ரத சப்தமி.. தை மாதம் முதல் நாள்..இரண்டு நாட்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
2021-02-19@ 12:46:20

தெளிவு பெறுஓம்
ரதசப்தமி நாளில் சூரியனின் ரதம் திரும்புவதாக சொல்கிறார்கள். ஒரு சிலர் தை மாதம் முதல் நாள் அன்றுதான் சூரியன் பயணிக்கும் திசை மாறுகிறது என்கிறார்கள். இந்த இரண்டு நாட்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். இந்த இரண்டு நாட்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை விளக்க முடியுமா?
- ராமகிருஷ்ணன், அம்பத்தூர்.
தை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஸப்தமியை ரத ஸப்தமி என்று குறிப்பிடுவர். தை மாதம் முதல் நாள் அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலத்தை மகர சங்கராந்தி என்று அழைப்பார்கள். பூமியின் தெற்கு மூலையில் இருக்கும் சூரியன் வடக்கு நோக்கி தனது ரதத்தினைத் திருப்பும் காலம் என்பதால் இந்த நாளை உத்தராயண புண்யகாலம் என்றும் அழைப்பர். அறுவடையை முடித்த பிறகு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்துகிறோம். சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது ரதத்தினைத் திருப்பியவுடனே தனது பயணத்தைத் துவக்கிவிடுவதில்லை.
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி தனது திசையை நேரெதிரே ஒரு ‘யு டர்ன்’ அடித்துத் திருப்பும்போது உடனடியாக எதிர் திசையில் வேகம் எடுக்க முடியாதல்லவா.. மெதுவாக வண்டியைத் திருப்பி தன்னை நேர்படுத்திக்கொண்டுதானே எதிர்திசை பயணத்தில் வேகமெடுக்க முடியும். அவ்வாறு சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி தனது ரதத்தினைத் திருப்பும் நாள் தை முதல் நாள் என்றும், முழுமையாக தனது ரதத்தினை வடக்கு நோக்கித் திருப்பி நேர்படுத்திக்கொண்டு தனது பயணத்தினைத் துவக்கும் நாள் ரத ஸப்தமி என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்த நாளிலும் சூரிய பகவானை உற்சாகப்படுத்த வேண்டி பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கிறோம். சூரியனுக்கு உரிய ஸமித்து ஆன எருக்கஞ்செடியின் இலைகளைப் பறித்து ஏழு இலைகளை தலையில் வைத்து ஸ்நானம் செய்கிறோம். (சூரியனின் ரதத்தில் பூட்டப்பட்டிருக்கின்ற குதிரைகளின் எண்ணிக்கை ஏழு.) எளிதில் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் தைத்திருநாள் என்பது கடந்த ஆண்டு நமக்கு குறைவில்லாமல் அன்னமிட்ட சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழா.
ரத ஸப்தமி என்பது இந்த ஆண்டும் விவசாயம் தழைத்து குறைவில்லாமல் எல்லோரும் வயிறார உண்ண வேண்டும் என்பதற்காக சூரியனை பிரார்த்தனை செய்து துவக்கும் விழா என்று பொருள் கொள்ளலாம். இந்த காரணத்தினால்தான் இரண்டு நாட்களிலுமே சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம்.
மேலும் செய்திகள்
தர்மம் தலைகாக்கும் என்பதன் விளக்கம் என்ன?
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் பூஜையறையில் வைக்கலாமா?
நாய்க்கு மோட்சம்!
திருத்தியது எப்படி?
விபூதியைப் பூசும்போது எந்த திசையைப் பார்த்துப் பூசுவது உகந்தது?
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!