SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூமி பாக்கியம் சொந்த வீடு யோகங்கள்

2021-02-15@ 15:31:18

நேரம் காலம் அமைப்பு வரும்போது எல்லாம் தானாகக் கூடிவரும். இது காலம்காலமாக படித்தவர் முதல் பாமரர்வரை சொல்லும் ஆறுதலான வாக்காகும். அது என்ன காலம், நேரம், அம்சம், பாக்கியம், அமைப்பு. இது எல்லோருக்கும் வராதா. சிலர் வாழ்நாள் முழுவதும் ஏற்ற இறக்கம் உருட்டல், பிரட்டல் செய்தே
கஷ்டப்பட்டு காலத்தை கழித்து விடுகிறார்கள். பலருக்கு சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. ஒரு சிலர் பிறப்பு முதல் இறப்பு வரை சகல சௌபாக்யங்களுடன் வாழ்ந்து மறைகிறார்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத வளர்ச்சியும், வீழ்ச்சியும் உண்டாகிறது. இப்படி எல்லா விஷயங்களிலும் நிறை குறைகள், ஏற்றத்தாழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளன.

எல்லா விஷயங்களும் நிகழ்வுக்கும் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, ஜாதக கிரக அமைப்பின்படி அந்தந்த காலகட்டத்தில் நடைபெறும் தசாபுத்திகள் மூலம் கிரக சக்திகளால் நமக்கு அருளப்படுகிறது. இதைத்தான் பூர்வ புண்ணிய சுகிர்த விசேஷம், நம் கர்மவினைக்கேற்ப நாம் வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம். எதுவொன்றும் அவரவர் பிராரப்தப்படி அவரவர்களுக்கு உரிய நேரத்தில் வந்து சேரும் என்பது ஜோதிட வாக்காக மட்டும் அல்லாமல் அனுபவப்பூர்வ உண்மையாகவும் உள்ளது.

மண்ணால் யோகம், பொன்னால் யோகம், பெண்ணால் யோகம், தனலட்சுமி யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், விபரீத ராஜயோகம், நீச்சபங்க ராஜயோகம், பஞ்சம யோகம், நீஷேப யோகம் என பல வகைகளில் யோகங்கள் உள்ளன. இந்த யோகங்களின் மூலம் நமக்கு சொத்து சேருவதுதான் இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம். மண் யோகம், பொன் யோகம், பெண் யோகம் என்று சொல்வார்கள். அதில் குறிப்பாக வீடு, மனை, தோட்டம், தோப்பு, எஸ்டேட் என வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே வரும். சிறியதாகவோ, பெரியதாகவோ சொந்தமாக ஒரு தனி வீடோ, பிளாட்டோ வாங்கிவிட வேண்டும் என்பது பலருடைய கனவாகும். இந்தக் கனவு நனவாகுமா நமக்கு அந்த பிராரப்தம் இருக்கிறதா என்பதை நம் ஜாதகக் கட்டங்களில் இருக்கும் கிரக நிலைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகக் கட்டத்தில் லக்கினத்தில் இருந்து நான்காம் இடம் சதுர்த்த கேந்திரம். கேந்திரம் என்றால் நான்கு ஸ்தானங்கள். அதாவது 1, 4, 7, 10. இந்த ஸ்தானங்கள் ஒருவரின் வாழ்க்கை அமைப்பை உணர்த்தும் இடங்களாகும். அந்த வகையில் இந்த நான்காம் இடம், சதுர்த்த கேந்திரம், சுக ஸ்தானம், அதாவது உடல் நலத்தை குறிக்கும் இடம். சதுர்த்த கேந்திரம், சுக ஸ்தானம். அதாவது உடல்நலத்தை குறிக்கும் இடம். உடல் நலம், மன நலம் இரண்டும் மிகமிக முக்கியமானது. சுவர் நன்றாக இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியம் நன்றாக இருந்தால் எல்லா சுகபோகங்களையும் ஒருவர் அனுபவிக்க முடியும். அந்த அடிப்படையில் இந்தநாள்தான் நமக்கு பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறது.

மாதுர் ஸ்தானம் என்று சிறப்பிக்கப்பட்டு தாய், தாய் வழி உறவுகள், பிறந்த இடம், வாழ்விடம், வசிப்பிடம், குடும்ப வரலாறு, இல்லத்தில் இன்பம், இல்லறத்தில் இன்பம், உறவுகளுடன் உள்ள பந்தபாசம், வாழ்வில் வசந்தம், போஜன சுகம், கல்வி, ஜீரணம், கர்ப்ப ஸ்தானம், கற்பு நெறி, தடுமாற்றம், கவலை, நோய், வாகனம், நிலம், மண், சொத்து, தோப்பு துரவு, தோட்டம், எஸ்டேட், விவசாயம், வீடு, பங்களா, மாட மாளிகை, அடுக்குமாடிகள், தாய்வழிச் சொத்து, பூர்வீகச் சொத்து, மாடு, பசு, ஆடு, குதிரை, கழுதை, ஒட்டகம், யானை போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள், அம்சங்கள். இந்த நான்காம் வீட்டில் இருந்து அறியப்படுகிறது. மேலும், வாழ்வின் இறுதிநிலை, ரகசிய வாழ்க்கை, புதையல், பினாமி சொத்து, உயில் சொத்து, உழைப்பில்லாமல் சேரும் செல்வம். தீய நட்பு, கேடாபை பழக்க வழக்கங்கள் என பலவகை அம்சங்கள் புதைந்து கிடக்கின்றன.

பூமி யோகம்

ஜாதகத்தில் கேந்திரங்கள் என்பது மிக முக்கியமானது. லக்கின கேந்திரம் இங்கு இருந்துதான் ஒரு ஜாதகம் இயக்கப்படுகிறது. சதுர்த்த கேந்திரம் தாய், சுகம், கல்வி, வீடு, பூமி, சப்தம கேந்திரம் கணவன் அல்லது மனைவி இல்லற விஷயங்கள் தசம கேந்திரம். தொழில், வியாபாரம், வேலை இந்த நான்கு கேந்திரங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஜாதகக் கட்டத்தில் மண், மனை, வீடு, வசிப்பிடம், சொந்தவீடு என்பதைபற்றி லக்னத்திற்கு நான்காம் இடமான சதுர்த்த கேந்திரம் நமக்கு உணர்த்துகிறது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் அனுபவிப்பதற்கு பாக்கியம், யோகம் தேவை. அது நம் கர்ம வினைப்படி நமக்கு அமைகிறது. சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நல்ல அம்சம் தேவை. சிலர் சொந்த வீடு, பிளாட் வைத்திருப்பார்கள். ஆனால், அதை வாடகைக்கு கொடுத்துவிட்டு வேறு இடத்தில் வாடகைக்கு குடியிருப்பார்கள்.

சொத்து என்று பார்க்கும்போது பூமிக்காரகன் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் அருள் நமக்கு மிகவும் முக்கியம். நிலத்தின்மீது கட்டப்படும் வீடு, மாளிகை, அடுக்கு மாடிகள், ஆடம்பர பிளாட்டுக்கள் எல்லாம் சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருப்பது அவசியம். சுக்கிரன் - செவ்வாய் சேர்க்கை பொதுவாக காம சுகம், உடல் உறவு வேட்கையை உண்டாக்கும் என்றாலும் பூமி யோகத்திற்கும் அதிகாரம் உண்டு. உங்கள் லக்கினத்திற்கு நான்காம் அதிபதி எந்தக் கிரகமோ அந்தக் கிரகம் ராசி, நாலாமிடத்தில் நல்ல பலத்துடன் இருப்பது அவசியம். யோகாதிபதிகளின் சாரத்தில் இருப்பது கூடுதல் விசேஷம். கூட்டுக் கிரகங்கள் சேருவதால் வரும் யோகத்தை விட, கிரக பரிவர்த்தனைகளால் வரும் பாக்கியத்தைவிட, கிரகம் ஆட்சி, உச்சம் பெறுவதால் கிடைக்கும் யோகத்தை காட்டிலும் குறிப்பிட்ட கிரகம் தன் சொந்த வீட்டை பார்க்கின்றபோது ராஜயோக பலன்கள் அபரிமிதமாகக் கிடைக்கின்றது. இது அனுபவரீதியாக பல லட்சக்கணக்கான ஜாதகங்களில் மிகச் சரியாக வேலை செய்துள்ளது.

லக்னத்திற்கு நான்காம் வீட்டிற்குரிய கிரகம் சுப பலத்துடன் கேந்திரம், திரிகோணங்களில் இருந்தால் சுக பாக்கிய யோகம். லக்கினத்திலேயே நான்காம் அதிபதி இருந்தால் பூமி புரந்தரும் ராஜயோகம். பூர்வீகச் சொத்து, தாய் மற்றும் மனைவி வழியில் சொத்து சேரும். இரண்டாம் இடத்தில் இருந்தால் வாடகை வருமானங்கள், ரியல் எஸ்டேட், புரோக்கர், கமிஷன் மூலம் லாபம் வரும். மூன்றாம் இடத்தில் சுபபலத்துடன் இருந்தால் எதிர்பாராத வகையில் சொத்து சேரும். உயில் சொத்து கிடைக்கும். நான்காம் இடத்தில் இருந்தால் நிலபுலன்கள், விவசாயம் மூலம் வருமானம் வரும்.

ஐந்தாம் இடத்தில் இருந்தால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் அடிக்கும். மாமன், மாமனார் வகையில் லாபம் உண்டு. பிள்ளைகள் மூலம் உயர்வடைவார்கள். ஏழாம் இடத்தில் இருந்தால் கேந்திர யோகம் சொத்து  சுகம் எப்போதும் இருக்கும். மனைவி வகையில் அதிர்ஷ்டம் உண்டு. மனைவி பெயரில் வீடு, நிலம் அமையும். ஒன்பதாம் இடத்தில் இருந்தால் பூர்வீக சொத்து, சுய சம்பாத்தியம் இரண்டும் அமையும். பத்தாம் இடத்தில் இருந்தால் சுய சம்பாத்தியம் மூலம் வசதிகள் பெருகும். உயில் சொத்து, தாய் வழி சொத்து கிடைக்கும்.

விபரீத ராஜயோகம்

ஒரு ஜாதகத்தில் 6, 8, 12ம் அதிபதிகள் சம்மந்தம் பெற்று யோகாதிபதிகளின் பார்வை இருந்து தசா நடக்கும்போது செல்வம், செல்வாக்கு, சொத்து குவியும். சில வக்கிர கிரக தசைகள் வாரிக் கொடுத்து விடும். நீச்ச பங்கம் பெற்ற தசையில் ராஜயோக பலன்கள் கிடைக்கும். ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி பரிவர்த்தனை எதிர்பாராத அசுர வளர்ச்சியை கொடுக்கும். பெரிய செல்வந்தர்களுக்கு பினாமியாகும் வாய்ப்பு உண்டாகும். கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்க முடியாவிட்டாலும் அந்தக் காரின் ஓட்டுனராக இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.

பலநூறு ஏக்கர் காப்பி, தேயிலை எஸ்டேட்களை சொந்தமாக வாங்க முடியாவிட்டாலும் அதை நிர்வாகம் செய்து அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். உயில் சொத்து, சீதன சொத்து, பங்காளிச் சொத்து, உழைப்பில்லா செல்வம் எல்லாம் விபரீத, நீச்சபங்க ராஜயோகம் மூலம் கிடைக்கும். நமக்கு சொந்தமாக அமைவது ஒரு வகை யோக பாக்கியம். அடுத்தவருக்கு அமைவதை நாம் அனுபவிப்பதும் ஓர் அதிர்ஷ்டம்.

வீடு நிலம் சொத்து சேருவது எப்போது?

பொதுவாக எல்லாவற்றிற்கும் முக்கிய மூல காரணமாக இருப்பது தனயோகம் ஆகும். இரண்டாம் அதிபதி, லாபாதிபதி பலமாக இருந்து தசா நடக்கும்போது பொன், பொருள், சொத்து சேரும். சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரக தசைகள் யோக பலன்களை அளிக்கும். சந்திரனுக்கு நான்கு, ஏழு, பத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி இருப்பது பூமி யோகம். இந்த அமைப்பு உள்ள தசா புக்திகளில் வீடு கட்டும் பாக்கியம், கிரக பிரவேசம் செய்யும் யோகம் உண்டு. லக்னாதிபதி, நான்காம் அதிபதி சம்மந்தப்பட்ட தசாபுக்திகளில் சொத்து சேரும். பாக்கியாதிபதி, பஞ்சமாதிபதி தசாபுக்திகளில் பூர்வீகச் சொத்துக்கள், பாகப் பிரிவினை சொத்துக்கள் கைக்கு வரும்.

பலம் பெற்ற சப்தமாதிபதி, சுக்கிரன், சந்திரன் தசைகளில் எதிர்பாராத ஏற்றத்தை கொடுக்கும். மனைவி, தாய் வகையில் சொத்து கிடைக்கும். 71/2 சனி நடைபெறும் காலங்களில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். சொத்து வாங்குவது, விற்பது, இடமாற்றம் இருக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். புதிய வீட்டில் கிரகப் பிரவேசம் செய்யும் பாக்கியம் 71/2 சனியில் அமையும். இது அனுபவப் பூர்வமாக மிகச் சரியாக இருக்கிறது. ஒரு சிலருக்கு சொந்த வீடு அமைவதில், வீடு கட்டுவதில், தடைகள் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள், வழக்குகள் இருக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் தடைகள் வரும். அப்படிப்பட்டவர்கள் இந்த கோயில்களுக்கு சென்று தரிசித்தால் எல்லாம் நினைத்தபடி கைகூடிவரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

 • 22-04-2021

  22-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்