SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருணாசலனே போற்றி : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

2021-02-15@ 16:04:25

அருணாசலனே போற்றி!

நான் மின்சாரவாரியத்தில் வரைவாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவன். கடந்த சில ஆண்டு களுக்கு முன்னர் குடும்பப் பிரச்னைகளுக்காக ஜோசியரை அணுகியபோது, அவர் ஒரு தினத்தை குறித்துக் கொடுத்து, அந்த நாளில் திருவண்ணாமலை கிரிவலம் வந்தால், பிரச்னைகள் தீரும். அதுதான் நல்ல பரிகாரம் என்று சொன்னார்.நானும் அந்த நாளுக்காக காத்திருந்த வேளையில், அன்று தமிழகம் முழுவதும் பேருந்து ஓடமுடியாத சூழல் நிலவியது. பரிகாரம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று கலங்கி நின்ற நேரத்தில், இறைவன் அருளால் ஒரு ஆட்டோ டிரைவர், கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு திருவண்ணாமலை கொண்டு சென்று சேர்த்தார். அப்போது இரவு 11.30 ஆகிவிட்டது. மலைவலம் வந்தே ஆக வேண்டும் என்ற வெறியில் மலையைச் சுற்ற புறப்பட்டு விட்டேன்.
எல்லா இரவிலும் குறைந்தது 50 பேராவது மலையைச் சுற்றி வருவார்கள். ஆனால், அன்று நான் மட்டுமே தனிமையில் மலையைச் சுற்றியது மறக்க முடியாத அனுபவம். ‘ஒம் நமசிவாய’ என்னும் மந்திரம் மட்டுமே அன்று உற்ற துணையாக இருந்தது. ஈசனின் அருளால் சிறு பிரச்னை கூட இல்லாமல் காலை 4.00 மணியளவில் மலையைச் சுற்றி முடித்தேன். அந்த பரிகாரத்தால் மட்டுமே என்னால் நல்லபடியாக விருப்ப ஓய்வு பெற முடிந்தது. அது மட்டுமின்றி இந்த 2021ம் ஆண்டில் ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்றும், என்னுடைய ஜோசியர் மலையைச் சுற்றி வந்து பரிகாரம் செய்ய சொன்னார். நானும் பரிகாரம் செய்ய தயாராக இருந்த நேரத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த, படுக்கையாகி விட்டேன். பரிகாரம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வேதனைப்பட்டேன். நடக்கக்கூட முடியவில்லை. ஆனால், குறிப்பிட்ட அந்த ஜனவரி 26ஆம் தேதியன்று ஒரு உத்வேகத்துடன் திருவண்ணாமலை பஸ்ஸில் ஏறிவிட்டேன். மாலை 3.00 மணிக்கு சுற்ற ஆரம்பித்து 7.00 மணிக்கு முடித்து விட்டேன். நல்ல உடல் நிலையில் சுற்றும்போதே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் நான், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த நாளில் ஒரு இடத்தில் கூட உட்காராமல் மிகவும் வேகமாக சுற்றி வந்தது எப்படி சாத்தியமானது? உடல் சோர்வோ, கால் வலியோ துளியும் இல்லை. இதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். ஈசனின் அருளைத் தவிர இந்த மாயம் எப்படி ஏற்பட்டிருக்க முடியும். நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு என்ற வாக்கியமும், அவனருளால் அவன்தாள் வணங்கி என்ற வாக்கியமும், எவ்வளவு அழகாக ஈசனால் நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதை நினைக்கும்போதே மெய்சிலிர்க்கின்றது.
- எம். வெங்கடேசன், காட்பாடி.

ஆபத்திலிருந்து காத்த பெருமாள்

என் வயது 75. 2018ம் ஆண்டு மே மாதம் என் குடும்பத்தினர் அனைவரும் பேருந்தில் சென்னை - கோயம்பேட்டிலிருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றோம். இரவு 11 மணி அளவில் கீழ் திருப்பதியிலிருந்து சென்னைக்கு தனியாக சொகுசு பேருந்தில் பயணம் செய்தோம். இரவு 3 மணி அளவில் பூந்தமல்லி பெருமாள் கோயில் அருகில் ஓட்டுநர் அஜாக்கிரதையால் ஒரு செகண்ட் தூங்கி விட்டதால், பேருந்தானது சாலையிலிருந்து மீறிச் சென்று தடுப்புச் சுவரில் மோதி குடை சாய்ந்து விட்டது. பெருமாள் அருளினால் யாருக்கும் காயம் ஏதும்படாமல், பேருந்திலிருந்து 40 பேர்களையும் காவல்துறையினர் வேறு பேருந்துகளில் பத்திரமாக கோயம்பேடு அனுப்பி வைத்தனர். ஏழுமலையானின் அருளாலும், ராமானுஜர், தேவராஜப் பெருமாள் அருளாலும் அனைவரும் உயிர் பிழைத்தோம்.
 - சு. தயாநந்தன், எம்.ஏ.,எம்.எட். திருக்கோவிலூர்.

நடப்பது அனைத்தும் இறைவனின் திருவுள்ளமே!

எனக்கு வயது 60 ஆகிறது. அப்பாவும், எங்களுக்கு இரண்டு பெண்கள். அன்பான மனைவி, பாசம்மிக்க புதல்விகள்.எங்கள் குல தெய்வம் மணப்பாறை - ஆண்டவர் கோயில் அருள்மிகு மாமுண்டியான் மற்றும் பேச்சியம்மன்.சமயபுரம் மாரியம்மன் என் இஷ்ட தெய்வம். அதேஅளவுக்கு சிவன் மீது மாறாத பக்தி உண்டு. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாலையில் எனக்கு வியர்த்துக் கொட்டியது. சிறிது நேரத்தில் சுய நினைவு இழந்து மயக்க நிலைக்கு ஆளாகினேன். ஆம்புலன்ஸ் மூலம் புதுகை மருத்துவக் கல்லூரிக்கும், அங்கிருந்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கும் சென்றபோது இதயத்தில் இரண்டு அடைப்பு இருப்பதாக சொல்ல எங்கள் குடும்பம் நிலை குலைந்தது. மகள்களும், மனைவியும் வடித்த கண்ணீருக்கும் பிரார்த்தனைக்கும் அளவே இருக்காது. என் அருமை சகலை மூலமாகவும், காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும் எனக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. இன்று நான் நலமுடன் உள்ளேன். செலவுத்தொகை ரூ. 4 லட்சம் ஆனது. இதற்கு எல்லாம் காரணமாக இருந்ததும், ஆபத்தையும் கவலையும் நீக்கி பண உதவி செய்ததும் நான் தினசரி இதயப் பூர்வமாக வழிபாடு செய்யும் சமயபுரம் மாரியம்மனே ஆகும். நடந்தது, நடக்க இருப்பது எல்லாமுமே இறைவனின் திருவுள்ளமே ஆகும். நான் மறு ஜென்மம் எடுத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
 - சங்கர நாராயணன் - புதுக்கோட்டை.

உயிர் காத்து அருள்தந்த அம்மன்

நான் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் வசிக்கின்றேன். விடியற்காலை நேரம் படுக்கையை விட்டு எழுவதற்கு முன் கெட்ட கெட்ட கனவாகத் தோன்றி எனக்கு பெரும் பயத்தை உண்டு பண்ணியது. பிறகுதான் தெரிந்தது யாரோ ஒருவர் என்மீது பொறாமை கொண்டு செய்வினை செய்து என்னை அழிக்க தீய சக்தியை ஏவி உள்ளனர் என்பதை அறிந்தேன். இதைப்பற்றி எனது மனைவியிடம் சொல்லாமல் வழக்கம்போல நான் வேலை செய்யும் இடத்திற்கு வந்து திருவிளக்கு ஏற்றிவிட்டு சிறிதுநேரம் சேரில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் எனது கை, கால்களை கட்டிப் போட்டது போல் உணர்ந்தேன். என்னால் சேரை விட்டு எழ முடியவில்லை. அப்போது ஒரு நண்பர் என்னைப் பார்க்க வந்தார். அப்பொழுது எனக்கு வந்த துன்பத்தை அவரிடம் சொல்ல மனமில்லை. காரணம், எனக்கு வந்த சோதனை இறைவனைத் தவிர யாரும் உதவ முடியாது என்பதுதான். அவரிடம் பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு கடையில் வைத்திருந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு அருகிலிருந்த கடைக்காரரிடம் டூவீலரை கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொண்டு என் வீட்டுக்கு அருகில் உள்ள புதுப்பாளையத்து அம்மன் ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் வழியில் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வாகனத்தை நிறுத்தி, அவரை வாகனத்தில் அமருமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அமர்ந்தார். அப்போது என் கண்கள் தாறுமாறாக உருமாறியது. வாகனம் ஓட்ட முடியாமல் அப்படியும், இப்படியும் சாலையில் அலைபாய்ந்து வந்தது. ஒரு வழியாக ஆலய முன் வாசலை அடைந்தேன். நண்பரிடம் வாகனத்தை உரியவரிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு ஆலயத்தின் உள்ளே அம்மனை நோக்கி அமர்ந்தேன். அந்த ஆலயத்தில் பணி செய்த பூசாரி அம்மா எனது நிலையை அறிந்து அம்மனிடம் உள்ள வெள்ளி பிரம்பை எடுத்து வந்து என்கையில் கொடுத்து தைரியமாக இரு. உனக்கு எதுவும் ஆகாது என்றார். நானும் அம்மனிடம் தீயசக்தி எனது உடலை விட்டு அகற்றி என்னைக் காக்குமாறு மனமுருக வேண்டிக் கொண்டேன். பிறகு அம்மனுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சம் பழமும், வேப்பிலையும் என்னிடம் கொடுத்தார். சிறிது மஞ்சள் நீரையும் கொடுத்து குடிக்கச் செய்தார். பிறகு, ஒருவழியாக என் உடலை விட்டு தீயசக்தி ஒழிந்தது. பிறகு நலம் பெற்றேன். மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை என் தாய், தந்தையாருடன் ஆலயம் சென்றேன். அம்மன் ஒளி சக்தியாகத் தோன்றி எனக்கு நல்லருள் தந்தார். இறைவன் சக்தியை கண்டு மனதைரியம் அடைந்தேன்.
- அன்பழகன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • military-helicopter5

  துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 100farmmmm

  100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

 • train4

  கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

 • mars-4

  செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்