SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைத்தியராய் அமர்ந்தருளும் வைத்தியநாதசுவாமி

2021-01-20@ 12:01:06

தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற
பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்

கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வட
கரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்
களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும்.

ஜடாயு  என்னும் புள் (பறவை), ரிக்வேதம், முருகவேள், சூரியனார் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோயிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணி
களையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டினால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை பிரசாதமாக நினைத்து உண்டால் எல்லாவகை
நோய்களும் தீரும் என்று கூறுவர்.

நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நதி. அடுத்து இடப்புறம் தல தீர்த்தமான  சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார்.

சுவாமி சந்நதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெறலாம். இறைவி தையல்நாயகியின் சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நதிக்கு அருகில் இத்தலத்தின் முருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.  

குமரகுருபர சுவாமிகள்  இந்த முத்துக்குமாரசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேஷ பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். அப்போது  முருகனுக்கு சாத்தப்படும் மருந்து விசேஷ நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் ஜடாயு குண்டம் என்ற இடமுள்ளது. ஜடாயு ராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த ஜடாயுவிற்கு ராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் ஈமச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஜடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும்.

இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். வடக்குப் பிராகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நதி உள்ளது. வீரபத்திரர், அன்னபூரணி, தட்சிணாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராஜ சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விஸ்வநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், ஸஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.

ஜடாயு, வேதங்கள், முருகன், சூரியன், அங்காரகன், பிரம்மா, ராமர், சரஸ்வதி, லட்சுமி,  துர்க்கை, பராசர முனிவர்,  துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.இத்தலம் நவகிரக தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார்.

செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவகிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

தினந்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருளுவார். இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ethiopia-fire-sky

  விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

 • george-floyd-21

  நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

 • 21-04-2021

  இன்றைய சிறப்பு படங்கள்

 • nasa-helicopter-20

  செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

 • vaccine-cake-20

  ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்