SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபூதியைப் பூசும்போது எந்த திசையைப் பார்த்துப் பூசுவது உகந்தது?

2021-02-03@ 17:37:39

தெளிவு பெறுஓம்

?பாவம் எது? புண்ணியம் எது?
- சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

நாம் செய்கின்ற செயல் அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தினால் அது பாவம். மற்றவர்கள் மனம் குளிரும் செயலைச் செய்தால் அது புண்ணியம். ஒரு சில நேரத்தில் ஒரே செயல் ஒருவருக்கு வருத்தத்தையும் மற்றொருவருக்கு மகிழ்ச்சியையும் தரலாம். அது போன்ற சமயத்தில் தர்மத்தின் வழியில் செய்யப்பட்ட செயலாக இருந்தால் அது புண்ணியத்தையே தரும். தர்மத்திற்கு மாறாக செய்யும் செயல்கள் என்றுமே பாவத்தையே பெற்றுத் தரும்.
?ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றொருவர் தீர்வு காண முடியுமா?
- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு.

முடியாது. யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டால்தான் நோய் தீரும். அவருக்கு மற்றொருவர் மருந்து சாப்பிட்டால் நோய் தீருமா? அதேபோலத்தான் இதுவும். ஒருவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் அவரேதான் செய்ய வேண்டும். மற்றொருவர் செய்தால் அதற்கான பலனை அடைய முடியாது. அதே நேரத்தில் ஒருவர் பாவம் செய்துவிட்டு அதற்குரிய பிராயச்சித்தம் செய்யாமல் விட்டுவிட்டால் அந்தப் பாவமானது பரம்பரையைத் தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கும்.

பாவமும் புண்ணியமும் சொத்து சேர்க்கையைப் போன்றதுதான். ஒருவர் சம்பாதிக்கும் சொத்து எப்படி அவரது வாரிசுகளைச் சென்று சேர்கிறதோ, அதேபோல அவர் சம்பாதிக்கும் பாவமும் புண்ணியமும் அவரது வாரிசுகளைச் சென்றடையும். இந்த நிலையில் பெற்றோர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்ய பிள்ளைகளால் முடியும். பிள்ளைகள் அல்லது அவரது வாரிசுகள் அல்லது பாவம் செய்த மனிதர் சம்பாதித்த சொத்தினை அனுபவிப்பவர்கள் அதற்கான பரிகாரம் செய்வதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

?சாமியாடி குறி சொல்வதை நம்பலாமா?
- அயன்புரம் த. சத்தியநாராயணன்.

நம்பலாம். அருள்வாக்கு என்று இதனைச் சொல்வார்கள். இறைவன் ஒரு சிலருக்கு மட்டும் இதுபோன்ற சக்தியை அளித்திருப்பார். இறைசக்தியைப் பெற்றிருக்கும் மனிதர்கள் சொல்லும் அருள்வாக்கினை நம்பலாம். அதேநேரத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனோ அல்லது வீண் பெருமைக்காகவோ சாமியாடுபவர்களை நம்பக்கூடாது. இவர்களில் யார் உண்மையானவர் யார்? ஏமாற்றுக்காரர்கள் என்பதை பிரித்தறிவது என்பது நம் கைகளில்தான் உள்ளது.

?செவ்வாய் வெறும் வாய் என்று சொல்லி எந்த காரியமும் தொடங்குவதில்லை. வடநாட்டில் ‘மங்கள்வார்’ என்று சொல்லி பல நற்காரியங்களையும் தொடங்குகிறார்களே, இது சரியா?
- அரிமளம் இரா. தளவாய்நாராயணசாமி.

சரியே. அதே நேரத்தில் நாம் எந்தவிதமான செயலைச் செய்யப்போகிறோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். விதை விதைத்தல், இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழிலைத் துவங்குதல் போன்ற பணிகளை தாராளமாக செவ்வாய் கிழமையில் செய்யலாம். அதே நேரத்தில் அந்தப் பணியானது வாய்ப்பேச்சினால் சாதிக்கக் கூடிய பணியாக இருக்கக் கூடாது.

செவ்வாய்கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும் நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பயஉணர்வு மனதில் தோன்றும். நவகிரகங்களில் செவ்வாய் அங்காரகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தீய கிரகங்களில் ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். இயற்கையில் செவ்வாய் எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும்
ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைக் கொண்டவர். விசுவாசம் நிறைந்த பணியாள் என்றாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப்பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தருவார். தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது செவ்வாய்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும். தற்காலத்தில் கூட தங்களது பேச்சுத்திறமையின் (கேன்வாசிங்) மூலம் வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் கூட (ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்றவை) செவ்வாய்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம்.

செவ்வாய்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கலாம். அதனாலேயே திருமணத்திற்கு சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ.. வெறும் வாயோ...’ என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம்.

?விபூதியைப் பூசும்போது எந்த திசையைப் பார்த்துப் பூசுவது உகந்தது?
- பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

ஆண்டவன் எல்லா திசையிலும் இருக்கிறான். இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் எனும்போது இறைவனை வணங்குவதற்கோ அல்லது இறைவனை நினைத்து நெற்றியில் திருநீறு பூசுவதற்கோ திசையைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிலர் இறைவழிபாட்டின் போது தெற்கு நோக்கி வணங்கக் கூடாது, அது எமனுடைய திசை என்று கூறுவார்கள்.

ஏன் தர்மத்தின் தலைவனான எமதர்மராஜனை வணங்கக்கூடாதா என்ன? அதுமட்டுமின்றி இறைவன் எல்லா திசைகளிலும் குடியிருக்கும்போது நாம் தெற்கு நோக்கி வணங்கினால் அது இறைவனுக்குப் போய் சேராதா? கண்டிப்பாக போய்ச் சேரும். இறைவழிபாட்டிற்கு திசை என்பது முக்கியமில்லை. பக்தியும் சிரத்தையும் மட்டுமே முக்கியம். சிரத்தையுடன் கூடிய பக்தி என்பது நெஞ்சில் குடியிருந்தாலே போதும். இறைவனின் அருள் என்பது நிச்சயமாக நமக்கு கிட்டும்.

?கடந்த 30 ஆண்டுகளாக என்னுடனேயே இருந்த என் மைத்துனன் 45வது வயதில் மரணம் எய்தி விட்டான். தீட்டு எத்தனை நாட்களுக்கு? வீட்டில் மங்கள காரியங்கள் செய்யலாமா?
- மாரிமுத்து, சென்னை.

மைத்துனன் இறந்தால் மூன்று நாட்களுக்கு மட்டுமே தீட்டு உண்டு. அவர் உங்களுடனேயே கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்ததால் உங்கள் மனதிலிருந்து அவரது நினைவுகள் நீங்காமல் இருக்கிறது. உலகில் பிறந்தவர் எல்லோரும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்து மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.

அவர் இறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டபடியால் உங்களுக்கு தீட்டு என்பது கிடையாது. தாராளமாக உங்கள் வீட்டில் எந்தவித தயக்கமுமின்றி மங்கள காரியங்களைச் செய்வதோடு பண்டிகைகளையும் கொண்டாடலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ethiopia-fire-sky

  விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

 • george-floyd-21

  நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

 • 21-04-2021

  இன்றைய சிறப்பு படங்கள்

 • nasa-helicopter-20

  செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

 • vaccine-cake-20

  ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்