயலும்.

?எனக்கு திருமணம் நடந்து சிறிது காலத்திற்குள் மனைவி பிரிந்து சென்று விட்டார். நான் பலமுறை முயற்சித்தும் சேர்ந்து வாழ வரவில்லை. எனக்கு பெண் உள்ளது. என் மனைவி மனம் மாறி என்னுடன் சேர்ந்து வாழ வருவாரா? உரிய பரிகாரம் கூறி உதவிடுங்கள்.
 - மணிரத்தினம், பண்ருட்டி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் ஜாதகம்தான் சற்று பலவீனமாக உள்ளது. உங்களையும் அறியாமல் செய்த தவறினை ஒப்புக்கொண்டு மனைவியிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருங்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் அத்தனை உசிதமாக இல்லாததால் சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் மனைவியின் மனம் வெகுவிரைவில் மாறும். 29.11.2021 வாக்கில் உங்கள் குடும்பம் ஒன்றிணையும். மகளுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் நிச்சயமாக உண்டு. உங்கள் பகுதியில் உள்ள திருவதிகை வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும் ராகு காலை வேளையில் சென்று நான்கு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். உங்கள் மனதில் உள்ள குறை நீங்குவதோடு மனைவியின் மனதில் உள்ள வெறுப்புணர்வும் காணாமல் போகும்.
“சாம்பேய கௌரார்த சரீரகாயை கற்பூர கௌரார்த சரீரகாயை
தம்மில்லகாயை ச ஜடாதராய நம:சிவாயை ச நம: சிவாய”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்