SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை

2021-01-21@ 09:53:03

சமய சடங்குகளில் பூக்களை மாலையாக அணிவது மங்கலகரமானதும், மகிழ்ச்சிமிக்கதுமாகும். சிலர் பொன்னாலான பூக்களைக் கொண்டு தொடுத்த பொன்னரி மாலையையும், பொற்காசுகள் கோர்த்த காசுமாலையையும் அணிவர். அவை அவர்களது செல்வ நிலையையும் செழிப்பையும் காட்டுகின்றன. முருக வழிபாட்டில் தென்னகத்தில் இருந்த சில சடங்குகளில் பாம்பை மாலையாக அணியும் வழக்கம் இருந்தது. இது அச்சமும், அளப்பரிய தெய்வீக சக்தியையும் குறிக்கும் மாலையாக அமைகிறது.

மழுவடி சேவை என்னும் சடங்கில் பாம்பை மாலையாக அணிந்தனர்.மழுவடி சேவை என்பது முந்நாளில் முருகன் ஆலயங்களில் மட்டுமே சிறப்புடன் நடைபெற்று வந்து இப்போது அறவே வழக்கொழிந்து போன சடங்குகளில் ஒன்றாகும்.இதில் ஆலயங்களில் நடனமாடும் பெண் ஒருத்தி பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தனது வெறும் கைகளால், உலகம் சிறப்புடன் வாழ வேண்டும், மழை பொழிய வேண்டும், மண் செழிக்க வேண்டும் என்று பலவிதமான வாழ்த்துக்களைக் கூறி ஓங்கி அடிப்பாள்.

பழுக்க காய்ச்சித் தகதகவென நெருப்பைப் போல்  ஜொலிக்கும் இரும்புக்கு மழு என்று பெயர். மழுவடி நடைபெறும் இடத்தில் கனமான இரும்புப் பலகையை வரட்டி, விறகுகளுக்கு இடையே வைத்துத் தீமூட்டுவர். பலமணி நேரம் எரியவிடும் போது தீயின் வெம்மையால் அந்த இரும்பு தீப்பிழம்பு போல் கனன்று ஜொலிக்கும். அப்படித் தீ வடிவாகி ஜொலிக்கும் இரும்பே கனல் மழுவாகும். இதில் ஏறத் தாழ இரும்பு உருகும் பதத்தில் இருக்கும். இந்த மழுவை வாழ்த்துக்கள் கூறி அடிப்பதால் இதற்கு மழுவடி சேவை என்று பெயர் உண்டாயிற்று.

இதில் பங்குபெறும் பெண் படம் எடுத்துச் சீறும் ஒரு நல்ல பாம்பை  மாலையாக அணிவாள். இப்படி பாம்பைச் சிவபெருமான் போல  கழுத்தில் ஒரு பெண் அணியும் முறை வேறெந்தச் சடங்கிலும் இடம் பெறுவதில்லை என்று கூறுகின்றனர்.முருகன் ஆலயங்களில் நடைபெறும் காவடித் திருவிழாவின் ஓர் அங்கமாகவும், பெருந்திருவிழாவில் பந்தம்பறி எனும் விழாவின் ஓர் அங்கமாகவும் இந்த மழுவடி சேவை நடைபெறும். முருகன் பரிவாரங்களுடன் வீதிகளில் பவனி வந்தபின் ஆலயத்தின் முன்புறம் வந்து நிற்பார். அங்கு கோயிலைச் சேர்ந்த ஆடற்பணிப் பெண்கள் ஒன்று கூடுவர். அங்கு நாட்டிய வழிபாடு நடைபெறும்.

பின்னர் மழுவடி சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் மேளதாளத்துடன் அழைத்து வரப்படுவாள். அவள் முருகனை வேண்டியபடி ஆடிப் பாடி நடனமாடுவாள். பிறகு மழுவடிக்குத் தயாராகக் கனன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரும்பைச் சுற்றி வந்து நடனமாடுவாள். அப்போது அவளுக்கு விபூதி அளிக்கப்படும். வாத்தியங்கள் பெரியதாக முழங்கும்.

அவளது ஆட்டமும் வேகம் அடையும். மக்கள் அரோகரா அரோகரா என முழங்குவர். வாத்தியங்கள் படிப்படியாக உச்சகதியில் ஒலிக்கும். அவ்வேளையில் அப்பெண் உலக மக்கள் மேலான வாழ்வுவாழ வாழ்த்தி சத்தியம் செய்வதுபோல் உள்ளங்கையால் ஓங்கி அந்த ஜொலிக்கும் இரும்பில் அடிப்பாள். அப்போது விளக்கெண்ணெயை அந்த இரும்பின்மீது ஊற்றுவர். எண்ணெய் கொதித்து ஆவியாகப் பரவும். பெண் சுற்றி வந்து சுற்றி வந்து மீண்டும் வாழ்த்துக்களைக் கூறி அந்த இரும்பில் அடிப்பாள்.

இப்படி பலமுறை அடிப்பாள். பிறகு அவளது ஆட்டம் படிப்படியாக வேகம் குறையும். ஆடிக்கொண்டிருக்கும் பாம்பை எடுத்துக் கொள்வர். அவள் ஆடிப்பாடிய வாறே கோயிலுக்குள் செல்வாள். முருகனும் தொடர்ந்து கோயிலுக்குள் செல்வார். மழுவடிக்கப்பட்ட இரும்பு குளிர்ந்ததும் அதில் பெண்ணின் கை பதித்து அடையாளம் ஆழமாக இருக்கும். தளிர் போன்ற பெண்ணின் கை தீயாக ஜொலிக்கும்.

இரும்பில் அழுத்தமாகப் பதிவதும் அதனால் அப்பெண்ணின் மென்மையான கைகளுக்கு எந்தவிதத் தீங்கும் நேராமல் இருப்பதும் ஆச்சர்யமானதாகும். இது பக்தி உலகின் அதிசயமாகப் போற்றப்படுகிறது.

அவள் அணிந்திருந்த பாம்பை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள காட்டில் விட்டுவிடுவர். பாம்பை எடுத்து ஆடுவது தொன்மைச் சடங்குகளில் ஒன்றாகும். இது முருக வழிபாட்டில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சமயச் சடங்காக இருந்திருக்கின்றது.

தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்