SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோட்சத்திற்கானகதவு திறக்கும்!

2021-02-15@ 15:58:25

?சொந்த ஊரில் இருந்தவரை சொந்த வீட்டில் வசித்தேன். அரசுப் பணி நிமித்தம் மதுரை வந்து 26 வருடங்கள் ஆகின்றன. இத்தனை காலமாக வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். வீடு வாங்க வசதி உள்ளது. பலமுறை முயற்சித்தும் சொந்த வீடு வாங்க முடியவில்லை. சொந்த ஊருக்குச் சென்றால்தான் வாங்க முடியுமா? உரிய வழி காட்டுங்கள்.
 - கல்யாணசுந்தரம், மதுரை.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியன் 12ல் அமர்ந்திருப்பதால் சொந்த ஊரில் செட்டில் ஆவதற்கான வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தான அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் நீங்கள் வேலை நிமித்தம் வந்துள்ள ஊரே உங்கள் சொந்த ஊராக அமைந்துவிடுகிறது. நிரந்தர உத்யோகத்தில் இருந்து வரும் நீங்கள் தேவையின்றி பணி இடமாற்றத்திற்கு முயற்சிக்காதீர்கள். நீங்கள் தற்போது பணி செய்து வரும் இடமே நன்றாக உள்ளது. சொந்த வீட்டினைப் பற்றிச் சொல்லும் நான்காம் வீட்டில் சந்திரன் நீச பலத்துடன் அமர்ந்திருப்பதாலும் சந்திரனின் தசை என்பது 20.02.2025 முதல் துவங்க உள்ளதாலும் அந்த நேரத்தில் சொந்த வீடு பாக்யம் என்பது நீங்கள் பணி செய்து வரும் மதுரையிலேயே அமைந்துவிடும். இதுநாள்வரை பொறுத்திருந்த நீங்கள் இன்னும் சில காலம் பொறுத்திருப்பது நல்லது. பழைய வீடு ஒன்றினை விலைக்கு வாங்கி அதில் குடியேறும் அம்சம் உள்ளது. திங்கட்கிழமையும் பிரதோஷமும் இணையும் சோமவார பிரதோஷ நாட்களில் சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து வாருங்கள். இறைவனின் அருளால் நீங்கள் வேலை பார்க்கும் மதுரையிலேயே சொந்த வீடு என்பது அமைந்துவிடும்.

?எழுபது வயதாகும் எனக்கு பிறந்தது முதல் இதுநாள் வரை வறுமையில் வாடவும் இல்லை, வளமாக வாழவும் இல்லை. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சொற்ப அளவில் ஓய்வூதியம் பெற்று வருகிறேன். என் உடன்பிறந்தோர் எல்லோரும் மறைந்து விட்டனர். நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். என் மரணம் அமைதியாக அமையுமா? துர்மரணம் உண்டாகுமா? இறுதி நாட்கள் நல்லபடியாக அமைய உரிய பரிகாரம் கூறுங்கள்.
- பாபு, சென்னை.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. பெரிதாக எதற்கும் ஆசைப்படாமல் கிடைத்திருக்கின்ற வாழ்வினை நிம்மதியாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆசைகள், தேவைகள் எதுவும் இல்லாததால் துன்பம் என்ற வார்த்தைக்கும் இடமில்லை. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில்
சூரியன், செவ்வாய், புதன், குரு ஆகிய கிரஹங்கள் இணைந்திருப்பது ஆன்ம பலத்தைக் கூட்டுகிறது. தற்போது நடந்து வரும் சூரிய தசையின் காலம் என்பது நல்லபடியாகவே இருந்து வரும். என்றாலும் முதுமையில் தனிமை என்பது மிகவும் கொடியது என்பது ஆன்றோர் வாக்கு. தனியாக வசிக்காமல் உறவினர்களுடன் இணைந்து வசிக்க முயற்சியுங்கள். அல்லது முதியோர் இல்லத்தில் சென்றும் வசிக்கலாம். நான்கு பேருடன் இணைந்து வசிப்பது என்பது நல்லது. மரணத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள். ஜனனமும் மரணமும் இறைவனின் கைகளில்தான் உள்ளது. மனிதர்களால் அதனை தீர்மானிக்க இயலாது. உங்கள் ஜாதகத்தில் எட்டாம் வீடாகிய ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதாலும் 75வது வயது முடிவுறும் தருவாயில் சந்திரனின் தசை துவங்குவதாலும் அந்த நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் ஜாதக பலத்தின்படி துர்மரணத்திற்கான வாய்ப்பு என்பது இல்லை. 70 வயதினைக் கடக்கும் நீங்கள் சதா சர்வ காலமும் ‘ஓம்நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தினை உச்சரித்து வாருங்கள். மரணம் குறித்த சந்தேகம் என்பது மனதை விட்டு அகலுவதோடு மோட்ச பிராப்திக்கான கதவும் திறக்கும்.

?எனது பேரன் பிறந்த ஆறாவது மாதத்தில் இருந்து தோல் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். பாம்பு சட்டை உரிப்பது போல் தலையிலிருந்து பொடுகு உதிரும். உடல் முழுவதும் தோல்வியாதி பரவியுள்ளது. பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இவரது வியாதி குணமாக உரிய பரிகாரம் கூறுங்கள்.
 - ஆறுமுகம், திருநெல்வேலி.


கார்த்திகை நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் (மகர லக்னம் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே கேது கூடுதல் பலத்துடன் அமர்ந்திருப்பதும் ஜென்ம லக்னாதிபதி குரு ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்ற சனியுடன் இணைந்திருப்பதும் பிரச்னையைத் தந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மகர லக்னத்தில் பிறந்திருந்தால் இதுபோன்ற வியாதி வருவதற்கான வாய்ப்பு இல்லை. அவருக்கு வந்திருக்கும் நோய் என்பது ‘ஆட்டோ இம்யூனே டிசீசஸ்’ வகையைச் சார்ந்தது என்பதாலும் இதனைத் தருவது கேதுதான் என்பதாலும் கேது வாசம் செய்யும் தனுர் லக்னமே அவரது ஜெனன லக்னம் என்பதும் உறுதியாகிறது. இதனை முழுமையாக குணப்படுத்த இயலாது என்றாலும் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். அவருடைய ஜாதகத்தில் உத்யோக ஸ்தானம் என்பது பலமாக உள்ளதால் இன்ஜினியரிங் முடித்த கையோடு அரசுப் பணிக்கு முயற்சி செய்ய சொல்லுங்கள். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதோடு விடாமல்

அரசுப் பணிக்கான தேர்வுகளையும் எழுதி வரச் சொல்லுங்கள். 26வது வயதில் அரசுப் பணியில் நிரந்தரமாக அமர்ந்து விடுவார். அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருக்கும் பகுதியில் நாகர் சிலை ஒன்று வாங்கி பிரதிஷ்டை செய்யச் சொல்லுங்கள். வியாழன் தோறும் அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி வருவதும் இவரது நோயினை கட்டுக்குள் வைத்திருக்க துணைபுரியும். முடிந்தால் சர்ப்ப சாந்தி என்ற பூஜையைச் செய்துமுடிப்பதால் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

?எனது கணவர் தினமும் குடித்துவிட்டு வருவதோடு தகாத பெண்களின் சகவாசமும் வைத்திருப்பதால் சண்டையும் சச்சரவுமாக உள்ளது. இவரது தகாத நடவடிக்கையால் சொந்த தொழில் நஷ்டமடைந்து வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் தவறான பெண்களின் தொடர்புகளை விடாமல் உள்ளார். அவர் திருந்துவதற்கு பரிகாரம் கூறுங்கள்.
 - சென்னை வாசகி.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தைக் கணித்து பார்க்கையில் அமாவாசை நாளில் பிறந்திருக்கிறார் என்பதும் பிடிவாத குணம் நிறைந்தவர் என்பதும் தெரிய வருகிறது. இவரது ஜாதகத்தில் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் ஜென்ம லக்னாதிபதி குரு உச்சம் பெற்றிருப்பதாலும், மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் புதன் உச்சம் பெற்றிருப்பதாலும் மனைவி மற்றும் குழந்தைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பதும் தெரிய வருகிறது. இதுபோன்ற மனிதர்களை சென்டிமென்ட் என்ற அஸ்திரத்தை பயன்படுத்தித்தான் திருத்த இயலும். வயதிற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு இதுபோன்ற தகாத செயல்களில் நீங்கள் ஈடுபடுவதால் உங்களுடன் குடும்பம் நடத்த இயலாது என்று சொல்லி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனியாக சென்றுவிடுங்கள். மனைவியையும் குழந்தைகளையும் விட்டு அவரால் இருக்க முடியாது. அது மட்டுமல்லாது தற்போதைய கிரகச் சூழலின்படி உடலில் தளர்ச்சியும் நோயும் உண்டாவதற்கான வாய்ப்பும் அவருக்கு உண்டு. இதுபோன்ற சூழலில்தான் உண்மையான அன்பும் பாசமும் அவருக்குப் புரிய வரும். மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் விரதமிருந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு அன்னதானம் செய்து வாருங்கள். அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு வருவதும் நல்லதொரு மாற்றத்தினை உங்கள் கணவரிடம் உண்டாக்கும். வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள்ளாக உங்கள் பிரச்னை முடிவிற்கு வந்துவிடும். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

 • uk-lockdown13

  பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

 • mask_ramadaaa1

  சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

 • chenaabbb11

  இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

 • 13-04-2021

  13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்