SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தியது எப்படி?

2021-02-08@ 16:05:21


பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் விபரீதச் செய்திகளைப் பார்க்கும்போது, ‘‘இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?” என்ற எண்ணம் வரும். தீயவைகளில் மட்டுமல்ல; நல்லவற்றிலும் இவ்வாறே பல நிகழ்வுகள் உண்டு. அவைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டுபோய்ச் சேர்த்தாலே போதும். கிருஷ்ண சைதன்யர் என்ற மகான் காலத்தில் நடந்தது இது. அக்காலத்தில் கதாதரபட்டர் எனும் மகான் இருந்தார். அவர் யாருக்கு எதைச் செய்தாலும், அதை கண்ணனுக்கே செய்வதாக நினைத்துச் செய்வார்.

ஒருநாள்... இரவு நேரம்! பட்டரின் வீட்டில் அவர் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த வேளையில் திருடன் ஒருவன் உள்ளே புகுந்து, இருந்ததையெல்லாம் மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானான். மூட்டை பெரிதாக இருந்ததால் அவனால் தூக்க முடியவில்லை; ‘உஸ்ஸு புஸ்ஸு’ என மூச்சு விட்டான்.

அந்த ஓசையில் பட்டர் விழித்துக்கொண்டார். திருடிய பொருட்கள் அடங்கிய மூட்டையைத் தூக்கமுடியாமல் திருடன் தவிப்பதைப் பார்த்தார்.  மிகுந்த கருணையோடு, ‘‘அப்பா! வேண்டுமானால் நானும் உன்னுடன் சேர்ந்து அந்த மூட்டையைத் தூக்கி, உன் தலையில் வைக்கட்டுமா?’’ என்று கேட்டார். திடுக்கிட்ட திருடன், மூட்டையைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். அவனைத் தடுத்த பட்டர், ‘‘ஏனப்பா பயப்படுகிறாய்? உன்னிடம் இல்லையென்று, உன் தேவைக்கு என்றுதானே திருடினாய்? நட்டநடு ராத்திரியில் இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்திருக்கிறாய்; ஆகையால் இந்த மூட்டையைக் கையோடு எடுத்துக்கொண்டு போ!’’ என்றார்.

திருடன் வியந்தான்; மூட்டையைக் கொண்டுபோக மறுத்தான்; ஆனால், பட்டர் விடவில்லை. ‘‘இல்லாத கொடுமைக்குத்தான் திருடினாய். ஆகையால் எடுத்துக்கொண்டு போ!’’ என்று வற்புறுத்தவே, வேறு வழியற்ற நிலையில் திருடன் மூட்டையோடு வெளியேறினான்.மறுநாள்! விடியற்காலை நேரம்; திருடன் மூட்டையுடன் வந்தான். மூட்டையை பட்டரின் திருவடிகளில் போட்டுவிட்டு, தன் உடம்பையும் போட்டான். ஆம்! பட்டரின் திருவடிகளில், விழுந்து வணங்கினான்.

‘‘ஐயா! பெரியவரே! உங்கள் நல்லகுணம் என்னை மாற்றிவிட்டது. இனிமேல் நான் திருடவே மாட்டேன். நான் திருந்தியதற்கு அடையாளமாக, இனி நல்வழியில் நடப்பதற்கான ஆசி வழங்கும் முகமாக, தயவுசெய்து இம்மூட்டையை ஏற்று எனக்கருள வேண்டும்!’’ என வேண்டினான் திருடன்.அப்படியே வாழ்த்தினார் பட்டர்.எல்லோருக்குள்ளும் நல்லது கெட்டது என இரண்டும் உள்ளன. அவற்றில் நல்லதைத் தூண்டிவிட்டால், நன்மைதானே விளையும். அவ்வாறு செய்வோம்! அல்லல்கள் அகற்றுவோம்!

 - V.S. சுந்தரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்